“புனைவுகள் எனக்கு அளப்பரிய சுதந்திரத்தையும் கதாபாத்திரங்களையும் அவர்கள் வாழ்வையும் எழுத வாய்ப்பளித்தன. எழுதுகிற புனைவுகள் ருசிகரமாகவும் வாசகருக்கு மகிழ்வூட்டிச் சிந்திக்க வைக்கவும் பயன்பட்டன. இதுவரை எனக்கு எவ்வித வருத்தங்களுமில்லை. நான் ஒரு நோயாளியாகிவிட்டாலும் அது எனது செயல்பாட்டை ஒன்றும் தடுக்கவில்லை. எனது குடும்பத்திற்கு போதுமான நேரத்தைச் செலவிடுகிறேன். அவர்களுக்கும் புத்தகம் படிப்பதற்கு போதித்து வந்துள்ளேன். வாசிப்பு அவர்களது வாழ்க்கைக்கு உதவும் என்பதை அறிவுறுத்தி யுள்ளேன்.”
- அசோகமித்திரன்
தமிழ்ச்சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் சாத்தியங்களையும் சாத்தியமின்மைகளையும் ஒருசேரத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அசோக மித்திரனிடமிருந்தே தொடங்கவேண்டும். நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கி முழுநேர எழுத்தாளராக வாழ முயன்று முழுமையாக நிறைவேறாதுபோன குறிப்பிட்ட சில எழுத்தாளர் களிடையே அசோகமித்திரன் தன் எழுத்துத்திறனாலும் குணாம்சங்களினாலும் வெற்றிகரமாக அதனைக் கடந்தவர் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியும். தீவிரமாகப் படைப்புலகில் இயங்கிய காலங்களில் அவருக்குப் போதிய உணவு, வருமானம் கிடைக்க வில்லை, வசதி வாய்ப்பும் மதிப்பு அந்தஸ்துகளும் கிட்டவில்லை போன்ற புகார்களையெல்லாம் தனது எளிய புன்னகையால் புறந்தள்ளிவிட்டு வாழ்நாளெல்லாம் எழுத்துலகோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த அவரது படைப்புச் சாதனைகளை காலகாலத்துக்கும் வாசித்துக் கொண்டாடப்படுவதொன்றே அவருக்கு தமிழ்ச்சமூகம் செலுத்தும் மதிப்பாய்ந்த அஞ்சலியாக அமையும்.
எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து தான் கண்ட மனிதர்களின் வாழ்வனுபவங்களிலிருந்து மட்டுமே அவர் எழுதிக்கொண்டிருந்தார். அம்மனிதர்களுக்கான வாழ்க்கைச் சாத்தியங்களை வேறுவேறு விதங்களில் எழுதிப் பார்த்ததாக அவர் குறிப்பிடுகிறார். அதனா லேயே அவரது படைப்புலகில் வெவ்வேறு பண்பு களைக் கொண்ட வித்தியாசமான மனிதர்களைக் காண முடிகிறது. அவருக்கு நன்கு பரிச்சயப்பட்ட நகரவாழ்வை அதன் சகல கூறுகளையும் அவரளவுக்கு தமிழில் எழுதிய தாக பிறிதொருவரைச் சொல்லவியலாது என்ற நிலை இன்றும் இருப்பதிலிருந்தே அவரது தனித்த எழுத்தாளு மையை உணர்ந்துகொள்ளமுடியும்.
அவரது அநேகப் படைப்புகளில் பெருநகரங்களில் வசிக்கும் மத்தியதரவர்க்க வாழ்க்கையின் ஊடாக சமூகத்தின் மனசாட்சி பதிவுகளாகியுள்ளதைக் காணலாம். இலக்கியப் படைப்புகளில் பெரிதும் கவனப்படுத்தப் பட்டிராத திரைத்துறையைப் பற்றியும் அதில் ஈடுபட்டுள்ள துணைநடிகர்கள் மற்றும் அடிமட்டத் தொழிலாளர்களின் நடைமுறை வாழ்க்கையையும் திரைத்துறைக்கேயான ஏற்ற இறக்கங்களையும் அச்சுஅசலாகப் பேசும் ‘கரைந்த நிழல்கள்‘ நாவல் அவரது தனித்தமுறையிலான கதைசொல்லலின் வீரியத்தை வெளிக்காட்டிய படைப்பு.
புறக்கணிப்பு அவமதிப்பு அவலங்களை எதிர் கொள்ளவியலா இயலாமையை சகித்துக்கொண்டு விரக்தியான நகைப்போடு நாளும்நாளும் கடந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களே அவரது படைப்பு களெங்கும் உலவுகிறார்கள். ஒரு வகையில் அவ் வாழ்க்கை அவர்கள் உடன்படுகிறார்கள். லட்சோப லட்சம் மக்கள் தங்கள் அன்றாடக் கவலை மறந்து வாழ நிர்ப்பந்திக்கும் வாழ்க்கைச்சூழலின் பிரதிபிம்பம்தான், இயலாமையின் உச்சத்தை மெல்லிய பகடியோடு கடந்துவிடும் அவரது எழுத்துகள் என்பதை நகரத்தில் வசிக்கும் வாசகர்கள் உணர வாய்ப்புண்டு.
சென்னையின் சந்தடிமிக்க தெருக்களில் நெருக்கடி யான வீடுகளில் குடியிருப்பவர்களின் பிரச்சினைகள் (கீழ் வீட்டில் குளித்துவிட்டு உடை மாற்றுவதை எதிர் மாடியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்), கடும்பசியில் சாப்பாட்டுக்காக மதியவெயிலில் மைல்கணக்கில் சைக்கிள் மிதித்து மேம்பாலம் ஏறமுடியாமல் மூச்சிரைக்கச் சென்றும் உணவின்றி ஏமாந்து திரும்புபவர், நெரிசலான போக்குவரத்துக்கிடையில் சுயகௌரவத்தோடு சீப்பு விற்கும் ஏழைப்பெண், நடுஇரவில் ஓசையெழாமல் பிள்ளைகள் ஒவ்வொன்றாய்த் தாண்டி தவ்வித்தவ்வி சென்று கணவனுடன் மௌனமாக உறவுகொள்ளும் பெண் என ஏராளமான உதாரணங்கள். நமக்கு நன்கு அறிமுகமான மனிதர்களே அவரது கதைமாந்தர்கள் என்பதால் மிகவும் அணுக்கமானவர்களாக மாறி விடுகிறார்கள்.
‘அசோகமித்திரனின் கதைகள் அதிர்ந்து பேசாதவைÕ என்று சுந்தரராமசாமி கூறியுள்ளதுபோல அவரது கதைகள் மனிதர்களின் இருப்பை சன்னமான குரலிலேயே பதிவு செய்கின்றன. ஆனால் அதன் ஊடுருவலின் வீச்சு ஆழமானது. அவர் உலவவிட்ட மனிதர்களை வாசகன் அத்தனை எளிதில் விலக்கிவிட்டு நகர்ந்துவிடமுடிவ தில்லை. கடக்கமுடியாத பல வரிகளை உள்ளடக்கி யவையே அவரது பெரும்பாலான படைப்புகள்.
உலகத்தரத்திலாகக் குறிப்பிடத்தக்க அவரது கதைகளிலொன்று ‘புலிக்கலைஞன்Õ. டகர்பைட் காதர் புலிவேஷம் போட்டு நடிக்க வாய்ப்பு கேட்டு வரும்போது அவன் புலியாகவே மாறி உக்கிரமாக நடிப்பதை எழுதுமிடத்து ஒருவகையில் அசோக மித்திரனின் கலைத்திறன் மீதான பற்றாவேசமாகவும் அதனைப் புரிந்துகொள்ளலாம். தான் கற்றறிந்த கலையில் பித்துக் கொண்டிருக்கும் ஒருவனின் கலை தாகத்தையே அக்கதை வெளிப்படுத்துகிறது. ஆற்றுப் படுத்தவியலாத இந்தக் கலைப்பற்றே அசோகமித்திரனை கடுமையான வாழ்வியல் நெருக்கடிகளுக்கிடையிலும் முழுநேர எழுத்தாளராக வாழ வகைசெய்ததாகவும் கொள்ளலாம்.
எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருந்தாலும் பெருநகர வாழ்க்கையில் நிரந்தரமான வீடற்று அங்கு மிங்குமாய் மாறிமாறிக் குடியேற வேண்டிய சூழல் நெருக்கடியால் அவனுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிட்டாது போவதையும், அதனால் அவன் அனுபவிக்க நேரும் இன்னல்களையும் பாடுகளையும் சேர்த்தே இக்கதையைப் புரிந்துகொள்ளவேண்டும். பெருநகர பிரமாண்டங்களுக்கு முன்னால் அசல் கலைஞனாக இருப்பவன் எளிதில் அடையாளம் பெறவியலாத யதார்த்தம் இழையோடும் கதை. சென்னைபோன்ற பெருநகரங்களில் தன் கலைத்திறனை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு வாழ முற்படும் ஒவ்வொரு கலைஞனுமே புலிக்கலைஞன்தான் என்ற நிதர்சனத்தையும் உணர்த்தும் இக்கதை அசோக மித்திரனின் உச்சபட்ச படைப்புகளில் ஒன்று.
60 களிலிருந்த சென்னையை அறிந்துகொள்ள ஆர்வ முள்ளவர்கள் அசோகமித்திரனை வாசிக்க வேண்டும். சென்னை நகரத்தின் பெரும்பாலான தெருக்களுக்கும் நடந்தே சென்றதாகக் கூறும் அசோகமித்திரன், அந்தக் காலத்து வாகனங்கள், கார்கள், சாலைகள், தெருக்கள், சந்துகள், வீடுகள், மனிதர்கள் எனப் பல சித்திரங்களை தனது படைப்புகளில் வரைந்திருக்கிறார். சென்னையில் எந்தப் பகுதிக்கு எந்தப் பேருந்தில் செல்லவேண்டு மென்பதைத் தெரிந்துகொள்ள அசோகமித்திரனைப் படித்தால் போதும் என்று அவரைப் பற்றிய ஒரு கேலியும் இலக்கிய உலகில் உண்டு. சென்னைப் பேருந்துகளில் அதிகமாகப் பயணம் செய்து பழகிய அவர் பேருந்துப் பிரயாணங்களைப் பற்றி நிறைய எழுதியிருப்பதே அக்கேலிக்குக் காரணம். நடுத்தர மக்களின் வாழ்வு அவலங்களை சிறுமைப்படுத்தி எழுதிய மேல்தட்டு பிராமண எழுத்தாளர் என்றும், திராவிட இயக்க ஒவ்வாமையுடையவர் என்றும் அவர்மீது மேலோட்டமான சில குற்றச்சாட்டுகள் உண்டு. தான் நேரில் கண்ட மக்களின் வாழ்க்கையை எழுதியதன் வாயிலாக அவ் வாழ்க்கையில் உள்ள சிடுக்குகளை தமிழிலக்கியத்தில் அடையாளப்படுத்தி யவர் என்றளவில் அவரைப் புரிந்துகொள்வதே உத்தமம்.
இறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக 3-3-2017 அன்று ‘தடம்Õ இதழுக்கு அவர் அளித்த பேட்டியி லிருந்து எழுத்து, வாழ்வு குறித்தம் அவரது அபிப்ராயங் களைப் புரிந்துகொள்ளலாம்.
‘சில பேர் சொல்றாங்க, ‘இது சவால், அது சவால்Õன்னு எழுதறதுல சவால்ன்னு என்ன இருக்கு? வாழ்க்கையை நடத்துறதுதான் சவால். வாழ்க்கையில் எதிர்ப்படும் சின்னச்சின்ன விஷயங்கள்தான் சவால்.Õ
வாழ்வென்பதே பெரும் சவால் என்பதை வாழ் வனுபவமாகவும் உணர்ந்த எழுத்தாளர் எழுதிய கதை மாந்தர்களில் பெரும்பகுதியினர் இன்னல்களையும் சவால்களையும் எதிர்கொண்டவர்களே. சவாலை சமாளிக்க இயலாமல் துன்பப்படுபவர்களே. வாழ்வின் கொடூரமான அத்தனை தாக்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்களே என்பதையே திரும்பத்திரும்ப அவரது படைப்புகள் சொல்கின்றன.
பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்திய அளவில் அவரது படைப்புகள் கவனம் பெற்றிருக் கின்றன. ஆங்கிலத்தில் அவர் எழுதிய பத்து நூல்கள் வெளிவந்துள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிண்டு, டைம்ஸ் ஆப் இந்தியா, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஸ்டேட்ஸ்மென் உள்ளிட்ட பத்திரிகைகளில் ஏராள மான ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறுகதை. குறுநாவல், புதினம், கட்டுரை என ஏராளமாக எழுதிக் குவித்த அவர் சாகித்ய அகாடெமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர் என்றாலும் அவரது இணையற்ற எழுத்தாளுமைக்கு ஈடான அளவில் அவர் கௌரவிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.
சரியெனப் பட்டதை நேரிடையாகச் சொல்லும் திறந்த மனமும், திறமையானவர்களைக் கண்டு ஊக்க மளிக்கும் குணமும், எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை குறைகூறாத பண்பும், தன்னை முன்னிலைப்படுத்த முனையாத எளிமையுமான அசோகமித்திரன் பொதுவான இலக்கியவாதிகளுக்கு வாய்க்காத அபூர்வ குணாதிசயங் களைக் கொண்டவர்.
இறப்புக்குப் பின்னால் ஒரு எழுத்தாளரை அதீதமாகப் போற்றுவதையும் தூற்றுவதையும் விடுத்து அவரது படைப்புகள் மறுவாசிப்பு செய்யப்படுவதும் நேர்மையோடு அவை விமர்சனத்துக்கு உட்படுத்தப் படுவதும் அடுத்த தலைமுறையினருக்கு அவற்றைத் தரப்படுத்துவதுமே தேர்ந்த வாசகனின் காரியமாக இருக்க வேண்டும்.