புயல் பெ. ஸ்ரீகந்தநேசன் அவர்கள் இதுவரை காலமும் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் அடிப்படையில் படைப்பிலக்கியம் என்னும் வகைப்பாட்டினுள் நின்று வடபகுதிவாழ் மக்களின் வாழ்வியலை மண்வாசனையுடன் பேசியது. அவ்வகையில் “போர்க்காலச் சிறுகதைகள் (நமது ஈழநாடு - இலக்கியச் சோலை)” என்னும் நூல் முதன் முறையாக யாழ்க்குடநாட்டில் இருந்து வெளிவந்த ஈழநாடு என்னும் பத்திரிகையின் இலக்கியச் சோலை என்னும் பகுதியில் 2005 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் வெளிவந்த சிறுகதைகள் மீதான ஆய்வாக, ஆய்வு நூலாக பரிமாணம் பெற்றுள்ளது. ஒரு படைப்பாளி இலக்கிய ஆய்வாளனாகவும், ஆய்வாளன் படைப்பாளியாகவும் ஒரே வேளையில் இரு தளங்களில் நின்று செயற்படுவது கடினம். அவ்வாறு செயற்படுவதும் மிகக் குறைவாகும். எனினும் புயல் அவர்கள் சிறுகதை படைப்பாளியாகவும், சிறுகதை ஆய்வாளனாகவும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தமிழ் இலக்கியப் பணியை மேற்கொண்டு செல்கின்றமைக்கு இந்த ஆய்வு நூல் தக்க சான்றாக அமைகின்றது.

பொதுவாக புனைகதை இலக்கியத்தில் சிறுகதை, நாவல் ஆகியன இடம்பெற்றாலும் பரவலாக சிறுகதைக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. குறுகிய நேரத்தில் வாசித்து முடித்துவிடக்கூடியதாகவும் உள்ளது. புதினம் புளியமரம் என்றால் சிறுகதை தென்னை மரம் என இராஜாஜி குறிப்பிடுவதைப் போல தென்னை மரங்களின் உற்பத்தியும் அது தொடர்பான ஆராய்ச்சியும் எண்ணிலடங்காதவைகளாக இன்று தமிழ் உலகிற்குள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கலாநிதி க.குணராசாவின் ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வாலாறு’, பேராசிரியர் க.அருணாசலத்தின “ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் (1925–1965)”, பேராசிரியர் ம. இரகுநாதன் அவர்களின் “முற்போக்கு இயக்கமும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும்” முதலிய ஆய்வு நூல்கள் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை பற்றிய ஆய்வு முயற்சியாக வெளிந்துள்ளன. இந் நூல்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கதாக புயலின் “போர்க்காலச் சிறுகதைகள்” என்னும் ஆய்வு நூல் மிளிர்கின்றபோதும், அவ் ஆய்வு முற்சிகளில் இடம் பெறாத ‘சிறுகதையின் உருவம்’ பற்றி இவ் ஆய்வு நூலில் நோக்கப்பட்டிருப்பது ஆய்வாளரின் தனித்துவத்தைக் காட்டுகின்றது.

 1980களில் ஈழத்தில் இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கியபோது பல்வேறு பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டன. அவ்வாறு தொடங்கப்பட்ட பத்திரிகையில் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி 2002 ஆம் ஆண்டில் சி. சிவமகராசாவின் தலைமையில் வெளிவந்த பத்திரிகையே “நமது ஈழநாடு” என்னும் பத்திரிகையாகும். இப் பத்திகையில் இலக்கியப் பணியை மேற்கொண்டுவந்த “இலக்கியச் சோலை” என்னும் பகுதியில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுகதைகள் புயல் அவர்களால் ஆய்வுசெய்யப்பட்டுள்ளன. இந்நூல் இவரின் இளமாணிப்பட்டப்படிப்பின் ஒரு பகுதியை பூர்த்திசெய்வதற்காகத் தமிழ்த்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையாகும். அது இன்று ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது.

“போர்க்காலச் சிறுகதைகள்” என்ற இந்நூலின் தலைப்பையும் நூலின் இயல் இரண்டில் வழங்கப்பட்டுள்ள சமூகக் கதை, காதல், குடும்பம் என்னும் உள்ளடக்கப் பகுப்பும் ஆரம்பத்தில் ஒரு குழப்பத்தையே எனக்குத் தந்தது. “போர்க்காலச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் ஏன் இவ்வாறான உள்ளடக்கப் பகுப்புகள் வந்தன? என்ற குழப்பம் தோன்றியது. இந்த குழப்பத்திற்கு நூலின் இறுதியில் “இங்குள்ள சிறுகதைகளில் ஒரு பொதுவான தன்மை ஒன்றினை அவதானிக்க முடிகின்றது. சமூகம், குடும்பம், காதல் என்று எந்த விடயங்களைக் கூறினாலும் அதில் இனப்பிரச்சினைகளின் தன்மைகள் ஓரளவுக்காவது எடுத்துக் கூறப்பட்டுள்ளன…” என ஆசிரியரே விடை கூறிவிட்டார். அந்த வகையில் இந்நூலின் ஆய்வுத் தலைப்பு பொருத்தமாகவே அமைந்துள்ளது.

இந்நூல் பிரதானமாக நான்கு இயல்களாக பகுக்கப்பட்டு, பல்வேறு தளங்களில் நின்று வெவ்வேறு கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இந்நூலின் மூன்றாவது இயல் சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை கோட்பாட்டுநிலை நின்றும்,“நமது ஈழநாடு இலக்கியச் சோலை” என்னும் பகுதியில் வெளிவந்த சிறுகதைகளை எடுத்துக்கொண்டு சிறுகதை கோட்பாட்டை பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளமையையும் காணலாம். சிறுகதை கோட்பாடும் அதன் பிரயோகமும் சங்கமிக்கும் இடமாக இப்பகுதி ஆசிரியரால் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.

இசையில் இராகம் என்பது வெறும் வடிவமாகத்தான் இருக்கின்றது. அந்த வடிவத்திற்குள் அர்த்தங்களையும் உணர்ச்சிகளையும் கொட்டி நிரப்பும்போது அது முழுமை பெறுகின்றது. அது போலதான் சிறுகதை என்னும் இலக்கிய வடிவமும் ஆரம்பத்தில் வெறும் வடிவமாக இருக்கின்றது. அந்த வடிவத்தை முழுமையாக்குவது புனைதிறன், கதைக்கரு, பாத்திரப்படைப்பு, தலைப்பு, தொடக்கம் முதலிய ஆக்கக்கூறுகளே என்பதை இந்நூலின் மூன்றாவது இயல் தெளிவுபடுத்துகின்றது. இவ் இயலினூடாகவே இந்நூல் ஆசிரியர் தாம் ஆய்விற்காக தேர்ந்தெடுத்த சிறுகதைகளை சான்று காட்டி சிறுகதைகளுக்கு இருக்கவேண்டிய அம்சங்களை விளக்கிச்சென்றுள்ளார்.

மேலும் சிறுகதையின் அம்சங்களில் ஒன்றாகிய “நடையியல்”(Stylistic) என்னும் பகுதி இன்றைய மொழியியல் ஆய்வுகளை மேற்கொள்பவர்களும், மேற்கொள்ள விரும்புபவர்களுக்குமான ஆய்வு வெளியைத் திறந்துவிடுகின்றது. அதுமட்டுமல்லாது “நடையியல்” குறித்த ஆய்வுகள் தமிழ்ச்சூழலுக்குள் அதிகமாக உள்வாங்கப்படவேண்டும் என்ற அவரின் கோரிக்கையை முன்வைக்கின்றது. “ஈழத்துத் தமிழ் நவீன இலக்கியங்களின் நடையியல் உரைநடை வளர்ச்சி, ஒப்பியல், உருவம் முதலியன சார்பாக வெளிவந்த ஆய்வுகள் அரிது என்றே கூறவேண்டும்.” என இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுவது எதிர்காலத்தில் நடையியல் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வழிசமைக்கிறது.

“போர்க்காலச் சிறுகதைகள்” என்னும் இந்நூலின்இந்நூலின் இரண்டாவது இயல் “நமது ஈழநாடு” என்னும் பத்திரிகையில் வெளிவந்த (2005 ஆம் ஆண்டில்) சிறுகதைகளை உள்ளடக்கரீயில் ஆய்விற்குட்படுத்தியுள்ளது. போர்க்காலச் சூழலில் வடபகுதிவாழ் மக்கள் சுமந்து நின்ற சுமைகளை இனப்பிரச்சினை, சமூக யதார்த்தம், குடும்பக் கதைகள், காதற் கதைகள் என்னும் நோக்கில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சொல்லெணாத் துயர்களை வெளிப்படுத்தி நிற்கும் இப்பிரச்சினைகள் இம் மக்களின் ஒரு காலகட்ட வாழ்வியலின் பதிவாகவும் வரலாற்று ஆவணமாகவும் இந்நூலினூடாக பதிவாகின்றது.

 முதலாவது இயல் தனிக்கவனத்திற்குரியது. இப் பகுதியிலேயே நமது ஈழநாடு - இலக்கியச் சோலை என்னும் பகுதியில் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறுகதைகளை படைத்தளித்த படைப்பாளிகள் பற்றிய அறிமுகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தையிட்டி அ. இராசதுரை முதலாக சி.கதிர்காமநாதன் ஈறாக ஈழத்தின் இனப்பிரச்சினை காலகட்டத்தில் “நமது ஈழநாடு” என்னும் பத்திரிகைக்கு இலக்கியப் பணியாற்றிய முப்பதிற்கும் அதிகமான படைப்பாளிகள் இவ் இயலினூடாக அறிமுகமாகின்றனர். மேலும் ஈழத்துச் தமிழ்ச் சிறுகதை வரலாறு அதன்; அமைப்பு, உள்ளடக்கம் கருதி ஏழு கட்டங்களாக வகுக்கப்பட்டும் இவ்வியலில் வரலாற்று அணுகுமுறையில் நோக்கப்பட்டுள்ளது.

இறுதி இயலில் “மதிப்பீடு” என்னும் பகுதியில் ஆய்விற்காகத் தெரிவுசெய்யப்பட்ட சிறுகதைகளை மதிப்பீட்டுத் திறனாய்வு முறையைப் பயன்படுத்தி இந்நூல் ஆசிரியர் ஆய்வுசெய்துள்ளார். குணம் நாடி குற்றம் நாடி தாம் ஆய்விற்குத் தெரிவுசெய்த சிறுகதைகளில் குறிப்பிட்ட சில சிறுகதைகளின் தரம் பற்றிய பதிவு இங்கு இடம்பெறுகின்றது. மதிப்பீட்டுத் திறனாய்வு குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு என்பவற்றைப் பேசுவதோடு, அவ்விலக்கியத்தில் அமைந்திருக்கும் கூறுகளும், பண்புகளும், உண்மைகளும் பிறவும் இலக்கிய மதிப்பீடு உடையவை என்பதை பேசுகின்றது. அவ்வகையில் புயல் அவர்கள் ஆய்விற்காக தேர்ந்தெடுத்த நாற்பத்தைந்து சிறுகதைகளில் ஒரு சில கதைகள் சிறுகதைக்குரியத் தன்மைகளை கொண்டு விளங்கவில்லை என்பதையும் ஒரு சில கதைகளில் இன்னுமொரு சிறுகதையின் தாக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். இவ் இயலினூடாக ஒரு ஆய்வாளன் ஆய்வின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து செல்லவேண்டும் என்பதையும் ஒரு விமர்சகன் பக்கச் சார்பின்றி இலக்கியத்தின் தரம் பற்றி கருத்துக்களை வழங்கவேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு, இந்நூல் ஆசிரியர் செயற்பட்டுள்ளார். இதன் மூலம் ஒரு சிறந்த ஆய்வாளனாகவும் விமர்சகனாகவும் புயல் அவர்கள் செயற்பட்டுள்ளதை நூலின் இறுதி இயல் நன்குத் தெளிவுப்படுத்துகின்றது.

பெரும்பாலும் தமிழ் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவோர் பத்திரிகைகளில் வெளிவரும் படைப்புக்களை ஆய்வு உலகிற்குள் கொண்டு வருவது மிகக் குறைவு. அதிலும் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வரும் பத்திரிகை ஒன்றை இளமாணிப் பட்டப்படிப்பின் ஒரு பகுதியை பூர்த்தி செய்வதற்காக தெரிவுசெய்து அதில் வெளிவரும் சிறுகதைகளை ஆய்விற்குட்படுத்துவதென்பது ஆச்சரியம் தரும் ஒன்றே. ஏனெனில் இன்றுவரையும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவோர் மரபு, நவீன இலக்கியங்கள், நூல்களாக வெளிவந்து ஆவணமாக்கப்பட்ட படைப்பிலக்கியங்கள், இலக்கணம், புகழ்பெற்ற படைப்பாளிகள் என ஆய்விற்குள் தம் கவனத்தை செலுத்தி வருகின்றனர். சில மாணவர்கள் ஆய்வை இலகுவாக மேற்கொண்டு செல்வதற்காகவும் படைப்பிலக்கியங்கள் பால் தமது கவனத்தை குவிக்கின்றனர். ஆனால் கிழமைதோறும் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையொன்றைத் தெரிவுசெய்து தொகுத்து “இலக்கியச் சோலை” என்னும் பகுதிக்கும், அதில் படைப்புக்களை வழங்கிய படைப்பாளிகளுக்கும் அவர்களிகளின் படைப்புக்களுக்கும் ஒரு அந்தஸ்தை வழங்கி அவற்றை ஆவணமாக்கியுள்ளமை மாணவனாக இருக்கும்போதே புயல் அவர்கள் ஆழமான ஆய்வினை மேற்கொள்ள அவாவியதை, மேற்கொண்டதை பறைசாற்றுகின்றது.

முன்னர் சுட்டிக்காட்டியது போல புயல் அவர்கள் ஆய்வாளன் என்பதற்கு அப்பால் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக இயல் இரண்டில் வழங்கப்பட்டுள்ள இவரின் “செழிப்பைத் தேடும் பறவைகள்” என்னும் சிறுகதை இடம்பெறுகின்றது. இச்சிறுகதையும் “நமது ஈழநாடு” என்னும் பத்திரிகையில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இராணுவத்தினரால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டதையும் அகதி முகாம்களில் அவர்களுக்கு நேர்ந்த துயரங்களையும் இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது.

எனவே “போர்க்காலச் சிறுகதைகள் (நமது ஈழநாடு - இலக்கியச் சோலை)” என்னும் ஆய்வு நூல் உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைக் குறித்து ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும், ஒர் ஆய்வு மாணவன் எவ்வாறு ஆய்வில் ஈடுபட வேண்டும் என்பதற்கும் ஒர் உசாத்துணையாக அமைந்துள்ளதென்பது திண்ணம்.

- சி.ரஞ்சிதா, யாழ். பல்கலை

Pin It