இன்றைய சூழல் பலருக்கு பெரும் சாதனைக் காலமாகத் தெரிகிறது. அவர்கள் பார்ப்பது 6 வழிச்சாலைகளை, அவைகளில் பயணிக்கும் புதுவித மகிழுந்துகளை, ஆறுவழிச்சாலைகளில் செயல்படும் உணவு விடுதிகளை, திண்பண்டங்களை விற்கும் நிலையங்களை, பெருகிவரும் வானூர்தி நிலையங்களை, அங்கிருந்து பறக்கும் வானூர்திகளின் எண்ணிக்கைகளை, நகரங்களில் பெருகி வரும் பெரிய பெரிய பல்முனை அங்காடிகளை, உருவாகிவரும் பேருந்து நிலையங்களை, வானளாவிய கட்டிடங்களில் செயல்பட்டுவரும் பல்நோக்கு மருத்துவமனைகளை, கிராமங்களிலும் நகரங்களில் தனியார்களால் துவங்கப்படும் கல்லூரிகள், பள்ளிகள், அங்கு உருவாகிக் கொண்டிருக்கும் ஐயங்கார் ரொட்டிக் கடைகள். இவைகள் அனைத்தும் இந்தியா வளர்கிறது ஒளிர்கிறது, புதிய இந்தியா பிறக்கிறது என்று முழக்கமிடுவோருக்கு சாதகமாக இருக்கின்றன. இன்றும் பலருக்கு இன்றைய சூழல் நெருக்கடியாகத் தென்படுகிறது. காரணம் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை இன்றைய நிலையிலும் சரி, எதிர்காலத்திலும் சரி கேள்விக்குறியாகவே தென்படுகிறது.

ஒரு நாளைக்கு 2 டாலர் அளவுக்கு பணத்தை வைத்திருந்தவர்கள், 3 டாலர் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள், 100 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு விட்டார்கள் எனக் கூறுகின்ற அரசுக்கு, பொருளாதார வீழ்ச்சி நடைபெறுகின்றபோது அப்படியே அந்த 100 மில்லியன் மக்களும் மீண்டும் வறுமைக்கு ஆட்பட்டு விடுவார்கள், இதுதான் இந்தியாவின் பெரும் சோகம் என்று உலக வங்கியில் பணிபுரிந்த பொருளாதார நிபுணர் சமீபத்தில் எழுதிய “இந்தியா உடைகிறது: அதைச் சரி செய்வது கடினம்” என்ற புத்தகத்தில் எழுதி உலகக் கவனத்தை ஈர்த்துள்ளார். இருந்தும் இருசாராரும் வேகமாக ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அப்படி ஓடும் மனிதர்கள் தாங்கள் இப்படி ஓடிக் கொண்டிருப்பதால் கடைசி நிலையில் எங்கு செல்லப் போகிறோம் என்று எந்த உணர்வும் இன்றி ஓடுகின்றனர்.

ஒரு சிலர் பதவிகளை எப்படியாவது பிடித்துவிட வேண்டும், ஒரு சிலர் மிகப்பெரும் பணத்தை ஈட்டி வரலாறு படைக்க வேண்டும், பலர் எதாவது ஒருவகையில் புகழின் உச்சியை அடைய வேண்டும், பலருக்கு கண்ட இடத்திலெல்லாம் சொத்துக்கள் வாங்கிக் குவித்துவிட வேண்டும், சிலருக்கு தங்கத்தின் மீது மோகம் கொண்டு தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்து வாழ்கின்றனர். இன்னும் சிலர் விதவிதமான சொகுசுக் கார்கள் வாங்கி வலம் வந்து மகிழ்கின்றனர், பலர் மின்னணுச் சாதனங்கள் வாங்கி மகிழ்கின்றனர், பலர் மாளிகை போல் வீடு அமைய வேண்டும் என்று பெரும் மாளிகைகளை கிராமங்களில் கட்டி அழகு பார்த்துக் கொண்டுள்ளனர், இன்னும் சிலர் பெண்களின் மீது மோகம் கொண்டு, அவர்கள் ஒரு போகப் பொருள் அவர்களை ருசிக்க வேண்டும் என்று அலைகின்றனர், பலர் 24 மணி நேரமும் கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் தின்பண்ட விற்பனை நிலையங்களிலும், உணவு விடுதிகளிலும், மதுபானக் கடைகளிலும் தாங்கள் உருவாக்கிய பணத்தை செலவழித்து உடலை அழித்த வண்ணம் வாழ்கின்றனர். இந்தச் செயல்பாடுகள்தான் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு ஊடகங்களால் காட்டப்படுகின்றன. இதை வைத்து ஒரு கதையாடல் உருவாக்கப்படுகின்றது.youth agitation 426இந்தியா மிக வேகமாக வளர்கிறது, உலகம் வியத்தகு வண்ணம் வளர்கிறது. பொருளாதாரத்தில், ஆண்டுதோறும் சாலைகள் போடுவதில், விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதில், வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். உலகத்தில் நம் நாட்டின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. ஆகாய விமானத்தில் பறப்போர் எண்ணிக்கை கூடுகிறது, கார்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கூடி வருகின்றது, இதன் விளைவாக ஆகாய விமான சேவையை விரிவாக்க புதிய விமானங்கள் ஒரே நேரத்தில் உலகம் வியக்கும் வண்ணம் அதிக எண்ணிக்கையில் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இந்தியாவில் எண்மப் பரிவர்த்தனை நடத்தை மக்களிடம் தொடர்ந்து கூடிவருகிறது, என்று கதையாடலை உருவாக்கி, இதைச் சீர்குலைக்க இந்தியாவின் மாண்புக்கு மாசு பூசும் விதத்தில் இந்தியாவைப் பற்றி குறை கூறாதீர்கள் என்ற விவாதத்தினை ஒரு பகுதியினர் முன்னெடுக்கின்றனர்.

இன்னொரு பகுதியினர் இதற்கு நேர் எதிர்மறையாக விவாதத்தினை முன் வைக்கின்றனர். இந்தியா இவ்வளவு மேம்பாடு அடையும்போது அதாவது 7% பொருளாதார வளர்ச்சி அடையும்போது 80 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அரசாங்கத்தின் பொதுவினியோகத் திட்டத்தில் விலையில்லா உணவுப் பொருள் வழங்கி பாதுகாப்பதை அரசு அறிவிக்கையில் தெரிவிக்கிறது. 140 கோடி மக்களில் 80 கோடி மக்கள் தங்கள் உணவுப்பாதுகாப்பை தங்களால் உறுதி செய்து கொள்ள முடியவில்லை என்றால், இந்த மக்களால் தங்களின் ஆரோக்யப் பாதுகாப்பை எப்படி உறுதி செய்துகொள்வார்கள், அதேபோல் இவர்களால் எப்படி தங்களின் கல்விப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வார்கள், அதேபோல் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வார்கள், இவர்கள் எப்படி தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுத செய்து கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. இவை அனைத்தையும் அரசுதான் செய்ய வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்தவுடன் அரசு அப்படியொரு உறுதிமொழியை மக்களுக்குத் தந்தது. ஆனால் அந்த உறுதிமொழியை அரசால் காப்பாற்ற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து தான் சந்தைப் பொருளாதாரம் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வந்து அதன் மூலம் சரி செய்வதாக உறுதியளித்து புதிய பொருளாதாரக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டது 1991இல். அடுத்த 30 ஆண்டு கால வளர்ச்சியையும் சமூக மேம்பாட்டையும் ஆய்வு செய்து பார்த்தபோது, எல்லையில்லா ஏற்றத்தாழ்வுகளை சமூகத்தில் ஏற்படுத்தியதும், இயற்கையைப் பாழ்படுத்தியதும் நிதர்சனமான உண்மைகளாக வெளிவந்தன. இவைகளை வைத்துக் கொண்டு அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார வல்லுனர்கள் அரசும் தோற்றது, சந்தையும் தோற்றது, எனவே ஏழை மக்களின் வாழ்வைப் பாதுகாக்க, அவர்களால்தான் முடியும், அதற்கு அவர்களை தயார்படுத்த வேண்டும் என்று அறிவித்து விட்டனர்.

2019ம் ஆண்டில் இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வறுமை இல்லா இந்தியாவை உருவாக்க மிகப்பெரிய ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வு சில புள்ளி விபரங்களைக் கொண்டு வந்தது. இந்தியாவில் வாழும் 24.39 கோடி குடும்பங்களில் 17.91 கோடிக் குடும்பங்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றன. இந்த ஒட்டு மொத்தக் குடும்பங்களில் 10.69 கோடி குடும்பங்கள் மிகவும் ஏழ்மையில் வாழ்கின்றனர். 5.37 கோடிக் குடும்பங்களுக்கு எந்தச் சொத்தும் கிடையாது. 51% மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்துகின்றனர். 75% மக்கள் ரூ.5000க்கு குறைவாக மாத வருமானம் ஈட்டி வாழ்க்கை நடத்த வேண்டிய சூழலில் வாழ்கின்றனர். ஆகையால் 64% மக்கள் மானுட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்று வாழ இயலாத சூழலில் வாழ்கின்றனர். கிராமங்களில் வாழும் மக்களில் இன்னும் 58% பேர் விவாசயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். இந்தப் பொருளாதாரம் வளர்கின்றபோது லட்சக் கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தியாவின் உண்மை நிலை அறிய ஆகாய விமானத்தை விட்டு தரையிறங்கி, தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து, மாநில நெடுஞ்சாலைகளுக்கு வந்து, அங்கிருந்து ஊரக உள்ளாட்சிச் சாலைகளுக்குள் சென்று அங்கிருந்து வாகனங்கள் செல்லாத இடங்களில் வசிக்கும் மக்களைப் பார்க்க முயல வேண்டும். அங்கு சென்று மக்களின் வாழ்க்கை நிலையைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது நாம் பார்ப்பவர்கள் பிணம் எரிப்பவராக இருக்கலாம், தூய்மைப் பணியாளராக இருக்கலாம், வீடுகளில் வேலை செய்யும் பெண் பணியாளராக இருக்கலாம், தலைச் சுமையாக பொருள்களை கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு சென்று விற்று வாழ்க்கை நடத்துபவராக இருக்கலாம், விவசாயக் கூலியாக இருக்கலாம், ஆடுகள் மேய்ப்பவராக இருக்கலாம், மாடுகள் மேய்ப்பவராக இருக்கலாம், குடிசைத் தொழில் செய்பவராக இருக்கலாம், வீதிகளில் கடை போட்டு வணிகம் செய்பவராக இருக்கலாம், காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகளாக இருக்கலாம், மீனவர்களாக இருக்கலாம், இவர்களின் வாழ்க்கை இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டதாக இருக்கின்றது. இவர்களைப் பற்றிய ஆய்வு அறிக்கைகளைப் படித்த பின் நம்மால் எப்படி பெருமைப்பட்டுக் கொள்ள முடியும் என்று ஒரு கதையாடல் உருவாக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது.

இந்த இரண்டாவது கதையாடல் முதல் கதையாடலுக்கு நேர் எதிர்மறையாக இருந்தாலும், அது உண்மை என்பதை யாராலும் மறுக்க இயலாது. காரணம் இவர்கள் தரும் புள்ளி விபரங்கள் அனைத்தும் அரசாங்கம் தந்தவைகள் என்பதையும் எவராலும் மறுக்க இயலாது. இந்த இரண்டு கதையாடலையும் ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டவர்கள் கேட்கும் கேள்வி, 75 ஆண்டில் நம் அரசாங்கம் யாருக்காகச் செயல்பட்டது என்பது. அரசாங்கமும் சந்தையும் 60 கோடி மக்களின் வாழ்க்கையில் மேம்பாட்டை கொண்டு வந்துள்ளன என்பதை யாராலும் மறுக்க இயலாது. இந்தப் புள்ளி விவரம் எங்கேயிருந்து கிடைத்தது என்றால், 80 கோடி மக்கள் அரசின் உதவியில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்ற புள்ளி விவரத்தை வைத்து கணக்கிட்டதுதான் இந்த 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்பது.

எப்படி இந்த 60 கோடி மக்களால் முன்னேற முடிந்தது? ஏன் 80 கோடி மக்களால் ஏழ்மையிலிருந்து வெளியேற முடியவில்லை? என்பது மிகப் பெரிய ஆய்வுக்கான கேள்வி. அதையும் அரசாங்கமே ஆய்வு செய்து பல காரணிகளை கண்டுபிடித்து வெளி­யிட்டது. அதில் ஒன்று அரசாங்கத்தில் திட்டங்களுக்கு குறைவில்லை. ஆனால் திட்டங்கள் பெருமளவு மக்கள் தேவைக்கானதாக உருவாக்கவில்லை, அடுத்து மக்களை திட்டத்தின் பயனாளிகளாகக் கருதி, அவர்களின் சுயமரியாதையைப் பறித்துவிட்டது அரசு இயந்திரம். ஆகையால் தான் சமீபத்திய மேம்பாட்டு அணுகுமுறைகளில் முக்கியமாக மக்களை அதிகாரப்படுத்துவதும், மக்களின் மேம்பாட்டை உரிமைகளாக்கித் தருவதும் மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதும் உத்திகளாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் மக்களின் சமூக அரசியல் பொறுப்புக்கள் நிறைய இருக்கின்றன என்பதையும் கவனப்படுத்தியுள்ளது அரசாங்கம்.

இந்த உத்திகளை மக்கள் பயன்படுத்த வேண்டும், குறிப்பாக ஏழ்மையில் வாழும் விளிம்புநிலை மக்கள். இதற்கு ஏதுவாக மக்களுக்குப் பக்கத்தில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கினர் 73வது, 74வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டங்களின் மூலம். எப்படி மைய மாநில அரசுகள் அதிகாரங்களை அரசியலமைப்பின் மூலம் பெற்று அரசாங்கமாக செயல்படுகின்றனவோ அதேபோல் உள்ளாட்சியும் அரசாங்கமாக அதிகாரங்களைப் பெற்று செயல்பட வேண்டும் என்பதற்காக. இந்த உள்ளாட்சி அரசாங்கத்திற்கு பொருளாதார மேம்பாடும் சமூக நீதியும்தான் முக்கியப் பொறுப்புக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றுவரை இந்த இரண்டையும் இந்த உள்ளாட்சிகளால் செய்ய முடியவும் இல்லை, முயலவும் இல்லை, அதற்காக சூழலையும் மத்திய மாநில அரசாங்கங்கள் உருவாக்கவும் இல்லை. இது ஒரு அரசாங்கம் என்பதைக்கூட இன்றுவரை நிலைநாட்ட இயலவில்லை. நேரடியாக மக்கள் பங்கேற்கும் ஒரு அரசாங்கத்தை மாநில அரசுகள் அதன் அதிகாரிகளை வைத்து ஆதிக்கம் செலுத்துகின்றன. இதைப் பார்த்து மத்திய அரசும் ஏதும் செய்யவில்லை, நீதிமன்றமும் கண்டு கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் கடந்து எந்த அரசியல் கட்சியும் இதை பொருட்டாக எடுத்துக் கொள்ளவுமில்லை. ஏழைகளும் தங்களுக்கு இதிலிருக்கும் வாய்ப்பை புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவில் இதைப்புரிந்துகொண்டு செயல்படுத்திய ஒரே மாநிலம் கேரளாதான்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் இந்திய மக்களுக்கு சுதந்திரம் பற்றியும் போதிக்கவில்லை, சுதந்திரம் அடைந்த நாட்டில் உள்ள மக்கள் மக்களாட்சியில் எப்படி வாழ வேண்டும், என்னென்ன பொறுப்புக்கள், கடமைகள் அவர்களுக்கு இருக்கின்றன, எப்படி அடிமைச் சிந்தனையிலிருந்து சுதந்திர சிந்தனைக்கு வரவேண்டும் என்பதையெல்லாம் நம் மக்களுக்கு நாம் போதிக்கவில்லை. நாம் சுதந்திரம் அடைந்தபோது எழுதப்படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 13% மட்டுமே. இந்தியாவிற்கு சூழல் சுதந்திரத்தை அந்த நாடு தயாராவதற்கு முன்பே கொண்டு வந்துவிட்டது என்பதை பலர் தங்களின் ஆய்வுகளிலே குறிப்பிடுகின்றனர். அதன் காரணமாகத்தான் காந்தி மக்கள் கல்விக்கான இயக்கம் வேண்டும் என்று மக்கள் கல்வி இயக்கத்தை உருவாக்க முனைந்தார். அந்த நேரத்தில் வினோபா பாவே ஒரு சிறிய நூலை “சுயராஜ்ய அறிவியல்” (Swaraj Sastra) என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டார். அந்த நூலுக்கு காந்தி ஒரு அறிமுக உரை எழுதி அந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அடுத்து ராமகிருஷ்ண மடத்தில் விவேகாநந்தருக்குப் பிறகு இளைய விவேகானந்தராக உலகம் முழுவதும் வலம் வந்து ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளை அரசு அதிகாரிகள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் உரைகளையாற்றியவர் சுவாமி ரங்கநானந்தா.

அவர் ஆற்றிய உரைகளில் நவீன இந்தியாவைக் கட்டமைக்க நம் ஆளுகை எப்படி இருக்க வேண்டும், நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும், நம் அரசியல் எப்படி இருக்க வேண்டும், நம் கல்வி எப்படி இருக்க வேண்டும், நம் ஆசிரியர்கள் எப்படிச் செயல்பட வேண்டும், நம் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், நம் சட்டமன்ற உறுப்பினர்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள். அரசியல்வாதிகள் அனைவரும் எப்படி செயல்பட வேண்டும் என்று பேசிய பேச்சுக்கள் அனைத்தும் பல புத்தகங்களாக வெளிவந்தன. அவைகள் அத்தனையிலும் ஒரு பொதுக்கருத்தை முன்வைத்துக் கொண்டேயிருந்தார்.

அதுதான் பொதுமக்களை எப்படிப் பொறுப்புமிக்க குடிமக்களாக ஆக்குவது என்பது. பொறுப்புமிக்க குடிமக்கள் உருவாக்கம் என்பது சாதாரணச் செயல்பாடு அல்ல அது ஒரு மகத்தான போராட்டப் பணி. இந்தப் பணி எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும் என்பதை இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டரை பத்தாண்டுகளுக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த தென்னாப்பிரிக்காவின் போராளி அதிபர் நெல்சன் மண்டேலா கூறினார். அவர் மிகத் தெளிவாக ஒரு கருத்தை முன் வைத்தார். இந்தியாவைப் பின் பற்றி பல நாடுகள் சுதந்திரம் அடைந்தன. அந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவைப் பின் பற்றி மக்களாட்சியை நடைமுறைப்படுத்தின. ஆனால் மிகக் குறுகிய காலத்திற்குள் சுதந்திரம் அடைந்த நாட்டில் மக்கள் அகதிகளாகிப் போனார்கள். காரணம் அடிமையாக வாழ்ந்த மக்களைத் தயார் செய்யாமல் எந்த நாடு மக்களாட்சிக்குள் செயல்படுகிறதோ அந்த நாட்டில் மக்களை வேறுவேறு வடிவங்களில் சுரண்டும் ஆதிக்கக் கும்பல்கள் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும், நிர்வாகத்தைப் பிடித்துக் கொள்ளும், அரசியலைப் பிடித்துக் கொள்ளும். ஆகையால் சுதந்திரத்திற்கு எவ்வளவு தியாகம் செய்து சுதந்திரம் பெற்றோமோ அதைவிட ஒரு படி அதிகமாக தியாகம் செய்து போராடி மக்களை குடிமக்களாகத் தயார் செய்ய வேண்டும். அதுவும் ஒரு போராட்டமே. அந்தப் போராட்டம் நடத்தாமல் எல்லோருக்குமான ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்பதை ஆணித்தரமாக விளக்கினார். அத்துடன் நிற்கவில்லை அவர்.

தேவாலயங்களுக்குச் செல்லும் பாதிரியார்களுக்கும், கல்விக் கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார். தென்னாப்பிரிக்காவிற்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு விட்டது. அது ஒரு புதிய ஏற்பாடு. அதனை மக்களுக்கு எடுத்துச் சென்று சாதாரண மனிதர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பை வழங்கும் அரசியல்சாசனமான ஆயுதத்தை எப்படி சாதாரண மனிதர்கள் பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்கிட வேண்டும் என்று பணித்தார். ஆனால் இந்தியாவில் அரசியல்சாசனத்தை வழக்கறிர்களுக்கானதாக மாற்றி விட்டனர். காரணம், மக்களை அரசாங்கம் எப்படி பாவிக்க ஆரம்பித்து விட்டது என்றால் பாவப்பட்ட மனிதர்கள் இவர்களின் உணவு, கல்வி, வாழ்வாதாரம் அனைத்தையும் அரசுதான் வழங்க வேண்டும். எனவே அந்த உத்தரவாதத்தைத் தந்து அந்தப் பொறுப்புக்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்த அரசு அதிகாரிகள் நாம் சுதந்திர நாட்டில் குடிமக்களுக்குப் பணி செய்ய வந்த பணியாளர்கள் என்ற மனோபாவத்திற்கு வந்து செயல்படுவதைத் தவிர்த்து, தங்களைத் தங்களுக்கு மேல் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு கடமைப்பட்டவர்களாக செயல்பட்டு மக்களை பயனாளிகள், தாங்கள் அளிக்கும் பயன்களுக்கு ஏங்கி நிற்கும் பயனாளிக் கூட்டமாக கருதிச் செயல்பட ஆரம்பித்து விட்டனர். காரணம் நம் நிர்வாக அமைப்பு வெள்ளைக்காரர்கள் நம் நாட்டைச் சுரண்டுவதற்கு கட்டமைத்த ஒன்றாகும். அந்த அமைப்பு முறையை மாற்றக் கூறி பல அறிக்கைகள் வெளியிட்டபோதும், நாட்டை வலுவாக்க, நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க இந்த முறைதான் வேண்டும் என தொடர்ந்ததன் விளைவு மக்களுக்கு கடமைப்பட்டதாக இயங்க வேண்டிய நிர்வாக அமைப்பு, மேலதிகாரிகளுக்கும் அரசு இயந்திரத்திற்கும் கடமைப்பட்டதாகவே செயல்பட்டுக் கொண்டுள்ளது.

நம் அரசியல் என்பது இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை கட்சி அரசியலாகவே வடிவமைக்கப்பட்டு கட்சிகளுக்குள் நடைபெறும் போட்டியாகச் செயல்பட்டு வந்ததின் விளைவு, நம் நாட்டில் மேம்பாட்டு அரசியலை முன்னெடுக்க முடியவில்லை. 1967 வரை ஒற்றைக் கட்சி ஆட்சி முறை இயங்கி வந்ததன் விளைவு அதன் மேல் விமர்சனத்தை வைத்து அரசியல் வடிவமைக்கப்பட்டு தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் என்ற முறைக்கு மாற்றப்பட்டு கட்சிகளின் தோல்விகளை மையப்படுத்தி அரசியலை நடத்தியதின் விளைவு மக்களை வாக்காளர்களுக்கு மேல் நம் அரசியல் கட்சிகளுக்கு உபயோகப்படுத்தத் தெரியவில்லை.

பொதுமக்கள் குடிமக்களாகச் செயல்படும்போது, வாக்காளர் என்ற முறையில் வாக்குச் சுதந்திரத்தை, வாக்கு உரிமையை பொறுப்புடன் நிறைவேற்றுவது மட்டுமல்ல, அதைத் தாண்டி அரசைக் கண்காணித்துச் செயல்படுவதும், மக்கள் பிரதிநிதிகளை தங்களுக்கு பணியாற்றுகின்றார்களா என்பதை கவனித்துச் செயல்படுவதும், அரசு இயந்திரம் நியாயமான முறையில் செயல்படாதபோது அதை எதிர்த்து செயலாற்றி நெறிப்படுத்துவதும் குடிமக்கள் கடமையாகும். ஆனால் அதற்கான விழிப்புணர்வு மக்களிடம் இருந்தாலன்றி இதனைச் செய்ய இயலாது. நம் அரசியல் கட்சிகளோ, தங்கள் கட்சிக்காரர்களை குடிமக்களாகச் செயல்பட பழக்குவதற்குப் பதில் தங்கள் கட்சிக்கு ஊழியம் செய்து வாக்குச் சேகரிக்கும் இயந்திரங்களாக மாற்றி விட்டனர். இந்த மனோபாவம் கொண்ட மக்களை மிக எளிதாக யார் வேண்டுமானாலும் சுரண்டலாம். அரசு இயந்திரம் செயல்படும், அது யாருக்காகச் செயல்படும் என்றால் அதன் இருப்புக்காகச் செயல்படும். அதைப் பயன்படுத்தும் முறைமை தெரிந்தவர்கள் அரசாங்கத்திற்குள் சென்று தங்களுக்குச் சாதகமாக அரசாங்கத்தை இயக்கக் கற்றுக் கொண்டு செயல்பட்டதன் விளைவு இந்தியர்களாகிய நாம் இந்தியர்களால் சுரண்டப்படும் அவமானத்தைத் தாங்கி வாழ்ந்து கொண்டுள்ளோம்.

இந்தச் சூழல் புரிந்த அறிந்த பொதுச் சிந்தனையாளர்கள் ஒரு கருத்தை மிக வலுவாக மக்கள் முன் வைக்கின்றனர். இனிமேல் ஏழைகள் வாழ்வில் ஏற்றம் பெறவேண்டுமானால் அவர்கள்தான் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இனிமேல் அரசாங்கம் ஏழைகள்மேல் கரிசனம் கொண்டு செயல்படாது. அந்த மனோபாவத்தை அரசு இழந்து விட்டது. அரசு இயந்திரம் தான் செயல்படுவதற்கு சந்தையை நம்பி இருக்கின்றனர். அரசியல் கட்சிகளோ மக்களுக்குச் சேவை செய்து மக்களுடன் இணைந்திருப்பதற்குப் பதிலாக, மக்களுக்கு வெகுதூரத்திற்குச் சென்று தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளைப் பெற சந்தையில் நிதி பெற்று செயல்படும் முகவர்களாக கட்சிக்காரர்கள் மாறிவிட்டனர். ஆகையால்தான் வாக்குகளைச் சந்தைப்படுத்தி அதிக ஏலத்தில் பெறுபவர்கள் வெற்றியைப் பெறுகின்றனர். வெற்றி பெற்றவர் தன் வெற்றிக்குப் பணம் தந்தவருக்கு சேவை செய்வாரா தனக்கு வாக்களித்தவருக்கு செயல்படுபவரா? ஐந்தாண்டுக்கு அவர் அந்தப் பதவியை குத்தகை எடுத்துள்ளார். அவ்வளவு தான்.

இந்த நேரத்தில் நாம் அறிவியல்பூர்வமாக இன்னொன்றையும் பார்க்க வேண்டும். மக்களின் மனோபாவம் என்ன? பொதுவாக மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு சமூகத்தில் மிகப்பெரும் பங்கு உள்ளது. அதுதான் மக்களுக்கு அரசியல் கல்வி தருவது. அதுதான் சமூகத்தை மக்களாட்சிப்படுத்துவது. அதுதான் மக்களிடம் நேர்மையைப் போதிப்பது. இந்தப் பணியை ஒரு காலக்கட்டம் வரை அரசியல் கட்சிகள் செய்து வந்தன. ஆனால் ஊழல் மலிந்து அரசின் மூலம் பெரும் பணம் பார்க்க முடியும் என்ற நிலை வந்த பிறகு பணி ஆதிக்கம் உள்ளவர்கள் கட்சிகளுக்குள் அதும் பெரும்பாலும் ஆளும் கட்சியாக வளரும் கட்சிகளுக்குள் புகுந்து வாக்குகளைச் சந்தைப்படுத்தி விட்டனர்.

மக்களாட்சியில் மக்கள் அரசியல், வளர்ச்சி அரசியல், மேம்பாட்டு அரசியல் நடத்த வேண்டும் என்று எண்ணும் கட்சிகளால் களத்தில் நிற்க முடியவில்லை. களத்தில் இன்று கட்சி முகவர்கள் கையூட்டுப் பெற்று அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பாக இருப்போர், அரசியல் கட்சிகள் தருவதை மக்களுக்குக் கொண்டு தரும் முகவர்கள் களத்தில் செயல்படுகின்றனர். மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் களச் செயல்பாட்டாளர்கள் களத்தில் இல்லை. இடதுகளின் களச் செயல்பாடுகள் கூட நலிவடைய ஆரம்பித்துவிட்டது.

இந்தத் தேக்க நிலையை உடைக்க நாம் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். இந்தியா இன்றும் மக்களாட்சியில்தானே இயங்குகின்றது. தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வந்து செல்கின்றன அல்லவா? நம் நாட்டிற்கு அரசியல் சாசனம் இருக்கின்றது தானே? நம் நாட்டில் சுதந்திரமாக இயங்கும் அரசு அமைப்புகளும் இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றது. இருந்தும் ஏன் இந்த நிலை? என்பதுதான் கேள்வி.

இன்னும் ஒருபடி மேலே சென்று நம் மக்களாட்சி அமைப்புக்களைப் பற்றி மக்கள் கொண்டுள்ள கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய மக்களின் கருத்துக்களை அவ்வப்போது ஆய்வு செய்யும் சி.எஸ்.டி.எஸ் (CSDS) என்ற நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு தெரிவிக்கும் மிக முக்கியமான செய்தி பொதுமக்கள் அரசு இயந்திரத்தின் மீது மிக வேகமாக நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்பதுதான். ஒரு காலத்தில் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தனர், தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர், உயர் அதிகார வர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர், தங்களால் ஒரு ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் இன்று ராணுவத்தைத் தவிர வேறு எந்த அமைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை மக்களுக்கு இல்லை என்பதை அந்த ஆய்வு படம்பிடித்து காட்டி இருக்கிறது. இது நம் அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் புரிகின்றதா என்பதுதான் நமக்குப் புலப்படவில்லை.

மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பல காலக்கட்டங்களில் கூறி வந்த செய்தி என்றாலும், நாம் எதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணும்போது புரிதலோடு களத்தில் இறங்கிச் செயல்படத் தேவையான புரிதலை ஏற்படுத்தத்தான் மேற்கூறிய அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன.

இன்று களம் காலியாக உள்ளது. களத்தைப் புரிந்து கொண்டு செயல்படும் இளைஞர்களின் கூட்டம் இன்று வலுக்கிறது. அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். ஆனால் அவர்கள் படிக்கப்பட வேண்டியவர்கள், வாசிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள்தான் இன்றைய குட்டி மகாத்மாக்கள், அவர்கள்தான் குட்டி விவேகாநந்தர்கள். அவர்கள் பின்பற்றப்பட வேண்டியவர்கள்.

இந்தியாவை மாற்ற இந்தக் கட்சியில் சேருகிறேன் என்று ஓடுவதை விட, எனக்குப் பக்கத்தில் வசிக்கும் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறேன், எனக்குப் பக்கத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாக்கப்போகிறேன், எனக்குப் பக்கத்தில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்து பெண்களின் ஆரோக்யம் பேண பணி செய்யப் போகிறேன், எனக்கு அருகாமையில் வசிக்கும் மக்களின் வசிப்பிடத்தை வாழ்விடத்தை தூய்மை செய்யப் போகிறேன் எனக்குப் பக்கத்தில் வசிக்கும் விவசா­யிகளுக்கு நஞ்சில்லா உணவை உருவாக்கும் புதிய முறை விவசாயத்தை அறிமுகம் செய்யப் போகிறேன், எனக்கு அருகாமையில் வசிக்கும் இளைஞர்களை ஒன்று திரட்டி கிராம நகர மேம்பாட்டுக்குச் செயல்படும் களச் செயல்பாட்டாளர்களாக தயார் செய்யப் போகிறேன், என் கிராமப் பஞ்சாயத்தில் கிராம சபையை வலுவாக்கப் பணி செய்யப் போகிறேன், என் நகரத்தில் ஏரியா சபையை இயங்க வைக்க மக்களைத் தயார் செய்யப் போகிறேன், எனக்கு அருகாமையில் வசிக்கும் படித்த இளைஞர்களுக்கு திறன் கூட்டி பணிக்குத் தயாராக்கப் போகிறேன், எனக்கு அருகாமையில் இருக்கும் ஊரணிகள், குட்டைகள், குளங்கள், ஏரிகள், கம்மாக்கள், ஓடைகள், வரத்துக்கால்வாய், போக்குக்கால்வாய் அனைத்தையும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை கிராம மக்களுக்கு கற்றுத் தரப் போகிறேன், எங்கள் ஊர் சத்துணவுக் கூடத்தில் தயாரிக்கும் சத்துணவை முறையாகத் தயாரிக்க உதவப் போகிறேன், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தூய்மை பற்றியும், துப்புரவு பற்றியும், உடல் நலம் பற்றியும், உணவு பற்றியும், குடிநீர் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறேன், என் ஊரில் உள்ள பொதுச் சொத்துக்களை பாதுகாக்க முதலில் அவைகளைக் கண்டுபிடித்து ஆக்கிரமிப்பில் இருந்தால் அவைகளை விடுவித்து பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கப் போகிறேன், எங்கள் ஊரில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களும் எங்கள் நிறுவனம், எங்களுக்கான நிறுவனம் என்பதை மக்களுக்கு உணர்த்தி அந்த நிறுவனச் செயல்பாடுகளில் பொதுமக்களை பங்கெடுக்கச் செய்வேன், பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்தி பொதுப்பள்ளியை வலுவாக்கச் செயல்படுவேன் என்று கூறி களத்தில் செயல்படும் இளைஞர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.

இந்தப் பணிகளைச் செய்ய மிகப் பெரிய ஆற்றலும், திறனும், செயலுக்கான ஊக்கமும், உத்வேகமும் இளைஞர்களுக்குத் தேவை. இந்தப் பணியை மேற்கொள்ள இன்று மிகப்பெரிய அளவில் திட்டமிட வேண்டும். காரணம், இதற்கான வாய்ப்பு என்பது உள்ளாட்சிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் செயல்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. கிராமசபை உறுப்பினராக இருந்தாலே போதும் கிராமங்களுக்கு, நகரங்களுக்கு ஏரியா சபை உறுப்பினராக இருந்தாலே போதுமானது. மக்களுக்கு சட்டத்தின் மூலம் எண்ணிலடங்கா உரிமைகளை சட்டமாகத் தந்துள்ளனர். அவைகளை எப்படி கையிலெடுப்பது என்பதற்குத்தான் நம் இளைஞர்களுக்கு உத்திகள் கற்பிக்கப்படல் வேண்டும்..

- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It