அ.வெண்ணிலா எழுதியுள்ள வரலாற்று நாவல் கங்காபுரம்.பிற்கால சோழர்களில், முக்கியமான அரசனான இராசேந்திர சோழன் கதையை இந்த நூல் பேசுகிறது. இராசேந்திர சோழனின் தந்தை இராஜராஜன், தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலை கட்டி முடித்த காலக்கட்டத்தில் தொடங்கி, அவரது மகன் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி மறைவது வரை கதை நடக்கிறது. தில்லை (சிதம்பரம்), திருவாரூர், பழையாறை (முடிகொண்டான் ஆற்றின் பழைய பெயர் - கும்பகோணம் பகுதி), தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பகுதிகளில் நடக்கிறது.
இராஜராஜனின் படைத் தளபதியாக பல ஆண்டுகள் போரிட்டு அவரது வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவன் இராசேந்திர சோழன்.55 வயதானாலும் படைத் தளபதியாகவே இருக்கிறான்; இளவரசனாக முடிசூட்டப்படவில்லை. பொது மக்களோடும்,படை வீரர்களோடும்,ஊர்ச் சபைகளோடும் நேரடி தொடர்பை வைத்துள்ள இராசேந்திரன் மனம் புழுங்குகிறான்.வேதனையை வெளியில் சொல்லமுடியாது.
ஆனாலும் எல்லாருக்கும் தெரியும். அனுதாபத்தோடு பார்க்கிறார்கள்; முணுமுணுக்கிறார்கள். அரண்மனையில் இது விவாதப் பொருளாகிறது. அமைச்சர், தங்கை (குந்தவை), தாய் என பலரும் அவரவர் கோணத்தில் பேசுவதை அ.வெண்ணிலா பதிவு செய்திருக்கிறார்.
இராசேந்திரன் பாண்டியர்களை வெற்றி கொள்கிறான். கடலை ஏரி போல கடந்து கீழ்த்திசை நாடுகளை வெல்கிறான் (வணிகர்களின் தேவைக்காக). வடதிசையில் கங்கைக் கரை வரை வெற்றி கொண்டு (வரி வேண்டும், செல்வத்தை கொள்ளை அடிக்க வேண்டும், வேறு என்ன?) அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் கோவிலை,சோழ கங்கம் ஏரியை, தனது தலைநகரை நிர்மாணிக்கிறான்.
இந்த பரந்துபட்ட தளத்தில்தான் நாம் கதாபாத்திரங்களை, வாழ்வியலைப் பார்க்கிறோம்.மன்னனையும் கேள்வி கேட்கும் ஊர்ச் சபைகளின் அதிகார எல்லைகளை வியக்கிறோம். கோவில்களை, அதாவது அதன் வளங்களை எப்படி நிர்வகித்தனர், யார் பணியாளர் என்பது போன்ற விபரங்கள் ஆச்சரியமளிக்கின்றன.
கோவில்களில் தேவாரம் ஓதும் ஓதுவார்கள் இடத்தை வட மொழியில் ஓதும் பார்ப்பனர்கள் எடுத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். இடங்கை - வலங்கை உரசலைப் பார்க்கிறோம்; (இது குறித்து விரிவாகப் பேசியிருக்கலாம்; வழக்கம் போல நமக்கு பஞ்சமர் குறித்து கவலையில்லை).அ.வெண்ணிலா நிறையத் தகவல்களை நமக்குத் தருகிறார்.
இராசராசன் காலத்தில் கோவிவிலுக்கு தேவரடியார்களை நேர்ந்து விடுவது இருந்த காலம். அதில் ஒரு தேவரடியாருக்கு திருமணத்திற்கு அரசர் சிறப்பு அனுமதி தருவதையும் பார்க்கிறோம். பிராமணர்களுக்கு மேடான, செழிப்பான நிலங்கள் தரப்படுவதையும் பார்க்கிறோம்.
அப்படி வழங்கியுள்ள நிலங்களில் கள் இறக்க கூடாது; செக்கில் எண்ணெய் ஆட்டக் கூடாது (இவை சற்று விரிவாகப் பேசப்பட்டிருக்க வேண்டும்). உப்பளங்களை அரசு எடுத்துக்கொள்ளும் போது மக்களை சமாதானப் படுத்தித்தான் எடுத்துக் கொள்கிறது. அரசன் அமைத்த வேதச்சாலையில் மாணவியாக அறிமுகமாகி அரசனின் ஐந்தாவது மனைவியான வீரமாதேவி கடைசிவரை அரசனுக்கு நிகராக பேசுகிறாள். (அரண்மனைக்குள் இவள் வருவதில்லை)
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள சமுதாயத்தை நம் கண் முன்னே கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார் அ.வெண்ணிலா.வழக்கமாக வரலாற்று நாவல்களில் காட்டப்படும் அரண்மனைகளைத் தாண்டி இக்கதை பயணிக்கிறது. எனவே இது வெற்றி பெற்றிருக்கிறது.
அகநி வெளியீடு, வந்தவாசி-604408/ 2018/ 520 பக்கம்/ரூ.450.
- பீட்டர் துரைராஜ்