பேராசிரியர் இரா. காமராசு தமிழ்ச் சமூகத்தோடு இறுகப் பிணைந்த தொடர்புடையவர். கவிஞர், புனைகதையாளர், ஆய்வாளர், நல்ல நாவலர், பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர் எனும் பன்முகப் படைப்புத் தளங்களில் இயங்கி வரும் அவர் பல்லாண்டுகளாகத் தம்மைச் சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். மக்கள் வாழ்வில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நற்பணிகளை முன்னின்று நடத்திய அனுபவம் பெற்ற அவருடைய சிந்தனையும் செயலும் சமூகம் சார்ந்தனவாகவே இருந்து வருகின்றன.

அந்த வகையில் அவருடைய எழுத்தும் பேச்சும் வாசிப்பும் சுவாசிப்பும் அதை முன்னிறுத்தியே இருந்து வருவதும் கண்கூடாகத் தெரிகிறது.

மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் சமூக ஆவணங்களாக நாவல்கள் இருந்து வருகின்றன. தமிழ் நாவல்கள் தமிழ்கூறு நல்லுலகம் முழுவதும் வாழும் மக்களின் வாழ்க்கையையும் அவ்வாழ்க்கையின் ஊடுபாவாக இருந்து வரும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றி வருகின்றன.

r kamaraj on tamil novelsபேராசிரியர் இரா. காமராசு தம் வாசிப்பு அனுபவத்தால் பெற்ற பண்பாட்டு அனுபவத்தை நம்முடைய தமிழ்ச் சமுதாயமும் பெற வேண்டும் என்கின்ற பெருவிருப்பால் விளைந்த அரிய பனுவலே ‘தமிழ் நாவல்கள் : பண்பாட்டு எழுத்து!’ எனும் பெருநூலாகும்.

இந்நூலில் தமிழ் நாவல் சார்ந்த முப்பந்தைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் தமிழ் நாவல்களின் பண்பாட்டுப் பரப்பை முன்வைக்கின்றன.

‘பண்பாடு’ எனும் சொல்லின் பொருண்மையை தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், பக்தவத்சல பாரதி, டி.கே. சிதம்பரநாத முதலியார், டி.டி. கோசாம்பி ஆகியோர் வாயிலாக எடுத்துரைக்கும் நூலாசிரியர், “பண்பாடு எனும் சொல்தான் புதிதே தவிர அது உணர்த்தி நிற்கும் பொருள் பழமையானது. அது உலக மாந்த இனத்தின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் இயங்கியல் உறவு கொண்டது. கொண்டு கொடுத்துச் செழுமைப் படுத்துவது. கால வளர்ச்சியில் புதுப்பித்துக் கொள்வது” எனும் பண்பாடு குறித்த புதிய வரையறையையும் தருகிறார்.

இலக்கியத்திற்கும் பண்பாட்டிற்குமான தொடர்பை எடுத்துரைக்கும் நூலாசிரியர் இனவரைவியல் இலக்கியப் பனுவல்கள் பண்பாட்டைத் தொட்டுக் காட்டுவதையும் பின்னைக் காலனியமும் பண்பாட்டுப் பரவலாக்கத்தை எடுத்து மொழிவதையும் எடுத்துரைக்கிறார். நாவல்கள் உருவாக்கத்தில் ‘பண்பாடு’ பெறுமிடத்தினைச் சுட்டும் ஆசிரியர் இனவரைவியலுக்கும் பண்பாட்டுக்குமான தொடர்பினை விளக்குகிறார். பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், பழக்கவழக்கம், சடங்கு, நம்பிக்கை, வழிபாடு எனப்படும் இவற்றோடு தொடர்புடைய பண்பாட்டின் வழிப்பட்ட இனவரைவியலின்பாற்பட்ட எழுத்துகளைப் பேராசிரியர் இரா. காமராசு பண்பாட்டு எழுத்துகள் என வரையறுத்துரைக்கிறார்.

தமிழின் முதல் நாவல் தொடங்கி இன்றைய நாவல்கள் வரையுள்ள படைப்பாளர்களின் செல் நெறியைப் பேராசிரியர் இரா. காமராசு எடுத்துக் காட்டுவது, தமிழ் நாவல் உலகில் பேராசிரியரின் இடையறாத சஞ்சாரம் இருந்து வருவதைத் தெற்றெனப் புலப்படுத்துகிறது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம், மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், சேஷையங்காரின் ஆதியூர் அவதானி சரிதம், ஈழத்து முதல் நாவலான சித்திலெப்பை மரைக்காயரின் அசன்பே சரித்திரம் ஆகிய முதல்கட்டத் தமிழ் நாவல்களின் போக்கையும் அவை உருவாக்கிய வாசிப்புப் பழக்கத்தையும் சுட்டுவதுடன் அவர் சொல்ல வந்த செய்திகளையும் தம்முடைய இடையறாத வாசிப்பு அனுபவத்தின் வாயிலாகப் புலப்படுத்துகிறார்.

விடுதலைப் போராட்டத்தையும் காந்தியத்தையும் சொல்வதோடு மனித வாழ்வு பற்றிய தத்துவத் தேடலை முன்வைக்கும் கா.சீ. வேங்கடரமணியின் முருகன் ஓர் உழவன், தேச பக்தன் கந்தன் ஆகியவை ஏற்படுத்திய தாக்கத்தைச் சுட்டுவதுடன் கல்கி, ர.சு. நல்லபெருமாள், சி.சு. செல்லப்பா, நா. பார்த்தசாரதி போன்றோருடைய நாவல்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.

“நாட்டின் அரசியல் விடுதலையை அடுத்து மொழி சார்ந்த முன்னெடுப்பும் பகுத்தறிவு, சமூகநீதி, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றைப் படைப்புகளில் பரப்புரை செய்வதுமான ஒரு செல் நெறி உருவானது. தந்தை பெரியாரின் கருத்துக்களும், திராவிட இயக்கக் கருத்துகளும் இதற்குப் பின்புலமாக அமைந்தன” எனக் குறிப்பிடும் பேராசிரியர் இரா. காமராசு இந்தச் செல்நெறிக்கு அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, இராம.அரங்கண்ணல், தி.கோ.சீனிவாசன், எஸ்.எஸ்.தென்னரசு, ப.புகழேந்தி போன்றோரின் படைப்புகளையும் உதாரணம் காட்டுகிறார். “இவர்கள் மொழியை பிறமொழித் தாக்கத்தினின்று காத்து வளப்படுத்தவும் முயன்றனர்” எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

சமூக விடுதலையைப் போன்றே வர்க்கப் போராட்டங்களும் வட்டார மொழியில் எழுதப்பட்ட படைப்புகளின் வழியான விளிம்புநிலை மக்களின் வாழ்வியலும், தலித்தியம், பெண்ணியம் சார்ந்த படைப்புகளும் வட்டாரம் சார்ந்த, வேளாண்மை சார்ந்த, கடற்புரம் சார்ந்த படைப்புகளும் தமிழ் நாவல்களுக்கு வளம் சேர்த்தன என்பதுடன், “கல்கி, சாண்டில்யன், கோவி.மணிசேகரன், விக்ரமன், பாலகுமாரன் போன்ற எழுத்து சாம்ராட்கள் இராஜா ராணிக் குதிரைகளில் ஏறி இலக்கியப் பரப்பில் வரலாற்றை நினைவூட்டினர். இதன் மறுதலையாகச் சமூக வரலாற்றைச் சமூக வளர்ச்சி நிலைமைக்குள் வைத்து வரலாற்றை வாசித்து இலக்கியப் படைப்பாக்கத்தை உருவாக்கும் போக்கு முகிழ்த்தது” என ஆய்ந்துரைக்கும் நூலாசிரியர் அம்மாதிரிப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் தம் நூல் நெடுகிலும் ஆங்காங்கே வாசகர்களுக்கு அடையாளம் காட்டும் பெரும்பணியைச் செய்கிறார். தமிழ் நாவல்களுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் வாழ்ந்து மறைந்த நாவலாசிரியர்களை மட்டுமல்லாமல் இன்றைய உலகில் இடைவிடாது இயங்கிவரும் புதிய புதிய நாவலாசிரியர்களின் படைப்புகளும் தமிழ் நாவலின் புதிய செல்நெறிகளைத் தீர்மானிக்கும் தகவுமிக்கன எனவும் ஆசிரியர் ஆய்ந்து மொழிவது தமிழ் நாவல் உலகில் அவருடைய பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தை வெளிக்காட்டுகிறது.

தமிழ் நாவலின் பெருவெளியையும் பொருளை எடுத்துரைக்கும் முறைமையையும் வைத்துக் கொண்டு தமிழ் நாவல்களின் செல்நெறியை மதிப்பிடும் பேராசிரியர் இரா. காமராசு அதனை “வானவில் எழுத்து” எனும் இரட்டைச் சொற்களால் வருணிக்கிறார்.

மழைக்கால மேகங்களில் காணலாகும் ‘வானவில்’ பார்ப்போரைச் சுண்டியிழுக்கும் வண்ணங்களால் காட்சி நல்கும். அதுபோலத் தமிழ் நாவல்களும் சமுதாயத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களையும் மக்கள் வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்து நல்கும் பெரும்பணியை ‘வானவில்’ போலப் பல்வேறு வண்ணங்களில் காட்சிப் படுத்துகின்றன. அவை கடையனுக்கும் இலக்கியத் தகுதியினைப் பெற்றுத் தந்திருக்கின்றன. கடையனுக்கும்கடைத்தேறும் வழியைக் காட்டியிருக்கின்றன என்பதை மிக நுட்பமாகப் பேராசிரியர் இரா. காமராசு பதிவு செய்கிறார்.

“தமிழின் நாவல் போக்குகள் தற்கால உலக அளவிலான கலை இலக்கிய வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே அமைகின்றன. பேசப்படாத பகுதியினர் தங்களைப் பேசத் தொடங்கியுள்ளனர். பின் காலனியக் கூறாகிய பன்மைப் பண்பாடுகளின் எழுச்சியும், அடையாள மீட்பும் அழகியல் கூறுகளுடன் மேலெழுந்து வருகின்றன. வர்க்கம், சாதி, பால், நிலம் சார்ந்த அதிகாரக் குவிப்புக்கு எதிரான உரிமைக்குரல்கள் படைப்புகளில் வெளிப்படுத்தப் படுகின்றன. எதார்த்த எழுத்தின் நெகிழ்ச்சியும், நீட்சியும் காணமுடிகிறது. கதையல்லாக் கதைகளும், இலக்கண வரையறைகள் தாண்டிய எழுத்து முயற்சிகளும், வண்ணமயக் கலவையாக அமையும் வடிவ ஓர்மையும் தமிழ் நாவலை இன்றையத் தன்மைப்படுத்துகின்றன. இளைய ஆண்கள், பெண்கள், திருநங்கையர் எழுத்து முன்வைப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன” என்பது ஆசிரியரின் தமிழ் நாவல்கள் குறித்த மதிப்பீடாக இருக்கின்றது.

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தைக் கதைக் களமாகக் கொண்ட தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்' நெசவுத் தொழிலாளர்களின் நலிவை உள்ளுணர்வோடு படம் பிடித்துக்காட்டக்கூடிய நாவலாகும். இதனை மதிப்பிடும் ஆசிரியர் இந்நாவல் குறித்த தம் கருத்தை, “தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் 1953 இல் வெளிவந்தது. அதுவரை தனிமனித மன உணர்வு களையும், குடும்பச் சிக்கல்களையும், இல்லற ஏற்ற இறக்கங்களையும் வாழ்வியலாக வரையறை செய்து நாவல்கள் வெளிவந்தன. இச்சூழலில் மனிதனை வரலாற்றுச் சூழலுக்குள் வைத்து அவனின் வாழ்க்கைப் பாட்டை நுட்பமாகப் பதிவு செய்த முதல் நாவலாகப் பஞ்சும் பசியும் அமைந்தது. தமிழ்நாட்டின் ஆகப்

பரும் இரு தொழில்கள் வேளாண்மையும் நெசவும். இவை ஆதித் தொழில்களும் கூட. விடுதலைக்குப் பின்னான முதல் பத்தாண்டுகளில் இந்தியாவில் தமிழ்நாட்டில் நேர்ந்த நெசவுத் தொழிலின் நலிவைச் சித்திரமாகத் தீட்டி விடுகிறார் தொ.மு.சி” என வெளியிடுகிறார். நாவல் முழுக்க அரசியல் சமூக விமர்சனங்கள் பதிவாகியுள்ளமையையும் அவர் எடுத்துக்காட்டுகிறார்.

இராஜம் கிருஷ்ணன் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவராவார். அன்றாடம் நிகழ்கிற சமூகப் பிரச்சினைகளைக் கள ஆய்வு செய்து கவனப்படுத்துவதிலும் கலைப் படைப்பாக்குவதிலும் வல்லவர். கீழத்தஞ்சையை மையமிட்டு அவர் எழுதிய ‘சேற்றில் மனிதர்கள்’, திண்டுக்கல் ‘தோல்’ தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அவர்கள் நடத்திய போராட்டங்களையும் மையமாக வைத்து டி. செல்வராஜால் எழுதப்பட்ட ‘தோல்’, கீழத் தஞ்சை மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எழுதிய சோலை சுந்தரப் பெருமாளின் தஞ்சைப் பண்பாட்டைப் பறைசாற்றும் செந்நெல், தப்பாட்டம், மரக்கால், தாண்டவபுரம், நஞ்சை மனிதர்கள் ஆகியவை தமிழ் நாவல் உலகில் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

வட தமிழ்நாட்டில் மிகவும் சொற்ப அளவில் வாழும் கூத்தாடிகளின் வாழ்வை மையப்படுத்தி இமையத்தால் எழுதப்பட்ட ‘செடல்’, மேலத் தஞ்சைப் பகுதியில் வாழும் வேளாண் குடிகளான “கள்ளர்” இன மக்களின் வாழ்வியலை எழுதிய சி.எம். முத்துவின் ‘மிராசு’, மனித நேயத்தைத் தம் படைப்புகளின் அடிநாதமாகவும் மதுரை வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகவும் கொண்டு எழுதும் பாரதிபாலனின் ‘காற்று வரும் பருவம்’ ஆகியன ஆசிரியரால் இந்நூலில் கவனப்படுத்தப் படுகின்றன.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்களையும் அவர்களின் மன உணர்வுகளையும் தம் எழுத்திலே கொணர்ந்த மணிக்கொடி எழுத்தாளரான கரிச்சான் குஞ்சுவின் படைப்புகளில் ஒன்றான ‘பசித்த மானுடம்’, தமிழ் எழுத்துப் பரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’, ‘நாகம்மாள்’ மூலம் கொங்கு வட்டார மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ஆர். சண்முகசுந்தரத்தைத் தொடர்ந்து கொங்கு வட்டார வாழ்வையும் பண்ணையடிமைத் தனத்தையும் பதிவு செய்த கு. சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை இரத்தமும் சதையுமாகப் பதிவு செய்யும் தி.ஞானசேகரனின் ‘கவ்வாத்து’ ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வின் சிறுபகுதியை அறிமுகப்படுத்தும் நோக்கில் அகிலனால் எழுதப்பட்ட ‘பால் மரக் காட்டினிலே’, இலங்கை மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நெடும் பயணத்தின் அறியப்படாத வரலாற்றின் இலக்கியச் சாட்சியாகத் திகழும் மு.சிவலிங்கத்தின் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’, கீழத்தஞ்சை வட்டாரத்தின் வாழ்வியல் கூறுகளைப் பதிவு செய்யும் ‘அளம்’, இதுவரை அறியப்படாத நெய்தல் நிலம்சார் பண்பாட்டைக் கடற்பகுதியில் இருந்து தம்மையும் தம் மக்களையும் மையமாகக் கொண்டு எழுதிய ஜோ டி குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’, மீன் சட்டியில் மிதக்கும் வாழ்வை எடுத்துரைக்கும் குறும்பனை சி. பெர்லினின் ‘தலைச்சுமடுக்காரி’,தமிழின் முதல் வட்டார நாவல் என எழுத்தாளர்களால் மதிப்பிடப்படும் ஆர். சண்முக சுந்தரத்தின் ‘நாகம்மாள்’, பெண் இருப்பின் நியதியை எடுத்துரைக்கும் கலைப்படைப்பான கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’, யதார்த்த வாழ்வின் விளைச்சலைக் கூறும் கலைச் செல்வியின் ‘சக்கை’, பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’, மனிதம் உணர்த்தும் பழம் பண்பாட்டை நினைவூட்டும் ப.க. பொன்னுசாமியின் ‘படுகளம்’, ஆண் மையத் தகர்வையும் பெண் வெளியையும் சுட்டும் படைப்பான ஜெயந்தி கார்த்திக் எழுதிய ‘லிங்கம்’, புதிய மாதவியின் ‘பச்சைக் குதிரை’, இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தஞ்சாவூரை மையமிட்ட கதையான லஷ்மி பாலகிருஷ்ணனின் ‘ஆனந்த வல்லி’, ஆதிக்கத் தன்மைக்கும் விடுதலை வேட்கைக்கும் ஊடே சிறகு விரிக்கும் சோ.தர்மனின் ‘கூகை’, தலித் அரசியலையும் தலித் அழகியலையும் நயமாகக் கூறும் ஸ்ரீதர கணேசனின் ‘சடையன் குளம்’ ஆகியனவும் நூலாசிரியரால் ஆய்ந்துரைக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் சூழலில் ஜெயந்தி சங்கரால் எழுதப் பட்டுள்ள ‘திரிந்தலையும் திணைகள்’, திருநங்கையர் வாழ்வை மையமிட்ட பிரியாபாபுவின் ‘மூன்றாம் பாலின முகம்’, கன்னியாகுமரி மாவட்ட மண்டைக் காட்டுக் கலவரத்தைப் பின்புலமாகக் கொண்டு பொன்னீலனால் எழுதப்பட்ட ‘மறுபக்கத்தில்’ பதிவாகியுள்ள சமூக மோதல்களையும் பண்பாட்டு மீட்டுருவாக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, ஆடலூர், பன்றி மலை, தாண்டிக்குடி, பழனி, வேடசந்தூர் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையையும் வரலாறுகளையும் முன்னிறுத்தி இரா. முத்துநாகுவால் எழுதப்பட்ட ‘சுளுந்தீ’, தன் மண்ணையும் மக்களையும் மட்டுமன்றிப் பிற மக்களையும் தம் படைப்புகளுள் மனிதநேயத்துடன் பதிவு செய்து வரும் சுப்ரபாரதி மணியனின் ‘சாயத்திரை’, ‘தறிநாடா’ ஆகிய படைப்புகளையும் நூலாசிரியர் அரிய முறையில் திறனாய்கிறார்.

கோவை மில் தொழிலாளர்களின் போராட்டத்தை மையப் பொருண்மையாகக் கொண்டு எழுதப்பட்ட இரா. முருகவேளின் ‘முகிலினி’ ஆகிய படைப்புகளையும் நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார்.

அன்வர் பாலசிங்கம் எழுதிய ‘கருப்பாயி என்கிற நூர்ஜகான்’ என்னும் நாவலைக் கவனமாக அணுக வேண்டியிருக்கிறது. 1981ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய நெல்லை மாவட்டமும் இன்றைய தென்காசி மாவட்டமுமான செங்கோட்டைக்கு அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் நடந்த பெருந்திரள் மதமாற்றம் இந்திய அளவில் அனைத்துத் தரப்பினரின் கவனத்துக்கும் சென்ற நிகழ்வாகும்.

அந்தக் காலகட்டத்திலேயே இத்தகைய மதமாற்றத்திற்கான காரணம் யாது என இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் அலசி ஆராய்ந்தது. அந்த மக்களையும் அணுகிக் கேட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மதமாற்றத்திற்கான ஆதரவுக் கருத்துக்களும் எதிர் கருத்துக்களும் பேசப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அன்வர் பாலசிங்கம் என்பார் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ எனும் நாவலை இந்நிகழ்வு நடந்து முப்பது ஆண்டுகள் கழித்து 2011 இல் வெளியிட்டார். இந்நாவலை மையமாக வைத்துப் பார்க்கிறபோது மதமாறியவர்கள் பல்லாற்றானும் பாதிக்கப்பட்டனர் எனும் பதிவு அதில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு காட்சிகளும் புனையப்பட்டுள்ளன. நாவல் வந்த போதே இந்த நாவலுக்கு மறுப்பாக மீனாட்சிபுர மக்களே அப்படியெல்லாம் இல்லை எனும் எதிர் வினைகனை ஆற்றியுள்ள பல்வேறு பதிவுகளும் இருக்கின்றன.

இந்தப் பெருந்திரள் மதமாற்றத்தின் காரண காரியங்களை, ஆய்வுக்கட்டுரைகள், கள ஆய்வுகள், பேட்டிகள், சட்டமன்ற, பாராளுமன்ற விவாதங்களின் அடிப்படையிலான ஆதாரங்களுடன் அணுகி இதனை ஆவணப்படுத்தும் நோக்கில் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றதுடன் அதனை, ‘மதமும் மதமாற்றமும்’ உள்ளிட்ட சில நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். அவர் எடுத்த நேரடிப் பேட்டிகளையும் அவற்றில் இணைத்துள்ளார்.

அன்வர் பாலசிங்கம் நாவலில் குறிப்பிடுவதும் தொல். திருமாவளவனின் களஆய்வு முடிவுகளும் முற்றிலும் முரணானவைகளாக இருக்கின்றன.

உண்மை நிகழ்வுகளை புனைவுகளாக்கும் படைப்புகளை அணுகுகிறபோதும் மதம் சம்பந்தப்பட்ட புனைவுகளை அணுகுகிறபோதும் களஆய்வு என்பது மிகவும் இன்றியமையாத தேவையாக இருக்கிறது.

அன்வர் பாலசிங்கத்தின் புனைவை மட்டும் பார்த்த சிலர் புனைவு வெளியில் வசப்பட்டு விடுகின்றனர். நாவலாசிரியரின் நோக்கத்தையும் சார்பு நிலையையும் பார்க்கத் தவறி விடுவதுடன் உணர்ச்சியைத் தள்ள மறந்தும் விடுகின்றனர். அந்த வகையில் பேராசிரியர் இரா. காமராசு அவர்கள் கருப்பாயி என்கிற நூர்ஜஹானை களஆய்வு வழி அணுகவில்லை எனினும், ‘மாறிய மதத்தைக் காப்பாற்ற இத்தனை தற்கொலைகள் ஏன்? தேவையா? மதம் மாறியவர்களுக்குள் மண உறவு முறைகள் இஸ்லாமுக்கு மாறிய பின் என்னவாயிற்று? என்பன சார்ந்த பதிவுகளுக்கும் நாவல் இடமளித்திருந்தால் முழுமை பெற்றிருக்கும்’ எனும் கருத்தினை முன்வைத்து, ‘மதம், மனமாற்றம், மணத்தடை சில விவாதங்கள்’ எனும் கட்டுரையினை நிறைவு செய்கிறார். அந்த வகையில் இக்கட்டுரை ஒரு வித்தியாசமான கட்டுரையாக இருக்கிறது. விழிப்புணர்வுச் சிந்தனையை ஊட்ட முயல்வதும் இதில் பதிவாகியுள்ளது.

நூலாசிரியர் தம் ஆய்வுக்கு உட்படுத்திய நாவல்கள் அனைத்திலும் காணலாகும் மரபுசார் பண்பாடு, பழக்கவழக்கம், தொன்மம், வழிபாடு, நம்பிக்கை, சடங்கு, தனித்துவமான வட்டாரம் சார்ந்த தனித்தனி நிகழ்வுகள், மொழிநடை, பழமொழி, வழக்குச் சொற்கள் ஆகியனவற்றை அனைத்துக் கட்டுரைகளிலும் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுவது நூலின் தனித்துவமாகக் காட்சியளிக்கிறது. இத்தகைய காட்சிப்படுத்துதல் தமிழ் நாவல்களுக்குள் வாசக நல்லுள்ளங்களைப் புதிய வெளிக்குள் கரம் பிடித்து அழைத்துச் சென்று நயமிகு கைவிளக்கையும் காட்டி புதிய அனுபவத்தையும் ஊட்டுகிறது.

தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்ற நாவல்களுடன் கவனம் பெறாத பல நாவல்களையும் பேராசிரியர் இரா. காமராசு இந்நூலில் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். தமிழ் நாவல் உலகம் என்பது தனித்ததோர் உலகம்; மனித வாழ்க்கையின் ஒட்டு மொத்தப் பதிவுகளையும் ஊடும் பாவுமாகத் தமிழ் நாவல்கள் எடுத்துரைக்கின்றன என்பதையும் அவர் காட்டுகிறார்.

மனித வாழ்வைச் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமானாலும் மனித வாழ்க்கையை நன்றாகப் படித்துக் கொள்ள வேண்டுமானாலும் அதற்குச் சரியான வழிகாட்டக்கூடிய இலக்கிய வடிவமாகத் தமிழ் நாவல்கள் திகழ்கின்றன. அத்தகைய தமிழ்

நாவல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு பரந்து விரிந்த நாவல் உலகிற்குள் சென்று நல்ல நாவல்களைத் தேர்வு செய்து வாசகர்கள் படித்துப் பக்குவம் பெறக் கூடிய அரிய நாவல்களை அடையாளம் காட்டும் பெரும்பணியினைப் பேராசிரியர் இரா.காமராசு இந்த நூலின் வாயிலாகச் செய்துள்ளார். பேராசிரியர் இரா. காமராசுவின் பரந்து விரிந்த நாவல் உலகம் தென்படும் இந்த ஒரு நூலினை ஒருமுறை படித்தால் தமிழில் வெளியாகியுள்ள முப்பந்தைந்துக்கும் மேற்பட்ட நாவல்களைப் படித்த அனுபவம் கிடைத்து விடுகிறது. சிட்டி சிவபாத சுந்தரத்தின் ‘தமிழ் நாவல்கள் நூறாண்டு வளர்ச்சியும் வரலாறும்’, க.கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம், க.நா.சுவின் ‘முதல் ஐந்து தமிழ் நாவல்கள்’ கா.சிவத்தம்பியின் ‘நாவலும் வாழ்க்கையும்’, மா.இராமலிங்கத்தின் ‘நாவல் இலக்கியம்’ எனும் நூல்களின் வரிசையில் வைத்தெண்ணத்தக்க அரிய நூலாகவும் பேராசிரியர் இரா. காமராசுவின் ‘தமிழ் நாவல்கள் : பண்பாட்டு எழுத்து’ எனும் நூல் திகழ்கிறது.

தமிழ் நாவல்கள்: பண்பாட்டு எழுத்து

இரா.காமராசு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை -600 050

ரூ.510/

- பேராசிரியர் உ.அலிபாவா, தலைவர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி