ஏ.பி. சந்தானராஜ் 13.3.1932 - 24.5.2009

தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு புலனும் விழிப்புற்றிருப்பதை விழிப்புடன் உணர்ந்தவர் ஓவியர் சந்தானராஜ். சிறு புல், பூண்டுகளில் கூட தன் உணர்வைச் செலுத்தி ஒரு பட்டாம்பூச்சியைப் போல வாழ்வின் ரகசியங்களை நுகர்ந்து, பறந்து தன்னுடைய முழு வாழ்வினையுமே ஒரு நாடகார்த்தமான நிகழ்வாக மாற்றிக் காட்டியவர். மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை அனுபவித்து, அதனை கலையின் ஆளுமையின் மூலம் வெற்றி கொண்டு, நாள்தோறும் புதிதாகப் பிறக்க முடியும் என்று மெய்ப்பித்தவர். Chandru and Santhanarajஞானமும், கலையும் எல்லோருக்கும் பொதுவானது. அதை வசப்படுத்துவதன் மூலம் உலகையே வசப்படுத்த முடியும். அடிமைத்தனங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் கலைஞனே மாபெரும் வெற்றிப் பயணமாக மாற்றி, விடுதலைக்களமாகவும் ஆக்க முடியும். இந்த விடுதலையே உத்தேசமற்ற வாழ்க்கையைத் தரும். இவ்வுத்தேசமற்ற பயணத்தைத் தொடரும் மற்றொருவர் ஓவியர் சந்ரு. இருவரும் ஒருவரை ஒருவர் கடந்த போது...

திருவண்ணாமலையில் உள்ள வள்ளிவாகையில் பிறந்தவர் ஏ.பி. சந்தானராஜ். இளவயதில் ஓவியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். கும்பகோணம் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர். திருவனந்தபுரம் கலைக் கல்லூரியிலும் பணியாற்றினார். இறுதியாக, சென்னை கவின் கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். இவருடைய ஓவியங்களும், ஆளுமையும் இவருக்கு பல்வேறு தரப்பில் ஓவிய மாணவர்களையும், ஓவிய ஆர்வலர்களையும் உருவாக்கித் தந்தது. இந்திய அளவில் லலித் அகாதமி விருது மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். உலகளவில் இந்திய ஓவியர்களை வரிசைப்படுத்தினால், முதல் அய்ந்து ஓவியர்களில் ஒருவராக ஏ.பி. சந்தானராஜ் இருப்பார்.

அறிமுகமும் புகைப்படங்களும் : ஆர்.ஆர். சீனிவாசன்

சந்தானராஜ் பற்றி சந்ரு

காகிதத்தில் சிறு கீரலாய் கரை பிளந்து
பொங்கிப் பெருகும் வெள்ளம்.
ஒரு நொடிக்குள் ஒடுங்கி விஸ்வரூபம் காணும்
கலா அனுபவம்.
சந்தானராஜ் அவர்களை நேரில்
சந்தித்த நபர்களில் நானும் ஒருவன்.

சந்ரு : வரைவதற்கான எத்தனிப்பு, வரையும் பொழுதுள்ள மனநிலை உடல் சார்ந்தும் மனவெளி சார்ந்தும் என்னவாக இருக்கிறது? இந்தச் சூழலில் எப்படியாகப் பயணிக்கிறீர்கள்?

சந்தானராஜ் : எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று நிர்பந்திக்கப்பட்டு செய்யக்கூடிய சில காரியங்களை, அதாவது எது நல்லது, எது அவசியம் என்பதான சிந்தனைப் போக்கு கலைஞர்களுக்கு மிகவும் அவசியப்படுகிறது. ஏனென்றால், சாதாரண மக்களுடைய எண்ணங்கள் என்பது வேறு. கலைஞர்களின் எண்ணங்கள் என்பது வேறு. காரணம், கலைஞர்கள் படைப்புத் தன்மை கொண்டவர்கள். ஆகவே, இப்படியான சிந்தனைப் போக்கு அவசியம். இதிலிருந்து கலைஞர்கள் தப்ப முடியாது.

சமூகத்திற்கும் படைப்பிற்கும் சம்பந்தமே இல்லை. காரணம், நாம் என்ன படைக்கிறோமோ வருங்காலத்தில் அது ஒரு தனி பங்களிப்பாக நிற்கும். ஆனால், இது நாம் செய்யும் பொழுது இல்லை. இதுதான் மிகப் பெரிய துர்பாக்கியம். என்னால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறேன். இதனால் என்ன பயன்? இதற்கான பதில் இன்றைக்கு வரைக்கும் யாருக்கும் தெரியாது. பாரதியாருக்கு ஏற்பட்ட உணர்வுகளை, அவர் ஒரு கவியாக இருந்து எழுதினார். ஆனால் அதனுடைய பலாபலன்களைக் கண்ணதாசன் தானே அனுபவித்தார்.

உதாரணமாக, சந்ருவுக்கு என்னைப்பற்றி இருக்கக்கூடிய அபிப்பிராயங்கள் என்பது ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. அவருக்குத் தெரியும் நான் எப்படி அன்றாடம் ஒரு கோட்டிற்குக் (கோட்டில்) கஷ்டப்படுகிறேன் என்று. கோடுகள் என்பது எனக்கு உயிர்நாடி மாதிரி. அது அறுந்து போனாலோ பழுதடைந்து போனாலோ நான் ஜீவிப்பதே கஷ்டம். அதே போலத்தான் கோடுகூட எனக்கு. கோடு எனக்கு ஆத்மீக சக்தி கொடுக்கக்கூடிய திறனுடையது. அதனைப் பிரிக்கும் பொழுதும் அதனுடைய இடைவெளிகளைப் பார்க்கும் பொழுதும் எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது. ஒரு கோட்டை இப்படியெல்லாம் பிரிக்க முடியுமா என்று.

Santhanaraj's paintingsஆனால் கோட்டை ஒரு குழந்தை கூட பிரிக்கிறது. அப்படிப் பிரிக்கும் பொழுது அது விருப்பத்தோடே செய்கிறது. நாம் கடவுளைப் பார்ப்பதற்காகக் கோயிலுக்குப் போகிறோம். விக்கிரகங்களைப் பார்த்து ஆராதனை பண்ணுகிறோம், பூஜிக்கிறோம். மேலும் நம் உள்ளத்திலுள்ள எல்லாவற்றையும் வாரிக்கொட்டி கடவுளிடம் பகிர்ந்து கொள்கிறோம். இதனால் அவர் நாம் பெறக்கூடிய லாபங்களை, அதாவது கடவுள் கொடுக்கும் அனுக்கிரகத்தைப் பெரும்பாலும் தவறான முறையில்தானே பயன்படுத்துகிறோம் கலையிலிருந்து...

இதனால் சிலருக்குக் கோடிகோடியாகப் பணமிருந்தும் மூணு இட்லிகூட முழுசாகத் தின்ன முடியாது. ஆகையினால், நாம் பயன் அடைந்தால் அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்படியான மனசு வேண்டும். ஆனால் நாமோ அப்படியில்லாமல் வெறும் சுயநலவாதிகளாகவே இருக்கிறோம். இதுதான் கடவுளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தப் பூலோகமே கடவுள் படைப்புதான். எல்லாமும் அவருடைய முகம்தான். நடப்பவை எல்லாம், அதாவது தொடக்கமும் முடிவும் கடவுளே.

உதாரணமாக, ஒரு நீர்க்குமிழ். பூமியின் அடியிலிருக்கக்கூடிய அக்குமிழ் சமுத்திரத்திலிருந்து புறப்பட்டு வருகிறது. அதனுடைய ஸ்தானத்திலிருந்து பார்க்கும் பொழுது சப்தம் இல்லாமல் வருகிறது. ஆனால் அந்த நீர்க்குமிழ் தரைமட்டத்திற்கு வரும் பொழுதோ தானாக வெடிக்கிறது. சப்தம் உண்டாகிறது. உலகம் பூராவும் தெரிகிறது. கடவுளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? எனக்குப் புரியவில்லை. நீர்க்குமிழ், ஆரம்பத்தில் சத்தம் இல்லை. தரைமட்டத்திற்கு வரும்பொழுது சப்தம் உண்டாகிறது. காகம், குயில், மயில், யானை, சிங்கம், ஒட்டகம், (பறவைகள், விலங்குகள்) அவை அவைகளின் தொனி எல்லாவற்றையும் கேட்கிறோம். இதைத்தான் கடவுள் என்று நினைக்கிறேன். ஆனால் நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம். காரணம், நாம் சுயநலவாதிகள். இங்கு நடைமுறை சாத்தியங்களும் அப்படித்தான் இருக்கிறது.

அதாவது வீட்டு டேபிளில் அய்ந்து கிலோ தங்கம் இருக்கிறது. நான் சொல்கிறேன் உங்களுக்கு வேண்டுமானால், மற்றவர்களின் துணையில்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறேன். நீங்கள் எடுக்க நினைக்கிறீர்கள். ஆனால் அசைக்கக்கூட முடியவில்லை. இப்படியான ஆசை இருக்கக் கூடாது என்பதுதான் கடவுளின் தத்துவமே. ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார். (நல்லது தீயது, லாபம் நஷ்டம்). தனக்கென்று எதையும் வைத்துக் கொள்வதில்லை. தனக்குத் தேவையானவர்கள் என்று யாரையும் பார்த்து கொடுப்பதுமில்லை. பொதுவாக எல்லோருக்குமாக கொடுக்கிறார்.

அவருடைய படைப்பில் நாம் 50 ஆண்டோ 100 ஆண்டோ வாழப் போகிறோம். ஆனால் அவருடைய வாழ்க்கையோ அண்ட சராசரமும் எப்பொழுதும் அடங்கியிருக்கும். ஆகையினால் பிறப்பு மரணம் என்பது அவருடைய சிறிய நாடகம். இந்தக் குறுகிய நாட்களில் வாழ்க்கையை எவ்வளவு நன்மையாகப் பயன்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து சிந்திக்கக்கூடிய தன்மையுள்ளவனாக எவன் இருக்கிறானோ, அவனே படைப்பாளியாகிறான். இப்படி ஆராய்ந்து சிந்திக்காதவர் சாதாரண மக்களாகிறார்கள். அவர்கள் கல்வி, வேலை, வீடு என்பதான விசயங்களுக்காக தங்கள் நேரங்களைச் செலவிடுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி நாம் யோசிக்கக்கூடாது. நமக்கான வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த ஈவு. ஆனால் மனிதன் இப்படியான வாழ்க்கைக்குத்தான் மயங்கிப் போகிறான். அப்படியான மயக்கம் இல்லாமலும் இருக்க முடியாது.

சந்ரு : நீங்கள் சொல்வது போல் ஊடகத்தின் வாயிலாகப் பிறப்பதல்ல ஞானம் என்று நானும் எழுதியிருக்கிறேன். நீ எதை உனக்குள் வைத்திருக்கிறாயோ அதற்கான கிளர்ந்தல் உனக்குள்ளேயே இருக்கும் அதை நீ உறுதிப்படுத்திக் கொள். ‘கிரைஸ்டு' (ஏசு) கூட ஓர் இடத்தில் சொல்லுவார், அதாவது ஏசுவைப் பார்க்க-திரளான ஜனங்கள் உம்மைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள். நீங்கள் வந்து அவர்களிடம் பேசுங்கள் என்று.

அதற்கு அவர் (ஏசு) சொல்லுவார், இவர்கள் அடையாளம் தேடுகிற சந்ததிகள், விரியன் பாம்புக் குட்டிகள். இவர்கள் என்னுடைய வார்த்தையை விசுவாசிக்காமல், என்னை ஒரு வித்தைக்காரனைப் போல் பார்க்கிறார்கள். நான் கண் கொடுக்கிறேன், காது கொடுக்கிறேன், ரொட்டி தருகிறேன், ஏன் செத்தவனைக்கூட பிழைக்க வைக்கிறேன் என்பவனாகத்தான் பார்க்கிறார்களே ஒழிய, "அன்பாய் இருங்கள்' என்ற விசுவாசத்தை அல்ல. அந்தப் பாரமாக இருக்கிற அந்த இதயத்தைப் பற்றிதான் பேசுகிறேன். ஆனால் அதை காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள், இப்படியானவைகளை நீங்கள் சொன்னதனுடைய எல்லாவுமாகவும் இன்னொரு பரிமாணமாகவும் இதைப் புரிந்து கொள்கிறேன்.

இன்னொரு இடத்தில் சொல்வார். இவர்களுக்கு எலியாவின் சாட்சியைத்தவிர, இப்போதைக்கு சாட்சி கொடுக்கத் தயாராக இல்லை அனுப்பி விடுங்கள் என்பார். இன்னொரு இடத்தில், பிதாவே உன்னைப்பற்றி தெருத்தெருவாய் பிரசங்கம் பண்ணினோம், பாட்டுப்பாடினோம் என்று சொல்வதனால், அதற்கான கூலியையும் அதற்கான மரியாதையையும் அடைந்ததில்லை. போய் பிதாவே உன்னுடைய நாமத்தினாலே பேயை விரட்டினோம், நோயைக் குணப்படுத்தினோம்-அப்படி என்பதாலேயே பிதா உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார். அதாவது, செத்தவனை உன்னுடைய நாமத்தினாலே பிழைக்க வைத்தேன் என்றாலும் பிதா உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார். இதெல்லாமும் மனித வல்லமைகள். வெறுமனே மனித வல்லமைகள்தான். இதெல்லாவற்றிற்கும் மேலாக பிதாவின் மேல் இருக்கிற விசுவாசம் கடுகளவிலாவது இருக்கிறதல்லவா. இதைத் தவிர நீ எதைச் சொன்னாலும் அது பிரயோஜனமாக இருக்காது என்று சொல்லுவார்.

இப்பொழுதுதான் நீங்கள் சொன்ன கோட்டோடு (கோடு) உயிர்நாடி என்பதெல்லாமும் தெளிவாகவும், உண்மையாகவும் இருக்கிறது. இப்படியான நிலைக்கு நாம் வருவதற்கு ஒரு பயிற்சி தேவையாகவும் இருக்கிறது. ஒன்றை நுட்பமாகப் பார்ப்பது என்பதற்கே ஒரு பயிற்சி தேவையாக இருக்கிறது. இப்படியான உண்மையைக் காண்பதுதான் இந்தக் கோடு என்று நான் உணர்கிறேன். இப்படித்தானே சொல்ல வந்தீர்கள்...

சந்தானராஜ் : ஆமாம், சரிதான். அதவாது விளக்கமாக உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் சொல்ல முடியாது. காரணம், நடைமுறையில் எப்படி ஒரு ஜலம் சூடு பண்ணுவதற்கு முன் எப்படி இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாதோ, அதேபோல் சூடு பண்ண பண்ண நீராவியாகப் போகிறது. பின் கண்ணிற்கே தெரியவில்லை. அதை ஏன் பார்க்க முடியவில்லை? அதாவது இந்த அனுபவம்தான் என்கிறேன் (கூர்ந்து சிந்திக்கக்கூடிய தன்மைகள் அனுபவங்கள்தான் வாழ்க்கை என்று நினைக்கிறேன்).

Pin It