என் அனுபவத்தில் இது முதல் நவீன நாடகம். சென்னை, திருவண்ணாமலை, கோவில்பட்டி, பாண்டிச்சேரி போன்ற தூரதேசங்களில் நிகழ்ந்ததைத் தவறவிட்டபின் ‘தஞ்சாவூரில்...’ என்று ராமண்ணா (சாந்தாராம்) சொன்னதும் புதிய அனுபவத்துக்குத் தயாரானேன். இடையில் அனைத்து இதழ்களிலும் மிருக விதூஷகம் பற்றி அவரவர் அளவுக்கு எழுதி ஏகத்துக்குப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள் (ஆனந்த விகடனைத் தவிர).

தென்னகப் பண்பாட்டு மையம் தேடி ஞாயிறு சாயும் காலம் வந்தபோது களம் தயாராகிக் கொண்டு இருந்தது. சன்னதம் கொள்ளும் சாமிகள் குலவை யிட்டுப் பூ மிதித்து ஓடும் நிலத்தில் தீக்குப் பதில் நீரூற்றிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு ஆச்சர்யங்கள். மேடையில்லை. பார்வையாளனை நிலத்தில் அமர வைத்து உயரே யாரும் வித்தை காட்டப் போவதில்லை. டிக்கெட் இல்லை. ஜோல்னாப்பையில் ராமண்ணாவின் அழைப்பிதழும் சட்டைப் பையில் நூறுரூபா பணமும் இருந்தது. ஆச்சர்யங்கள் தொடருமென்று நினைத்தேன். அதுபோலவேதான் நிகழ்ந்தது.

பார்வையாளனுக்கும் கலைஞனுக்கும் இடையில் எவ்விதத் திரையுமில்லை. அதுவே பல மனத்தடை களை உடைக்கிறது. வீச மறந்த காற்றும் அசைய மறுத்த மரங்களும் இமைக்க மறந்து பார்வை யாளனோடு ஒன்றிய அதிசயம். சற்றுத் தாமதமாக வந்த நிலா நிறைய வருந்தியிருக்கலாம் தவறவிட்ட முன் அனுபவத்துக்கு. பன்னாட்டுச் சந்தைகளின் ஆதிக்கம், காலனித்துவக் கவர்ச்சி, காணாமல் போகும் மூதாதைப் பதிவுகள், பறிபோகும் தனி மனித சுதந்திரம், வாலில் பற்றும் தீ, வானம் பரவும் அபாயம் உணர்ந்தும் கைதட்டிக் கண்டு களித்த இனமழிப்பு, துயரம் எல்லாம் விதூஷகர்கள் மூலமாய்க் கண்முன்னே அரங்கேறின.

முல்லைத் தீவில் மனிதம் அழிந்த வன்மத்தில் தொடங்கி மீண்டும் மலர்கள் பூக்கும் நம்பிக் கையில் முடியும் ஒன்னே முக்கால் மணி நேரக் காட்சி அனுபவத்தின் இடையில்தான் சவுக்கடிகள். ‘விதை உண்டு. பதிய நிலமெங்கே? யாராவது பார்த்தீர்களா என் பூமியை’ எனக் கதறும் விதூஷகக் குரல் பார்வையாளரின் நெஞ்சில் கத்தி செருகினாலும் அத்தனையும் மரத்துப்போன மனிதனுக்கு என்ன உறைத்துவிடப் போகிறதெனக் கைதட்டி களைக்கிறான் குற்ற உணர்வுடன்.

உலகம் மனிதனுக்கு இலவசங்கள் அள்ளி வழங்கி அவன் மூளையைச் செயலற்றதாக்குகிறது. அவன் உரிமைகளைக் கேட்க மறுக்கிறது. பேசவும் தடுக்கிறது. வேறு வழியின்றி சுயநல ஓட்டிற்குள் தன்னைப் பத்திரப்படுத்தி ஊர்ந்து நகர்கிறான். வாழ்தல் பற்றி யோசிக்க அவகாசமின்றி. பதுங்கு குழிக்குள் பதுக்கி வைக்கப்பட்ட தானியம் உயிர் ஊறி முளைத்து நிலம் கீறி நாளை வெளிவரலாம். காணாமல் போன தொன்மங்களை மீட்டெடுக்கவும் மறைந்துகொண்டிருக்கும் மூதாதைகளின் மிச்சங் களைக் காப்பாற்றி வைக்கவும் ஒருநாள் வந்தால் அது மிருக விதூஷகத்தின் வெற்றி.

விதூஷகர்களின் உடல் மொழி மாற்றம் (நடிப்பு என்பது கொச்சைப்படுத்துவதாக உள்ளது) வியந்து கொண்டே இருக்க வைக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மிருகத்தின் ஜாடையில் நடப்பதும் திரும்புவதும் குரல் தருவதும் பார்வையாளனின் மனதுக்குள் இருக்கும் மிருகத்தை உசுப்பிவிடக் கூடியது. தமது வாழ்விடங்களை இழந்த மிருகங் களின் அழுகையுடல் மொழிப் பதிவு அருமை. அக்காட்சிக்கான குழலிசை அமைப்பு நீண்ட காலம் நினைவில் கிடக்கும். சிங்கமாய் கர்சித்த விதூஷகனும், வித்யாவும் பிரமாதப்படுத்தினார்கள். வித்யாவின் கண்கள் பலம், கலவரம், வீரம் எல்லாம் கலந்து ஒளிர்ந்தன. (மேடையில்லை என்பதாலே இது கவனிக்கும்படி நேர்ந்தது) ஒப்பனை கலைத்து ஹடட ஊடநயச போட்டு அலசி ஷார்ட்ஸ் சகிதம் புன்ன கைக்கும் அவர்களா விதூஷகர்களாக சன்னதமாடியது. ஆச்சர்யம்.

விழிகளில் வண்ணங்களை ஒளித்து வைத்துக் கொண்டு வித்தை காட்டுகிறார் சந்தானபூபதி. விரலசைவில் இருளும் ஒளியும் பிறந்து மடிகின்றன. தீட்டிய ஓவியமாய் ஒவ்வொரு காட்சியும் நினைவில் நிற்கிறது.

தேவையான அளவுக்கு இல்லையோவென்று தோன்றினாலும் இசையின் பங்கு எவ்வித உறுத் தலையும் ஏற்படுத்தவில்லை. சினிமாவை ஞாபகப் படுத்தாமல் இருந்ததே பெரிய சந்தோஷம். மாறாக மைய இசையாய் வரும் ஒலியும் இடையில் உயிர் அறுந்து வெளிவரும் கதறலுமாய் தனது இடத்தைச் செம்மைப்படுத்துகிறது. பனையேறிகளின் இழப் பினை வலிக்கக் கூறும் இடத்தில் ஒலித்த சலங்கை சத்தம் சற்றே தொந்தரவேற்படுத்தியது. ‘பனமரம் ஏறுன அப்பா கால்ல காச்சிப் போயிருக்கும். அரிவாளால் அத அறுக்குறப்ப ரத்தம் கசியும்’ என்ற வேதனை வெளிப்பாட்டில் தேவையற்ற சலங்கை நடனம். அதே சலங்கையை அங்கே உக்கிரப் படுத்தியிருந்தால் பார்வையாளனின் பதற்றத்தின் சதவீதம் அதிகரித்திருக்கும் (அக்காட்சிக்கான கைத்தட்டல்கள் நினைவுக்கு வரலாம்).

குளிர் - இரவில் கொட்டும் மழையில் மவுண்ட்ரோட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனுடன் கைகோத்து நடனமிடும் கலைஞனின் கட்டுப்படுத்தப்படாத சுதந்திரம் வழிவழியாய் இயக்குநருக்கு வந்திருக்கிறது. இல்லையெனில் அடுத்த இலவசம் கயிறுதானே என்று அரசின் கன்னத்தில் அறைந்து கேட்க முடியாது.

‘எமது காட்டினை அழித்து மைனாக்களைக் காணாமலடித்து வண்ணத்துப் பூச்சிகளைக் கொன்ற பைத்திய மலர்களில் பிறந்த தேனை விஷநாகம் தீண்டிவிட்டு பூமியைப் புண்ணாக்கியிருக்கிற கூட்டமே எதை அழித்து எதை உருவாக்கப் போகிறாய் என்ற விதூஷகனின் கேள்விக்கு வழக்கம்போல் எல்லாவற்றிலும் பார்வையாளனாய்ப் பங்கேற்கும் பல வேடிக்கை மனிதர்களின் கூட்டம் அங்கும் பார்வையாளனாகவே தனது பாத்திரத்தை நிறைவு செய்கிறது.

நடிப்பு பிரமாதம். ஒளியமைப்பு அற்புதம். குருதி கலந்து வீசப்படும் கவி வார்த்தைகளில் அழகு மீறிய அர்த்தப் புதையல். எல்லாம் சரி. இயக்குநர் உடல் மொழி குரல் வழி விவரிக்கும் கொடூரங் களைப் பார்த்துப் பரவசப்பட்டுக் கைதட்டும் பார்வையாளன் மிக அபாயமானவன். எல்லாப் பாதகங்களுக்கும் காரணியாய் இருந்துவிட்டுத் தன்னைச் சாட்சியாய் மட்டுமே முன்னிறுத்தி ரசிக்கும் அதி ஜாக்கிரதையானவன். இயக்குநர் தன் கடமையைச் செய்திருக்கிறார். இனி டபுள் சிம்முக்கு டபுள்கயிறு வாங்கும் இலவசத்துக்கென்றே பிறந்தவர்கள் ஒரு மரம் தேடிப் புள் கிளையில் ஒரே தலையில் டபுள் சுருக்கு போட்டுக் கொள்வதெல்லாம் அவரவர்பாடு.

மிருகவிதூஷகம் வழி முருகபூபதி செய்து இருக்கும் காரியம் அவசியமானதுதான் ஆனால்.... தூங்குகிறவனை மட்டுமே எழுப்ப முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

Pin It