பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரான தாக்குதல்கள் இந்தியாவில் அவ்வப்போது நிகழ்பவைதான். ஆனால் தற்போது நிலவி வரும் மதவாத.. அடிப்படை வாத.. பிற்போக்குவாத காலக்கட்டம் அவைகளோடு ஒப்பிட முடியாத அளவில் சென்றுக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் இவற்றை முன் செய்திகளாக வழிமொழிகின்றன. சமூக சிந்தனையாளர்கள்.. நுண்ணறிவாளர்கள்.. அறவியலாளர்கள் இதன் ஆபத்தை கண்டு பரபரக்கின்றனர். இதன் ஒரு வெளிப்பாடுதான் சாகித்ய அகாடமி விருதாளர்கள் தங்களது விருதுகளை திருப்பியளித்து வருவது. ஆனால் பதிலளிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இதனை தங்களின் பார்வைக்கே எடுத்துக் கொள்வதில்லை. அல்லது ஓரப்பார்வைக்குள்ளும் கள்ள மௌனத்துக்குள்ளும் உற்சாகத்தை கண்டெடுத்திருக்கலாம்.
இந்து மதத்தின் உருவ வழிபாடு குறித்தும் மூட நம்பிக்கைகள் குறித்தும் வெளிப்படையாக விமர்சித்து வந்த 77 வயதான எம்.எம். கல்புர்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். சாதியத்தின் பாகுபாடுகளையும் மத நம்பிக்கை என்ற பெயரால் நடக்கும் அநீதிகளையும் எதிர்த்ததும் மூட நம்பிக்கைக்கு எதிராக செயல்பாடுகளை வகுத்துக் கொண்டதுதான் இவர் செய்த தவறு என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதே தீர்ப்பு இதே காரணத்திற்காக பிப்ரவரி மாதம், மும்பை அருகே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த பன்ஸாரேக்கு வழங்கப்பட்டது. 2013ல் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர்க்கும் அதே தண்டனைதான்.
இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடாகவும் உயரிய பராம்பரியமும் எண்ணங்களும் கொண்ட நாடாகவும் உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. மிக பெரிய ஜனநாயக நாடு எந்த ஒரு மதத்தின் சார்பாகவும் இருக்கக் கூடாது என்பதும் தார்மீக நியாயமே. ஆனால் உலக நாடுகளின் இந்த கருத்தியலுக்குள் ஒளிந்துக் கொண்டு மத சார்பு இந்தியா மெல்ல உருவாகி வருவதுதான் நிதர்சனம். வங்கதேசத்தில் மதசார்பின்மையை வலியுறுத்தி வந்த வலைப்பூ எழுத்தாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டகக் குரல்கள் எழும்பின. இந்தியாவும் நடந்த சம்பவத்தைக் கண்டித்திருந்தது. அங்கு நடந்த பொது தேர்தலின் போது அந்நாட்டின் ஜனநாயகப் போக்கு குறித்து கவலைத் தெரிவித்திருந்தது. ஆனால் வங்க தேச சம்பவங்களுக்கும் நம் நாட்டில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் மரணங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. ஆனால் அதிகார மையம் ஆழ்ந்த மௌனத்தில் இருக்கிறது. இந்த மௌனம் சில புரிதல்களையும் அதையொட்டி சில அபாயங்களையும் உணர்த்துகிறது.
வங்கதேசத்தை குறித்த சம்பிரதாயக் கவலை கூட மத சார்பற்ற தேசம் என்ற வெற்று கருத்தியலுக்குள் சமார்த்தியமாக தன்னை ஒளித்துக் கொண்டு உதிர்த்தவையாகதான் தோன்றுகிறது. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோர் எதற்காகப் படுகொலை செய்யப்பட்டார்கள்? மாற்றுக் குரல்களுக்கு இனி இங்கே இடமில்லை என்ற தெளிவான எச்சரிக்கையை முன் வைப்பதற்காகவே அந்தக் கொலைகள் நிகழ்த்தப்பட்டன. எம்.எஃப். ஹுசைன் அலைக்கழிக்கப்பட்ட போதும், ஏ.கே ராமானுஜத்தின் ‘முன்னூறு ராமாயணங்கள்’ கட்டுரை டில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அகற்றப்பட்டபோதும் நமக்கு உள்ளிருக்கும் ஆபத்தை எளிதாக எடுத்துக் கொண்டோம்.
வெண்டி டோனிகரின் இந்துாஸ் – அன் ஆல்டர்நேட்டிவ் ஹிஸ்டரி என்ற தனது புத்தகம் வெகுவாக சர்ச்சைக்குள்ளானது. மகாபாரதத்தை குறித்த அவரின் கருத்துகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் சார்ந்த முற்போக்கான விஷயங்கள் மகாபாரதத்தின் உண்மையான பிரதியில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சர்ச்சைகளால் இப்புத்தகத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து பென்குவின் இந்தியா நிறுவனம் இந்நுாலை விற்பனையிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. பதிப்பகத்தின் இப்போக்கை எழுத்தாளர் அருந்ததிராய் உட்பட பலர் வெகுவாக கண்டித்தனர். இது குறித்து வெண்டி டோனிகர் "எனது ஆய்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு பார்வையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளே அன்றி, இந்திய சுயஅடையாளத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்க வேண்டியதில்லை. அவற்றை ஆராய்ச்சியாகவே பார்க்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். அப்போது கூட நாம் நெருங்கி விட்ட அபாயத்தை கண்டுக் கொள்ளத் தவறி விட்டோம்.
முகலாய ஆப்கானிய ஆங்கிலேய அரசுகளால் கிட்டத்தட்ட 1250 ஆண்டுக்கால ஆட்சியின் போது அழிக்க முடியாத ஒரு அமைப்பை ஒரு ஆய்வு புத்தகம் அழித்து விடும் என்று நம்பினார்களா..? அல்லது வேறு எந்த எதிர்ப்புக் குரலுமே இருக்கக் கூடாது என்ற குரல்வளை நெறுக்குதலா..? ஒரே ஒரு பெண்மணி எழுதியுள்ள ஒரு நூல் ஒரு சம்பிரதாயத்தையே அழிக்கும் வல்லமை பெற்றதா என்ன..? ஆதி சங்கரர் சொன்ன ‘அத்வைதம்’ தவறு என்று மத்வர் ‘த்வைதம்’ கொண்டுவந்தார். இராமானுசர் ‘விஷிட்டாத்வைதம்’ கொண்டுவந்தார். இது ஒரு பரிணாம வளர்ச்சி.அவ்வளவே. இன்னும் சொல்ல போனால் இந்துமதம் என்பதே ஒன்று இல்லை என்பதே உண்மை. ஆதி காலத்தில் வேறு மதங்கள் இல்லாத போது ஒரே வழிமுறையாக இது இருந்ததால் இதற்கு ‘சனாதன தர்மம்’ என்றே பெயர் இருந்தது. இந்து மதம் என்பது ‘சிந்து’ நதியின் மறு பக்கம் இருந்த மக்களை குறிக்கப் பயன்பட்ட ‘இந்து’ என்ற தொடரே ஆகும். அது நாளடைவில் மற்ற மதங்கள் தோன்றியபின் ‘இந்துமதம்’ என்று அழைக்கப்பட்டது.
ஆனால் இவைகளெல்லாம் மேல் தட்டு மக்களின் சர்ச்சை என்று ஒதுங்கி விடும் மனப்போக்கு தான் நம்மிடையே நிலவுகிறது. சேனலை.. செய்தித்தாளின் பக்கங்களையோ திருப்பி விட்டோமெனில் பிரச்சனை நம்மிடமிருந்து விலகி விடுகிறது. அறிவுஜீவிகளில் தளத்தில் இவைகள் விவாதங்குள்ளாகினாலும் இவற்றைக் குறித்த பரப்புரையோ.. விழிப்புணர்வோ போதிய அளவு இல்லாத நிலையில் நம் சமுதாயம் இவற்றை எந்த குற்ற உணர்வுமின்றி கடந்து விடுகின்றது.
தமிழகத்திலும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. மாதொருபாகன் என்ற நாவல். 2010-ல் வெளியானது. குழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதியரின் வேதனையை அபாரமான நுண்ணுணர்வோடும் மென்மையாகவும் சொல்லும் நாவல். நாவலில் வரும் தம்பதியர் மகிழ்ச்சியான மண வாழ்க்கை வாழ்பவர்கள். ஆனால், பிள்ளைப் பேறு இல்லாததால் குடும்பத்தாலும் சமூகத்தாலும் இவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எப்போதும் போலவே பெண் மீதுதான் அதிகம் குற்றம் சுமத்தப்படுகிறது. அவள்தான் தீர்வுகாண வேண்டியிருக்கிறது. அன்றைய மரபின்படி ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வை நாடும்படி அவளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. அது ஒழுக்கக் கேடு என அப்போது கருதப்படவில்லை என்று நாவலில் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு செயல், நாவலின் மூலம் அது இன்று அங்கீகாரம் பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தால் எதிர்ப்பு எழுகிறதா? இந்து மதம் அதை அனுமதிப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதால் எதிர்க்கப்படுகிறதா? குறிப்பிட்ட சமூகத்தின் சாதி ரீதியான தாக்குதலா..? அல்லது பெண்களின் கற்பு மீதான தொன்மப் பார்வையா..? சொல்லப்போனால் இவை எல்லாமுமே கைக்கோர்த்துக் கொண்டு ஒருவர் நிழலில் ஒருவர் குளிர் காய்ந்துக் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். தனது நாவலால் ஆத்திரமடைந்த இந்து அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்கள் வந்ததாக, எழுத்தாளர் பெருமாள் முருகன், கடந்த டிசம்பர் மாதம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தின. அமைப்புகள் கேட்டதையே உள்ளுர் நிர்வாகம் கேட்டது. அரசும் கேட்டது. தனி மனிதனால் வேறென்ன செய்து விட முடியும். தனது ஒட்டு மொத்த இலக்கிய வாழ்க்கையே விட்டு விலகுவதாக அறிவித்து விட்டு புலம் பெயர்ந்து சென்று விட்டார். அவரின் இந்த முடிவு சரி.. தவறு.. என ஆயிரம் கருத்துகள் நிலவினாலும் அவர் சமுதாயத்தில் அன்று தனித்துதான் விடப்பட்டிருந்தார். அவரின் தொழில் சார்ந்த ஆசிரியர்களோ.. எழுத்துத் துறைச் சார்ந்த அன்பர்களோ.. அவருக்கு துணை நிற்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமான இயக்கம் சார்ந்து எழுந்தக் குரல்களும் அங்கீகாரமற்றுப் போனதால் வலுவிழந்துப் போயின. எத்தனை துாரம் மனவலிமை உண்டோ அத்தனை துாரம் தாங்கிக் கொண்டு பின்னகர்ந்து விட்டதன் விளைவே அவரின் அந்த முடிவு என்றுதான் தோன்றுகிறது
கலையோ.. இலக்கியமோ.. வரலாறுகள் அழிக்கப்பட்டு வேறு விதமாக கட்டமைக்கப்பட்டு அல்லது தமக்கு வேண்டிய விதத்தில் கட்டமைக்கப்பட சில அமைப்புகள் இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றன. அதிகாரமும் கைக்கோர்த்துக் கொண்டதில் செயலுாக்கமும் செயலாக்கமும் ஒருங்கே இணைய முடிகிறது. இது வெகு ஆபத்தானக் கூட்டணி என்ற விழிப்புணர்வு மிக பெரிய ஜனநாயக நாட்டின் தனி நபர்களுக்கு இன்னும் நேரவில்லை என்பது கூட கசப்பான ஆனால் எம்.எம்.கல்புர்கியின் கொலைக்குப் பின் தேசம் திடுக்கிட்டு விழித்துக்கொண்டது. இந்தியா என்ற மாபெரும் தேசத்தின் கட்டுமானத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் மாற்றம் என உணர்ந்த எழுத்தாளர்கள் ஓங்கி குரலெழுப்ப விழைந்தார்கள். இதனொரு விழைவாகதான் சாகித்ய அகாதமி விருதாளர்கள் தமது விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் முடிவை மேற்கொண்டார்கள். ஆனால் நிதர்சனத்தில் இத்தகைய குரல்கள் என்ன செய்து விட முடியும். மாற்றுக் குரல்களின் ரீங்காரத்தைக் கூட அதிகார மையம் விரும்புவதில்லை என்பதை அதன் நடவடிக்கைகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற குரல்கள் எல்லா இடங்களிலும் ஒழித்துக் கட்டப்பட்டுக் கொண்டே வருகிறது.
தாலி பற்றிய விவாதம் ஒன்றினை ஒரு தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் மத அடிப்படைவாதிகள் அதனை நடக்க விடாமல் செய்ய அந்த ஊடகவியலாளர்களை தாக்கி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர், அவ்வமைப்புகளின் தலைவர்கள் வன்முறையை நியாயப்படுத்துவது போன்ற அறிக்கைகள் வாயிலாக அச்செயல்களைத் தூண்டிக் கொண்டிருந்தனர். தாலி அணிதல் குறித்த கருத்துகளை கூட விவாதிக்க முடியாத சூழலுக்கு நாடு சென்றுக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடு. இது அச்சுறுத்திப் பணிய வைக்கும் பாசிச அணுகுமுறையாகும். இது ஒரு தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட அச்சுறுத்தல் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது; ஒட்டுமொத்த கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட போர்! கருத்துச் சுதந்திரத்துக்கான முதல் அச்சுறுத்தல் நம்முடைய அரசியல் சட்டப் புத்தகத்தில் இன்னும் நீக்கப்படாமல் இருக்கும் காலனியாதிக்கக் காலத்துப் பழைய சட்டங்கள்தான். வென்டி டோனிகரின் புத்தகத்திற்கு இந்திய பீனல் கோடின் குறிப்பிட்ட 6 பிரிவுகளை சுட்டிக்காட்டிதான் வாதாடினார் தீனநாத் பாத்ரா.
அந்தச் சட்டப் பிரிவுகள்: 153 (கலவரத்தை ஏற்படுத்து வதற்காக வேண்டுமென்றே சீண்டுவது), 153ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகிய காரணங்களுக்காக இரு வெவ்வேறு குழுக்களிடையே விரோதத்தை வளர்ப்பது, ஒற்றுமையைப் பராமரிப்பதற்கு ஊறு செய்வது), 295 (எந்த மதத்தையும் இழிவுபடுத்த வழிபாட்டிடத்தைச் சேதப் படுத்துவது அல்லது அசுத்தப்படுத்துவது), 295ஏ (வேண்டு மென்றே, தீய நோக்கத்துடன் ஒரு வகுப்பாரின் மத நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் அவமதிக்க நினைப்பது), 298 (எந்த ஒருவரின் மத உணர்வையும் வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கில் பேசுவது), 505 (பொதுவாக விஷமத்தைத் தூண்டும் வகையில் பேசுவது அல்லது எழுதுவது) ஆகியவை. பொதுவாக ஒரு கருத்தோ..கலைப் படைப்போ.. செயலோ எதுவானாலும் தடை விதிக்கப்பட்ட பிறகு வழக்கு மேல் விசாரணைக்கு வந்து வாத பிரதிவாதங்கள் நடந்து தடை விலக்கப்பட அல்லது இறுதி தீர்ப்பு வர பல ஆண்டுகள் ஆகின்றன. இவைகளும் கருத்துரிமைக்கு எதிராக செயல்படுவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
ஓவியர் எம்.எஃப் ஹுசைனின் ஓவியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு கூட அதற்கு ஒரு உதாரணம்தான். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒரு சேர உச்சநீதி மன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று ஹுசைனின் வழக்கறிஞர்கள் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாலும் வயதாலும் விரக்தியாலும் அனைத்தையும் விட்டு விலகி சென்று விட்டார் ஹுசைன். எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் செயல்பட்டாலும் காவல் துறையினரின் செயல்பாடுகள் அதற்கு எதிராகவே அமைந்து விடுகின்றன. மராட்டிய மன்னர் சிவாஜியைப் பற்றி ஜேம்ஸ் லெய்ன் எழுதிய அறிவார்த்தமான புத்தகத்தின் மீதான தடையை உயர் நீதிமன்றம் விலக்கினாலும்கூட அதை விற்பனைக்கு விடவே பதிப்பாளர்கள் தயங்குகிறார்கள். காவல்துறை இதிலெல்லாம் தலையிடுவதே இல்லை என்ற போக்கில் ஒதுங்கியே நிற்கிறது. 1988-ல் உத்தராகண்டில் சாராய சாம்ராஜ்யம் குறித்துப் பத்திரிகைகளில் ஆதாரப்பூர்வமாக எழுதிய இளம் பத்திரிகையாளர் உமேஷ் தோபால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உயிருக்குப் பலமுறை அச்சுறுத்தல்கள் வந்தன. போலீஸார் அதை பொருட்படுத்தவேயில்லை. அவரது கொலைக்குப் பிறகு கூட கொலைகாரர்களைக் கைதுசெய்யவோ, வழக்கு போடவோ அக்கறை காட்டவேயில்லை. சமீப காலத்தில் அதே மாநிலத்தில் ஹேம் பாண்டே என்ற பத்திரிகையாளர் ‘போலி மோதலில்’ சுட்டுக்கொல்லப்பட்டார். பத்திரிகையாளர்களின் சுதந்திரச் செயல்பாட்டுக்குக் கடிவாளம் போடவே காவல் துறை விரும்புகிறது.
நம் மாநிலத்திலும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் உள்ள “அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம்“ என்ற மாணவர்கள் அமைப்பு சந்தித்த பிரச்சனைகளை நாம் அறிவோம். மீனவர் பிரச்சனையோ.. மீத்தேன் பிரச்சனையோ.. அணு உலைப் பிரச்சனையோ.. நீர் பங்கீடு பிரச்சனையோ முறையாக அதிகாரத்திலிருக்கும் மாநில அரசின் கடிதங்கள் மத்திய அரசிற்கு சென்று சேர்வதேயில்லை. ஆனால் வாசகர் வட்டம் குறித்து யாரோ ஒருவர் அனுப்பிய அநாமதேய – “மொட்டைக் கடிதத்திற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. அதுவும் பிரதிவாதம் குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல். மாணவர்கள் வீதிக்கு வரத் துவங்கினர். அறிவு ஜீவியான மாணவர்கள் அவர்கள். சாதிப் பாகுபாடுகள், மதவாதம், மூட நம்பிக்கைகள், பெண் அடிமைத்தனம் போன்றவற்றின் பின்னணிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முற்போக்கு கருத்துகளை பரப்பி சமத்துவமான–அறிவியல் பூர்வமான சமுதாயத்தை நிலைநாட்டுவதற்கு கல்லூரிக் காலத்திலேயே தயார் செய்து கொள்வது என்ற சீரிய நோக்கங்களோடு மாணவர்களைச் சிந்திக்கவும், அச்சமின்றி விவாதிக்கவும் களம் அமைத்துத் தரும் ஜனநாயக மையமாக இந்த வாசகர் வட்டம் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக மாணவர் அமைப்பினர் கூறும் கருத்துக்களை யாரும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
அதிகார ருசிக்கு பழக்கப்பட்டுப் போன அதிகார மையங்கள் இதற்குள் நுண்ணரசியல் செய்து வாக்கு வங்கிகளை கைப்பற்றுகிறது அல்லது இருத்தி வைத்துக் கொள்கிறது. சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நூலைத் தடை செய்யக் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. பெருமாள்முருகனுக்குப் பாதுகாப்பு தருவதற்குப் பதிலாக அவரை மிரட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வைத்தது அச்சு ஊடகமோ.. காட்சி ஊடகமோ.. தனது வருவாய்க்கு தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை பெரிதும் நம்பியுள்ளதால் அது தனது புரவலர்களின் நலனை பேண வேண்டிய பெருங்கட்டாயத்தில் இருக்கிறது. நிலச்சரிவோ.. பெருமழையோ.. சுனாமி போன்ற இயற்கை இடர்களோ ஏற்பட்ட பிறகு ஓடி ஓடி அதனை காசாக்க முனையும் ஊடகங்கள் அதன் பின்னணியை அலச மறுப்பதற்கு பின்னேயும் அந்த புரவலர்களின் அரசியல்தானே கோலோச்சுகிறது.
எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் கட்சி சார்ந்து விடும்போது நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு தரமான கலைஞன் ஒருசார்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறான். இன்னும் சொல்வதானால் தன் கருத்துக்களுக்கு கூட தங்களால் சுதந்திரம் அளித்துக் கொள்ள இயலாதவர்கள் இவர்கள். தார்மீக அடையாளங்களைத் துறந்த பிறகு அவர்களின் இலக்கியம் என்ன சாதித்து விடும்..? சத்தீஸ்கர் மாநிலத்தில் சத்தீஸ்கர் போர்ட் ஆஃப் செகண்டரி எஜுகேஷன் தயாரித்த புத்தகம் 10 ஆம் வகுப்புப் புத்தகத்தில் நாட்டில் வேலையில்லாதத் திண்டாட்டத்திற்கு பெண்கள் பணிக்குச் செல்வதுதான் காரணம் என்ற கூற்று பொருளாதாரப் பிரச்சனைகளும் அதன் சவால்களும் என்ற பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளதை எதிர்த்து கேள்வியிட முடியாததன் பின்னணியை இதிலிருந்து கூட எடுத்துக் ஆனால் எழுத்தாளர்களின் பணி என்பது படைப்பிற்குள் தான் கொண்டு வர எண்ணும் கலையமைதியை வாசகனுக்கு செலுத்தி விடுவதுதான். வாசிப்புக் கொண்ட சமுதாயம் மனவளம் மிக்க சமுதாயமாக மாறிப் போகிறது. ஔவையார் வரப்பின் உயரம் கோனின் உயரத்தை நிர்ணயிப்பத்தை கூறியிருப்பார். நுண்ணுணர்வு.. தார்மீகங்களின்பால் வயப்பட்ட ஒரு சமூகம் குற்றமற்ற ஒரு சமுதாயத்தை தானாகவே நிர்ணயித்து விடும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டை ஜிகாதிகள் கைப்பற்றிய அந்த குறிப்பிட்ட சூழலைக் கருவாகக் கொண்டு வெளியான திரைப்படம் டிம்பக்ட் (Timbuktu). எங்கும் எதிலும் அடக்குமுறை. பலவந்தம். இசைக்கவோ.. விளையாடவோ கூட தடை. டிம்பக்ட் என்ற அந்த ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் கால் பந்தாட்டத்தை மானசீகமாக விளையாடுவதாக அப்படத்தில் ஒரு காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. மிக உருக்கமான ஒரு காட்சியாக அது உருவகப்படுத்தப்பட்டாலும் சமுதாயமும் தனி மனிதனும் ஒருவருக்கொருவர் தொடர்பாகும் விதத்திற்காக காட்சி சித்திரமாகவும் அதனைக் சமீபத்தில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் மரித்துப் போனார்கள். அந்நிகழ்விற்கு நாடே துயரவயப்பட்டது. அவர் எளிமையானவர். அறிவார்ந்தவர்.. சிறந்த ஆராய்ச்சியாளர்.. மாணவர்களை தேடிக் கொண்டு சென்றவர். ஒளி விடும் இந்தியாவிற்கான கனவுக் கண்டவர். இவையெல்லாம் ஊடகம் நம் முன் அவரை கொண்டு நிறுத்திய பிம்பங்கள். அது உண்மையும் கூட. ஆனால் அவரையொத்த அறிவார்த்த தளத்தில் இயங்கியவர்களுக்கு கிடைக்காத ஊடக வெளிச்சம் இவருக்கு கிடைத்ததற்கு பின்னணியில் இருக்கும் மிக முக்கிய காரணம் இவர் ஆட்சியாளர்களின் போக்கிற்கு.. கருத்திற்கு ஒத்திசைவானவர் என்பதுதான். ஏகோபித்த அபிமானம் கூட நல்ல தலைமைக்கான ஏக்கத்தின் வெளிப்பாடுதான்.
ஆனால் மாறுப்பட்ட கருத்துக்களோ சிந்தனைகளோ கொண்ட பகுத்தறிவாளர்களை முற்போக்கு சிந்தனையாளர்களை இடதுசாரிகளை இந்துக்களின் விரோதிகளாக சித்திரிக்கிறார்கள். பெண்ணின் கூந்தலில் இயற்கையில் நன்மணம் இல்லை என்றதால் நக்கீரனை சிவன் நெற்றிக்கண்ணால் எரித்த கதைக் கூட இவ்வகைப்பட்டதுதான். இயற்கை சார்ந்த அறிவியல் சார்ந்த உண்மைகளைச் சொன்னவர்கள் எப்போதுமே தாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். டார்வின் கண்டுப்பிடிப்புகள் அவரது மரணத்திற்கு பிறகே முழுமையாக வெளி வந்தது. மதம்.. சாதி.. ஆணாதிக்கம்.. அடிப்படைவாதம் என்ற கட்டுக்களை தம் மீது சுற்றிக்கொண்டவர்கள். எதையும் கேள்வி கேட்காத. தட்டிக் கேட்காத தலைமுறைகளையே வளர்க்க துடிக்கின்றனர். தமிழ்நாட்டில் அசோகமித்ரன், பொன்னீலன் உள்ளிட்ட 16 சாகித்ய அகாடமி விருதாளர்கள் அடிப்படை விழுமியங்களுக்கும் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக அகாடமி எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்பதை வன்மையாகக் கண்டித்து அறிக்கை அளித்திருந்தார்கள்.
அமெரிக்காவின் சர்வதேச உறவு நிலைகளை நோபல் பரிசை தீர்மானிப்பதைப் போல சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய மாநில அரசுகள் தீர்மானிப்பதில்லை. இதை திருப்பியளிப்பதன் மூலம் ஒரு குறியீட்டுத்தனமான முக்கியத்துவத்தை வேண்டுமானால் பெறலாம். எனினும் சாகித்ய அகாடமி முற்போக்கு எழுத்தாளரின் மறைவையொட்டி வலியதான கருத்துகளை சொல்லியிருந்தால் எழுத்தாளர்கள் மிக பெரிய கௌரவமாகக் கருதும் அவ்விருதமைப்பிற்கு இன்னும் கௌரவம் ஏற்படும். வாழ்க்கை கொடுத்த அறிதல்களையும் புரிதல்களையும் தகவல்களாக கடத்தி விடுவது உலகம் முழுக்க எல்லா சமுதாயத்திலும் இயல்புதான். தகவல்களை நம்பிக்கைகள் சடங்குகள், ஆசாரங்கள், கதைகள் வடிவில் அளித்து புனைவு மூலம் அவற்றில் பல உணர்வுகளும் நெறிமுறைகளும் இணைந்திருக்கும். இக்கலவை தமிழில் தொன்மம் எனப்படுகிறது. இதையே ஆங்கிலத்தில் Myth என்பர்.
தொன்மங்கள் மொழி, இலக்கியம் இவற்றைக் கடந்து ஒரு சமூகத்தின் ஆண்-பெண் கற்பு, ஒழுக்கம் போன்ற பண்பாட்டுத் தளங்களின் மீது குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளைக் கட்டமைத்துள்ளன. இதில் சில சிறப்பான அம்சங்கள் இல்லாமலில்லை. ஆனால் ஆணிற்கு சாதகமான கதைகளைக் கொண்டிருப்பவை. பண்பாட்டோடு இணைக்கப்பட்டவை. மூடபழக்கவழக்கங்கள் இதனையொட்டியவை. அடிமைத்தனத்தை வளர்த்தெடுப்பவை. இத்தொன்மங்களை கட்டுடைக்கும்போது அதன் புனைவான உள்ளீடுகள் தெரிய வருவது நல்லதல்ல என்பது மத அடிப்படைவாதிகளின் கருத்து. மதத்தை துாக்கி பிடித்து, அடி வருடி பலன் பெறும் மத அமைப்புகள் இதனாலேயே எதிர்மறைக் கருத்துக்களை மூர்க்கமாக எதிர்க்கிறது. கருத்து சுதந்திரத்தை முற்றிலுமாக மறுப்பதன் பின்னணி லக்ஷ்மி, ரமணிச்சந்திரன், இந்துமதி உள்ளிட்ட பெண் படைப்பாளிகளின் பெண்கள் தோற்றப் பொலிவானர்கள். அன்பே உருவானவர்கள். ஹெப்சிபா ஏசுதாசின் புத்தம் வீடு, கிருத்திகாவின் வாசுவேச்வரம் போன்ற நாவலின் பெண்கள் குடும்ப அமைப்பை போற்றுபவர்களாக இருந்தனர். சூடாமணியின் படைப்புப் பெண்கள் உளவியல் அறிந்திருந்தாலும் பண்பாடு என்பதை இறுக பிடித்துக் கொண்டுதான் உளவியல் பேசினார்கள்.
ஆனால் தற்போதைய பெண் படைப்பாளிகள் உடல் மொழி, உடல் வேட்கை, சமத்துவம் என்று பேசத் துவங்கியுள்ளனர். உமா மகேஸ்வரியின் புதினங்கள் பெண் இருப்புக் குறித்துக் கேள்வி கேட்கின்றன இஸ்லாத்தில் பெண்களின் நிலைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன சல்மாவின் படைப்புகள். லீனா மணிமேகலை, குட்டி ரேவதியின் படைப்புகள் உடல் மொழிக்குள் வெகு இயல்பாக நுழைந்து பெண்ணியத்தை துழாவுகிறது. அதாவது இலக்கியம் தொன்மத்தை கட்டுடைக்கிறது. ஜெயகாந்தனிள் ஒருவீடு ஒருமனிதன் ஒரு உலகம் நாவலின் ஹென்றி கதாபாத்திரத்திரம் கூட தொன்மக் கூறுகளை மிக அழகாக கட்டுடைக்கிறது. பண்பாடு.. அரசியல், வரலாறு, ஜாதி, மதம், இனம் என்ற அடையாளங்கற்ற மனிதன் ஹென்றி. ஒரு கிராமத்தில் ஓநாய் ஒன்று தன் குட்டியுடன் வாழ்ந்து வந்தது. அந்த ஓநாய் குட்டிக்கு மனித மாமிசம் சாப்பிட ஆசை. மனித மாமிசம் கிடைக்காததால் பன்றியின் மாமிசத்தை மகவிடம் கொடுத்தது தாய். அதை முகர்ந்ததிலேயே பன்றியின் மாமிசம் என்று கண்டுக் கொண்ட குட்டி எனக்கு மனித மாமிசம்தான் வேண்டும் அடம் பிடித்தது. இப்போதும் மனித மாமிசம் அதற்கு கிடைக்கவில்லை. மகவை ஏமாற்ற விரும்பாமல் மாட்டு மாமிசத்தை கொண்டு வந்து மகவிடம் கொடுத்தது. மனித மாமிசம் தவிர்த்து வேறு எதுவும் வேண்டாம் என்று குட்டி பிடிவாதமாக மறுத்து விட்டது. அப்போது ஓநாய்க்கு ஒரு எண்ணம் தோன்றியது. அன்றிரவு அங்குள்ள பள்ளி வாசலில் பன்றி மாமிசத்தையும் கோவிலில் மாட்டிறைச்சியையும் வைத்து விட்டு வந்து விட்டது. மறுநாள் காலை ஓநாய்க்கு தெருவெங்கும் அது விரும்பிய மனித மாமிசம் கிடைத்து விட்டது. முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு இந்தியாவின் தற்போதைய நிலையை இக்கதையின் மூலம் உணர்த்துகிறார்.
கலை இயக்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு மேலோங்கிய ஒருமைப்பாடு தேவை. கட்டி இழுப்பதற்கான ஆளுமைகள் தேவை. அறத்தின் போக்கிற்கு எதிரான கருத்துக்களை தயங்காமல் வெளிப்படுத்தும் வெளிக்கும் எழுத்தாளர்கள் வர வேண்டிய காலக்கட்டம் உருவாகி விட்டதாகதான் தோன்றுகிறது. ஆனால் அதே சமயத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இணையத்தில் எழுதப்படும் பெரும்பாலான பின்னுாட்டங்கள் ரயில் பயணங்களில் பின்புறம் காட்டி நிற்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் போல வெகு அசிங்கமான மனதின் பக்கங்கள் நிரம்பி வழியும் சாக்கடைகளாக இருக்கின்றன. கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரத்தின் அசிங்கமான ஒரு நிகழ்வுதான் அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும்.
நவீனம் என்ற பெயரில் விளையும் மாற்றங்கள் நோய்களாக மனிதர்களை கொள்ளைக் கொள்ள மீதமானவர்களை இயற்கை பேரழிவுகள் பழித் தீர்த்துக் கொள்ள, எஞ்சியவர்களை மனிதத்துடன் அணுக மதம் குறுக்கிடுகிறது என்றால் அது ஏன் இருக்க வேண்டும் என்று தான் விரக்தி தோன்றுகிறது.
- கலைச்செல்வி