குழந்தைகளைப் புத்திசாலித்தனத்துடன் வளர்த்து ஆளாக்கும் மிகப்பெரிய கடமை பெற்றோர்களுக்கு உள்ளது. புத்திசாலித்தனம் என்றதும் பெற்றோர்களுக்கு படிப்பு, மதிப்பீடு, மார்க் என்றுதான் நினைவு வரும். புத்திசாலித்தனத்திலும் பலவகைகள் உண்டு. அவைகளில் ஒன்றான உணர்வுசார் நுன்ணறிவு அல்லது எமோஷனல் இன்டெலிஜென்ஸ் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

மகிழ்ச்சி, துக்கம், பயம், கோபம், அருவருப்பு, ஆச்சரியம் என அனைத்து உணர்வுகளிலும் கோபம்தான் மனிதனுக்கு அதிகமான இழப்பை உண்டு பண்ணுகிறது. தன் பொறுப்புகளை உணர்ந்து, கோபத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளைக் கையாளும் திறமையை எமோஷனல் இன்டெலிஜென்ஸ் (EMOTIONAL INTELLIGENCE) என்பார்கள்.

ஒரு நிகழ்வு

ஒரு காட்சியைக் கண்முன்னே கற்பனையாக்கிப் பாருங்கள். உங்களது 6 வயது குழந்தை ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு வாங்கித் தரும்படி கேட்கிறது. நீங்கள் கிடையாது என்று கண்டிப்புடன் சொல்லும்போது, ஏமாற்றத்தைத் தாங்கமுடியாமல் கையில் உள்ள பொருளைத் தூக்கி எறிந்து உடைத்து விடுகிறது. தன்னுடைய கோபத்தையும் எரிச்சலையும், ஏமாற்றத்தையும் உங்களிடம் சொல்லத் தெரியாமல் உணர்வுகளால் தூண்டப்பட்டு செய்கிறது என்று எண்ணுவோம்.

அதே சூழலில் வேறொரு குழந்தை ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தாங்கிக்கொண்டு உங்களைக் கோபத்தோடு பார்த்துக்கொண்டே வார்த்தைகளால் தன் நிலையைச் சொல்லி காரணம் கேட்கிறது. இந்த இரண்டாவது குழந்தைக்கு உணர்வுசார் நுண்ணறிவும், கோபத்தைக் கையாளும் திறமையும் அதிகமாக இருக்கும்.children 652கோபம் வரும்போது தன்னைத்தானே அமைதிப்படுத்திக்கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரிந்த குழந்தைக்குப் பின்னாளில் எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் வந்து விடுகிறது. தன் உணர்வுகளைப் பெற்றோர்களிடம் வார்த்தைகளால் வெளிப்படுத்தி அவர்களோடு விவாதிக்கும் குழந்தைகளால் நல்ல உறவுமுறையையும் ஏற்படுத்திக் கொள்ளத் தெரிகிறது. இம்மாதிரி குழந்தைகளுக்கு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தவாறு தங்களுடைய உனர்வுகளை வெளிப்படுத்தி உடலும் மனமும் கெட்டுப் போகவிடாமல் ஆரோக்கியம் காக்கும் திறனும் தெரிந்து இருக்கிறது.

கோபத்தால் பொருளைத் தூக்கி அடிக்கும் குழந்தை இன்னும் மனதளவில் முதிர்ச்சி அடைய வேண்டியுள்ளது. தொடர்ந்து இதுபோன்று முதிராத உணர்வுசார் வெளிப்பாடு இருக்கும்போது சமூகத்தோடும் பெற்றோர்களுடனும் ஆன உறவுநிலையில் விரிசலும் வந்து விடுகிறது.

கோபம் கொண்ட உடலில் என்ன நடக்கிறது?

எல்லா உயிரினங்களும் எப்படியாவது இந்த உலகில் உயிர்பிழைத்து வாழ்ந்துவிட வேண்டும் என்ற\ அடிப்படை உயிரியல் உள்ளுணர்வுடன்தான் இருக்கும். அதற்கு ஆபத்து வரும்போதெல்லாம் கோபமும் இயல்பாகவே வந்து விடும். ஆகையால் மனிதனின் கோபத்தை, தனக்கு வெளியில் இருந்து வரும் ஆபத்தையும் மிரட்டலையும் எதிர்நோக்க, நிகழ்த்தும் எதிர்வினை என்றே கூறலாம்.

மனிதனுக்கு ஆபத்து என்று வந்தால் அதை சமாளிக்க வேண்டுமே! அவனின் உடலைத் தயார்படுத்த எமர்ஜென்சி ஹார்மோன்களான அட்ரினலின், நாரட்ரினலி அகிய இரண்டும் அபரிமிதமாக சுரக்க ஆரம்பித்து விடுகிறது. இவைகள் அவனை, பயப்படு அல்லது சண்டைபோடு அல்லது தப்பித்து ஓடு - (FRIGHT - FIGHT - FLIGHT) என்னும் காரியங்களுக்குத் தயாராக்கி விடுகிறது. எதைச் செய்ய வேண்டும் என்பதை சூழ்நிலை அவனுக்கு உணர்த்தி விடுகிறது. அதன் விளைவாக இதயம் வேகமாகத் துடிக்க, இரத்தம் உடலெங்கும் பீறிட்டுப் பாய, இரத்த அழுத்தம் மேலே ஏறுகிறது. சுவாசத்தின் ஆழமும் வேகமும் அதிகமாகி உடலுக்கு ஆக்சிஜன் அதிகமாகப் போய்ச்சேர ஏறக்குறைய அவன் உடல் சண்டை போடுவதற்குத் தயாராகி விடுகிறது. என்ன நடக்கிறது என்ற சுய நினைவை இழக்க வார்த்தைகளும் உடல்மொழியும் எதிராளியை சண்டைக்கு இழுக்க ஆக்ரோஷமும் வன்முறையும் தொடர்ந்து வழிகேட்டு வந்து நிற்கிறது. கோபம் கொண்ட மனிதனின் உடலில் இவ்வளவும் ஒரு சில நிமிஷங்களில் நடக்கிறது!

அடிக்கடி கோபம் கொள்ளும் நபர்களுக்கு பிறருடன் இயல்பாகத் தொடர்பு கொள்ளும் கம்யூனிகேஷன் திறமை மிகவும் குறைவாக இருக்கும். வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் அற்று அடிக்கடி மற்றவர்கள் போய் சமரசம் செய்ய வேண்டி வரும். மாறும் சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளத் தெரியாதவர்களாக இருப்பார்கள். எளிதில் பிறரின் தூண்டுதல்களுக்கு ஆளாகி அடிக்கடி கோபம் வரும். இவர்களுக்கு அதுவே பழக்கமாகி, நடத்தையும் மாறி, எதெற்கெடுத்தாலும் எரிச்சல், எதிர்ப்பு, கோபம் என்ற குணங்களோடு மனவியல்படி OPPOSITIONAL DEFIANT DISORDER என்ற நிலைக்கு வந்து விடுவார்கள்.

குழந்தைகளின் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

பெரியவர்கள் போல் அல்லாமல் குழந்தைகளுக்கு கோபம் வரும்போது வீட்டில் ஒரு பிரளயமே நடந்து விடுகிறது. ஏமாற்றத்தையும் எரிச்சலையும் எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீட்டையே ரணகளமாக்கி விடுகிறார்கள்.` அவர்களைக் கையாளும் பெற்றோர்கள் கீழே கொடுத்துள்ளவற்றை முயற்சித்துப் பார்க்கலாம்.

1. குழந்தைகள் மீது எப்போதும் கொஞ்சம் கரிசனமும் அன்பும் காட்டுங்கள். அவர்களின் கோபம், வலி, ஏமாற்றம் பற்றி புரிந்துகொள்ள உண்மையாக முயல வேண்டும். கோபம் கொள்ளும் குழந்தைக்கு தோல்வியையும் ஏமாற்றத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் வரவில்லை. அதனால் வரும் மன உளைச்சலைக் கோபமாக்கி உங்கள் மேல் காட்டுகிறார்கள்.

2. குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்திச் சொல்ல ஊக்குவிக்க வேண்டும். 'எனக்கு உங்கள் மேல் கோபம்' என்றோ அல்லது ‘இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்றோ சொல்லத் தெரிய வேண்டும். கோபம், மகிழ்ச்சி, சோர்வு, வலி, ஏமாற்றம் போன்று எதுவானாலும் வெளிப்படுத்தும்படியான குடும்பச் சூழலும் இருக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் குழந்தைகளின் லெவலுக்கு மனதளவில் இறங்கி வந்து அவர்களுடன் பேச வேண்டும்.

3. குழந்தைகள் கோபப்படும்போது அவர்கள் எப்படி மாறிவிடுகிறார்கள் என்று கூறுங்கள். அவர்களிடம் கோபத்தைக் கட்டுப்படுத்த, குறைக்க, மனதை வேறு வழியில் திருப்பக் கற்றுக் கொடுங்கள். தங்களைத் தாங்களே கோபத்தின் போது கண்காணிக்கத் தெரிய வேண்டும். கோபம் ஆத்திரமாகி வன்முறையில் முடியக் கூடாது.

4. கோபத்தை தூண்டும்படியான சூழ்நிலையை உருவாக்காதீர்கள். அவர்களின் கோபத்திற்கும், செய்யும் செயல்களுக்கும் அவர்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை சிறுவயதிலேயே அவர்களின் மனதில் விதையுங்கள்.

5. பிறருடன் சுமுகமாகப் பழகும் திறனும், அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனும் இருப்பவர்களுக்கு கோபத்தைக் கட்டுக்குள் வைக்கும் கலையும் தெரியும். ஆகவே குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு அவர்களையே தீர்வு காணும்படி சொல்ல வேண்டும். பெற்றோர்களும் அதற்கு உதவலாம்.

6. சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவாறு எப்படி பொது இடத்தில் கோபத்தைக் கையாள வேண்டும் என்று சொல்லுங்கள். அவர்களின் கம்யூனிகேஷன் திறனை வளர்க்க உதவுங்கள். கோபத்தை எப்படி வெளிக்காட்டுவது என்பதற்கு பெற்றோர்கள்தான் முன்னுதாராணமாக நடந்து காட்ட வேண்டும்.

7. குழந்தைகள் கோபத்தை அடக்கி, ஆக்ரோஷம் வன்முறை என்ற நிலைக்குப் போகாமல் திரும்பும்போது மனதாரப் பாராட்டுங்கள். அவர்களின் வயதுக்குத் தகுந்தவாறு பரிசுகள் கூட கொடுக்கலாம்.

முடிவரை

இந்த உணர்வு சார்ந்த நுண்ணறிவை அதிகம் வளர்த்துக்கொள்ளும் குழந்தைகள் எப்போதும் வெற்றிமேல் வெற்றி பெறுபவர்களாகவும் தாங்கள் சார்ந்துள்ள சமூகத்தால் பெரிதும் விரும்பப்படுபவர்களாகவும் ஆகி விடுகிறார்கள். கோபம் இயற்கையானதாக இருந்தாலும் அளவுக்குமேல் கோபம் வரும்போது உடலும் மனமும் பாதிப்பது உறுதியாகி விடுகிறது. குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து, மேம்பட்டு, வேண்டாத குணங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிந்தொழியும் போது இந்த கோபம் போகாவிட்டாலும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் மனிதன் ஒரு பண்பட்ட பிறவியாக மாறி விடுகிறான்.

- ப.வைத்திலிங்கம், குழந்தை மருத்துவ நிபுணர்

Pin It