1923-ல் பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மாகாண சட்டசபைகளில் பங்குபெற வேண்டும் என்றும், தேர்தலில் நிற்பது என்றும் காங்கிரஸில் மோதிலால் நேரு, சித்தரஞ்சன்தாஸ் போன்றோர் கருத்து தெரிவித்தனர். பின் தனியாக சுயராஜ்யக் கட்சியை ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகளால் கோபமடைந்த பிரிட்டிஷார் 1924-ல் அவர்கள் மீது கான்பூர் சதி வழக்கை சுமத்தி ஒடுக்கப் பார்த்தனர். ஆங்காங்கே இருந்த கம்யூனிஸக் குழுக்கள் ஒன்று சேர்ந்து, 1925-ல் சிங்காரவேலு தலைமையில், கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தின. முஜாபர் அகமது, அஸ்.வி.காட்டே, பாபா சந்தோஷ் சிங் முகமது ஹசன் கலந்து கொண்டனர்.
1927-ல் சென்னை காங்கிரஸ் மாநாடு ‘முழுசுதந்திரமே தனது லட்சியம்’ என்றது. 1921- லிருந்து காங்கிரஸூக்குள் இருந்த கம்யூனிஸ்ட்கள் இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து கொண்டு வந்தனர். ஒவ்வொரு முறையும் அது மிதவாதிகளால் தோற்கடிக்கப்பட்டது. சோவியத் யூனியனுக்கும், புருஸ்ஸல்ஸில் நடந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டிற்கும் சென்று வந்த ஜவஹர்லால் நேரு இந்த முறை ‘முழு சுதந்திரம்’ என்கிற தீர்மானத்தை காங்கிரஸில் முன்மொழிந்தார். கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்க, இந்தத் தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானம் முட்டாள்தனமானதும், பக்குவமற்றதுமாகும் என காந்தி எரிச்சலோடு சொன்னார். இதே சென்னை மாநாட்டில் சைமன் கமிஷனைப் புறக்கணிப்பது எனவும் முடிவுசெய்யப்பட்டது.
‘பிரிட்டஷாரின் அதிகாரத்தை’ தக்க வைத்துக் கொள்ளும் ஏற்பாடாகவே சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது. 1928 பிப்ரவரி 5-ம் நாள் சைமன் பம்பாயில் காலடி எடுத்து வைத்தபோது இந்தியா முழுவதும் ஹர்த்தால். முஸ்லீம் லீக்கின் ஒரு பகுதியினரும், இந்து மகா சபையில் (இன்றைய ஆர்.எஸ்.எஸ்) பெரும்பாலோரும் கமிஷனை ஆதரித்தார்கள். சைமன் சென்ற சென்னை, கல்கத்தா, டெல்லி, லக்னோ, பட்னா வழியெங்கும் மக்கள் ‘சைமனே திரும்பிப்போ’ என முழக்கமிட்டு ஊர்வலம் நடத்தினார்கள். ஊர்வலத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினார்கள். லக்னோவில் நேரு தாக்கப்பட்டார். லாகூர் வீதிகளில் பழம்பெரும் தலைவரான லாலா லஜபதிராய் ஆபத்தான முறையில் காயமடைந்து, சிகிச்சை பலனிளிக்காமல் காலமானார். அதுகுறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
லஜபதிராய் இறந்து ஒரு மாதத்திற்குள்ளாக அவரைத் தாக்கிய போலீஸ் ஆபிசர் சாண்டிரஸ் என்பவன் லாகூரில் ஒரு பகல் வேளையில் துப்பாக்கியால் சுடப்பட்டான். கொன்றவர்கள் பகத்சிங்கும், அவரது தோழர்களுமான ராஜகுருவும், சுகதேவும். இவர்கள் மீது லாகூர் சதி வழக்கு சுமத்தப்பட்டது.
“என்மீது விழு ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கல்லறை மீது அறையப்படும் ஆணியாகும்”
- காயத்துடன் லாலா லஜபதிராய் கூட்டத்தில் பேசியது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சைமன் கமிஷன்
- விவரங்கள்
- நள ன்
- பிரிவு: இந்தியா