மாவோயிசம் தான் நம் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்சினை என்று நாட்டின் பிரதம மந்திரி பல்வேறு சந்தர்ப்பங் களில் கூறிவந்துள்ளார். இந்த நூலின் ஆசிரியர் மாவோயிசம் அப்படிப்பட்ட பிரச்சினை அல்ல என்றும், மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல்தான் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் என்று ஆணித் தரமாக வாதிடுகிறார். இந்த நூலின் ஆசிரியராகிய சுதீப் சக்ரவர்த்தி ஒரு மாவோயிஸ்ட் அல்ல. அவரை மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்றும் கூறுவதற் கில்லை. இவர் இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பிரபலமான பத்திரிகைகளில் பணியாற்றியவர். பிரபலமான பெங்குவின் பதிப் பகத்திற்காக இந்தப் பயண நூலை அவர் எழுதி யுள்ளார்.

1967-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்தில் நிலச்சுவான்தார்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமாகத் துவங்கிய இயக்கமானது. அந்தப் பகுதியில் ஒடுக்கப்பட்டுவிட்ட போதிலும், 2010-ஆம் ஆண்டில் நாட்டின் 23 மாநிலங்களுக்கும் 250 மாவட்டங்களுக்கும், 2000 காவல் நிலையம் சார்ந்த பகுதிகளுக்கும் (ஏறத்தாழ நாட்டின் மொத்தப் பரப்பாகிய 92,000 சதுர கிலோமீட்டரில் 40 விழுக்காடு பரவிவிட்டது. இவ்வாறு இந்த இயக்கம் பரவியதற்கான காரணங்கள்பற்றி ஆங்கிலத்திலோ அல்லது பிற இந்திய மொழிகளிலோ நம்பகமான சிறப்பான நூல்கள் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிய வில்லை என்கிறார் நூலாசிரியர். போராளிகளுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் அளவிலான சண்டை ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படும் தருணங் களில் மட்டும் அனைத்து ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின்றன. அத்தருணங்களில்கூட இறந்து போன உயிர்கள் பற்றிய புள்ளி விவரம் முக்கியத் துவம் பெறுகிறது. “இறந்துபோன உயிர்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல”. அவர்கள் உயிருடன் வாழ்ந்த மனிதர்கள். அங்கு உரிமைகள் பறிக்கப்பட்ட மனிதர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்” என்று சரியாகவே சொல்கிறார் நூலாசிரியர்.

மாவோயிஸ்டு இயக்கங்கள் பல்கிப் பெருகிய தற்கான காரணங்களை ஆய்ந்து எழுதுவது நூலா சிரியரின் நோக்கமாக இருந்துள்ளது. மேலும் “இந்த நூல் இடதுசாரிப் போராளிகளுக்காக எழுதப்பட்டது அல்ல; மாறாக இந்த நூல் அவர் களைத் தவிர மீதமிருக்கும் அனைவருக்குமாக எழுதப்பட்டது என்றும் ஆசிரியர் கூறியுள்ளார். “முக்கியமாக மிக அதிக அளவில் இந்தியாவின் வீங்கிப் புடைத்துள்ள நடுத்தர வர்க்கத்தினரையும், அதனுடைய நுகர்வு மோக மயக்கத்தையும் மற்றும் மாவோயிஸ்டுகளின் அரசியல் நிகழ்வை வேண்டு மென்றே மறுக்கும் அல்லது அஜாக்கிரதையாக மறுக்கும் சட்டமியற்றுவோர், நிர்வாகிகள், திட்டம் தீட்டுபவர்கள், ஆய்வாளர்கள் போன்றோரைக் குறிவைத்து எழுதப்பட்டது. அரசியல் மற்றும் மாறுபட்ட அபிப்ராயம் கொண்ட மாணவர் களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் முயற்சியையும் இந்த நூல் செய்யும்.”

சூப்பர்ஸ்டார் இந்தியா - ஒளிரும் இந்தியா பற்றி

“பொருளாதார சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இவற்றின் நேரடியான பயன்பாட்டைப் பெறுபவர் களில் நானும் ஒருவன். ஆனால் “ஒளிரும் இந்தியா” என்கிற சிறுபிள்ளைத்தனமான அரசியல் கூற்றும், புதுமில்லேனியத்தின் தொடக்கத்தில் தோன்றி உள்ள ஊடகமும் என்னை வெளிப்படையாக அனைவராலும் அறியப்பட்ட பிரச்சினையை ஒதுக்கிவிட்டுச் செல்ல இயலாமல் செய்துவிட்டது”. “நகர்ப்புற இந்தியாவுக்கும் கிராமப்புற இந்தியாவுக்கும் இடையேயுள்ள கடுமையான தொடர்பின்மையை என்னால் உணர முடிகிறது. நகர்ப்புற இந்தியாவிற் குள்ளும்கூட அதிக வருமானம் உள்ளவர்களுக்கும் எவ்வித வருமான ஆதாரத்திற்கான வாய்ப்பு இல்லாத வர்களுக்கும் இடையேயும் இந்தத் தொடர்பின்மை நிலவுகிறது. நாடு அதனுடைய ஒட்டுமொத்த ஏழ்மை யுடன் மரத்துப் போன சாதீயப் பிரச்சினையுடனும் “சூப்பர் ஸ்டார் இண்டியாவாக” மாறுவது தடுக்க முடியாதது என்பதை மறுப்பது பைத்தியக்காரத் தனமான மறுப்பாக இருக்கும். ஒரு மில்லியன் மக்கள் பி.பீ.ஓ. பிரிவில் வேலை பெறுவதன் மூலம், 500 மில்லியன் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என்று ஒரு நாடு கூறுவதை நம்புவதே பைத்தியக்காரத்தனமானது ஆகும்.”

ஒளிரும் இந்தியாவின் உண்மை நிலை:

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் யூனிசெப் மற்றும் உலக உணவுத் திட்டம் போன்றவை நமக்கு மற்றொரு கவலையளிக்கக் கூடிய புள்ளி விவரங் களைக் கூறுகின்றன. அதன்படி ஏறத்தாழ நம் நாட்டில் உள்ள பாதிக்குப் பாதி குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இன்றி உள்ளனர். அல்லது அதனால் வளர்ச்சி தடைப்பட்டவர்களாக உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் பசியால் வாடுகின்றனர். ஏறத்தாழ முக்கால் பங்கு இந்தியர்கள் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதி இன்றி உள்ளனர். ட்ரான் ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பானது தனது அறிக்கையில் ஊழல் செய்வதில் முன்னணியில் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் வைத்துள்ளதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக துணை ராணுவப் படைக்காக 150 மில்லியன் (150 லட்சம் கோடி ரூபாய் - 15க்குப் பின் 13 சைபர்கள்) பணம் ஒதுக்க அரசு தயார். ஆனால் 100 கோடி விவசாயி களுக்காக 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க அரசு தயாரில்லை.

பயண அனுபவங்கள்:

இந்த நூல் அடிப்படையில் ஒரு பயண அனுபவம் பற்றிய நூல். பல்வேறு துறைகளில் பல்வேறு நபர்கள் - மூத்த போலீஸ் அதிகாரிகள் - நக்ஸல் தலைவர்கள், தொண்டு நிறுவனப் பொறுப் பாளர்கள் முதலிய ஆர்வலர்கள், பல்கலைக்கழகங் களின் பேராசிரியர்கள், ஆராய்ச்சி, மாணவர்கள் போன்றோரை நூலாசிரியர் நேரில் கண்டு, அவர்கள் கூறிய தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார் இந்த நூலாசிரியர்.

பத்திரிகைச் சுதந்திரம் பற்றிக் கூறுவதைக் கேட்போம்:

இறுதியாக இவ்விசயங்களை முழுமைப்படுத்தி, தகுந்த முறையில் அதை வெளிப்படுத்தும் ஊடகங்கள் என்னும் தூதர்களும் சரியாகக் கையாளப்பட வேண்டியுள்ளது. ‘..... நக்சல்களின் தாக்குதல் பற்றிய ஊடகச் செய்திகள் அனைத்தும் நக்சலைட்டு கை ஓங்கியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற் படுத்துகின்றன’. இதிலிருந்து விடுபட, .... இதுதான் சத்தீஸ்கரின் வாய்ப்பூட்டு கொண்டுவரப்படு வதற்கான காரணம் - மாவோயிஸ்டுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் செயல் மற்றும் பேச்சைவிட ....அரசு மற்றும் மக்களின் நடவடிக் கைகள்தான் அதிக மதிப்பு வாய்ந்தவை என்ற செய்தியைக் கொண்டு செல்ல வேண்டுமென அனைத்து ஊடகங்களையும் அழைத்துக் கூட்டம் போட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப் படும். அரசின் கட்டுப்பாட்டிற்குள் ஊடகங்களை நிலையாக வைத்துக்கொள்வதற்கான தந்திரமான வழி இது. இந்திய அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள பத்திரிகைச் சுதந்திரம் என்ற ஊக்கம் அடிப்படையிலேயே, ஒரு சாளரம் வழியாகத் தூக்கி எறியப்பட்டுவிட்டது.

மாவோயிஸ்ட் ராணுவ அமைப்பு பற்றிய தகவல்கள்:

“அனைத்து ராணுவ மண்டலக் குழுக்களி லுள்ள அதன் பிரிவுகளின் திட்டமிடுதல், பயிற்சி யளித்தல் மற்றும் செயல் திட்டம் ஆகியவற்றை மத்திய ராணுவ கமிசன் மேற்பார்வையிடுகிறது. இந்த மத்திய ராணுவ கமிசன் தான் முக்கியமான தலைமறைவு இயங்கு சக்தியாகும். ஒரு தொழில் நுட்ப கமிட்டி ஆராய்ச்சி மற்றும் ஆட்களைத் தேடிப் பெறுதல் போன்றவற்றை மேற்பார்வை யிடும். உதாரணத்திற்கு, சிறந்த தொலைத் தொடர்புச் சாதனங்களைப் பெறுவது, ராக்கெட்டை உருவாக்கு வதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்வது. ராணுவ மதிப்பீட்டிற்கான ஒரு துணை கமிட்டியும் உள்ளது. கிளர்ச்சியைத் தூண்டும் பிரச்சார கமிட்டியால் ‘கிளர்ச்சி - பிரச்சாரம்’ (அதுவும் தனது செயல் பாட்டை அதிகரித்துள்ளது) கவனமாக நடத்தப் படுகிறது. தலைமறைவு மற்றும் பகிரங்கமாக இயங்கும் அரசியல் பணியாளர்கள் மற்றும் அனுதாபிகளின் வலைப் பின்னல், ஆட்களைத் தேர்ந்தெடுப்பதைக் கவனித்துக்கொள்வதோடு, செய்தியைக் கொண்டு செல்பவர்களாகவும், அரசியல் குழுவாகவும் இயங்குகிறது. பாதுகாப்பு சிரமங் களைக் கணக்கிலெடுத்து, அதனடிப்படையில் அமைக்கப்பட்ட பரஸ்பரம் இணைந்து செய்யும் செயல்பாடுகள், தனித்த செயல்பாடுகள் என்ற இரண்டு வகை செயல்பாடுகளையும், உறுதி செய்து கொள்வதற்கான ஒரு மிகப் பரந்த வலைப்பின்னலைக் கொண்ட இலாகாவும் உள்ளது.

மாவோயிஸ்டுகளின் பத்து அம்ச திட்டம் :

நமது ஒற்றுமை, மார்க்சியம் - லெனினியம் - மாவோயிசம் என்ற விஞ்ஞான சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கவேண்டும். மாபெரும் பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி தான், இதன் உச்ச கட்டம். அதன் வழியாக நாம் மேலும் முன்னேறுவோம்.

நமது பொது லட்சியம், புதிய ஜனநாயக புரட்சியைச் சாதிப்பதன் மூலம் உலகளாவிய அளவில் சோஷலிசத்தையும், கம்யூனிசத்தையும் அடைவதுதான். அதைப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ்க் கொண்டு வரும் வரை அந்தப் புரட்சியைத் தொடர்வது.

அனைத்து விதமான சீர்திருத்த வாதத்தையும், ஆயுதமேந்திய சீர்திருத்தவாதத்தையும், பாராளு மன்ற கிரிட்டிசிசத்தையும் எதிர்க்கக் கடமைப் பட்டுள்ளோம்.

சீர்திருத்தவாதத்தை அதன் எல்லா வடிவங் களிலும் எதிர்க்க நாம் மார்க்சிய - லெனினிய - மாவோயிச சிந்தனைகளைப் பரந்துபட்ட அளவில் குறிப்பாக, நம் இந்தியத் துணைக் கண்டத்திலும், உலக அளவிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் உலகம் முழுவதும் நாம் ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டும்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்களை நாம் வலுவாகக் கட்டமைக்க வேண்டும். குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய அரசுக்கும் எதிராக.

இந்தியத் துணைக் கண்டத்தில் நடந்துகொண்டு இருக்கும் பல்வேறு வகையான ஆயுதந் தாங்கிய தேசிய இயக்கங்களைக் கொண்டு பெரிய அளவிலான முன்னணியை அமைக்க வேண்டும்.

துணைக் கண்டத்திலுள்ள மாவோயிச சக்திகள் தங்களுக்குள் பரஸ்பர உதவிகள் செய்துகொள்ள வேண்டும். இரு குழுக்கள் பல குழுக்கள் என உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

தெற்காசியாவில் மாவோயிச கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒற்றுமையை ஒருங்கிணைத்து வலுவாக்க வேண்டும்.

சித்தாந்த மற்றும் அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாக இதழ்கள் மற்றும் வார, மாத, பத்திரிகை களை நடத்த வேண்டும்.

மார்க்சிஸ்ட் ஆட்சியின் லட்சணம்:

ஏழை மக்களுக்கெதிரான கொடுமைகள், கொத்தடிமைகள், குறைந்தபட்சக் கூலி மறுக்கப்படுவது போன்ற அவலங்கள் நாட்டின் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் சகஜம். ஆனால் மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்திலும் அத்தகைய சூழல் நிலவுவதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மேற்கு வங்கத்தில் செங்கல் சூளைகளில் பணி செய்யும் இளம் பெண்கள் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒத்துழைக்காத பெண்களைத் தனியறையில் பூட்டிவைத்து அடித்துத் துன் புறுத்தி, கொதிக்கும் இரும்பால் சூடு வைக்கிறார்கள்.

அரசியல் விழிப்புணர்வு உள்ள மேற்கு வங்கத்தில் இந்த மக்களுக்குக் குறைந்தபட்சக் கூலி மருத்துவ வசதி, மகப்பேறு விடுப்பு, அல்லது வேறு வகையான விடுப்பு, சங்கம் அமைக்கும் உரிமை என அனைத்தும் மறுக்கப்படுகிறது. அங்கு வருகைப் பதிவேடோ சம்பளப் பதிவேடோ, அடையாள அட்டை, வேலை நேர அட்டை என எதுவும் இல்லை.

சி.பி.எம். ஆட்சிக்கு வந்த நான்காவது வருடத்தில் 1981ஆம் ஆண்டும் மஹாசுவேதாதேவி (புகழ்பெற்ற நாவலாசிரியை) இதை எழுதினார். 2006 வரை மேற்கு வங்க அரசாங்கம் அங்கு ஒப்பந்தக் கூலி அடிமைகள் இருக்கிறார்கள் என்பதைக்கூட ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

நீதியின் மறுபக்கம் - நக்ஸலைட்டுகளின் தாண்டவம்:

மாநில அரசாங்கங்கள் ஏழை மக்களுக்கு எதிரிகளாகச் செயல்படுவது பற்றியும் பணக்காரர்கள் ஏழை மக்களையும் - குறிப்பாக பழங்குடி மக்களையும் தலித்துகளையும் வஞ்சித்துக் கொள்ளையடித்து வைத்துள்ள சொத்து சுகங்களைக் கட்டிக் காப்பதையே தங்களது கடமையாக மேற்கொண்டுள்ள போலீசார் இப்பணக்காரர்களின் சொத்து சுகத்திற்கு ஊறு விளைவிப்பவர்களை அடிப்பதையும் கொல்வதையும் சரிவரச் செய்து வருகிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். ஆனால் ஏழைப் பங்காளர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் மாவோ யிஸ்டுகள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? இதோ.

2006ஆம் ஆண்டு முடியும் போது, தண்ட காரண்யாவில் கட்சிரோலியில் இருந்த, ராஜ்குமார் பெர்சல்வார் என்ற வனக்காவலரைக் காவல் துறைக்கு உளவு சொல்பவர் என்று சந்தேகப்பட்டு கொன்றனர். 2007 ஏப்ரலில் ராஞ்சிக்கு அருகில் உள்ள தம்பா கிராமத்திலிருந்து இரண்டு சகோதரர் களை, காவல்துறைக்குத் தகவல் அளிப்பவர்கள் என்பதால், முதலில் மரத்தில் கட்டி வைத்து அடித்து, பின் தலையை வெட்டினர். 2007 ஆகஸ்டு ஒரிசா, சம்பல்பூரின் தலப் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன் தேஹூரி என்ற பெயர், கடைக்காரர். அவரையும் காவல்துறையினருக்குத் தகவல் அளிப்பவர் என்று தலையை வெட்டினர். ஆனால் இங்கு இதற்கு மிக சன்னமான ஆதாரம்தான் இருந்தது. அவரது கடைக்கு அருகிலிருந்த, ஒரிசா மாநில ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள், அவரது கடையில் பொருட்கள் வாங்கினார்கள் என்பதுதான் அது.

2007இல் ஆகஸ்டிலேயே, ஜார்கண்டில், ராஞ்சிக்கு அருகில் அர்கியிலுள்ள தி ஜன் அதாலத்-இல் ஹீரா சிங் முண்டா, ராஜேஷ் சிங் என்ற இருவரைப் பிடித்து வைத்திருந்தனர். அவர்கள் மீதான குற்றச் சாட்டு பாலியல் வன்முறை மற்றும் அச்சுறுத்திப் பறித்தல். அவர்கள் அவர்களுடைய வீட்டிலிருந்து கூட்டிச் செல்லப்பட்டு தலையை வெட்டி உடம்பை நெடுஞ்சாலையில் போட்டு விட்டனர். அங்கிருந்து ரோந்து காவலர்கள் அதை எடுத்தனர்.

சில நேரங்களில் ஆட்கள், ஒரு காரியம் செய்ய வேண்டுமென்ற அவர்களது ஆர்வத்திற்காகத் தண்டிக்கப்படுகின்றனர். 2007 செப்டம்பர் 30 அன்று கட்சிரோலியில் உள்ள எட பள்ளியில், பாண்டு நரோத் என்ற ஆதிவாசி இளைஞர், தைரியமாகக் காவலர் படையில் சேர்வதற்கு நினைக்கிறார் என்பதற்காகக் கொல்லப்பட்டார். அதே மாதத்தில், பீஹாரின் மாவோயிஸ்டுகள் கோரும் பணத்தைக் கொடுக்காவிட்டால், பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாய நிலை அங்கு உள்ளது.

ஆந்திராவில் அரசு மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் பற்றி:

எப்போது விழித்துக் கொள்கிறது என்பது பற்றிக் கவிஞர் வி.வி. இவ்வாறு கூறுகிறார் :

“மாவோயிஸ்டுகள் மற்றும் என்.ஜி.ஓக்கள் வட்டாரத்தில் மாவோயிஸ்டுகளின் கைப்பிடிக்குள் உள்ள இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதி களிலும் உள்ள, இவ்வளவு வளமான மூலாதாரங் களிலிருந்து எவ்வளவு பணத்தைச் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்த பிறகு தான், மாவோயிச அச்சுறுத்தல் குறித்து அரசு விழித்துக்கொண்டது என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை, ஆதிவாசிகள் மற்றும் விவசாயி களின் நிலத்தின் மீதான உரிமையை மேலும் பலஹீனப்படுத்துவதாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றனர். அடிப்படையில் பெரும் தொழிற் சாலைகளும், நிலக்கரிச் சுரங்கங்களும் சத்தீஸ் கருக்கு வரவுள்ளதால் இடம்பெயர்க்கப்படுவதில் உள்ள அரசியல் பொருளாதாரத்தை தற்சமயம் விவசாயிகள், என்.ஜீ.ஓக்கள் மற்றும் ஆதிவாசி களுக்கும் அரசுக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கும் யுத்தத்தில் காண முடிகிறது.”

வீரப்பன் பற்றி ஒரு துணுக்குத் தகவல்:

காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் தங்களது பங்குகளைப் பெற்றுக் கொண்டு அவரை சுதந்திரமாக உலவவிட்டனர். உள்ளூர்த் தேர்தலில் அவரைப் பல்வேறு கட்சிகள் நன்கு பயன்படுத்தினர். ஒரு கட்டத்தில் அவர் தங்களை மீறி ஆதிக்கம் செலுத்திவிடுவார் என்ற அச்சத்தில் அவர் கதையை முடித்து விட்டனர்.

நில மறுபங்கீடு, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா:

நில மறுபங்கீடு செய்ய முடிந்த ஒன்றுதான். மேற்கு வங்கத்தில் நடந்தது. பல வருடங்களாக 1.3 மில்லியன் ஏக்கர்கள் உபரி நிலமாக உள்ளது என அறிவித்து. ஒரு மில்லியன் ஏக்கர் நிலத்தை அரசு பகிர்ந்தளித்துவிட்டது. பல்வேறு தேர்தல்களில் அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் என்ற குற்றச் சாட்டுக்கள் இருந்தாலும்கூட, சிபிஐ (எம்) தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு 1977லிருந்து ஆட்சியிலிருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

ஆந்திராவில் ஒரு கோடி ஏக்கர் உபரி நிலம், நிலச்சுவான்தார்கள், மாநில அரசு, மத்திய அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம் என்று வலி யுறுத்தினார். வி.வி. மாநில அரசாங்கம், அமைதிப் பேச்சு வார்த்தையின் போது அலுவலகப் பதிவேடுகள் ஒரு மில்லியனுக்குக் குறைவு என்று காட்டும் போது 2லிருந்து 3 மில்லியன் உபரி நிலம் இருப் பதாகக் கூறியுள்ளனர். ‘நாங்கள் சொன்னோம். நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம். அவர் களுடைய வல்லுநர்களைக்கொண்டு ஒரு கமிஷன் அமைக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அது வெறுமே எழுத்தில் உள்ளது. அவர்கள் 3 லட்சம் ஏக்கர் நிலத்தை விநியோகித்ததாகக் காட்டுகிறார்கள். அதுவும் கூட உண்மையாக இருக்காது என்று நினைக்கிறேன்.

பள்ளிக்கூடங்கள் ஏன் இடிக்கப்படுகின்றன?

சென்ற வருடம் சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கு வதற்கு இடம் அளிக்கக்கூடாது என்பதற்காக மாவோயிஸ்டுகள் குண்டு வைத்துச் சிதறடித்த பள்ளிக்கூடக் கட்டடத்திற்குள் கவனமாகச் சென் றோம். இதுபோன்ற செயல்களில் கல்வியை மறுக்கும் சதி இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான் நாடு முழுக்கவுள்ள மாவோஸ்டு பகுதிகளில், இந்திய ராணுவம் தங்குமிடமாக பள்ளிக் கட்டடங்களைத் தேர்ந்தெடுத்திருக் கிறார்கள். சில நேரங்களில் வெறும் செங்கல், சிமெண்ட் வைத்துக் கட்டப்பட்டிருந்தால்கூடப் போதுமானது. அவர்களைத் தங்க வைக்க மாவோ யிஸ்டுகள் அதனைத் தாக்கி அழித்து விடுவார்கள். கடைசியில் இரு தரப்பினரும் செய்யும் ‘நற்செயல்’ என்னவென்றால், உண்மையிலேயே கல்வி தேவைப் படுகிறவர்களுக்கு அது கிடைக்க விடாமல் செய்து விடுவதுதான்”.

இறுதியாக இந்த நூல் தி ஹிந்து மற்றும் டெக்கான் கிராணிக்கிள் கூறுவதைக் கேட்போம்.

ஒவ்வொரு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப் பினர்களும், அமைச்சர்களும் தங்கள் அலுவலகத் திற்குள் நுழையும் முன்பு, கட்டாயம் படித்திருக்க வேண்டிய ஒரு புத்தகம். அதிகார வர்க்க அதிகாரி களும் சமூகவியலாளர்களும் கற்க வேண்டிய ஒரு முக்கிய பாடமாக இந்தப் புத்தகத்தைக் கருத வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

-தி ஹிந்து

ரெட் - சன் - இந்தியா, தன் நாட்டு மக்களுடனேயே ஈடுபட்டுள்ள போரைப் பற்றிய ஒரு வருத்தந்தோய்ந்த கதையைக் கூறுகிறது. மாவோ யிஸ்டுகளும், அரசும் நேருக்கு நேர் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் பரந்த கிராமப் பகுதிகளில் மறைந்திருக்கும். எந்நேரத்திலும் பெரிதாக வெடிக்கக்கூடிய சூழ்நிலையை மிகத் துல்லியமான விவரங்களுடன் விளக்கியுள்ளது இந்நூல்.

- டெக்கான் கிராணிக்கிள்

மொழிபெயர்ப்பு பற்றிய பின்குறிப்பு :

எளிமையான எல்லோருக்கும் புரியும்படியான நடையில் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளதைப் பாராட்டுவோம். ஆனால் மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்தி வார்த்தைகள் - இடங்களின் பெயர்களில் நிறையவே தவறுகள் செய்துள்ளார். க்ஷயளவயச - பகுதியை பஸ்தர் அல்லது பஸ்தார் என்று கூறுவது சரி. ஆனால் 48வது பக்கத்தில் பாஸ்டர் என்று குறிப்பிடுவது சரியல்ல. மகுவா - மரம், இலுப்பை மரம் என்று அவருக்குத் தெரியவில்லை. கெரில்லா - கொள்கைக்காகப் போராடுபவர். கொரில்லா என்றால் வாலில்லாக் குரங்கு. கெரில்லாக்களை கொரில்லாக்கள் என்று கூறுவது தவறு. துர்க் மாவட்டம் ‘டர்க்’ ஆகிவிட்டது. பிரசித்தி பெற்ற ‘பிளாசி’ பினாசி - பினசி என்றெல்லாம் குறிப் பிடப்படுகிறது. ஸ்ரீமான் கலெக்டர் மகோதய்’ ‘சிறீமின் கலெக்டர் மகோடே’ ஆகிவிட்டார். இவ்வாறு எண்ணற்ற தவறுகள் உள்ளன. அடுத்த பதிப்பு வெளியாகும்போது - இந்தி மொழி தெரிந்த - வடநாடு சென்று அனுபவம் உள்ள நபரைக் கலந்தாலோசித்துத் தவறுகளைத் திருத்திக் கொள்வது நலம்.

ரெட்சன் (நக்ஸல் பகுதிகளில் ஒரு பயணம்)

மூலம் ஆங்கிலத்தில் : சுதீப் சக்ரவர்த்தி

தமிழாக்கம் : அ.இந்திராகாந்தி

Pin It