ஆகஸ்ட் 30 - அனைத்துலக காணாமற் போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாமலாக்கப்பட்ட 20000க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்ப ட்டது.

ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் அடையாறில் காந்தி கஸ்தூரிபாய் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் உள்ள கள அதிகாரியிடம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.viduthalai rajendran and velmurugan

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் பார்வேந்தன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அனைத்திந்திய துணைத் தலைவர் பேராசிரியர் சரசுவதி, உரிமைத் தமிழ் தேசத்தின் ஆசிரியர் தியாகு, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன், மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சேக், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவர் ச.குமரன், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் நிர்வாகி கோவேந்தன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யுனிசெப் அலுவலகத்தில் இருந்த கள அதிகாரியிடம் ஈழத் தமிழர் துயரத்தை எடுத்துச் சொல்லி ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனுவைக் கையளித்தனர்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஈழத் தமிழர்கள் சந்தித்து வரும் காணாமலடிக்கப்பட்டோர் பிரச்சனைப் பற்றியும் அது குறித்து நிலவி வரும் சர்வதேச மௌனத்தை எடுத்துக் காட்டினர்.

விடுதலைப் போராட்டம் நடக்கும் பல்வேறு நாடுகளில் காணாம லடிக்கப்படும் அவலம் நீடிக்கின்ற போதிலும் உலகில் எங்குமே இலங்கையில் நடந்தது போல் சரணடைந்தவர்கள் காணாம லடிக்கப்பட்டது கிடையாது. அப்படி சரணடைந்து காணாமலடிக்கப்பட்ட வர்களில் குழந்தைகளும் அடங்குவர். சரணடைந்த குழந்தைகளைக் காணாமலடித்திருக்கும் அவலம் உலகில் எங்குமே இல்லை.

இந்த உண்மைகள் ஊடகத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது.

ஈழப் போரில் சரணடைந்த குழந்தைகளின் கதி என்ன?

ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் அய்.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ‘யுனிசெப்’ அதிகாரியிடம் சென்னையில் நேரில் அளிக்கப்பட்ட மனுவின் உள்ளடக்கம்:

ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாம லடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப் போரின் போதும் அதற்கு முன்பும் பின்பும் வலுக் கட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப் போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப் பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

 இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின் கடைசி நாட்களில் சிறிலங்கா அரசப் படைகளிடம் சரணடைந்த குடும்பங்களோடு இருந்தவர்கள். தங்களுடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததை நம்பி போரின் முடிவில் தாமாக முன்வந்து சிறிலங்கா அரசப் படைகளின் கை களில் தம்மை ஒப்படைத் துக் கொண்ட எண்ணற்ற குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட தமிழர்கள் இதில் அடங்குவர்.

சிறிலங்காவில் உள்ள தமிழ்த்தேசமும் அதன் புலம்பெயர் மக்களும் இந்தியாவில் உள்ள தமிழ் மக்களாகிய நாங்களும் கிட்டத்தட்ட சிங்களர்களை மட்டுமே கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடைசியாக கண்ட எண்ணற்ற தமிழர்கள் வலுகட்டாயமாக காணாமலாக்கப்பட்டதன் நீண்டகால விளைவுகளால் தொடர்ந்து துன்பத்தில்இருக்கிறோம்.

காணாமலடித்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தை சிறிலங்கா 2016 மே மாதம் ஏற்புறுதி செய்த போது, சிறிலங்காவில் வலுக்கட்டாயக் காணாமலடித்தலைச் செய்தவர்கள், ஆணையிட்டவர்கள், செய்யச் சொன்னவர்கள், அல்லது அதில் உடந்தையாக இருந்தவர்கள் மீது குற்றப் பொறுப்பு சுமத்த தனக்குள்ள சட்டக் கடமையை ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்த நாள் வரை அப்படிச் செய்ய சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் எவ்வித முயற்சியும் இல்லை.

இலங்கை அரசாங்கம் சர்வதேச விதிகளின் கீழான கடமைகளையும் சரி, தானே முன்வந்து முற்றாக நடைமுறைப்படுத்துவதாக ஐ.நா.விடம் உறுதியளித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் கீழான கடமைகளையும் சரி, நிறைவேற்றத் தவறிவிட்டது. இவைமட்டுமின்றி, சிறிலங்கா அரசாங்கம் ஏராளமான உறுதிமொழிகளை அளித்திருந்தும் இராணுவத்தைச் சார்ந்த ஒருவரைக்கூட நீதியின் முன்பு நிறுத்தவில்லை.

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்த போது, 2009 மே மாதத்தில் போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு அடுத்தநாள் நடக்கவிருக்கும் பாதுகாப்பு அவைக்கூட்டத்தில் ஆணையிடுவதாக அவர்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியுள்ளார்.

மேலும், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே தைப்பொங்கலை முன்னிட்டு வடக்கில் உள்ள யாழ்நகரத்திற்கு சென்றிருந்தபோது, 2016 சனவரி 15 இல் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், “ போரின்முடிவில் 2009 மே மாதத்தில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த அனைவரும் உயிரோடில்லை” என்று சொன்னார். இந்நாள்வரை, சரணடைந்தவர்கள் கொல்லப்படுவதற்கு யார் பொறுப்பு? அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்? அவர்களுடைய இறந்த உடல்கள் எங்கே? உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் தர மறுக்கிறார்.

ஆயுதமோதலின்போதும்அதற்கு முன்பும் பின்பும் சிறிலங்கா அரசாங்கம் வலுக்கட்டாயக் காணா மலடித்தலை தமிழ்த்தேசத்திற்கு எதிரான இனப்படு கொலையின் திட்டமிடப்பட்ட கருவியாக கையாண் டுள்ளது.

நன்கு அறியப்பட்ட வெள்ளைவேன் கடத்தல்கள் தமிழர்களுக்கும் மாற்றுகருத்துக் கொண்ட சில சிங்களர்களுக்கும்கூட எதிரான அடக்குமுறைக் கருவியாக மாறிப்போனது. காணாமலடிக்கப்பட்ட தமிழ்மக்களோடு சேர்த்து ஆயுதமோதலின் முடிவில் சரணடைந்த பெரும்பாலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களின் நிலையும் தெரியாமலே இருக்கிறது. 2015 நவம்பர் மாதம் சிறிலங்காவுக்குச் சென்று அய்.நா. குழு நேரில் பார்வையிட்டு வெளியிட்ட அறிக்கையின்படி உலகில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கையில் சிறிலங்கா இரண்டாமிடம் வகிக்கிறது.

சிறிலங்கா 2016 அக்டோபரிலும் 2017 மார்ச்சிலும் மனித உரிமை மன்றத்தில் “காணாமல் போனோர் அலுவலகம் அமைத்துள்ளோம், இது ஒரு சாதனை” என்று கூறியது ஏமாற்றுப் பேச்சே. தமிழ்ச் சமுதா யத்தின் பிரதிநிதிகள் பன்னாட்டு வல்லுநர்களின் பிரதிநிதிகள் ஏதுமில்லா மலும் காணாமல் போனோர் அலுவலகம் அமைத்திருப்பது சர்வதேசச் சமுதாயத்தை ஏமாற்ற சிறிலங்கா மேற் கொண் டுள்ள வஞ்சக முயற்சியே ஆகும்.

காணாமற்போனோர் அலுவலகத்தில் ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு வல்லுநர்களை சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான வேண்டுகோள் இலங்கை அரசால் மறுக்கப்பட்டன. குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்தது போல் முன்னாள் மூத்த பாதுகாப்பு படை அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) மோகந்தி பிரிசை காணாமற்போனோர் அலுலகத்தின் ஆணையர்களில் ஒருவராக அண்மையில் ஆக்கியுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.

காணாமல் போனவர்களின் பாதிப்புற்ற குடும்பத்தினர் உள்நாட்டுச் சட்டத்தின்படி உண்மையான இழப்பீடு பெறும் வாய்ப்பை மறுப்பது மட்டுமல்லாமல், வலுக்கட்டாயக் காணாமலடித்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தின் 31ஆம் உறுப்பில் கண்டவாறு இந்தக் குடும்பத்தினரிடமிருந்து நேராக முறையீடுகள் பெற அய்.நா. குழுவுக்கு உள்ள உரிமைகளுக்கும் வழிவிடாமல், இலங்கை தடுத்து வருகிறது.

உள்நாட்டு வழிமுறையோ பன்னாட்டு வழிமுறையோ எதற்கும் இடமில்லை என்ற நிலையில், காணாமல் போனவர்களின் தாய்மார்களும் மனைவிமார்களும் கிளிநொச்சியிலும் பிற மையங்களிலும் மாதக்கணக்கில் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். எங்கள் குடும்பத்தினரை விடுதலை செய்க! அல்லது அவர்களுக்கு என்ன நேரிட்டது என்ற உண்மையை அறிய நம்பகமான புலனாய்வு செய்க! என்பதே அவர்கள் கோரிக்கை. அமைதியான முறையில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் அரசின் வன்முறைக்கு இலக்காகி யுள்ளன.

இந்தப் பெண்களும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அனைவரும் ஆண்டுக் கணக்கில் செய்வதறியாமல் திகைத்துப் போய் வாழ்ந்து வருகின்றனர். வாரிசுரிமையாகச் சொத்தில் பங்கு பெற முடியவில்லை. உரிமைப் பத்திரம் வைத்துக் கொள்ளவோ உதவி கோரி விண்ணப்பிக்கவோ முடியவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pin It