ஒருமுறை சென்னையில் சாத்தூர் பிச்சைக்குட்டி வில்லிசை நிகழ்ச்சி நடத்தினார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் பார்வையாளர்களாக இருந்தார்கள் நிகழ்ச்சி முடிந்ததும் கூட்டம் கலைந்தது. கலைவாணரும் அவருடைய மனைவி மதுரமும் வேறு சிலரும் மேடையிலே ஏறினார்கள்.

பிச்சைக்குட்டியின் துணைப் பாடகர்கள் இசைக்கருவிகளை அதற்குரிய உறைகளில் போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் நீண்ட வில்லை இரண்டாக ஒடித்து அதற்குரிய பட்டுத்துணி உறையில் போட்டுக் கொண்டிருந்தார்.

டி.எ.மதுரம் ‘இது என்ன வில்லை இரண்டாக உடைத்து விட்டாரே' என்று அச்சத்துடன் கேட்டார். கலைவாணர் 'உனக்கு அது தெரியாதா ராமன் சீதையைக் கல்யாணம் செய்யும் போது வில்லை ஒடித்தான் ஜனகன். ஒடிந்த வில் எனக்கு வேண்டாம். நீ அயோத்தி கொண்டுபோ என்றான். உடனே இராமன் பரவாயில்லை பிச்சைக்குட்டியிடம் ஒடிந்த வில்லைக் கொடுத்து விடலாம். அவர் பாதுகாப்பார் என்றானாம். ஜனகனும் அப்படியே செய்யலாம் என்றானாம். அப்படி வந்த வில் இது' என்றாராம். சுற்றி நின்றவர்கள் ஒரேயடியாக சிரித்தார்கள். பிச்சைக்குட்டி ஒரு பேட்டியில் தன் மறக்கமுடியாத அனுபவம் இது என்று சொல்லி இருக்கிறார்.

sattur pichaikuttiபிறப்பு படிப்பு

 எஸ்.பி.பிச்சைக்குட்டி என்னும் சங்கரலிங்கம் பார்வதிநாதன் பிச்சைக்குட்டியின் சொந்த ஊர் கோவில்பட்டி (1922 1971). பணியின் காரணமாக சாத்தூரில் குடியேறினார். அந்தப் பெயரே அவருக்கு முன்னொட்டாக மாறிவிட்டது இவர் ஆரம்பத்தில் படித்தது கோவில்பட்டி அரசுப் பள்ளியில். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்திருக்கிறார்.

பின்னர் சென்னை பல்கலைக்கழகம் வழி இண்டர்மீடியட் படித்திருக்கிறார்.

பள்ளிப்படிப்பு முடிந்த பின் தனிப்பட்ட சில தமிழ் ஆசிரியர்களிடம் கம்பன், பாரதி என படித்தார். அந்தக் காலத்தில் கோவில்பட்டியில் பெட்டிக்கடை நடத்திய கந்தசாமி செட்டியார் தமிழ் இலக்கியங்களை நுட்பமாக படித்தவராக இருந்தார். இவரைத் தேடி விளாத்திகுளம் சுவாமிகள் என்பவர் வருவார். இவர் கர்நாடக சங்கீதம் அறிந்தவர். இவர்கள் இருவரிடமும் பிச்சை குட்டி முறையாக படித்திருக்கிறார்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளி­யிட்ட திருக்குறள் பரிமேலழகர் உரைநூலுக்கு முகவுரை எழுதிய கந்தசாமி முதலியார் சாத்தூர் பிச்சைக்குட்டியுடன் தொடர்பு உடையவர். அவரிடமும் பாடம் கேட்டிருக்கிறார்.

பணி

 இவர் ஆசிரியர் பயிற்சி முடிந்ததும் சாத்தூர் அருகே உள்ள தியாகராஜபுரம் என்ற ஊர்ப் பள்ளிக்கூடத்தில் பணிக்குச் சேர்ந்தார். இங்கு இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். பின்னர் சாத்தூர் அருகே உள்ள மேலக்கரந்தை ஊரிலுள்ள ஆயிர வைசியர் நடுநிலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். ஐந்து ஆண்டுகள் பணி செய்தார். பிச்சைக்குட்டிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக வேலையை விட்டார். மொத்தமே 5 ஆண்டுகள்தான் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

டாக்டர்

பிச்சைக்குட்டி பற்றி எழுதிய இதழ்களும் பத்திரிகைகளும் அவரை டாக்டர் என்று குறிப்பிடுகின்றன. இதைப் படித்துவிட்டு ஒரு கட்டுரையாசிரியர் இவருக்கு தமிழக பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கியது என்று கூட எழுதியிருக்கிறார். ஆனால் அது தவறான செய்தி.

பிச்சைக்குட்டி ஹோமியோபதி மருத்துவம் முறைப்படியாக படித்து சான்றிதழ் பெற்றிருக்கிறார். அலோபதி மருத்துவம் தெரியும். இதில் கொஞ்சம் அனுபவம் உண்டு. இவர் தன் ஜீவனத்திற்காக மருத்துவத் தொழிலை நடத்தி இருக்கிறார். இதனால் சாத்தூர் வட்டாரத்தில் பொது மக்கள் இவரை டாக்டர் என்று அழைத்தனர். இந்த பட்டம் இவருக்கு நிலைத்துவிட்டது

கலைஞராக உருவாதல்

பிச்சைக் குட்டி பிறவிக் கலைஞரோ மரபுவழிக் கலைஞரோ அல்லர். அவர் வில்லிசைக் கலைஞராக வந்ததற்கு தற்காலிகமான ஒரு நிகழ்ச்சிதான் காரணம். 1948இல் சாத்தூர் பகுதியில் காலரா நோய் பரவலாக இருந்தது. அரசு எந்திரம் தீவிரமாகச் செயல்பட்டாலும் ஊர் மக்கள் காலரா பரவியதற்கு அம்மனின் குற்றம் என்று நம்பினர். சாத்தூர் மாரியம்மன் கோவிலில் விழா நடத்தினர். அதற்கு திருநெல்வேலி வில்லிசைக் கலைஞர் ஐயன் பிள்ளை வந்திருந்தார். அந்தக் காலத்தில் நாஞ்சில்நாட்டு சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி ஐயம்பிள்ளை இருவரும் பிரபலமான கலைஞர்கள்.

பிச்சைக்குட்டி ஐயன் பிள்ளையின் வில்லிசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டிருக்கிறார். வில்லிசைக் கலையில் பெரும் ஈர்ப்பு வந்ததற்கு இந்த நிகழ்ச்சி முக்கிய காரணம். ஏற்கனவே மரபுவழி கவிதைப் பயிற்சியும் இசைப் புலமையும் நல்ல சாரீரம் உடைய பிச்சைகுட்டிக்கு தானே வில்லிசை நிகழ்ச்சி நடத்தலாம் என்ற நம்பிக்கை வந்தது.

இவர் ஆரம்ப காலத்தில் தன் மாணவர்களுக்கு வில்லிசைக் கலையை பயிற்சி அளித்திருக்கிறார். அவர்களுடன் மேடையிலிருந்து பாடியிருக்கிறார். இது மூன்று ஆண்டுகள் நடந்திருக்கலாம். அவர் முறைப்படி மேடையேற ஆரம்பித்தது 1953 இல் தான். அப்போது தேர்தல் சமயம். இவர் முத்துராமலிங்கத் தேவரை ஆதரித்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். இது கோவில்பட்டி அருகே மேலைக் கரந்தை என்ற கிராமத்தில் நடந்தது. இதன்பிறகு 1971 வரை முழுநேரக் கலைஞராக இருந்திருக்கிறார். 49 வயது வரை வாழ்ந்த இந்த கலைஞர் 17 ஆண்டுகள் 2000க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

விருது

இவர் வில்லிசை வேந்தர் ( குன்றக்குடி அடிகள்) வில்லிசை பிரவீண (சுவாமி சிவானந்தா ) கலைமாமணி (1970 தமிழக அரசு) போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பிச்சைக்குட்டி தான் வாழ்ந்த காலத்தில் தீவிரமான படைப்பாளிகள், பிரபலமான விமர்சகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என எல்லோரும் பாராட்டும் படியாக வாழ்ந்திருக்கிறார்.

டி.கே.சி

டி.கே. சிதம்பரநாத முதலியார் இல்லஸ்டட் வீக்கிலி இதழில் (1953) சாத்தூர் இசைக்கலைஞர் என்னும் தலைப்பில் விரிவான ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். இதில் வில்லுப்பாட்டு என்னும் நாட்டுப்புறக் கலையை சாதாரண பாமர மக்களிடம் கொண்டு சென்றவர் இவர் எனக் குறிப்பிடுகிறார்.

டி.கே.சி மட்டுமல்ல கல்கி கிருஷ்ணமூர்த்தி, பி.டி.ராஜன், என்.எஸ்.கிருஷ்ணன், குன்றக்குடி அடிகளார், சாமிநாத சர்மா, ம.பொ.சி, தி.க.சண்முகம், பி.ஸ்ரீ, கொத்தமங்கலம் சுப்பு என பலரும் இவரது ரசிகர்கள்.

இவர் தீவிர இலக்கியவதிகளிடமும் நாட்டுப்புறக் கலைகளின் பார்வையாளர்களிடமும் பிரபலமானவர். நாயகன் என இவரை எழுத்தாளர் சங்கம் பாராட்டி இருக்கிறது (ஜனசக்தி 1959 அக் 24, தினமலர் 1959 அக் 24).

வெளிநாடு

ஐம்பதுகளின் இறுதியில் இவரது நிகழ்ச்சியைப் பார்க்க மிகச் சிறிய கிராமங்களிலிருந்து மாட்டு வண்டியிலே மக்கள் வந்திருக்கிறார்கள். திரைப்பட நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் வில்லிசைக் கலையை பிச்சைக்குட்டியிடம் கற்று இருக்கிறார்.

தமிழகத்தில் மட்டுமல்ல; மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் பிச்சைக்குட்டி நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். அங்கே மக்கள் இவருக்கு பாராட்டு கொடுத்திருக்கின்றனர். அங்குள்ள தமிழ் பத்திரிகைகள் இவரைப் பேட்டி கண்டுள்ளன.

இந்தியாவில் பம்பாய், கல்கத்தா, தில்லி, ரிஷிகேஷ் என பல இடங்களுக்கும் சென்று இருக்கிறார். அங்கேயும் தமிழ் மக்கள் இவரைப் பாராட்டி இருக்கின்றனர்.

பாடிய தலைப்புகள்

பிச்சைக்குட்டி என்றதும் இவர் நடத்திய கண்ணகி கதை, பாரதியின் பாஞ்சாலி சபதம், இந்திய சுதந்திர வரலாறு, கட்டபொம்மனின் கதை, காந்தி மகான் கதை போன்றவை முக்கியமானவை. மற்ற கலைஞரிடம் இருந்து இவர் வித்தியாசமானவர். குறிப்பாக நாட்டார் கலைஞர்களிடம் இருந்து முழுக்கவும் வேறுபட்டவர்.

இவர் புதுமைப்பித்தனின் வாசகர். அவரை முழுக்கவும் படித்தவர். மலேசிய பத்திரிக்கை ஒன்றின் பேட்டியில் எனக்குப் பிடித்த படைப்பாளி புதுமைப்பித்தன் என்கிறார். கி.ராஜநாராயணன் தாமரை இதழுக்காக பேட்டி கண்ட போதும் இதையே அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

புதுமைப்பித்தன் நினைவு நிகழ்வு திருநெல்வேலியில் நடந்தபோது (1952) புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப் பாட்டாக பாடியிருக்கிறார். இதில் புதுமைப்பித்தனின் சில சிறுகதைகளையும் (அகலிகை, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சாபவிமோசனம்) விரிவாகச் சொல்லியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தீவிர படிப்பாளிகள் வந்திருக்கின்றனர். தரையில் உட்கார்ந்து நிகழ்ச்சியைக் கேட்டிருக்கின்றனர்.

மாற்றம் நிகழ்த்தியவர்

பிச்சைக் குட்டி சிறுவயதில் நாட்டார் பாடல்களைச் சேகரித்திருக்கிறார். இவருக்குக் கர்நாடக இசையும் தெரியும். முறைப்படி தமிழ் இலக்கியங்களையும் கற்றவர். கவிதை எழுதவும் தெரியும். இதனால் வில்லுப்பாட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். வில்லிசை நிகழ்ச்சியில் நீண்டநேரம் பாட வேண்டும் என்ற மரபையும் தளர்த்தினார்.

மூன்று மணி நேர நிகழ்ச்சி என்பதை நடைமுறையில் கொண்டு வந்தார். முக்கிய பாடகர்கள் பாடும்போது இசைக்கருவிகள் மெல்ல ஒலிக்க வேண்டும், பாடல், விளக்கம் இரண்டையும் சொல்லும்போது தெளிவு வேண்டும், ரசிகர்களுக்கு புரிய வேண்டும். உடுக்கு, ‘குடம்', டோலக்கு, ஹார்மோனியம் என்னும் இசைக்கருவிகளை இவர் பயன்படுத்தினார். ஆனால் இந்த இசைக்கருவிகளை இயக்கியவர்களுக்குச் சில நெறிமுறைகளை கற்றுத் தந்திருக்கிறார். இவருக்கு குடம் அடித்த பூவலிங்கம், உடுக்கு அடித்த மீனாட்சிசுந்தரம், ஐயப்பன் போன்ற கலைஞர்கள் இவரைப்பற்றிக் கூறும்போது வில்லுப்பாட்டுக்காரர்களுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பைக் கொடுத்தவர் என்று கூறியுள்ளனர்.

பாடலாசிரியர்

பிச்சைக்குட்டியைப் பற்றி விரிவாக செய்தி சேகரித்த பேராசிரியர் வி.கே. துரை அரசு.

"இவர். தன் நிகழ்ச்சிக்குரிய பாடல்களை இவரே எழுதுவார். பண்களை இவரை அமைப்பார். ஒரு முறை முக்கூடல் தபிச் சொக்கலால் பீடி விளம்பரத்திற்காக வீதியில் பாடிச் சென்றவர்களின் பாட்டைக் கேட்டு அதே மெட்டில் ஒரு பாட்டை உருவாக்கி இருக்கிறார். இந்தப் பண்ணுக்கு தபிச் சொக்கலால் என்ற பெயரை ஆட்டியிருக்கிறார். ஒயில் கும்மி பாடல்களை தன் நிகழ்ச்சியில் முழுதும் பயன்படுத்தி இருக்கிறார்" என்று சொல்லுகிறார் பிச்சைக் குட்டியின் நூற்றாண்டு நினைவில் ஒரு வேண்டுகோள். அவர் எழுதிய வில்லிசைப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அச்சில் கொண்டுவரலாம்.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It