R.S. Sharma - 1987, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd, New Delhi, Urban Decay in India - இந்தியாவில் நகரங்களின் சிதைவு

முற்போக்கான அணுகுமுறையில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் வரிசையில் இடம் பெறுபவர் ஆர்.எஸ்.சர்மா. 2001-இல்காலமான இவர் இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றிற்கும் மத்தியகால வரலாற்றிற்கும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்.  பாட்னா பல்கலைக்கழகத்திலும்,டெல்லி பல்கலைக்கழகத்திலும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR)முதல் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவர்.

(Aspects Of Political Ideas and Institutions In Ancient Indian Feudalism, “Looking For the Aryans” Social Changes In Early Medievel India, Defence Of ‘Ancient India’, Sudras In Ancient India, Social And Economic History Of Early India, Material Culture And Social Formations In Ancient Indiaஎன்பன இவரது முக்கிய படைப்புகள்.  இவற்றுள் முதல் மூன்று நூல்களும், ‘பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள், நிலையங்கள்- சில தோற்றங்கள்’, ‘இந்திய நிலமானிய முறை’, ‘ஆரியர்களைத் தேடி’ என்ற தலைப்புகளில் என்.சி.பி.எச். நிறுவனத்தால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.

இங்கு அறிமுகப்படுத்தப்படும் ‘இந்தியாவில் நகரங்களின் சிதைவு’என்ற இந்நூல் அவரது ஏனைய நூல்களைப் போன்றே ஆழமான ஒன்று. தொல்லியல் அறிவுத் துறையின் துணையுடன் பண்டைய இந்திய வரலாற்றின் பிற்பகுதியிலும் மத்தியகால வரலாற்றின் தொடக்கத்திலும் அழிந்துபட்ட இந்திய நகரங்கள் குறித்தும்,அவற்றின் அழிவுக்கான காரணங்கள் குறித்தும் இந்நூலில் ஆராய்ந்துள்ளார்.

தொல்லியல் ஆய்வில் கிட்டிய பொருட்களின் துணையுடன் பண்டைய இந்திய நகரங்களில் நிகழ்ந்த கைத்தொழில்கள், வாணிபம், புழங்கிய நாணயம் குறித்த செய்திகளைக் கண்டறிந்து, இவற்றின் அடிப்படையில் அகழாய்வு நிகழ்ந்த 130இடங்களில் இருந்த நகரங்களின் தோற்றம், சிதைவு குறித்த சித்திரத்தை உருவாக்கியுள்ளார்.  படை யெடுப்புகள், பேரரசுகளின் வீழ்ச்சி ஆகியன மட்டு மின்றி,சமூக ஒழுங்குமுறையின்மையும் தொலை தூர வாணிபத்தின் வீழ்ச்சியும் பண்டைய நகரங் களின் சிதைவுக்குக் காரணம் என்பது அவரது கருத்தாகும். 

அரசு அதிகாரிகள், பூசாரிகள், கோவில்கள், துறவியர் மடங்கள் நிலமானியம் பெற்றமையும் இந்நகரங்களின் வீழ்ச்சிக்குக் காரணமென்று இந்நூல் வெளிப்படுத்துகிறது.  குடியானவர்களிடமிருந்துஉபரிதானியத்தையும் உழைப்பையும் பெற்றுக்கொண்ட பெருநிலவுடைமையாளர்கள்,கைவினைஞர்களுக்குத் தானியம் வழங்கல்,நிலக் கொடை வழங்கல் என்பவற்றின் வாயிலாக ஊதியம் வழங்கியமையும் கூட நகரங்களின் சிதைவுக்குக் காரணம் என்பதும் இந்நூல் கூறும் மற்றொரு முக்கியமான செய்தியாகும்.

நூல் நுவலும் செய்தி

கீழ்த்திசை நாடுகள் குறித்த மனப்பதிவில் இந்தியாவானது சமயம் மற்றும் ஆன்மிக வாதத்தின் இருப்பிடமாக இருந்தது.  சீன யாத்திரிகர்களின் பௌத்தம் தொடர்பான நூல்களில் பலஇந்திய நகரங்கள் இடம்  பெற்றிருந்தன. இந்நூல்கள் வெளியான பின் தொல்லியல் ஆய்வாளர்கள்,ஸ்தூபிகள், பௌத்த விகாரங்கள், கோவில்கள், துறவியர்மடங்கள் ஆகியன வற்றிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினர். இந்தியரின் பொருள்சார் பண்பாடு (Material Culture) குறித்த அய்யப்பாடு அவர்களிடம் நிலவியது.

‘இந்தியாவின் தொன்மை வாய்ந்த நகரங்கள்’ என்ற தமது நூலில், ஸ்டூவர்ட் பிக்கெட் என்பவர் இந்திய வரலாற்றில் முன்னேற்றம் குறித்த கூறு களையோ மனிதர்களின் தேவைகளை நிறைவு செய்யும் நிறுவனங்களையோ பொருள்சார் பண்பாட்டின் வளர்ச்சியையோ காணமுடியாது என்று எழுதியுள்ளார்.

பாலியல்,அழகியல் கூறுகளைக் கொண்ட சிற்பங் களையும் கலைப்படைப்புகளையும் தேடுவதிலேயே தொடக்ககால ஆங்கிலத் தொல்லியலாளர்கள் குறியாய் இருந்தனர்.  தேடுதலில் கிட்டியவற்றுள் பல, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  இந்திய அருங்காட்சியகங்கள் கடந்த காலத்தைய எச்சங்களின் சேமிப்புக் கிடக்குகளாகக் கருதப்பட்டன. 

இத்தொல்லியல் சான்றுகளை முறையாகப் பாதுகாத்து ஆய்வு செய்திருந்தால் நகர வாழ்க்கை குறித்த ஆய்வுக்கு அவை பயன் பட்டிருக்கும். ஆனால் இந்தியத் தொல்லியலாளர்கள் அய்ரோப்பியரின் வழிகாட்டுதலின் அடிப்படை யிலேயே செயல்பட்டதால் காலனிய அணுகு முறையில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. தொல்லியலாளர்களில் சிலர் அந்நியரின் அணுகுமுறைக்கு எதிராக விவாதித் தார்கள் என்றாலும் ‘குப்தர்களின் காலம் பொற்காலம்’என்பது போன்ற புனைவுகளையே முன் வைத்தனர்.

இவற்றையெல்லாம் தாண்டியே இந்தியத் தொல்லியல் ஆய்வானது பல படிகளைத் தாண்டி, நகரமயமாதல் நகரமயமாக்காமை குறித்த ஆய்வின் அருகில் வந்தது. நகரமயமாதலை, தோற்றம்- வளர்ச்சி- சிதைவு என்ற மூன்று நிலைகளில் காண முடியும்.  இந்த இடத்தில் நகரம் என்பதற்கான தொல்லியல் அளவுகோல் என்ன?என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  கார்டன் சைல்டு என்ற தொல்லியலாளரின் கருத்துப்படி,நினைவுச் சின்னங்கள், மக்கள்தொகை அடர்த்தி, பெரிய அளவிலான குடியிருப்புகள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தியில் ஈடுபடாத வகுப்பினர், கலை, அறிவியல், எழுத்தறிவு என்பன நகரமய மானதன் எச்சங்கள். 

இவையெல்லாம் வெண்கலப் பயன்பாட்டுக் காலத்தில் நிகழ்ந்தவை. கைத்தொழில் வல்லுநர்களின் தோற்றம்,உணவு உற்பத்தியில் ஈடுபடாது நகரங்களில் வாழ்வோருக்கு உணவு வழங்கும் உபரி உற்பத்தி ஆகியனவற்றிற்கு கார்டன் சைல்டு முக்கியத்துவம் கொடுத்தார்.


என் கருத்துப்படி பரப்பளவோ,மக்கள் தொகையோ ஒரு நகரத்தின் அடையாளமல்ல; பொருள்சார் பண்பாட்டின் தரமும் தொழிலும் தான் அதன் அடையாளம்.  வேளாண்மை மேற் கொள்ளாதவரின் குடியிருப்பு என்பதால் மட்டுமே அதை நகரமாகக் கருதமுடியாது.  கைத்தொழில்கள் மீதான ஈடுபாடு,பண அடிப்படையிலான பரிவர்த்தனை என்பன நகர வாழ்வின் முக்கிய அடையாளங்கள். வடமொழியில் ‘நிகமம்’என்று நகரம் குறிப்பிடப்படுகிறது. கைவினைஞர்கள்,வணிகர்களின் இருப்பிடமாகவே நிகமம் சுட்டப்படுகிறது.தொல்லியல் ஆய்வில் கிடைக்கும் கருவிகள் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின்தொழிலைவெளிப்படுத்துவன. இவ்வகையில்ஊதுலைகள்,சாயத்தொட்டிகள் ஆகியன குறிப்பிடத்தக்கன. 

வணிகர்கள்,கைவினைஞர்கள் பயன்படுத்திய முத்திரைகள்,அணிகலன்கள்,சுடுமண் உருவங்கள்,நாணய வார்ப்புகள் என்பனவும் நகரங்களின் இருப்பை வெளிப்படுத்துவன.  மதிப்பு வாய்ந்த கற்கள்,சுடுமண் உருவங்கள்,மிளிரும் கனம் குறைந்த மட்பாண்டங்கள் என்பன நகரங்களில் வாழ்ந்த மேல்தட்டு வர்க்கங்களின் பயன்பாட்டுப் பொருட்கள்.

வடிகால்கள் காணப்படுவது மக்கள்தொகை நெருக்கத்தைக் குறிக்கும்.  வட்டவடிவக் கிணறு களின்றி ஆற்றங்கரைப் பகுதியில் காணப்படும் அழிந்த நகரங்களின் எச்சங்கள் தண்ணீர் அதிக அளவில் தேவைப்படும் அளவுக்கு மக்கள்தொகையைக் கொண்டிருந்தமையை உணர்த்துகின்றன.  கடலோர நகரங்களில் கப்பல்துறையும்,பண்டகசாலைகளும் காணப்படும்.  அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம் என்பன இதற்குச் சான்றாகும்.
சைல்டின் நோக்கில் நினைவுச் சின்னங்கள் என்பன உபரியின் பயன்பாடாகவும் பொது மக்களை விடமேலான ஆட்சியாளர்களின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் வெளிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. ஆனால் இத்தகைய கட்டடங்கள் நம் அகழ்வாய்வில் கிட்டவில்லை. தானியங்களைச் சேமித்து வைக்கும் பெரிய அளவிலான தானியக் குதிர்கள் காணப்படுவது கிராமப்புறங்களை அவை சார்ந்து நின்றமையை உணர்த்துகிறது.  இவ்வாறு நகரங்கள் குறித்த சான்றுகளைத் தொல்லியல் உணர்த்துகிறது.  நகரங்களின் வளர்ச்சியும் சிதைவும் வாணிபத்தின் வரலாற்றுடன் இணைந்தவை. நீண்ட தொலைவிலான தரைவழி வாணிபமும் கடல்வழி வாணிபமும் பாதிக்கப்படும்போது நகரங்கள் சிதைவடையத் தொடங்குகின்றன.

ஆட்சியாளர்கள், படை வீரர்கள், சமயவாதிகள், கல்வியாளர்கள் ஆகியோர் மட்டுமே நகரங்களில் குடியேறுவதில்லை; கைவினைஞர்கள், வணிகர்கள், ஊழியம் செய்வோர் ஆகியோரும் குடியேறுவார்கள். இவர்கள் அழிந்துபோனால் நகரவாசிகளுக்கு என்ன நிகழும்? தம் வாழ்க்கைத் தேவையை எவ்வாறு நிறைவு செய்வர்? என்பன ஆய்வுக்குரியன.  மேலும் பின்வரும் வினாக்களுக்கும் விடை தேட வேண்டும்.

1. நகரத்தின் சிதைவானது ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசின் குணாம்சத்தைப் பாதிக்குமா?

2. கைவினைஞர்களின் ஆற்றல் எவ்வாறு பயன் படுத்திக் கொள்ளப்பட்டது? அவர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்கப்பட்டது?

3. வேளாண்மை விரிவாக்கத்துக்கு நகரமயமாக் காமை எவ்வாறு துணைநின்றது?

4. பெருவணிகர்களும் சிறுவணிகர்களும் தம் பாரம்பரியத் தொழிலைப் புதிய சூழலில் எந்த அளவுக்கு மாற்றியமைத்தார்கள்?

5. வேளாண்மை மேற்கொள்ளாத, கோவில்கள், துறவியர்மடங்கள், கோட்டையுடன் கூடிய படை வீரர்களின் பாசறைகள் என்பன பண்டைய வரலாற்றில் கூறப்படும் இடங்களுடன் எவ் வகையில் வேறுபட்டிருந்தன?

6. எல்லாவற்றிற்கும் மேலாக நகரங்களின் சிதைவுக்கும் மத்திய காலத்தின் தொடக்கத்தில் உருவான நிலஉடைமை முறைக்கும் இடை யிலான இணைப்பு எது?

அகழ் ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் அந் நகரங்களின் அழிவுக்கான காரணங்களைக் கண்டறிய முயன்று இக்கேள்விகள் சிலவற்றுக்காவது விடை காணவேண்டும்.

மேற்கூறிய வினாக்களை எழுப்பிவிட்டு, இந்தி யாவின் வட பகுதியிலும் (தட்சசீலம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, மேற்கு உத்திரப்பிரதேசம்) மத்திய கங்கைச் சமவெளியிலும் (கிழக்கு உத்திரப் பிரதேசம், பீகாரின் வடபகுதி, பீகாரின் தென் பகுதி ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம்) மத்திய மற்றும் மேற்கு இந்தியாவிலும் (ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், குஜராத், மகாராஷ்டிரா)நகரங்கள் சிதைவுண்ட வரலாற்றை ஆராய்கிறார். கர்நாடகம்,ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மூன்று தென்மாநிலப் பகுதிகளில் நகரங்களின் தோற்றம்,சிதைவு குறித்தும் ஆராய்கிறார். இவற்றுள் தமிழ்நாடு குறித்த செய்திகளை மட்டும் இனிக் காண்போம்.

தமிழ்நாட்டில் அகழாய்வுப் பகுதிகள்,சமவெளிப் பகுதிகளில்-குறிப்பாக,கடற்கரை மண்டலங்களில் காணப்படுகின்றன. இவற்றுள் பல்லவர் காலத் தொடர்புடையவை மத்தியகாலத்தின் தொடக்கப் பகுதியைச் சார்ந்தவை. ஆனால் இவற்றின் நகரச் சார்பு தெளிவாக இல்லை. ரோமானிய வாணிபத்துடன் தொடர்புடைய துறைமுகங்களும் இடங்களும் காணப்படுகின்றன. என்றாலும் தட்சிணப் பகுதியைப் போன்று அதிக அளவில் இல்லை.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அகழாய்வில் கிடைத்த பொருட்கள்,பல்லவருக்கு முந்தைய காலம் தொடங்கி, பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சிக் காலம் வரை உள்ளவை.  கி.மு.முதல் நூற் றாண்டு தொடங்கி,கி.பி.மூன்றாவது நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பொருட்கள் இங்குக் கிடைத்துள்ளன. புத்த விகாரம் என்று கருதத்தக்க செங்கற் கட்டடமும், ரோமானியத் தொடர்பை வெளிப்படுத்தும் ஓட்டுச் சில்லுகளும், கி.பி. 300 முதல் 800 வரையிலான காலத்தைய நாணய வார்ப்புகளும் கிடைத்துள்ளன. 

உஜ்ஜயினி குறியீட்டுடன் கூடிய வார்ப்பானது சாதவாகனர் செல்வாக்கை உணர்த்துகிறது.  கண்ணாடியாலான வளையல்களும் காதணிகளும் கிடைத்துள்ளன. இருந்தாலும், இக்கண்ணாடிப் பொருட்களின் காலம் கணிக்கப்படவில்லை. யுவான் சுவாங் என்ற சீனப் பயணி நூற்றுக்கணக்கான புத்தப் பள்ளிகளும், பத்தாயிரம் குருக்களும், எண்பது பிராமணியக் கோவில்களும் காஞ்சியில் இருந்ததாக எழுதியுள்ளார். அவரது கருத்துப்படி காஞ்சிபுரம் நான்கு மைல் சுற்றளவு கொண்டதாயிருந்தது.

காஞ்சியிலுள்ள பல்லவமேடு கி.பி.ஆறிலிருந்து ஒன்பது வரையிலான காலத்தைய எச்சங்களைக் கொண்டுள்ளது.  இங்குக் கிடைத்துள்ள பல்வேறு பொருட்கள் வலுவான ஒரு நகரமைப்பை வெளிப்படுத்தவில்லை.

பாலாறு முகத்துவாரத்தில் உள்ள வசவசமுத்திரம் ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்ததைக் காட்டும் தடயங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில ரோமானியத் தொடர்பை வெளிப்படுத்துவன.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள குன்னத் தூரில், செங்கற்களாலும் கல்லாலும் கட்டப்பட்ட கட்டடமும் சுடுமண் குழியாலான வடிகாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மட்பாண்டம் சுடும் சூளையும், சுடுமண் உருவங்களும், கண்ணாடி வளையல்களும், செப்பு நாணயங்களின் துண்டு களும் கிடைத்துள்ளன. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நகரமாக அது இருந்துள்ளதை இவை உணர்த்துகின்றன.

தென் ஆற்காடு மாவட்டத்தில் காரைக்காடு, நத்தமேடு, புதுச்சேரி அருகிலுள்ள அரிக்கமேடு, திருச்சி மாவட்டத்திலுள்ள அழகறை உறையூர், நாகை மாவட்டத்தின் காவிரிப்பூம்பட்டினம், திருக் காம்பியூர்,தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை,தருமபுரி மாவட்டத்திலுள்ள அதியமான் கோட்டை, கோவை மாவட்டத்திலுள்ள பேரூர்,பொலுவன் பட்டி ஆகிய ஊர்களில் நிகழ்த்திய அகழாய்வு களில் கிடைத்த சான்றுகளையும் சர்மா ஆராய்ந் துள்ளார். அவரது கருத்துப்படி தமிழக நகர்களில் பெரும்பாலான கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் அழிந்துபட்டன.

நகரமயமாக்காமையின் விளைவுகள்

நகரங்களின் சிதைவு எத்தகைய சமூக முக்கியத் துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள, நகர மக்கள்தொகையின் இயல்பு குறித்தும் பண்டைய சமூகப் பொருளியல் அமைப்பில் அது வகித்த இடம் குறித்தும் அறிந்துகொள்வதவசியம்.

கோட்டையமைப்புக்குள் இருந்த நகரங்களுக்குள் இருபது வகைப்பட்ட கைவினைஞர்கள் வாழ்ந்ததாக,கௌடில்யர் தமது அர்த்தசாஸ் திரத்தில் எழுதியுள்ளார். இதன் பின் வாணிபத்தின் வகைகள் துரிதமாக அதிகரித்தன. நகர மக்களின் தொழில்கள் குறித்த வருணனைகள் கி.பி.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சில சமஸ்கிருத நூல்களில் இடம்பெற்றுள்ளன.

கி.பி.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரைக் காஞ்சி என்ற பழந்தமிழ் இலக்கியமும் இதுபோன்ற வருணனைகளைக் கொண்டுள்ளது.  ராஜகிரகா, கபிலவஸ்து ஆகிய நகரங்களில் நூறு வகையான தொழில்கள் இருந்ததாக சமஸ்கிருத நூல்கள் குறிப்பிடுகின்றன.

நால்வகைப் படைவீரர்கள், படை அதிகாரிகள், பிராமணர்கள், வணிகர்கள், தெருவில் பொருள் களைக் கூவி விற்பவர்கள்,பரத்தையர்கள்,பரத்தைத் தரகர் ஆகியோர் நகரங்களில் வாழ்ந்தனர்.  இவர் களில் பெரும்பாலோர் உற்பத்தியிலோ விநியோகத் திலோ நேரடியாகப் பங்கு வகிக்காதோர்; இவர் களை ஒட்டுண்ணிகள் எனலாம்.

இவர்களைத் தவிர பொற்கொல்லர், கொல்லர், கன்னார் (பிற உலோகங்களைக் கொண்டு தொழில் புரிவோர்) சங்குவேலை செய்வோர், கல்வேலை செய்வோர், ஆயுதம் செய்வோர், ஆடைத்தொழில் புரிவோர், சாயம் முக்குவோர், போக்குவரத்துப் பணியாளர்கள், குயவர், கட்டட வேலைக்காரர்கள்,பல்வேறு வகையான உணவு தயாரிப்போர் என் போர் நகரங்களில் வாழ்ந்தனர்.

உற்பத்தியையும்,தொழில்நுட்பத்தையும் பரி வர்த்தனை செய்யும் இடமாக நகரங்கள் விளங்கின. அங்கு வாழ்ந்தோர் தானிய வியாபாரிகளிடம் இருந்து தமக்குத் தேவையான உணவுத் தானியங்களைப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டனர். உடல் உழைப்புக்கான ஊதியம், கைவினைப் பொருட்களின் விற்பனை,ஊதியம்,கொடை என்பனவற்றின் வாயிலாக நகரவாசிகள் பணத்தைப் பெற்றனர்.


நகரங்களிலிருந்து இருபது வகையான வழிகளில் அரசு,வருவாய் பெற்றதாக அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது. பரத்தமையும் சூதாட்டமும் கூட வருவாய் ஈட்டும் ஆதாரமாக அரசுக்கு அமைந்தன.  அர்த்த சாஸ்திரம் குறிப்பிடும் வருவாய் இனங்கள் அனைத்தும் நகரம் சார்ந்தவை.  அத்துடன் நில வுடைமைச் சமூகத்திற்கு முந்தைய காலத்தவை.

நிலவுடைமைச் சமூக அமைப்பிற்கு முந்தைய இந்தியாவில்,பெரிய அளவிலான படைகளுக்குரிய பொருட்களை உற்பத்தி செய்தும்,வரி செலுத்தியும் கைவினைஞர்கள் அரசுக்கு உதவினர்.  கோட்டை யுடன் கூடிய நகரங்களுக்குள், யானை, குதிரை, தேர், காலாள் என நால்வகைப் படைகள் இருந்தன.

நகரம் சிதையும்போது பல அடிப்படை மாறு தல்கள் நிகழ்ந்தன. நிலைப்படைகளின் எண்ணிக்கை குறைந்தது.  கிராமங்களை மான்யமாகப் பெற்ற பிரபுக்கள் தத்தம் பகுதிகளில் படைகளைப் பரா மரித்துக் கொண்டு தேவைப்படும்போது மன்னருக்கு அனுப்பிவைத்தனர்.  பெரிய வணிகர்கள் வாய்ப்பு நேரும்போது நிலக்கிழாராயினர். கைத் தொழில்கள் கிராமப்புறங்களில் பரவலாயின.

நெசவாளர்கள்,உயர்நிலையில் இருந்ததை கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் குறிப் பிடுகின்றன.  மத்தியகாலத் தொடக்கத்தைச் சார்ந்த ஆதாரங்கள் நெசவாளர்களையும், சாயம் காய்ச்சு வோர், தையற்காரர், முடிதிருத்துவோர், பித்தளை வேலை செய்வோர், காலணி செய்வோர்,மீன்பிடிப்போர்,கொல்லர்,பொற்கொல்லர்ஆகியோரையும் தீண்டத்தகாதவர்களாகக் குறிப்பிடுகின்றன.

கைவினைஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஊதியத்திற்குப் பதில் மானியமாக நிலங்கள் வழங்கப் பட்டன.  அவற்றில் உழைத்து ஈட்டும் தானியமே ஊதியமானது.  சுயேச்சையாகத் தொழில் புரிந்து வந்தோர் விளைநிலங்களுடன் பிணைக்கப்பட்டனர். உணவு,உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவை களைக் கிராமம் கவனித்துக் கொண்டது. இதனால் சுருங்கிய பொருளாதார அமைப்பிற்குள் அவர்கள் தள்ளப்பட்டனர்.

தொல்லியல் ஆய்வாளர்கள் சிலர் பண்டைய நகரங்களின் அழிவைக் குறிப்பிட்டுள்ளனர்.  அரசியல் காரணங்கள் நகரங்களை வீழ்ச்சியடையச் செய்தன என்றும் கூறலாம்.  அரசுகள் வீழும்போது நகரங் களும் வீழ்ந்தன.  சாதவாகனர் வீழ்ச்சிக்குப் பின் அவர்களது பிரதிஸ்தான நகரம் பெருமையிழந்தது.  குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் வைசாலி நகரம் அழிந்தது.  இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன்பே- அதாவது, மூன்றாவது, ஆறாவது நூற்றாண்டுகளில் பல நகரங்கள் அழிந்துபோயின.

படையெடுப்புகள் மட்டுமின்றித் தொலைத்தூர வாணிபத்தின் அழிவும் நகரங்களின் சிதைவுக்குக் காரணமானது.

கிரேக்க ரோமானிய நகரங்களில் வாழ்ந்த குடி மக்களுக்கு உரிமையான கிராமப்புற நிலங்களை அடிமைகள் பயிரிட்டு வந்தனர். இந்திய நகர்களில் வாழ்ந்தோரில் பலர் நிலவுடைமையாளர்கள் அல்லர். பெரும்பாலோர் வேளாண்மையை மேற்கொள்ளா தவர்களாகவேயிருந்தனர்.  வணிகர்கள் வாணிப ஆதாயத்தாலும், கைவினைஞர்கள் உடல் உழைப் பால் ஈட்டிய ஊதியத்தாலும், குடியானவர்கள், வணிகர்கள், கைவினைஞர்கள் வழங்கிய கொடைகள்,மற்றும் வரிகளால் ஆட்சியதிகாரிகளும்,மதத் தலைவர்கள், காணிக்கைகளாலும் வாழ்ந்தனர். இவ்வகையில் நகரமானது நாட்டை ஆண்டது.

கலியுகத்தின் வருகையானது.  கி.மு.300 கி.மு. நான்காம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தது.  நகரங் களின் சிதைவுக்கு இது ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. கலியுகத்தில் குடியானவர்களிடம் இருந்து பெறும் வரியின் அளவு குறைந்தது. இதனால் நகரங்களில் வாழ்ந்த பூசாரிகள், படைவீரர்கள், அதிகாரிகள் ஆகியோரின் வாங்கும் சக்தி குறைந்தது.  வணிகர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்ச் சந்தையை இழந்தனர்.  இச்சமூகச் சீர்குலைவானது, நகரங் களில் இருந்த கைவினைஞர்களின் நடவடிக்கை களைப் பாதித்தது. (கலியுகம் குறித்த விரிவான விளக்கம் உங்கள் நூலகம் -செப்டம்பர்,2011இதழில் வெளியான ‘ஆர்.எஸ்.சர்மாவின் பார்வையில் கலியுகம்’ என்ற கட்டுரையில் இடம்பெற்றுள்ளது).

மன்னர்கள் வைத்திருந்த நிலைப்படையானது அரசின் வருவாயில் பெரும் பகுதியை விழுங்கிக் கொண்டிருந்தது.  இதைத் தவிர்க்கப் பல கிராமங் களை பிராமணர்களுக்கும் கோவில்கள் மற்றும் மடங்களுக்கும் கொடையாக மன்னர்கள் வழங்கினர்.

ஆண்டுதோறும் மன்னருக்குக் கப்பம் கட்டு வதும்,படை வீரர்களைப் பராமரித்துப் படை யெடுப்பின் போது மன்னருக்கு உதவியாக அனுப்பு வதும் கிராமங்களைக் கொடையாகப் பெற்றவர் களின் கடமையானது.  இப்புதிய முறையானது நகரங்கள் மற்றும் வாணிபத்தின் சிதைவுக்குக் காரணமானதுடன் நிலவுடைமை அரசியலுக்கு இட்டுச் சென்றது.

இதன் தொடர்ச்சியாக பிராமணர்களும் கைவினைஞர்களும் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.  கிராமப்புறங்களுக்குச் சென்ற கைவினைஞர்களுக்குப் பணமாக அன்றி விளைபொருள்களே (பெரும்பாலும் தானியம்) ஊதியமாக வழங்கப்பட்டது. அவர்களால் சுயேச்சையாகச் செயல்பட முடியவில்லை. கோவில்கள்,மடாலயங்கள் போன்ற அமைப்புகளின் துணையோடும்,பெருநிலக்கிழார் களின் ஆதரவோடும் அவர்கள் வாழநேர்ந்தது.

இப்புதியமுறையானது நுகர்வோருக்கும் உற்பத்தி செய்வோருக்குமிடையே நேரடியான தொடர்பை ஏற்படுத்தியது. குடியானவர்களுக்கும் அரசுக்கும் இடையே விளைநிலங்களை மைய மாகக் கொண்ட இடைத்தரகர்கள் உருவாயினர்.  நிலவுடைமையமைப்புக்கு முந்தைய காலத்தில் இருந்ததுபோல் குடியானவர்களால் அரசுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அரசின் நிர்வாக அமைப்பினரும்,சித்தாந்த அடிப் படையிலான அதன் ஆதரவாளர்களும் பெரும் நிலவுடைமையாளர்களாக மாறினர். பொருளாகவோ, உழைப்பாகவோ குடியானவர்களும்,கைவினைஞர்களும் செலுத்தும் குத்தகையின் துணையுடன் அவர்கள் வாழலாயினர். முன்போல் வரியைச் சார்ந்து அவர்கள் வாழவில்லை.

வரிசெலுத்திவந்த பகுதிகள் குத்தகை செலுத்தும் பகுதிகளாக மாறியமைக்கும்,நகரப் பகுதிகள் குறைந்தமைக்கும் இடையே நெருக்கமான தொடர்பு உண்டு.

வேளாண்மை சாராத நிலப்பகுதிகள் சந்தைகளாக மாறத்தொடங்கின. நுகர்வின் மையங்களாக விளங்கிய இச்சந்தைகள் பண்டமாற்று மையங்களாக மாறும் ஆற்றல் பெற்றன.  வேறுவகையில் சொல்லப்போனால்,வாணிப மற்றும் கைவினைஞர் வர்க்கங்களை வலுவுள்ளதாக மாற்றும் நகரின் தகுதி இவற்றுக்கிருந்தது.

என்றாலும் இம்மாறுதல் நிகழப் பல நூற்றாண்டுகளாயின. பதினொன்றாம் நூற்றாண்டில் நாட்டின் சில பகுதிகளில் தொடங்கிய நகர்மயமாதல் பதினான்காம் நூற்றாண்டில்தான் குறிப்பிட்டுச் சொல்லு மளவுக்கு வளர்ச்சி பெற்றது.

சர்மாவின் இந்நூலில் இடம்பெற்றுள்ள அவரது ஆய்வுமுடிவுகள் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று வரலாற்றறிஞர் ஆர்.செம்பகலட்சுமி கருதுகிறார். தமது Trade, Ideology and Urbanization(வாணிபம்- சித்தாந்தம்-நகரமாதல், தென் இந்தியா கி.மு.300 முதல் கி.பி.300 வரை) என்ற நூலில் (1999: 15-19) இது தொடர்பாக அவர் முன்வைத்துள்ள கருத்துக் களின் சுருக்கம் வருமாறு:

1) இந்திய நகரங்களின் வீழ்ச்சியை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுமைப் படுத்திப்  பார்க்க முடியாது.

2) நகரங்களின் வீழ்ச்சி குறித்தோ, கைவினை ஞர்கள், வணிகர்களின் வீழ்ச்சி அல்லது இடப் பெயர்ச்சி குறித்தோ பண்டைத் தமிழ் இலக்கியங்களும் தொல்லியல் சான்றுகளும் குறிப்பிடவில்லை.

3) இதற்கு மாறாக, சங்க இலக்கியத்திற்குப் பிந்திய சிலப்பதிகாரமும், மணிமேகலையும், வாணிப நடவடிக்கைகள்பற்றி- குறிப்பாக, காவிரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம், வஞ்சி, மதுரை ஆகிய நகரங்கள் குறித்துக் குறிப்பிடுகின்றன.

4) தமிழகத்தைப் பொருத்தமட்டில் நகரங்களின் சிதைவும் அதன் விளைவாக நிகழ்ந்த நகர மயமாக்காமையும் குறித்த கோட்பாடு பல சிக்கல்களை உருவாக்கும். அவர் குறிப்பிடும், குன்னத்தூர், நத்தமேடு, அழகறை, திருக்காம் புலியூர் ஆகிய ஊர்களில் கிட்டியுள்ள தொல்லியல் சான்றுகள் அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், கொற்கை போன்றவற்றுடன் ஒத்திருப்பதன் அடிப்படையில் அப்பகுதிகளை நகரம் என்று வகைப்படுத்திவிடமுடியாது.

கிராமிய,நகரக் குடியிருப்புகளில் ஒரே சீரொழுங்கும் தனித்துவமும் இல்லை. எனவே, பொதுவான மாறுதல்களுக்கு அவை ஆட்பட்டன.  இதைத் தொல்லியல் சான்றுகளும் உறுதி செய் கின்றன.  நினைவுச் சின்னங்கள், அகழாய்வு நடந் துள்ள சில பகுதிகளில் மட்டுமே கிட்டியுள்ளன. உள்நாட்டுப் பகுதிகளைவிட கடற்கரைப் பகுதி யிலேயே அவை கிடைத்துள்ளன.  வருண வேறு பாட்டுடன் கூடிய பிராமணீய சமூக அமைப்பு தமிழ்நாட்டின் தொடக்ககால வரலாற்றுச் சமூகத்தில் இருக்கவில்லை. எனவே ‘கலியுகம்’குறித்த சர்மாவின் கருத்துக்கள் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது.  மத்தியகாலத் தமிழ்நாட்டில் (கி.பி. ஏழு முதல் ஒன்பது வரை)வழங்கப்பட்ட நிலக் கொடைகள் பிராமணியத்தை நிலைநிறுத்தவும், ஆட்சியில் உள்ளோரை முதன்மைப்படுத்தவுமே வழங்கப்பட்டன.

இக்காலத்திற்கு முன்னர் நடைமுறையில் இருந்த மேய்ச்சல்நிலக் குடியிருப்புகளையும் வேளாண் குடியிருப்புகளையும்,புதிய வேளாண் அமைப்பிற்குள் கொண்டு வரவும், பிராமணிய சித்தாந்தத்தைப் பரப்பவுமே பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணர் களுக்கு நிலக்கொடைகள் வழங்கப்பட்டன.

வருணப் பாகுபாட்டுடன் கூடிய பிராமணியம் தமிழ்நாட்டில் வேர்விடவில்லை.  பிராமணர்கள்,கைவினைஞர்கள்,நகரங்களில் இருந்து கிராமப் புறங்களுக்குச் சென்றமைக்குச் சான்றுகள் இல்லை.

வரலாற்றறிஞர் செம்பகலட்சுமியின் இக்கருத்துக்கள், நகரமயமாக்காமை, நகரங்களின் சிதைவு குறித்த சர்மாவின் கருத்துக்களை அப்படியே தமிழக வரலாற்றில் பொருத்திப் பார்க்க முடியாது என்பதை வெளிப்படுத்துகின்றன.

மற்றொரு பக்கம் சோழர்காலச் சமூகம் குறித்த தம் ஆய்வில்,வணிகர்கள் தம் உபரியை விளை நிலங்கள் வாங்குவதில் செலவிட்டதாக ஆய்வாளர் மே.து.இராசுகுமார் குறிப்பிடுகிறார். (அசையாச் சொத்தான நிலத்தில் செய்து வந்த முதலீடு ஒரு கட்டத்தில் வாணிப வளர்ச்சிக்குத் தடையாகியுள்ளது.) கைவினைஞர்கள் கிராமப்புறங்களிலேயே தங்கிவிட, தொழில்நுட்பம் ஒரு கட்டத்தில் தேக்க நிலைமையை அடைந்துவிட்டது என்பதும் அவரது கருத்தாகும்.

தொல்லியல் அறிஞர் செ.இராசு பதிப்பித்துள்ள ‘செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள்’ (2009) என்ற நூலில் காணப்படும் கல்வெட்டுச் செய்திகள்,கோவில்களுக்குத் தானமாக நிலங்களையும்,கால்நடைகளையும் கைவினைஞர்களான நெசவாளர்கள் வழங்கியதை வெளிப்படுத்துகின்றன. கைவினைஞர்களின் உபரியானது,உற்பத்தியில் அல்லது வாணிபத்தில் முதலீடு செய்யப்படாமல் கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட தானது ஒருவகையான பொருளியல் தேக்க நிலை ஏற்படக் காரணமாய் இருந்துள்ளது என்று கருத இடமுள்ளது. ஆர்.எஸ்.சர்மாவின் கருத்துக்களுடன் இச்செய்திகளையும் இணைத்துப் பார்க்க முடியும்.

ஆர்.எஸ்.சர்மாவின் இந்நூல், இந்திய நகரங்களின் சிதைவுக்கான காரணத்தை வேறுபாடான கோணத்தில் ஆராய்ந்துள்ளது.  இவ்வகையில் இந்நூலைப் புறந்தள்ளிவிட முடியாது.

Pin It