(‘மதிப்பு-விலை-லாபம்’ என்னும் மார்க்சின் சிறுநூல்)

முதலாளியம் பற்றிய மார்க்சின் இரண்டு சிறுநூல்கள்

“கூலியுழைப்பும் மூலதனமும்”, “கூலி, விலை, லாபம்” என்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள மார்க்சின் இரண்டு சிறுநூல்களும் தொழிலாளர்களை நோக்கி, இரண்டு முக்கியமான சந்தர்ப்பங்களில், அவர் எழுதிய இரு பிரசுரங்கள் ஆகும். “கூலியுழைப்பும் மூலதனமும்” சிறுநூலை 1849 ஆம் ஆண்டில், ஒரு புரட்சிக்கான எழுச்சியை வழிநடத்திக் கொண்டிருந்த வேளையில், தாம் ஆசிரியராக இருந்து நடத்திய புதிய ரைன்லாந்து நாளிதழில் தலையங்கத் தொடர்க் கட்டுரையாய் மார்க்ஸ் எழுதினார். இது மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்நாளிலேயே பன்முறை வெளியிடப்பட்டது. “கூலி, விலை, லாபம்” சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் அதன் கொள்கைநிலைகளை உருப்படுத்தும் வகையில் மார்க்ஸ் ஆங்கிலத்தில் எழுதிய வாதச் சொற்பொழிவு ஆகும். இது மார்க்ஸ்-எங்கெல்ஸ் இறப்புக்குப் பின்னர் 1898ஆம் ஆண்டில்தான் வெளிவந்தது. இவ்விரண்டு சிறுநூல்களையும் இதுவரை காலமும் பொதுவுடைமை இயக்கங்கள் வெகுமக்கள் பிரசுரமாய் வெளியிட்டு வருகின்றன.

இவ்விரண்டு பிரசுரங்களின் பேசுபொருளும் ஒன்றுதான். ஆயினும் இருவேறு சந்தர்ப்பங்களில், இருவேறு வகையாய் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இப்பிரசுரங்களை ஒன்றெனக் கருதும் மனப்போக்கு நிலவுகின்றதோ என்ற ஐயம் பின்வரும் குறிப்புகளால் தோன்றுகிறது. “மார்க்ஸ், சாதாரண தொழிலாளர்களின் புரிதலுக்காக 1849ல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 165 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான் என்றாலும் இன்றைக்கும் படிக்கும் எவருக்கும் புதிய தெளிவைத் தரும் ஒரு செம்பனுவல்” என்று இப்போது இந்நூலை வெளியிட்டுள்ள இடது சாரிப் பதிப்பகத்தின் நூல் பற்றிய இணையதளக் குறிப்பு கூறுகின்றது. மார்ஸெல்லோ முஸ்ட்டோ எழுதிய “சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும்” நூலின் தமிழ் மொழியாக்கத்தில் ‘மதிப்பு, விலை, இலாபம்’ என்ற சொற்பொழிவைப் பற்றி மொழி பெயர்ப்பாளர் எழுதிய அடிக்குறிப்பு, “இது பின்னர் எங்கெல்ஸால் திருத்தங்கள் செய்யப்பட்டு அவரது அறிமுகவுரையுடன், ‘கூலி, விலை, இலாபம்’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டது” என்பதாகும் (2015: 33). இவ்விரண்டு குறிப்புகளும் “கூலியுழைப்பும் மூலதனமும்” நூலைப் பற்றியதே. ஆனால் “கூலி, விலை, லாபம்” நூலுக்கு எழுதப்பட்டுள்ளன. இதனால் இவ்விரண்டு நூல்களையும் ஒன்றெனக் கருதும் மனப்போக்கு உள்ளது வெளிப்படுகின்றது.

எவ்வாறாயினும், மார்க்சின் “கூலி, விலை, லாபம்” சிறுநூல் மிக முக்கியமான நூல்; தமிழில் பன்முறை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் கதை சர்தேசத் தொழிலாளர் சங்கத்தின் தோற்றத்தி லிருந்து தொடங்குகிறது.

சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் தோற்றம்

நவீன பொதுவுடைமை இயக்க வரலாற்றில், கம்யூனிஸ்டு கழகமும் சர்வதேசத் தொழிலாளர் சங்கமும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துப் பணிகளோடு பின்னிப் பிணைந்தவை. சர்வதேசத் தொழிலாளர் சங்கம் சுருக்கமாக முதலாம் “அகிலம்” என்று தமிழில் அழைக்கப்படுகின்றது. சர்வதேசத் தொழிலாளர் சங்கம், 1864 செப்டம்பர் 28-ல் லண்டன் செயிண்ட் மார்ட்டின் அரங்கத்தில் நடந்த கூட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இந்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

1850களுக்குப் பின்னான பத்தாண்டுகள் அமைதிக்குப் பின், 1860களில் மீண்டும் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் எங்கும் எழத் தொடங்கின. அப்போது ஐரோப்பாக் கண்டத்து முதலாளிகள், தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைப்பதற்கு அக்கம்பக்கத்து நாடுகளின் தொழிலாளர்களைப் பயன்படுத்தினர். இதை எப்படி யாவது தடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பு, தொழிற் சங்க நடவடிக்கை பெருமளவுக்கு வெற்றிகரமாக மேற் கொண்ட இங்கிலாந்து தொழிற்சங்கத் தலைவர்களிடம் 1863ஆம் ஆண்டு வாக்கில் முளைவிட்டது. அதுமுதல் அவர்கள் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் தமது நலன்களை முன்னிறுத்தி, ஒத்த முடிவு மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அனைத்து தொழிலாளர்களிடையே முறையான தகவல் தொடர்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இதற்காக இங்கிலாந்து தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டிய கூட்டமே, 1864 செப்டம்பர் 28ஆம் தேதி நடந்த கூட்டம் ஆகும். அக்காலத்தில் ஒருசில தொழிலாளர் தலைவர்களால், தொழிலாளர்களின் நலன் விரும்பியாகவும் அசாதாரண அறிவாளியாகவும் மார்க்ஸ் கருதப்பட்டார். அத் தொழிலாளர் தலைவர்களின் அழைப்பின் பேரில், அக்கூட்டத்தில் சாதாரணமாகக் கலந்துகொண்டார் மார்க்ஸ். இக்கூட்டத்தில் சங்கத்தைத் தோற்றுவித்தனர். அதை வளர்த்தெடுப்பதற்கு 34 பேர் கொண்ட ஒரு நிலைக்குழுவைத் தேர்ந்தெடுத்தனர். அந்த 34 பேர்களில் ஒருவர் மார்க்ஸ்.

பொதுவாக, சோவியத் வரலாற்று ஆசிரியர்கள், சங்கத்தைத் தோற்றுவித்து தலைமை வகித்தவர் மார்க்ஸ் என வருணிக்கின்றனர். ஆனால் மார்ஸெல்லோ முஸ்ட்டோ முதலான பல மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள், அகிலத்தை மார்க்ஸ் தோற்றுவிக்கவில்லை என்றாலும், அதை உருப்படுத்தி, வழிநடத்திச் சென்றவர் என்று வாதிடுகின்றனர். இது உண்மையே என்பதை மார்க்ஸ்-எங்கெல்ஸ் அக்கால எழுத்துகளும் உணர்த்து கின்றன. இப்பணியில், 1870-ல் தனது தொழிற்சாலை நிர்வகிக்கும் பணியிலிருந்து திரும்பிய எங்கெல்சும் இணைந்துகொண்டார்.

சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் உருவாக்கமும் மார்க்சும்

இருபது ஆண்டுகளாக மேற்கொண்ட முதலாளியம் பற்றிய ஆராய்ச்சி வேலைகளை நிறைவு செய்யும் பொருட்டு 1863 முதல் 1867 வரையான ஆண்டுகளில் மூலதனம் நூலை இறுதிப்படுத்துவதற்கும், முதல் தொகுதியை அச்சுக்கு அனுப்புவதற்கும், அச்சுத் தாள்களைத் திருத்துவதற்கும் நாள்தோறும் பலமணி நேரம் கடுமையாக உழைத்துவந்தார். அதனால் அவரது உடல்நலம் அடிக்கடி கெட்டுப் போனது. உடல்நலம் பெற, கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் 1863ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி எங்கெல்சின் இணையர் மேரி பர்னெஸ் இயற்கை எய்தினார்; எங்கெல்ஸ் ஆறாத் துக்கங்கொண்டார். அதனால் மார்க்சும் மனஅளவில் சோர்வுற்றிருந்தார்.

வேலைப்பளுவாலும் உடல்-மன நலிவுகளாலும் சோர்வுற்றிருந்த இந்த நேரத்தில்தான், சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்குவதற்கான மேற்கண்ட அந்தக் கூட்டத்தில் மார்க்ஸ் கலந்துகொண்டார்; நிலைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஏற்கனவே முதலாளிய சமூக அமைப்பின் புதிய நெருக்கடியை உணர்ந்த மார்க்ஸ் அக்காலத்தில் தொழிலாளர்களின் சர்வதேச அமைப்பு ஒன்று தேவை என்று எண்ணம்கொண்டிருந்தார். அந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதற்குச் சங்கத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் ஆர்வமுடன் பங்கேற்றார்; சங்கத்தின் கொள்கைகளை வரையறை செய்தார்; பல கோஷ்டகளை ஒத்திசைவுப்படுத்தி சங்கத்தை உருப் படுத்தினார்; நிலைக்குழு பொதுக் குழுவாக மாறிய போது, அதில் தலைமைப் பொறுப் பேற்று வழி நடத்தினார். சங்கத்தின் மிகப் பெரும்பாலான அறிக்கைகளை மார்கஸ்தான் எழுதினார்.

சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் பல விதமான அரசியல் கோஷ்டிகள் இருந்தன. சங்கத்தை உருவாக்க முன்கையெடுத்த இங்கிலாந்து தொழிற்சங்கத் தலை வர்கள், கூலி உயர்வுக்கான தொழிற்சங்க நடவடிக்கை களுக்கு அப்பால் ஒரு அடிகூட முன்னெடுத்து வைக்க விரும்பாதவர்கள். சங்கத்தில் முதன்மையாகப் பங்கேற்ற புரூதோன் வழியைப் பின்பற்றிய பிரெஞ்சுக்காரர்களும், அவர்களுடன் உடன் பயணித்தவர்களும் கூலி உயர்வுக்கான தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; அரசு அமைப்பையே முற்றிலும் இல்லாமல் ஒழித்து, அந்த இடத்தில் மக்களின் கூட்டுறவுச் சங்கங்கள் இடம்பெற வைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியைத் தவிர வேறு எதனையும் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி வந்தனர். மறுபுறத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் விருப்பமுடன் மேற்கொள்ளாமல், சீர்திருத்தங்கள் வகைப்பட்ட அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்திய அரசியல் நடவடிக்கைகளை நாட்டு எல்லைக்குள் மட்டுமே மேற்கொள்ள விரும்பிய லஸ்ஸால் வழியைப் பின்பற்றியவர்கள் இருந்தனர். அப்புறம் கொஞ்சம், ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்க விரும்பிய, அரசுடைமையையே சோசலிசமாக வருணித்த மாஜினி வழிக்காரர்களும், அவ்வகைப்பட்ட தேசியவாதிகளும் சங்கத்தில் தமது சொந்த நலன்களின் பொருட்டு பங்கேற்றனர்.

இந்தக் கோஷ்டிகளில் ஒரு சிறுபகுதியினரே மார்க்சும், அவரைப் பின்பற்றியவர்களும். ஆனால் கோஷ்டிவாதப் பண்புகள் சிறிதுமில்லாமல், எல்லாக் கோஷ்டிகளையும் தமது மாபெரும் அறிவுத் திறத்தாலும் தலைமைப் பண்பாலும் ஒத்திசைவுப்படுத்தி மார்க்ஸ் வழிநடத்திச் சென்றார். பொதுவுடைமை இயக்கத்தில் பல்வேறு கோஷ்டிகளுள் ஒத்திசைவு ஏற்படுத்தி, இயக்கத்தை வழிநடத்திச் சென்ற ஒரு மாபெரும் மிகுதிறனுடைய அரசியல் தலைவர் மார்க்ஸ். அதை இக்கால அவர் வாழ்க்கை வரலாற்றைக் கற்பதன் மூலம் அறிய இயலும்.

மேற்கண்டவாறு, சங்கம் தொடக்கத்திலேயே எண்ணற்ற கோஷ்டிகளின் சண்டைக் களமாக விளங்கியது; எந்த விசயத்தைத் தொட்டாலும் பிளவுகளுக்கான ஆரம்பப் புள்ளியாக ஆகியது. ஆனால் கண்டத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒருவரையருவர் ஆதரித்து நிற்க வேண்டும் என்ற சங்கம் தொடங்கப்பட்டதற்கான நோக்கத்தால், எண்ணற்ற தொழிற்சங்கங்கள் அகிலத் துடன் இணையத் தொடங்கின. இந்த நோக்கமே அகிலம் தொடங்கி ஆறு மாதத்திற்குள் விவாதப் பொருளாக ஆனது.

சர்வதேசச் சங்கத்தை உருப்படுத்திய சொற்பொழிவு

சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் குழுவில் 1865ஆம் ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி ஜான் வெஸ்டன் என்ற இங்கிலாந்து தொழிலாளி பின்வரும் வாதத்தை முன்வைத்தார். ‘கூலி உயர்வுக்கான வேலை நிறுத்தப் போராட்டங்கள் பயனற்றவை; கூலி உயர்வு பொருட்களின் விலை உயர்வுக்கு இட்டுச் செல்கிறது; ஆகவே கூலி உயர்வால் தொழிலாளர் வாழ்க்கை நிலைமை உயராது; முதலாளிய போட்டி உற்பத்தி முறையைக் கூட்டுறவு உற்பத்தி முறையால் பதிலீடு செய்வதால் மட்டுமே கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற முடியும். அதனால் கூலி உயர்வுக்கான தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிட்டு, முதலாளிய உற்பத்தி முறையை மாற்றும் கூட்டுறவு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்’. இந்த  வாதம் புரூதோன் வழிக்காரர்கள், லஸ்ஸால் வழிக்காரர்கள் ஆகியோரின் ஆதரவையும் பெற்றது. ஜான் வெஸ்டன் இங்கிலாந் துடைய கூலி உயர்வுக்கு அப்பால் செல்ல விரும்பாத தொழிற்சங்கவாதத்தின் மீது கடுஞ்சினம் கொண் டிருந்தார் எனத் தோன்றுகிறது.

இந்த வாதத்திற்கு எதிராக, 1865ஆம் ஆண்டு  ஜூன் 20, 27ஆம் தேதிகளில் அகிலத்தின் மையமான நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதற்கும் காப்பதற்கும், மார்க்ஸ் ஆங்கிலத்தில் வாதச் சொற்பொழிவைப் பொதுக் குழுவில் நிகழ்த்தினார். முதலில் ஜான் வெஸ்டனின் நியாயமான கடுஞ்சினத்தையும், அதை வெளிப்படுத்திய மனத்துணிவையும் மார்க்ஸ் பாராட்டினார். ஆனால் மதிப்பு, விலை, லாபம் பற்றிய வெஸ்டனுடைய தவறான கருத்துகளை மறுதலித்தார். ‘மூலதனம்’ பற்றிய தமது நீண்ட கால ஆராய்ச்சிகளின் விளைவாக வந்தடைந்த முடிவுகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

கூலி உயர்வால் பொருட்களின் விலை உயராது, முதலாளிகளின் லாபத்தின் ஒரு பகுதியே குறையும். ஏனென்றால், எல்லாப் பண்டங்களின் மதிப்பும் அதை உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்புச் சக்தி நேரத்தால் அளவிடப்படுகிறது. ஆனால் முதலாளி முழு உழைப்புச் சக்தி நேரத்திற்கும் உரிய மதிப்பை வழங்காமல் ஒரு பகுதி நேரத்தைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்கிறார். இதுவே லாபம். அடிமைத் தனத்திலும், பண்ணையடிமைத்தனத்திலும் எஜமானர் களுக்கு உழைப்பது வெளிப்படையாகத் தெரிவது போல, கூலியடிமைத்தனத்தில் தெரிவதில்லை. தொழிலாளி தன் உழைப்புச் சக்தி ஒரு பண்டமாக முதலாளிக்கு விற்க இருக்கும் சுதந்திரத்தால், தொழிலாளி முழு நேரமும் தனக்காகவே உழைக்கின்றார் என்ற மாயத் தோற்றம் ஏற்படுகின்றது. உழைப்புச் சக்தி என்ற பண்டமும்கூட மற்ற பண்டங்களைப் போல, சமூக உழைப்புச் சக்தி நேரத்தால், அதாவது தொழிலாளி வர்க்கத்தின் சந்ததி பெருக்கத்திற்குத் தேவைப்படும் சமூக உழைப்பு நேரத்தாலும், வாழ்க்கைச் சாதனங்கள் உற்பத்திச் செய்வதற்கான சமூக உழைப்புச் சக்தி நேரத்தாலும் அளவிடப்படுகின்றது. வாங்குவோன், விற்போன் என்ற நிலையில் முதலாளி - தொழிலாளி இடையில் நடைபெறும் போராட்டம் சந்தை விதிகளால் இயக்கப்படுகின்றது. சந்தை விரிவுகள் தொழிலாளி களைப் பெருக்குக்கின்றன; சந்தை நெருக்கடிகள் தொழிலாளர்களை அழிவுநிலைக்குத் தள்ளுகின்றன. ஆகவே கூலி உயர்வுப் போராட்டங்களை நடத்தி, அதில் கிடைக்கும் பலன்களைப் பயன்படுத்திக் கொண்டே, முதலாளியத் தனியுடைமை உற்பத்திமுறையை அழிப் பதற்கு, உழைக்கும் மக்களை ஆளும் நிலைக்கு உயர்த்தி, மக்கள்திரளின் கூட்டுடைமை உற்பத்திமுறையை இருப்புக்குக் கொண்டுவருவதே தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான வழி என்பதை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் எளிமையாகவும் மார்க்ஸ் எடுத் துரைத்தார். பல்வேறு கோஷ்டிகளில் இருந்தவர்கள் இந்த வாதத்தில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு மார்க்சுடைய கொள்கை முடிவுகளுக்கு இணங்கினர்.

இந்தச் சொற்பொழிவின் மூலம் சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பதாகையில் “நியாயமான வேலை நேரத்துக்கு நியாயமான கூலி” என்ற முழக்கத்துக்குப் பதிலாக “கூலி அமைப்பு முறை ஒழிக” என்ற முழக்கத்தைப் பதித்தார். இவ்வாறுதான் பல்வேறு கோஷ்டிகளையும் ஒத்திசைவுபடுத்தி, சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாற்றை மார்க்ஸ் உருப்படுத்தினார். சங்கத்தில் ஒவ்வொரு விவாதமும் மேற்கிளம்பியபோது, அவர்களைத் தன் தெளிவான கருத்துகளின் வாயிலாக வெற்றி கொண்டு, மார்க்ஸ் முன்னோக்கி வழிநடத்தினார்.

எங்கெல்ஸ் கைக்கு அகப்படாதச் சொற்பொழிவு

இந்த வாதச் சொற்பொழிவு பற்றி 1865ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி எங்கெல்சுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவருடன் விவாதிக்கின்றார். 1865 ஜூன் 24ஆம் தேதி எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் ‘இச் சொற்பொழிவு இரண்டு பாரம் அளவு கொண்டது, தொழிலாளி வர்க்க இலட்சியத்தைத் தெளிவாக எடுத்துரைப்பதால், அகிலத்தின் தலைவர்கள் அச்சிட விரும்புகிறார்கள்’ என்று கூறியுள்ளார். ஆனால் இது மார்க்ஸ் காலத்தில் நூலாக வெளிவரவில்லை.

மார்க்ஸ் இறந்த பிறகு தமது நூல் வேலைகளை எல்லாம் எங்கெல்ஸ் ஒதுக்கி வைத்துவிட்டார்; மார்க்ஸ் விட்டுச் சென்ற மூலதனம் நூல் கையெழுத்துப் படிகளைப் புத்தகம் ஆக்குதலையும், பொதுவுடைமை இயக்கத்தின் தேவைகளுக்கேற்ப மார்க்ஸ் எழுத்துகளை மீள வெளியிடுதலையும், பல உலக மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுதலையும் எங்கெல்ஸ் தம் மீதமிருந்த வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தார். ஜெர்மன் சோசலிச ஜனநாயகக் கட்சி பெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த 1891ஆம் ஆண்டு வாக்கில் எங்கெல்ஸ், முதலாளியம் குறித்து தொழிலாளர் களுக்கான ஒரு பிரசுரம் கொண்டுவர எண்ணினார். அப்பிரசுரம் மூலதனம் நூலில் வெளிப்படுத்தியுள்ள மார்க்சின் தெளிவான ஆய்வுகளை உட்கொண்டிருக்க வேண்டும் என விரும்பினார். 1865ஆம் ஆண்டு அகிலத்தில் மார்க்ஸ் ஆற்றிய வாதச் சொற்பொழிவு இத்தன்மையானதே. ஆனால் வெளியிடப்படாத இச்சிறுநூலை எங்கெல்ஸ் வெளிக்கொண்டு வரவில்லை. மாறாக, 1849ஆம் ஆண்டு முதல் பன்முறை வெளியான “கூலியுழைப்பும் மூலதனமும்” நூலையே முழுமையாகத் திருத்தம் செய்து, ‘மார்க்ஸ் இன்றிருந்தால் எப்படி எழுதியிருப்பாரோ, அப்படி கொண்டுவந்துள்ளதாக’ கூறுகின்றார். 1891ஆம் ஆண்டில், 26 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் எழுதிய ‘மதிப்பு விலை லாபம்’ கையெழுத்துப் படியை எங்கெல்சால் கண்டுபிடிக்க முடியவில்லை; அல்லது மறந்துவிட்டார் எனத் தோன்றுகிறது.

“1865 ஜூன் 20, செவ்வாய்க் கிழமை பொதுக் குழுவில் ஆற்றிய சொற்பொழிவு” என்ற வாசகத்துடன் தொடங்கும் ஆங்கில மொழியில் எழுதிய மார்க்சின் கையெழுத்துப் படியை, எங்கெல்ஸ் மறைவுக்குப் பின், மார்க்சுடைய கடைசி மகள் எலியனோர் கண்டெடுத்தார். இது 1898ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் ஆங்கில மொழியிலும் ஜெர்மன் மொழியிலும் வெளியிடப் பட்டது. கையெழுத்துப் படியில் நூலுக்குத் தலைப் பில்லை; 14 உட்பகுதிகளாக எண்ணிட்டுப் பிரிக்கப் பட்டு இருந்தது. அதில் முதல் ஆறு உட்பிரிவுகளுக்கும் தலைப்பில்லை. “மதிப்பு விலை லாபம்” என்று தலைப் பிட்டு, முதல் ஆறு உட்பிரிவுகளுக்கும் தலைப்பிட்டு, எலியனோரின் கணவர் எட்வார்த் எழுதிய சிறு அறிமுகக் குறிப்புடன் எலியனோர் இச்சிறுநூலை வெளிக்கொண்டுவந்தார். இச்சிறுநூலுக்கு ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர் “கூலி விலை லாபம்” என்று தலைப்பிட்டார். இந்த ஜெர்மன் மொழித் தலைப்பே சோவியத் பதிப்புகளிலும் இடம்பெற்றது. ஆயினும் விணிசிகீ 20 தொகுதியில் எலியனோர் கொடுத்த தலைப்பே பொருத்தமாக உள்ளது என்பதால், அவர் பதிப்பித்த ஆங்கிலப் பதிப்பைப் பின்பற்றிப் பதிப்பித்துள்ளனர்.

தமிழ் மொழியாக்கங்களும் நூல் வெளியீடுகளும்

“கூலி, விலை, லாபம்” என்ற தலைப்பில் 1956ஆம் ஆண்டில் இச்சிறுநூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டது. மொழிபெயர்ப்பாளர் தமிழகப் பொதுவுடைமை இயக்கத் தலைவர்களில் ஒருவரான என். சங்கரய்யா. இம்மொழியாக்கம் காணக் கிடைக்க வில்லை. தமிழில் சொந்தமாக மார்க்சிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும்போதே இச்சிறுநூலும் வெளிவந்துள்ளது என்பது கவனத்திற்குரியது. இச் சிறுநூலை இதே தலைப்பில் 1970ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை ஐந்து முறை தனிப்புத்தகமாக முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மொழி பெயர்ப்பாளர் பெயர் குறிப்பிடப்படவில்லை. வெளியான ஆண்டு இல்லாமல் வெளிவந்த புத்தகத்தின் முகப்புப் பக்கத்தில் ‘புரோகிரஸ் பதிப்பகம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ‘அயல்மொழிப் பதிப்பகம்’ என்ற பெயர் பயன்பாட்டிற்கும் ‘முன்னேற்றப் பதிப்பகம்’ என்ற பெயர் பயன்பாட்டிற்கும் இடையிலுள்ள காலத்தின் பெயர் பயன்பாடு ஆகும்; அனேகமாக 1960கள் இறுதிப் பகுதியிலும் 1970களின் ஆரம்பப் பகுதியிலும் பயன்படுத்தப்பட்டது.

இம்மொழியாக்கம் அப்படியே 1985ஆம் ஆண்டு வெளிவந்த மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வுநூல்கள் தொகுதி 5லும் இடம்பெற்றுள்ளது. இம்மொழியாக்கத்தில் ‘சப்ளை’ போன்ற சில பொருளாதாரக் கலைச்சொற்கள் அப்படியே ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. ‘டிமாண்ட்’ என்ற சொல்லுக்கு ‘கிராக்கி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேறுசில மார்க்சிய நூல்களில் இச்சொற்களுக்கு ‘வழங்கல்’, ‘வேண்டல்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெருமளவுக்குப் பயன்படுத்தப்படும் ‘அளிப்பு’, ‘தேவை’ என்ற சொற்கள் பொருத்தமானவை, இயல்பானவை எனத் தோன்றுகிறது. இப்போது ஒரு ‘புதிய மொழி யாக்கம்’ ஒன்றும் சந்தையில் கிடைக் கின்றது. அதில் பழைய மொழியாக்கமே ‘திருத்த’ப்பட்டு, ‘புதிய மொழி யாக்கம்’ ஆகியுள்ளது.

நூல் பரவலும் பல்வேறு

மார்க்சியப் புரிதல் போக்குகளும்

இச்சிறுநூல் 1956 முதல் 1990 வரை தொடர்ச்சி யாகவும், அதற்குப் பின் இரு பத்தாண்டுகள் இடை வெளிக்குப் பின்னும் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த வெளியீட்டு எண்ணிக்கையே இச்சிறுநூல் தமிழ் மார்க்சிய வாசிப்பில் மிகப் பெரிய அளவில் புழங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது.

சேலம் பழைய புத்தகக் கடை ஒன்றிலிருந்து 2005ஆம் ஆண்டு வாக்கில் வாங்கிய இப்புத்தகப் படியன்றில், ‘சி. முருகேசன், தொழிலாளர் ஆசிரியர், தென்னக ரெயில்வே, சேலம் JN’ என்று முகப்புப் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது. இதே வாசகம் அட்டையில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து பின்வரும் சில எண்ணங்கள் தோன்று கின்றன. இப்புத்தகம் தொழிற்சங்க இயக்கத்தில்தான் அதிக அளவில் புழங்கியுள்ளது. கூலி உயர்வுப் போராட்டத்திற்கான வழிகாட்டியாகக் கருதியுள்ளனர். இச்சிறுநூலில் முதலாளிய உற்பத்தி முறையின் சுற்றோட்டத்தில் கூலி உயர்வுப் போராட்டம் தவிர்க்க இயலாமல் எழுகிறது; அது நியாயமானது; அவசிய மானது; அதன் மூலம் கிடைக்கும் வாழ்க்கை நிலைமை மேம்பாடுகளால் தொழிலாளி வர்க்கம் தமது விலங்கு வாழ்நிலையை, கூலி அடிமை வாழ்நிலையை உணர்ந்து முதலாளிய உற்பத்திமுறையை அழிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மார்க்ஸ் வாதிடுகின்றார். இந்தியச் சூழலில் பொதுவுடைமை இயக்கங்கள் சார்ந்த தொழிற்சங்க இயக்கமோ, இச்சிறுநூலில் மார்க்ஸ் முன்வைக்கும் வாதத்தின் இரண்டாம் பகுதியை, கூலி அடிமைமுறை ஒழிப்பைக் கவனத்தில் கொள்ளவில்லை; புரட்சி வாதமோ முன் பகுதியை, வர்க்க ஒற்றுமையை ஆக்கும் கூலி உயர்வுப் போராட்டக் களங்களைக் கவனத்தில் எடுக்கவில்லை. அதனால்தான் மார்க்சியச் சிந்திப்பு வரலாற்றில் மிக முக்கியமான இடம்கொண்ட இந்நூல் தொழிற்சங்கப் போராட்டத்திற்கான நியாயத்தை வழங்கும் கருவியாக மட்டும் சுருக்கி நோக்கப்பட்டது.

இச்சிறுநூலை ‘மூலதனம்’ என்ற பெருநூலுக்கான நுழைவாயில் என்று சொல்லலாம். தமிழ் மரபில் நின்று சொல்வதானால் ‘குட்டி மூலதனம்’ என்று சொல்லலாம். ஏனென்றால் ‘மூலதனம்’ நூலில் மேற்கொண்ட ஆய்வுகளை அவ்வளவு செறிவாகவும், இயக்க இயல் பாங்கோடும், ‘மதிப்பு விலை லாபம்’ என்ற வாதச் சொற் பொழிவாக எழுதியுள்ளார். மூலதனச் சுற்றோட்டம் மனித உணர்நிலைக்கு அப்பாற்பட்ட இயக்க ஒழுங்கு விதிமுறைகளை கொண்டது. எனினும் அச்சுற்றோட்டம் தோற்றுவிக்கும் முதலாளிகளுக்கு எதிரான தொழி லாளிகளின் போராட்டங்களும், அப்போராட்டங்களின் விளைவாகத் தோன்றும் தொழிலாளி ஒற்றுமை என்ற உணர்நிலையும், கூலி அடிமைத்தனத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் முயற்சி எல்லா அடிமைத்தன வடிவங்களையும் ஒழிப்பதற்கான போராட்டத்தோடு இணைந்தது என்ற புரிதலும், இப்புரிதலோடு பொது வுடைமை இயக்கத்தை வளர்த்துச் செல்வதற்கான வர்க்க முனைப்புகளும், மனிதமுயற்சிகளுமே வரலாற்றுப் போக்கை நகர்த்திச் செல்கின்றன என்று இச்சிறுநூலில் மார்க்ஸ் எடுத்துக்காட்டி இருப்பதைக் காணமுடியும். ஒரேவேளையில் இச்சிறுநூல் அப்படி வரலாற்றை நகர்த்திய, அதாவது சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தை முன்னகர்த்திய மனித முயற்சி ஒன்றின் வெளிப்பாடாகவும் விளங்குகிறது.

ஆனால் மார்க்சிய எழுத்துக்களை, அவற்றுக்குரிய வரலாற்றோடு ஆழமாகக் கற்காமல், மேலோட்டமாக மேற்கோள்கள் திரட்டுவதற்கான ஒரு மார்க்சிய வாசிப்பும் உள்ளது. மார்க்சியத் தத்துவம் சமூக விதிகளைக் கண்டு சொல்லியுள்ளது என்றும், விதிகளை வரிசைப்படுத்தி எடுத்துக் கூறி, இச் சமூகவிதிகளை பொருளாதார விதிகளே தீர்மானிக்கின்றன என்று வாதிட்டுக் கொண்டு, பருண்மையான சூழல்கள் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், மார்க்சியத்தை வெறும் வாய்ப்பாடுகளாகச் சுருக்குகின்ற போக்கினரும்கூட தமிழ்ச் சூழலில் உண்டு. அவர்கள் மார்க்சிய எழுத்துகள் அனைத்தும் வரலாற்றில் உணர் நிலையோடு வினை புரிந்தவை, வரலாற்றில் மனித ஊடு செயல்களின் விளைபொருள் என்பதையே மறந்து விடுகின்றனர். இந்தப் போக்கிலான வாசிப்பு முறையாலும் கூட, இச் சிறுநூலின் முக்கியத்துவத்தை இதுவரை காலமும் கவனத்தில் கொள்ளப்படவில்லை; எடுத்துக் கூறப்பட வில்லை.  இச்சிறுநூலை, அதன் வரலாற்றோடு இணைத்து ஆழமாகக் கற்பது இவ்வாறான புரிதல் மாற வழி சமைக்கும்; மார்க்சியத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். ‘மக்கள் வரலாற்றைப் படை கின்றார்கள்’ என்று லெனினும் மாவோவும் வலி யுறுத்தியது ஏதோ மேலோட்டமான வாசகம் அல்ல. அது மார்க்சியத்தின் உயிர்நாடி.

Pin It