The Non-Violent Struggle for Indian Freedom, 1905-1919,  David Hardiman (2018) Penguin Viking, Gurgaon, Haryana

சென்ற இதழ் தொடர்ச்சி...

david hardiman 450 copyபிஜ்ஜோலியா ஜாகிர்தாருக்கு எதிராக நடந்த குடியானவர் போராட்டம் 1921-இல் அதன் ஜாகிர் தாரான கிருஷ்ணா சிங் பதவி விலகும்படி செய்ததைச் சென்ற இதழில் கண்டோம். இப்போராட்டத்திற்குக் காந்தியின் ஆதரவு இருந்த போதிலும் அவர் அதில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. அவர் நேரடியாகக் கலந்து கொண்ட குடியானவர் போராட்டமாக சம்ப்ரான் போராட்டம் இருந்தது.

இப்போராட்டம் தொடங்கும் முன்னர் இந்திய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையதாக சில முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. சிறையில் இருந்த திலகர் 1914இல் விடுதலையானார். காங்கிரசில் மிதவாதப் பிரிவின் தலைவராக இருந்த கோகலே, மேத்தா இருவரும் 1915-இல் இறந்துபோனார்கள்.

1915 சனவரியில் காந்தி இந்தியா வந்தார். அன்னி பெசண்ட் அம்மையார் ஹோம்ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். இம்முக்கிய அரசியல் நிகழ்வுகளின் காரணமாக காங்கிரஸ் இயக்கமானது மாறுதலுக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இச்சூழலில் தான் வடக்குப் பீகாரின் சம்ப்ரான் மாவட்டத்தில் குடியானவர் இயக்கத்தை 1917-இல் காந்தி தொடங்கினார். இது சம்ப்ரான் சத்தியாக்கிரகம் எனப் பெயர் பெற்றது.

சம்ப்ரான் சத்தியாகிரகம் - 1917

நேப்பாள எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பீகாரின் சம்ப்ரான் மாவட்டம் செழிப்பான நிலங்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது. இப்பகுதியில் ஆங்கிலேயர்கள் அவுரி பயிரிடும் தொழிலிலும் அதைப் பதப்படுத்தும் பட்டரைத் தொழிலிலும் பரவலாக ஈடுபட்டு வந்தனர். எழுபது கிராமங்கள் வரை அவுரி சாகுபடியும் அதைப் பதப்படுத்தும் தொழிலும் நிகழும் களங்களாகத் திகழ்ந்தன.

தமக்குத் தேவையான அவுரியைப் பெற ‘திங்காத்தியா’ என்னும் ஒப்பந்த முறையை ஆங்கிலேயர்கள் உருவாக்கியிருந்தனர். இவ் ஒப்பந்த முறையானது வலுக்கட்டாயமாக நில உரிமையாளர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இதன்படி தம் நிலத்தின் ஒரு பகுதியில் அவுரியை வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு நில உடைமையாளர்கள் ஆளானார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1830-1895) அவுரி வாணிபம் மிகுந்த ஆதாயத்தை ஆங்கிலேயர்களுக்கு அளித்து வந்தது. உலக அளவிலான சந்தை அவுரிக்கு இருந்தது. துணிகளுக்கு நீலச்சாயம் தோய்க்க உதவும் மூலப்பொருளாக இது இருந்தமையே இதற்குக் காரணமாகும். 1890இல் வேதியியல் சாயத்தை ஜெர்மனி கண்டுபிடித்த பின்னர் அவுரியின் மதிப்புக் குறையலாயிற்று என்றாலும் நில உரிமையாளர் களுக்கான கொள்முதல் விலையைக் குறைத்து, தம் ஆதாயத்தை ஆங்கிலேயர்கள் பாதுகாத்துக் கொள்ளத் தொடங்கினர். ஒப்பந்தப்படி அவர்களிடம் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருந்த நில உரிமையாளர்கள் இழப்புக்கு ஆளாயினர்.

முதல் உலகப்போரின்போது ஜெர்மானியரின் வேதியியல் சாயங்கள் அருகிப் போன நிலையில் மீண்டும் அவுரிப் பயிர், விலை ஏற்றம் அடைந்தது. இதனால் ஆங்கிலேயர்கள்தான் ஆதாயம் அடைந்தனர். குடியானவர்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை.

பணக்காரக் குடியானவர்கள் நீண்ட காலமாகவே ‘திங்காத்தியா’ ஒப்பந்த முறையை எதிர்த்து வந்தனர். வெள்ளையர்களாலும் அவர்களது அடியாட்களாலும் சட்டவிரோதமான முறையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவது குறித்து ஆங்கில அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தனர். அவுரி பயிரிடுதலுக்கு எதிரான இயக்கங்கள் வலுவான கிராமவாசிகளால் நடத்தப் பட்டன. ஆனால் அவுரி பயரிடலில் பெருத்த ஆதாயம் அடைந்து வந்த ஆங்கிலேயர்கள், தலத்தில் உள்ள நீதிமன்றங்கள் அதிகாரிகளின் ஆணையுடன் குடியானவர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்தி வந்தனர். அவர்கள் மீது வன்முறையையும் ஏவினர்.

1907-08இல் முகாமையான குடியானவர்கள் கிராமக் கோவில்களில் கூட்டம் நடத்தி அவுரி பயிரிடுவதில்லை என்று கடவுள் சாட்சியாக உறுதி மொழி எடுத்தனர். அனைத்துக் குடியானவர்களும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கும்படி வலியுறுத்தினர். இதை மேற்கொள்ள மறுத்தவர்கள் சமூகப் புறக் கணிப்புக்கு ஆளாவார்கள் என்று அச்சுறுத்தப் பட்டனர்.

‘அவுரி பயிரிடமாட்டோம்’ என்று உறுதிமொழி எடுக்காத குடியானவர்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். அவர்களது சொத்துக்களும் பயிர்களும் எரியூட்டி அழிக்கப்பட்டன. வெள்ளையர்களின் முகவர்களும் தாக்குதலுக்கு ஆளாயினர். அவர்களது உடைமை களுக்கு எரியூட்டப்பட்டன. வெள்ளையர் ஒருவரும் கொல்லப்பட்டார். கூலியாட்களின் துணையுடன் அவுரி பயிரிட முனைந்தபோது, வேளாண் கருவிகளினால் கூலியாட்களைக் குடியானவர்கள் தாக்கினர்.

அரசு அதிகாரிகள் காவல்துறையை அனுப்பி போராட்டத் தலைவர்களைக் கைது செய்தது. பலர் சிறைத் தண்டனைக்கு ஆளாயினர். வளம் படைத்த குடியானவர்கள் மாநிலத் தலைநகர் புனேயில் இருந்து வழக்கறிஞர்களை வரவழைத்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். சுதேசி இயக்க உணர்வினால் உந்தப்பட்ட வங்காள வழக்கறிஞர்கள் குடியானவர்களுக்காகக் கட்டணமின்றி வாதாட முன்வந்தனர்.

ராஜ்குமார் சுக்லா என்ற பிராமண வழக்கறிஞர் நிலபுலன்களுக்கும், கால்நடைகளுக்கும் உரிமையான வராக வாழ்ந்து வந்தார். அவுரி பயிரிடலுக்கு எதிரான போராட்டத்தில் குடியானவர்களுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டார்.

1916 திசம்பரில் லக்னோ நகரில் நிகழ்ந்த இந்திய தேசியக் காங்கிரசின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட இவர், சம்ப்ரான் பகுதியில் அவுரி பயிரிட குடியானவர்கள் வற்புறுத்தப்படுவது குறித்து உரையாற்றினார். இவரது உரை, மாநாட்டில் கலந்து கொண்ட காந்தியை ஈர்த்தது. சம்ப்ரான் பகுதி நிலவரத்தை ஆராய, தாம் நேரம் ஒதுக்குவதாக இவரிடம் காந்தி வாக்குறுதி அளித்தார்.

1917 தொடக்கத்தில் அகமதாபாத் சென்ற சுக்லா, காந்தியைச் சந்தித்து அவரது வாக்குறுதியை நினைவூட்டினார். இதை ஏற்று 1917 ஏப்ரலில் சம்ப்ரான் பகுதியில் காந்தி மேற்கொண்ட பயணம் அனைத்திந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தது. பீகாரில் இருந்த மத்தியதர வர்க்கத்தின் ஆதரவும், இளம் வழக்கறிஞர்களின் ஆதரவும் காந்திக்குக் கிட்டியது. இவர்களது செயல்பாட்டினால் 10,000 முழுமையான அறிக்கைகளையும், 15,000 குறுகிய அறிக்கைகளையும் குடியானவர்களிடம் இருந்து பெற முடிந்தது. இதற்கான பயணத்தின்போது தம் பணியாளர்களின் உதவியின்றித் தம் தேவைகளைத் தாமே கவனித்துக் கொண்டதுடன் பொதுச் சமையலறையில், இஸ்லாமியர் சமைத்த உணவை உட்கொண்டனர். இது அப்போதையச் சூழலில் முற்போக்கான ஒன்றாகும்.

1917 ஏப்ரல் 16-ஆம் நாளன்று போராட்டம் தொடர்பான விதிமுறைகளை காந்தி அறிவித்தார். தாம் கைது செய்யப்பட்டால் தம்மைப் பின்பற்றி ஏனையோரும் சிறை செல்ல ஆயத்தமாகும்படிக் கேட்டுக்கொண்டார். குற்றவியல் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டு சிறை சென்றால் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்வது இயலாது என்பதை அறிந்திருந்தும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு எதிர்வினையாக ராஜ் குமார் சுக்லாவின் வீட்டிற்கு எரியூட்டப்பட்டது. எர்வின் என்ற அவுரித் தோட்ட உரிமையாளன், பொதுச் சமையலறையில் சமையல்காரராகப் பணியாற்றிய இஸ்லாமியருக்குக் கையூட்டுக் கொடுத்து, அவர் சமைக்கும் உணவில் நஞ்சு கலக்கும் படி வேண்டினான். ஆனால் அவர் அதைச் செய்ய மறுத்துவிட்டார். காந்தியும் அவரது சகபோராளிகளும் போராட்டத்தை நடத்துவதற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்துக்கள் முஸ்லீம்கள் என்ற இரு தரப்பினருடனும் பகையுணர்வு ஏற்படுத்த முயன்றனர். ஆனால், அது வெற்றிபெறவில்லை. தோட்ட உரிமை யாளர்களைச் சந்தித்து குடியானவர்கள் கூறிய குறைபாடுகளை நேருக்கு நேர் தெரிவித்தார். அதே நேரத்தில் அவர்கள் கூறியவற்றையும் மரியாதையுடன் கேட்டார். இது காந்தியின் மீதும் அவரைப் பின்பற்றியோர் மீதும் தோட்ட முதலாளிகளிடம் மரியாதையை ஏற்படுத்தியது.

சம்ப்ரானுக்கு காந்தி சென்ற போதெல்லாம் அவரைக் காண்பதற்கு மக்கள் திரண்டார்கள். அவரிடம் மீவியற்கை ஆற்றல் இருப்பதாகவும் அற்புதங்கள் செய்யும் திறனுடையவர் என்றும் நம்பினார்கள். வெள்ளைக் கனவான்களை இவற்றின் துணையுடன் வென்று விடுவார் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அவரை இராமனாகவும், அரக்கர் களிடம் இருந்து விடுவிக்க வந்த இரட்சகராகவும், கடவுளின் அவதாரமாகவும் போற்றினார்கள். கடவுளைத் தரிசிப்பது போன்று அவரைத் தரிசிக்க ஆர்வம் காட்டினார்கள்.

தம் குறைகளைத் தீர்ப்பதற்காக வைசிராயினால் அனுப்பப்பட்டவர் என்றும் நம்பினார்கள். வழக்க மான முறையில் அதிகாரி ஒருவர் இட மாறுதலுக்கு ஆளானாலும் வைசிராயிடம் இருந்த தம் செல் வாக்கைப் பயன்படுத்தி காந்தி அவரை இடமாற்றம் செய்துவிட்டார் என்ற கருத்துப் பரவலானது. இத்தகைய வதந்திகள், தோட்ட முதலாளிகளுடனான முரண்பாட்டில் குடியானவர்களுக்கு ஊக்கத்தை வழங்கின.

அவுரி பயிரிடுதலை நிறுத்திவிடும்படி தோட்ட முதலாளிகளுக்கு அவர் உத்திரவிடுவார் என்று நம்பினர். நிலவாடகை அளிப்பதைப் பலர் நிறுத்தி விட்டனர். அவுரி பயிரிடும் நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் தம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பினர். தங்களுக்கு உரிமையானதென்று அவுரித் தோட்ட உரிமையாளர்கள் உரிமை கொண்டாடிய மரங்களை வெட்டி விற்றனர்.

ஏழைக் குடியானவர்கள், நில உரிமையாளர்கள் என்ற இரு பிரிவினர் இணைந்து வெளிப்படுத்தும் எதிர்ப்பை அவுரித் தோட்ட உரிமையாளர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய அதிகாரமும் செல்வாக்கும் மறையலாயின. எதிர்ப்புணர்வுடன் செயல்படும் குடியானவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் தம்முடைய தொழிற்சாலை களுக்குத் தாமே நெருப்பு வைத்தனர்.

குடியானவர் எழுச்சியை ஒடுக்குவதில் உள்ளூர் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. 1907-08 காலத்தில் குடியானவர்கள் கும்பலாகச் சென்று, அமைதியைக் குலைத்துச் சென்றார்கள். உள்ளூரில் உள்ள குடியானவர் தலைவர்கள், புறக்கணிப்பு என்பது ஆற்றல் வாய்ந்ததும் ஆபத்து இல்லாததுமான ஆயுதம் என்பதை இப்பேறு அறிந்து கொண்டார்கள். இப்போது ‘அறிவு மரத்தின்’ கனியை அவர்கள் தின்றுவிட்டார்கள் என்று ஆங்கில அரசின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

1917 மே 15 அன்று காந்தி தம் அறிக்கையை அரசுக்கு அனுப்பினார். அதில் அவுரிச் சாகுபடி முறையைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ஆராய அய்வர் கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றை ஆங்கில அரசு உருவாக்கியது. அதில் குடியானவர் சார்பான உறுப்பினராகக் காந்தி நியமிக்கப்பட்டார். அவுரித் தோட்ட உரிமையாளர்கள், சமிந்தார்கள் சார்பில் தலா ஒருவர் இடம் பெற்றனர். எஞ்சிய இரண்டு உறுப்பினர்களாக ஆங்கில அரசின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் அவுரித் தோட்ட உரிமையாளர் களிடம் ஊழியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் தொடர்ந்தது. விசாரணை ஆணையம் ஜூலை நடுப்பகுதியில் சம்ப்ரான் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சான்றுகளைச் சேகரித்து ஆகஸ்ட் மத்தியில் தன் அறிக்கையை நிறைவு செய்தது. 18 அக்டோபரில் ஆணையத்தின் அறிக்கை வெளியானது. பொதுவாகக் குடியானவர் களுக்கு ஆதரவானதாக இந்த அறிக்கை அமைந்தது. ‘திங்காத்தியா’ முறையை நீக்கிவிட வேண்டும் என்பது, இவ்வறிக்கையின் முக்கியப் பரிந்துரையாக இருந்தது. பீகார், ஒரிசா மாநில அரசுகள், இந்த அறிக்கை வெளியான அன்றே, அதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தன. இதனால் ஊக்கம் பெற்ற குடியானவர்கள் அவுரி பயிரிட மறுத்துவிட்டார்கள்.

தோட்ட உரிமையாளர்களில் சிலர் தம் அடியாட்களை ஏவி, குடியானவர்களை அடித்தல், வீடுகளையும் வயல்களையும் அழித்தல், கால்நடை களைப் பறிமுதல் செய்தல் ஆகிய குற்றச் செயல் களை மேற்கொண்டனர். 1918இல் விசாரணை ஆணை யத்தின் பரிந்துரைகள் சட்டமாயின. இருப்பினும் குடியானவர்களின் உபரியைப் பெறுவதில் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்தனர்.

1917-இல் காந்தி தலைமையில் குடியானவர்கள் நடத்திய எதிர்ப்பியக்கம் சம்ப்ரான் சத்தியாகிரகம் எனப் பெயர்பெற்றது. வலுவான எதிர்ப்புணர்வு நிலவிய சூழலில் அவர் வருகை புரிந்தார். இதற்கு முன்னர் இப்பகுதியில் நிகழ்ந்த குடியானவர் எழுச்சியில் காணப்பட்டதைவிடக் குறைந்த அளவிலேயே இப்போராட்டத்தில் வன்முறை இடம்பெற்றது. இந்தியா முழுவதிலும் புகழையும் அறிமுகத்தையும் பெற இப்போராட்டம் காந்திக்கு உதவியது.

இதன் தொடர்ச்சியாக 1918-இல் தம் சொந்த மாநிலமான குஜராத்தில் வேளாண் குடிகளின் போராட்டம் ஒன்றைக் காந்தி நடத்தினார்.

champaran satyagrah 600கேதா (1918)

குஜராத்தின் தலைநகரான அகமதாபாத் அருகில் கேதா மாவட்டம் அமைந்திருந்தது. மத்திய குஜராத் பகுதியில் உள்ள வளமான நிலப்பகுதிகள் இம் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தன. இங்கு பெரு நிலக் கிழார்கள் சிலர் இருந்தாலும், ஆங்கில நில உரிமையாளர்கள் யாரும் இல்லை. இங்குள்ள நில உரிமையாளர்கள் தம் நிலங்களுக்கான நிலவரியை நேரடியாகவே ஆங்கில அரசுக்குச் செலுத்தி வந்தனர். ஆங்கில அரசுக்கும் நில உடைமையாளர்களுக்கும் இடையில் இடைத் தரகர் போல் செயல்படும் மேட்டிமையோரான பெருநிலக் கிழார்கள் இங்கு இல்லை.

மாவட்ட அளவிலான இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரிகள், நிலவரியை நிர்ணயித்தல், வரிவாங்குதல், சட்ட ஒழுங்கைப் பராமரித்தல் என்பனவற்றைக் கவனித்து வந்தார்கள். உள்ளூர் நீதிமன்றங்களின் நீதிபதியாகவும் செயல்பட்டு வந்தனர். மாவட்டக் கலெக்டர் என்பது இவர்களின் பதவிப் பெயராக இருந்தது. வரிவாங்குவது இவர்களது முக்கியப் பணியாக இருந்ததை இவர்களின் பதவிப் பெயரே வெளிப்படுத்தியது. தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பயிர்களைப் பார்வையிடல் குடியானவர்களின் குறைகளைக் கேட்டறிதல் என்பன வற்றையும் மேற்கொண்டனர். பயிரிடுவோரின் பெற்றோர்களாகத் தம்மைக் கருதிக் கொண்டனர். ‘ஒரு நல்ல கலெக்டர்’ என்பவர் குடியானவர்களின் நண்பன் என்று ஒரு கலெக்டர் குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் சட்டத்தின் பிரதிநிதியாகத் தம்மைக் கருதிக்கொண்ட சிவில் நிர்வாக அதிகாரிகள், காலனிய ஆட்சிக்கு முன்பு நிலவிய சட்ட ஒழுங் கின்மையை மாற்றி அமைப்பவர்களாகத் தம்மை நம்பிக்கொண்டனர்

அதே நேரத்தில் காவல்துறை குடியானவர்களிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டது.

***

வட்டித் தொழில் புரிவோர் எந்த விளைச்சலின் போதும் குடியானவர்களின் ஆதாயத்தில் பெரும் பங்கைக் கவர்ந்து கொண்டார்கள். விளைச்சல் குன்றும் போது வரிசெலுத்துவதில் குடியானவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். வரிவிகிதம் குறைவுதான் என்றும் நல்ல விளைச்சல் கிட்டும்போது சேமிக் காமையே அவர்களது இடர்பாட்டிற்கான காரண மென்றும் அதிகாரிகள் நம்பினார்கள்.

1899-1900 ஆண்டுகளில் குஜராத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது இம்மாநிலத்தின் வடபகுதியில் வரிவாங்குவதை நிறுத்தி வைப்பதாக ஆங்கில அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், தென்பகுதியில் வரி முழுவதையும் செலுத்த வேண்டும் என்றது. அந்த ஆண்டு அந்தப் பகுதியில் விளைச்சல் குறைவாகிப் போனதால் அரசின் இம்முடிவு அநீதியானது என்று குடியானவர்கள் கருதினர்.

அரசின் முடிவை எதிர்க்க அமைப்பு ஒன்றை நிறுவியதுடன் அதற்காகப் பணம் திரட்டவும் செய்தனர். ஆங்கில உயர் அதிகாரிகளிடம் தம் இடர்பாட்டினைத் தெரிவிக்கவும் முயன்றனர். இதில் பயன் அடையா நிலையில் வரி கட்டுபவர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். வரிவாங்கும் உள்ளூர் அதிகாரிகளைப் பயமுறுத்தவும் செய்தனர். குடியானவர்களின் இவ்வியக்கத்தை ஒடுக்குவதில் ஆங்கில அரசு முனைப்புக் காட்டியது. முன்னணியில் இருந்து செயல்பட்ட போராட்டத் தலைவர்களின் சொத்துக் களைப் பறிமுதல் செய்து ஏலமிடப் போவதாக அச்சுறுத்தியது. வழக்கமான வரியைவிடக் கூடுதலாக 25% வரியைத் தண்டமாகக் கட்ட வேண்டும் என்றும் எச்சரித்தது. இதை ‘சோந்தை’ என்று குறிப்பிட்டது. குடியானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, வரிப்பாக்கிக்காக அவர்களின் சொத்துக்களைப் பிணையாக்கியது. இதன் விளைவாக பெருநிலக் கிழார்கள் வரிகொடா இயக்கத்தில் இருந்து விலகி வரி கட்டிவிட்டனர்.

வரிவாங்கும் பொருட்டு ஏழைக் குடியான வர்கள் மீது கீழ் நிலை அதிகாரிகள் வன்முறையைப் பயன்படுத்தியதை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. தம் நிலத்தை அடமானம் வைத்தோ, விற்றோ, ஏழைக்குடியானவர்கள் வரி செலுத்தினர். பெருநிலக்கிழார் ஒருவர், கீழ்நிலை அதிகாரிகளின் செயல்பாடு குறித்து மும்பையின் பத்திரிகைகளுக்கு அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு செய்தி அனுப்பினார். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற ஆங்கில நாளேட்டில் இச்செய்தி வெளியானது.

இச்செய்தியைப் படித்த கோகல்தாஸ் என்ற வழக்கறிஞர், இச்செய்தியின் அடிப்படையில் பஞ்சகாலத்தில் இப்படி வன்முறையைப் பயன் படுத்தி வரி வாங்குவதாக அரசின் மீது குற்றம் சாட்டினார். இதை விசாரிக்க இவான் மன்னோச்சி என்ற ஆங்கில அதிகாரியை அரசு நியமித்தது. துன்புறுத்தி வரி வாங்கியதற்குச் சான்று இருப்பதை அவர் கண்டறிந்ததுடன் தம் அறிக்கையிலும் இதைப் பதிவு செய்தார். இதுபோன்ற தவறுகளைத் தவிர்ப் பதற்கான வழிமுறைகள் சிலவற்றை அவர் பரிந்துரைத் திருந்தார். ஆனால், மும்பை மாநில அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இச்செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் எவற்றையும் மேற்கொள்ள வில்லை. மொத்தத்தில் சராசரிக் குடியானவர்களின் நிலை இரங்கத்தக்கதாய் இருந்தது, பெருநிலக் கிழார்களுக்கும், வரிவாங்கும் அதிகார வர்க்கத்துக்கும் இடையில் சிக்கி அவர்கள் அல்லல்பட்டார்கள்.

கேதா மாவட்டத்தில் பெருநில உடைமையாளர் களாக பட்டிதார் என்றழைக்கப்பட்ட சாதிப்பிரிவினர் இருந்தனர். இவர்களைப் பகைத்துக் கொண்டால், வீடு, பயிரிடும் நிலம் என்ற இரண்டில் இருந்தும் குடியானவர்கள் வெளியேற்றப்படுவார்கள். பட்டி தாரின் மேட்டிமைப்பிரிவினர், தங்களுக்குள்ளேயே மணஉறவு வைத்துக் கொண்டு, ஓர் ஆதிக்கக் குழுவாகச் செயல்பட்டனர். ஆங்கிலேயர் உருவாக்கிய உள்ளாட்சி அமைப்புகளில் இவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். படேல் என்றழைக்கப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி இச்சாதியைச் சேர்ந்தவராகவே இருப்பார்.

கிராம நிலங்களின் பெரும்பகுதி இவர்களுக்கே உரிமையானதாக இருந்தது. கீழ்நிலைச் சாதியினர் ஏழைக்குடியானவர்களாகவும், வேளாண் தொழிலாளர் களாகவும் இருந்தனர். பட்டிதார்களால் வரையறுக்கப் பட்ட இடங்களிலேயே இவர்கள் வாழ வேண்டிய திருந்தது. தம் ஆதிக்கத்தை எதிர்ப்போரை ஈவு இரக்கமின்றி அடிப்பது பட்டிதாரின் இயல்பாகும். அதிகாரத்தின் அடையாளமாக விளங்கிய சிவப்பு நிறத் தலைப்பாகை கட்டுவதும், பட்டிதார் வீட்டு முன்பாகக் குதிரைமீது ஏறிச்செல்வதும் தடை செய்யப் பட்ட ஒன்றாக இவர்களுக்கிருந்தது. ஊருக்கு வெளியில் வாழ வேண்டும், கிராமத்தின் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் இவர்கள் மீது விதிக்கப் பட்டிருந்தன. இவர்கள் சமூகத்துப் பெண்கள் பட்டிதார்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாவது வழமையான ஒன்றாக இருந்தது.

***

1905 வாக்கில் இந்து அடிப்படைவாத அமைப்பான ஆரியசமாஜம் என்ற அமைப்பு இப் பகுதியில் அறிமுகமானது. வன்முறை சார்ந்த தேசிய இயக்கமும் இத்துடன் இணைந்து கொண்டது. 1909இல் குஜராத் பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்த வைசிராயைக் கொலை செய்ய இவர்கள் வகுத்தத் திட்டம் நிறைவேறாமல் போனது.

காந்தியின் வருகை

1917-ஆவது ஆண்டில் கடுமையான மழை பெய்து பயிர்கள் அழிவுக்காளாயின. அரசோ வரி நிவாரணம் எதையும் இழப்பிற்கு ஆளான குடியானவர் களுக்கு வழங்க மறுத்தது. மோகன்லால் பாண்ட்யா, சங்கர்லால் பரிக் என்ற இரு தேசியவாதிகள் மும்பை மாநில அரசுக்கு நிவாரணம் வேண்டி மனு அளிக்கத் திட்டமிட்டனர். இதற்கான விண்ணப்பப் படிவங் களை அச்சடித்து 22,000 கையெழுத்துக்களைப் பெற்றனர். இதை மும்பை மாநில அரசுக்கும், இதன் நகல்களை அகமதாபாத்தில் இருந்த காந்திக்கும் கேதா பகுதியின் பிரதிநிதிகளாயிருந்த இருவருக்கும், பாரிஸ்டர் ஆக இருந்த பட்டிதார் சமூகத்தவரான கேதாவைச் சேர்ந்த வித்தல்பாய் பட்டேலுக்கும் (வல்லபாய் படேல்) அனுப்பி வைத்தனர்.

அத்துடன் மாவட்டக் கலெக்டரையும் சந்தித்தனர். அவரும் திசம்பர் 5-இல் நிலவரி வாங்கத் தொடங்கும் போது நீக்குப்போக்குடன் நடப்பதாக வாக்களித்தார். மும்பை அரசு மனுவைக் கண்டு கொள்ளாததுடன், வரி தொடர்பான வேண்டுகோளை குஜராத்தில் உள்ள அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டது.

1917 திசம்பர் ஆறாம் நாளன்று கேதா மாவட்டத்தின் பெருநகரான ராதியாதில் கூட்டம் ஒன்று இது தொடர்பாக நடந்தது. இதில் காந்தி கலந்து கொண்டார். குடியானவர்கள் குறைகளை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. குஜராத்தில் இருந்த அதிகாரிகளுக்குக் கட்டணமின்றிப் பணி புரியும் நடைமுறை வழக்கில் இருந்தது. இப்பணியை மேற்கொள்ள வேண்டாம் என்ற முடிவும் எடுக்கப் பட்டது. இம்முடிவு துண்டு வெளியீடுகளாக அச்சிடப்பட்டு குடியானவர்களிடம் பரப்பப்பட்டது. விரைவில் இது போராட்டத்தின் முக்கிய அங்கமாகியது.

மீண்டும், இதே ஊரில் 13 திசம்பர் அன்று நடந்த பொதுக்கூட்டத்தில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்புக் குறித்தும் வரிகட்ட முடியாத தங்கள் நிலை குறித்தும் எடுத்துரைத்தனர். தம்முடைய கிராமத்துக் குடியானவர்களிடம் மனுவில் கையெழுத்து வாங்க முயன்றபோது அதில் கையெழுத்திடுபவர்கள் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று எச்சரித்ததாக பட்டிதார் ஒருவர் கூறினார். விளைச்சலை அதிகமாக மதிப்பீடு செய்யும்படி கீழ்நிலை அதிகாரிகளை உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதாக ஒருவர் குறிப்பிட்டார். 37% வட்டிக்கு கடன் வாங்கியதாக ஒருவர் தெரிவித்தார்.

நாயாவில் சத்தியாகிரகம் தொடங்கப் போவதாக காந்தி அறிவித்தார். மற்றொரு பக்கம் ஆங்கில அரசின் அதிகாரிகள் வரி கொடுக்காத குடியானவர் களிடம் இருந்து, கால்நடைகள், தானியங்கள், சமையல் பாத்திரங்கள், அணிகலன்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி ஏலமிடும் செயலில் ஈடுபடத் தொடங்கினர். தொல்லையளிக்கும் தேசியவாதிகளின் பிடியில் இருந்து குடியானவர்களை மீட்டு அவர்களை வரிசெலுத்தச் செய்ய வேண்டும் என்ற கட்டளை இந்திய அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் அதிகாரிகள் கொடுங்கோலர்களைப் போன்று நடந்து கொள்ளத் தொடங்கினர். மனைவி யரையும் மகள்களையும் விற்று வரி செலுத்துங்கள் என்று கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார்கள்.

குடியானவரின் போராட்டமானது வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் தவறாக வழி நடத்தப்படுவதாக 1918 ஜனவரியில் மும்பை அரசு அறிவித்தது. பிப்ரவரி 4 ஆம் நாள் அன்றுதான் காந்தி இதற்கு விடை இறுத்தார். இப் போராட்டத்தில் தான் ஈடுபடப் போவதாகவும் அவர் அறிவித்தார். நைதால் பகுதியின் நிலையைக் கண்டறிவதற்காக பிப்ரவரி 16 ஆம் நாள் அன்று தன் குழுவினருடன் நடந்தே சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து சென்று ஒவ்வொரு பகுதியிலும் நிலைமையைக் கண்டறியும்படிச் செய்தார். குடியானவர்களுக்குத் தொல்லை தரக் கூடாது என்ற எண்ணத்தில் தமக்குத் தேவையான உணவைக் குழுவினரே கொண்டு சென்றனர். காந்தி மட்டுமே முப்பத்தி ஐந்து கிராமங்களைப் பார்வையிட்டார். குடியானவர்களின் குறைபாடு நியாயமானதே என்ற முடிவுக்கு வந்தார்.

22 மார்ச் பொதுக் கூட்டம் ஒன்றுக்குக் காந்தி ஒழுங்கு செய்தார். இதில் சத்தியாகிரகம் குறித்து அறிவிக்க இருந்தார். 4000 குடியானவர்கள் வரை இதில் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக குடியானவர் தரப்பிலும், ஆங்கில அரசின் தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை விரிவாகக் கூறிச் செல்லும் நூலாசிரியர், காந்தி மேற்கொண்ட ஓர் அரசியல் செயல்பாட்டினை வெளிப்படுத்துகிறார்.

இந்தப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முதல் உலகப் போர் தொடங்கி விட்டது. இங்கிலாந்தும் இப்போரில் ஈடுபட்டிருந்தது. அதன் இராணுவத்துக்கு இந்தியர்கள் தேவைப்பட்டனர். போர்முனையைக் கவனிக்க வேண்டிய நிலையில் இந்தியாவில் அமைதி நிலவ வேண்டியதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இச் சூழலில் இங்கிலாந்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை காந்தி எடுத்திருந்தார். தாம் பிரிட்டிஷ் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதாகவும், எனவே நெருக்கடியான சூழலில் அவர்களைப் பாதுகாப்பது தன் தார்மீகக் கடமை என்றும் கூறிய அவர் போர் ஆதரவுக்காக டில்லியில் நிகழ்ந்த கூட்டத்திற்குச் சென்றார்.

இத்தகைய சூழலில் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள ஆங்கில அரசு விரும்பவில்லை. இதன் அடிப்படையில் குடியானவர்கள் மீதான அடக்கு முறைகள் நிறுத்தப்பட்டு சில சலுகைகள் கேதா பகுதியின் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இவற்றுள் ஒன்று வரிகொடாமைக்காக நிலத்தைப் பறிமுதல் செய்யப்போவதாக அனுப்பப்பட்ட அறிவிக்கைகள் திரும்பப் பெறப்பட்டு அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதாகும். இதன்படி மே மாதம் முழுவதும் அசையும் சொத்துக் களைப் பறிமுதல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

முதல் உலகப் போர் தொடர்பாக, டில்லியில் நடந்த மாநாட்டில் ஆங்கிலேயருக்கு உதவுவதாக காந்தி வாக்குறுதி அளித்தார். ஆங்கில அரசு கேட்டதற்கு இணங்கி, ஆங்கில இராணுவத்தில் சேரும்படி குடியானவர் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தாம் ஆயுதம் எதுவும் தாங்காமல் இப்புதிய படைவீரர் களைப் பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்போவதாகவும் கூறினார்.

சில வாரங்களுக்கு முன் அவருக்கு உற்சாகத்துடன் வரவேற்பளித்த கிராமத்தினர் இப்போது ஆர்வமற்ற வரவேற்பையே வழங்கினர். அவரது குழுவினருக்கு உணவு வழங்கவும் பலர் மறுத்தனர். நவகாம் என்ற இடத்தில் நடக்கவிருந்த கூட்டம் நிகழாமல் போயிற்று. மக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி வயல் வெளிகளுக்கு சென்று விட்டமையே இதற்குக் காரணம்.

குடியானவர்களில் சிலர் காந்தியை நோக்கி ‘உம்மைப் பெரிய ஆளாக்கினோம். சத்தியாகிரகப் பணிக்காக உமக்கு உதவினோம். ஆனால் இப்போது எங்களிடம் என்ன கேட்கிறீர்கள்?’ என்று கூவினர்.

காந்தியின் நிலை பரிதாபகரமாகியது. உளவியல் நிலையிலும், உடல் சார்ந்தும் அவர் ஆற்றல் அற்றுப் போனார். அவரைக் குணமாக்குவதற்காக அகமதா பாத்தில் உள்ள அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சம்ப்ரான், கேதா என்ற இரண்டு பகுதிகளிலும் நடந்த இயக்கங்களில் அவற்றின் முதுகெலும்பாகக் குடியானவர்கள் இருந்தார்கள். இவர்கள் வளம் படைத்தவர்களாகவும், கிராமங்களில் அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருந்த மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். அடித்தளப் பிரிவைச் சேர்ந்த குடியானவர்களைத் தம்முடன் இணைத்துக் கொண்டாலும் கிராமங்களில் நிலவிய சமத்துவ மின்மைக்கு எதிராகப் போராடவில்லை. தோட்ட உரிமையாளர்களான ஆங்கிலேயர்கள் அல்லது

அரசு அதிகாரிகள் ஆகியோரின் ஒடுக்குமுறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வது மட்டுமே அவர்களது நோக்கமாக இருந்தது என்று நூலாசிரியர் சரியாகவே அவதானித்துள்ளார்.

அரசின் வன்முறையை வெளிப்படுத்தல்

இந்நூலின் இறுதிப்பகுதியாக சர் சிட்னி ரவுலட் என்பவர் தலைமையிலான குழுவின் பரிந்துரை களுக்கு எதிரான சத்தியாகிரகப் போராட்டம் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைப் போராட்டங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டதை எதிர்த்து காந்தி நடத்திய இச்சத்தியாகிரகமே ரௌலட் சத்தியாகிரகம் என்று பெயர் பெற்றது. இதன் தொடர்ச்சியாகவே ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. இது குறித்த நூல் ஒன்று இனிவரும் ‘உங்கள் நூலகம்’ இதழில் அறிமுகம் ஆக இருப்பதால் இக்கட்டுரையில் இது தொடர்பான செய்திகள் தவிர்க்கப்படுகின்றன.

Pin It