“அடுக்கம் என்பது பொதுவாக அடுக்குகள் நிறைந்த மலைப் பகுதியைக் குறிக்கும். இந்த நாவல் சாதியச் சமூகத்தின் படிநிலை அடுக்குகளையும், அதிகார வர்க்கத்தின் படிநிலை அடுக்குகளையும் எடுத்து இயம்புகிறது.” சமுதாய முரண்பாடுகளை இயங்கியல் கண்ணோட்டத்துடன் மதிப்பீடு செய்து செறிவான ஒரு நாவலாக இதை வடிவப்படுத்தியிருக்கிறார் டி.செல்வராஜ். சோசலிச எதார்த்தவாதத்தை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் இவர். உழைக்கும் மக்களின் வாழ்வியல் கூறுகளை இலக்கியத்தின் உள்ளடக்கமாகக் கையாண்டு ஒரு புதிய தடத்தை நிறுவி வழி அமைத்தவர்.

இவர், இடதுசாரி இயக்கச் சார்புடைய இளம் தமிழ்ச் சிறுகதை இலக்கியப்படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தோழர் ப.ஜீவானந்தத்திற்கு நெருக்கமாக இருந்த இவருடைய முதலாவது சிறுகதை ‘ஜனசக்தி’ வார இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து தமிழில் வெளியான எதார்த்த இலக்கியப் பத்திரிக்கைகளில் அவ்வப்போது சிறுகதைகளை நிறையவே எழுதினார்.

selvaraj novelசெக் நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் தனது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலில் இவரைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். “இடதுசாரி இயக்கச் சார்புடைய இளம் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவராகத் திகழ்ந்தார். பாட்டாளி மக்களின் குறிப்பாக, பள்ளர் சமூகத்தைச் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையினைத் திறம்படத் தமது கதைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.”

இவருடைய கதைகள் தொகுப்புக்களாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றன. அன்றைய சூழலில் அரங்கேற்றம் செய்வதற்குரிய வகையில் அவ்வப்போது நாடகங்களையும் எழுதினார்.

“தமிழில் தொழிலாளர் (நெசவாளர்) வாழ்க்கையினை முதல் முதலில் படம் பிடித்துக் காட்டிய நாவல் தொ.மு.சி.ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ (1953) ஆகும். தமிழில் வெளிவந்த முதல் சோசலிச எதார்த்தவாத நாவல் இதுவாகும். இதனை அடியொற்றி நிலத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினைச் சித்தரித்துக் காட்டிய நாவல் டி. செல்வராஜின் ‘மலரும் சருகும்’(1967) என்பதாகும். அதைத் தொடர்ந்து ‘தேநீர்’ (1976) மற்றும் ‘மூலதனம்’ (1982) போன்ற நாவல் களை எழுதினார். வழக்கறிஞராகப் பணியாற்றிய டி.செல்வராஜின் நீதிமன்ற வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் ‘அக்னிகுண்டம்’ (1980) நாவலையும் எழுதியுள்ளார். திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டும் விதமாக எழுதி வெளியிட்டார்.

இவரது ‘யுகசங்கமம்’ நாடகமும், ‘தோல்’ நாவலும் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவை. ‘தோல்’ நாவல் சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றது. இவரது கடைசி நாவல்தான் ‘அடுக்கம்.’ அவருடைய மறைவுக்குப் பிறகு வெளியானது “இது மற்ற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.” அடுக்கம் நாவல் அரசு அதிகாரிகள் அடையும் அவமானங்களைக் காட்டுவதைவிடச் சமூக மாற்றத்திற்கான அவர்களின் போராட்ட உணர்வை உயர்த்திப் பிடிக்கிறது. அரசு இயந்திரத்தின் சிக்கலான இயக்கத்தைக் காட்டுவதோடு அதிகார வர்க்கத்திற்குள் தொழில்படும் சாதியம், பெரும் தொழிற்சாலைகளால் சுற்றுச் சூழல் மாசுபடுவது, விவசாயம் அழிந்து போவது, பழங்குடிகள் விளிம்பு நிலைப் படுத்தப்படுவது, கிரானைட் கொள்ளை ஆகிய சமகாலப் பிரச்சனைகளும் இந்த நாவலில் விரிவாக சித்திரிக்கப் பெற்றுள்ளன.

நாவலின் முதல் பகுதி, தாழையூத்தில் ஏற்படுத்தப்பட்ட சிமெண்ட் ஆலை அப்பகுதியில் விவசாயத்தைச் சீரழித்தது, நிலத் தொழிலாளர்கள் எப்படி ஆலைத் தொழிலாளர்களாக மாற்றம் பெற்றுள்ளார்கள் என்ற வரலாற்றை அடையாளப்படுத்துகிறது.

இரண்டாம் பாகத்தின் தொடக்கப்பகுதி நைனிடாலில் நாராயணன் ஆட்சியர் பணிக்கான பயிற்சியை மேற்கொண்ட நிகழ்வுகளை விளக்குகிறது.

பாகம் மூன்று நாராயணன் ஆட்சிப் பொறுப்பேற்று மேற்கொண்ட அதிரடி நடிவடிக்கைகளை விவரிக்கிறது.

மாறுபட்ட தன்மைகளும் வேறுபட்டு சாதிகளும் கொண்ட கிராமப்புற மக்களின் அறியாமை, ஏழ்மை, வறுமையின் விளைவாக நிகழும் சண்டை, சச்சரவு, தகராறு, கொலை, வழிப்பறி போன்ற நிகழ்வுகளை மனம் நெகிழும் வகையில் சித்தரிக்கிறார். மக்களின் இயல்பான உணர்ச்சிகள், உணர்வுகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் கற்பனை கலவாத அசலான மொழியில் அழுத்தமாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன. கிராமங்களின் இயல்பான வாழ்க்கை முறைகள் அவற்றின் இயற்கையான தன்மைகளும் தாராளமான முறையில் நிகழ்கின்றன. அவற்றை ஆழமாகவும், துல்லியமாகவும் இவர் நாவல் முழுவதுமாகச் சித்தரிக்கிறார். அவர்களுடன் வாழ்வது போன்ற உணர்வை ஒவ்வொரு நிகழ்ச்சியும் அழுத்தமாக உணரச் செய்கின்றன.

“பால்குடும்பன் ஓங்குதாங்கான மனிதன். வடிவான உடல்கட்டு மழையிலே நனைஞ்ச பனைமரமாட்டம் கருமை படிஞ்ச நெறம். வயக்காட்டுலே கலப்பை புடிச்சு உழுவுற நேரம் போவ மத்த நேரம் எல்லாம் தலைப்பா கட்டி, தார்ப்பாய்ச்சி, காதுலே கொப்பும், கடுக்கனுமா ராசாவாட்டா தலைநிமிர்ந்து தான் நடப்பான்.” இது ஒரு கதாபாத்திரத்தின் உள் மற்றும் வெளி பற்றிய சித்தரிப்பு, இதுபோல, நாவலில் வரும் முக்கியமான கதாபாத்திரம் உயிரோவியமாக இனம் காட்டப்படுகின்றன.

ஓர் அதிகாரியை இப்படி அறிமுகப்படுத்துகிறார்.

“இன்ஸ்பெக்டர் மணிமாறன் மிகவும் ஊழல் மிகுந்த பேர்வழி என்பதோடு துக்கையப்பனது சமூகவிரோதச் செயல்களுக்கெல்லாம் உறுதுணையாக நிற்பவன். எனவே, இரவோடு இரவாக ஏழைகளின் குடிசைக்குத் தீ வைத்து துக்கையப்பனின் கையாட்களைக் கைது செய்யவில்லை. மாறாக இவர்களைக் காவல்நிலையம் கொண்டு சேர்த்தவர்களை ஏளனமாகவும், கேலியாகவும் பேசி அனுப்பிவைத்தான். குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு மணிமாறன் தயாராக இல்லை.”

முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண்மணியை இப்படி அடையாளப் படுத்துகிறார்.

“மைனர் பிள்ளை இயற்கை எய்திய பின்பு மீனாட்சி ஆச்சி இதர பிள்ளைமார் வீட்டுப் பெண்களைப் போல் வெள்ளைச் சேலை உடுத்தி கைம்மைக் கோலம் பூணவில்லை. விதவை என்பதற்கு அடையாளமாக நெற்றியில் திலகம் மட்டும் வைத்துக் கொள்வதில்லை. மாறாக, இதர ஆண்களுக்கு காப்பாகத் தன் பணிகளைக் கவனிப்பதோடு, அறுவடை என்றால், குடையைப் பிடித்துக் கொண்டு களத்து மேட்டுக்கு எதிரில் இருக்கும் கூத்தனாச்சி அம்மன் கோவில் எதிரில் இருக்கும் ஆலமர நிழலில் போய் உட்கார்ந்து விடுவார்.

“யானைகள் மிகவும் சாதுவான மிருகங்களில் ஒன்று. யானைகளை உபத்திரவிக்காத வரையில் மனிதர்களை இவை தாக்குவிப்பது கிடையாது. தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் அவற்றை உபத்திரவம் செய்வதில்லை. மாறாக, அவை மனிதர்களைத் தாக்குவது கிடையாது. காடுகளில் கொசுக்களின் உபத்திரவம் வேறு. எனவே, இரவு வேளைகளில் தேயிலை வயல்களில் சுற்றித் திரிந்துவிட்டு பகலில் மறைவான காட்டுப் பகுதிகளுக்குப் போய்விடுகின்றன” என்று சொன்னான் மணிவண்ணன்.

இயற்கையைக் கூர்ந்து கவனித்து அதில் நிகழும் மாற்றங்களைச் சித்தரித்துக் காட்டுகிறார்.

வழக்கமாக, தங்களுடைய குறைகளையும், சிரமங்களையும், துன்ப துயரங்களையும் சொல்லி கருப்பணசாமி என்ற நாட்டுப்புறக் கடவுளிடம் முறையிடும் பழக்கத்தை இவர் எதார்த்தமாகக் காட்சிப் படுத்துகிறார். உடம்பிலும், நெற்றியிலும் பட்டை பட்டையாகத் திருநீறும், குங்குமமும் பூசிக் கோவணாண்டியாகக் காட்சி தரும் ஒரு மனிதன் சாலையோரம் கிளைபரப்பி நிற்கும் ஆலமரத்தடியில் ஓங்கி வளர்ந்திருக்கும் கறையான் புற்றில் தலையை மோதிக் கையிலிருக்கும் சாட்டை வாலினால் தன்னை மாற்றி மாற்றி அடித்துக் கொள்வதால் உடம்பு முழுவதும் இரத்த விளார்கள்.”

இதைப்போல வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இனம்கண்டு தனது இலக்கியப்படைப்பை இவர் வடிவமைத்திருக்கிறார். மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நாராயணனின் கவனத்திற்கு உள்ளாகும் காட்சிகளாகவும், நிகழ்ச்சிகளாகவும் இவர் பதிவு செய்திருக்கிறார். கற்பனைக் கதைகளைத் தவிர்த்து அசலான மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் மனதை நெகிழச் செய்யும் என்பன இந்த நாவலின் வாயிலாக உணர முடிகிறது.

இந்திய விடுதலைக்குப்பின், 1950 முதல் இன்றுவரை மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும், தேய்ந்து கொண்டும் இருக்கும் கிராமப்புறம் சார்ந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அதன் பன்முகத் தன்மைகளோடு ‘அடுக்கம்’ நாவலை வடிவப்படுத்தியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட கால மக்கள் வாழ்க்கையாகவும், வரலாறாகவும் இந்த நாவல் வடிவம் பெற்றிருக்கிறது. கோசலிச எதார்த்தவாதக் கண்ணோட்டத்தை வளர்க்கும் வகையில் புதுமையானதாக உள்ளது ‘அடுக்கம்.’

அடுக்கம் (நாவல்) | டி.செல்வராஜ்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,

சென்னை | விலை.ரூ.280/-

- சி.ஆர்.ரவீந்திரன்

Pin It