tribe dead wife on shoulders

மனிதர்களின் மனதுக்குள் எவ்வளவு வஞ்சம். தன்னுடைய சக மனிதனை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வர்க்கத்தின் பெயரால் ஒதுக்கி வைப்பது இருக்கின்றதே அது எவ்வளவு கொடுமையானது. இந்தச் சமூகத்தில் எங்கு முட்டி மோதினாலும் அங்கெல்லாம் நீக்கமற நின்று கொண்டிருப்பது அந்த மக்கள் தான். அவர்களை விட்டு நாம் எங்கேயும் சென்றுவிட முடியாது. நம்முடைய எதிர்வினைகள் அனைத்துமே அந்த மனிதர்களிடம் தான். அப்படிப்பட்ட மனித சமூகம் தனக்குள் எப்படிப்பட்ட மனித நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு சமூகம் தனக்குள் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய முக்கிய கூறுகளில் ஒன்று மனிதாபிமானம். அதுதான் ஒரு சமூகம் நாகரிகப்பட்டதா இல்லையா என்பதை நிறுவுவதற்கு முதன்மையான ஒன்று.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் குறளை தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த குணநலனையும் பிரதிபலிக்கும் ஒன்றாக நாம் சொல்கின்றோம் என்றால் அது தமிழ்ச் சமூகத்து மக்களை உலக அரங்கில் சகமனிதனின் மீதான மனித மதிப்பீடுகளில் சிறந்து விளங்கிய சமூகம் என்பதை எடுத்துக்காட்ட நமக்கு உதவுகின்றது. இப்படி ஒரு சமூகம் தான் சேர்த்து வைத்த மனித மதிப்பீடுகளை அதன் தொடர்ச்சியை எல்லா காலங்களிலும் தக்கவைத்துக்கொள்வது கிடையாது. பல இடையீடுகள் அதை சிறிதோ இல்லை பெரிய அளவிலோ மாற்றி விடுகின்றது. எப்படி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று இருந்த சமூகம் இன்று சாதியின் பெயரால் பல கூறுகளாக உடைந்ததோ அதே போல பெரும்பாலான இந்திய சமூகங்கள் துண்டு துண்டாக உடைந்தது. அதை நிகழ்த்திய முக்கிய காரணி பார்ப்பனியம். இன்று அதை இந்துத்துவா என்று சொல்கின்றார்கள். அது ஒரு வாழ்க்கை முறையாம். சக மனிதனின் மீது படிமுறை வரிசையில் ஏற்றத்தாழ்வுகளைக் கடைபிடித்து வாழும் ஒரு வாழ்க்கை முறைக்கு இந்தப் பெயர் இடப்பட்டு இருக்கின்றது என நாம் எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளலாம்.

இந்த இந்துத்துவா சிந்தனைதான் இன்று பெரும்பான்மையான இந்துமக்களின் சிந்தனை நிர்ணயிக்கின்றது. தன்னுடைய நண்பர்களாக யார் இருக்க வேண்டும், தன்னுடைய எதிரிகளாக யார் இருக்க வேண்டும், யார் வீட்டில் சாப்பிடலாம், யார் வீட்டில் சாப்பிடக் கூடாது, யாருக்கு உதவலாம் , யாருக்கு உதவக் கூடாது என அனைத்தையும் அது தீர்மானிக்கின்றது. ஒரு சாதி இந்து இந்த எல்லையை தன்னுடைய வாழ்நாளில் எந்தக் கணத்திலும் மீறத் துணிவது கிடையாது. சொல்லப் போனால் அப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபடுவதை அவன் பெருமையாகவே நினைக்கின்றான். அப்படி நினைப்பதை அவன் சார்ந்த மதம் அவனுக்கு கடமையாக போதித்து இருக்கின்றது. சாதி உணர்ச்சியும், மத உணர்ச்சியும் மேலோங்கி இருக்கும் ஒரு மனம் தன்னுடைய அனைத்து மனித மதிப்பீடுகளையும் தொலைத்து விடுகின்றது. அது எல்லாவற்றையும் சாதியாகவும், மதமாகவுமே பார்க்கின்றது.

ஒடிசாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தனா மஜி. இவருடைய மனைவி காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த செவ்வாய்க்கிழமை (23-08-2016) அன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பட்னாவில் இருந்த தனா மஜி வசித்த பகுதிக்கு ஏறக்குறைய 60 கி.மீ தூரம். மிகவும் ஏழையான அவர் தன்னுடைய மனைவியின் இறந்த உடலை கொண்டு செல்ல பணம் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகன வசதி செய்து தரச் சொல்லி கேட்டிருக்கின்றார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் தன்னுடைய மனைவியின் இறந்த உடலை ஒரு துணியால் சுற்றி தன்னுடைய சொந்த ஊருக்குத் தன்னுடைய 12 வயது மகளுடன் நடந்தே செல்லத் துவங்கியுள்ளார். இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் இதை மாவட்ட ஆட்சியருக்குத் தெரியப்படுத்தவே பிரச்சினை பெரியதாவதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்சை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. 10 கி.மீ தூரம் தன்னுடைய இறந்த மனைவியை அவர் தூக்கிச் சென்றுள்ளார்.

இதுவே செத்துபோனது ஒரு சாதி இந்துவாக இருக்கும் பட்சத்தில் சம்பவம் இதற்கு நேர்மாறாக நடந்திருக்கும். இந்தச் சம்பவத்தைப் பற்றி கருத்து தெரிவித்த மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் புஷ்பேந்திரா சிங்தியோ “சடலத்தை எடுத்துச் செல்ல தனா மஜி வாகனம் கேட்டது குறித்த தகவல் மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தெரிந்தவுடன் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவர் சடலத்தை தூக்கிக் கொண்டு 10 கி.மீ தூரம்வரை சென்றுள்ளார்" என்று கூறியிருக்கின்றார். எவ்வளவு கீழ்த்தரமான பதில். பிணத்தை தூக்கிக்கொண்டு 10 கி.மீ தூரம் செல்ல எப்படி பார்த்தாலும் குறைந்தது ஐந்து ஆறுமணி நேரமாவது ஆகியிருக்கும். அமைச்சர் சொல்வதுபோல உடனே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் தனா மஜி அவ்வளவு தூரம் தன்னுடைய மனைவியின் பிணத்தை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது. தாழ்த்தப்பட்ட மக்களின் மீதும் , பழங்குடியின மக்கள் மீதும் சாதி இந்துக்களுக்கு உள்ள திமிர்பிடித்த வக்கிரப் பார்வையையே மருத்துவமனை நிர்வாகத்தின் செயலும், அமைச்சரின் கருத்தும் காட்டுகின்றது.

அதே போல மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கோக்ரி கிராமத்தைக் சேர்ந்தவர் ராம்சிங் லோதி. இவரது மனைவி மல்லிபாய். கடந்த வாரம் தான் இவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவை சரிசெய்ய அவரை தமோ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் போகும் வழியிலேயே மல்லி பாய் உயிரிழந்துள்ளார். இதனால் நடத்துநர் ஷார்தா பிரசாத், ஓட்டுநர் அமர்லால், அவரது உதவியாளர் தர்மேந்திரா ஆகிய மூவரும் சேர்ந்து மனைவியின் உடலுடன் கீழே இறங்குமாறு ராம்சிங்கை கட்டாயப்படுத்தி உள்ளனர். அவரும் அவரது மாமியாரும் எவ்வளவோ கெஞ்சிய பிறகும் கூட மனிதாபிமானமே இல்லாமல் அவர்களை பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். தனது 5 நாளே ஆன குழந்தையுடன் ராம்சிங் செய்வது அறியாமல் தவித்துள்ளார். அந்த வழியாக வந்த இரண்டு வழக்கறிஞர்கள்தான் தனி வாகனம் ஏற்பாடு செய்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்களும் இந்திய சமூகத்தில் மனித மதிப்பீடுகள் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றது. இங்கே அனைத்தையும் சாதியும், மதமுமே தீர்மானிக்கின்றது. ஒவ்வொரு இந்துவின் சிந்தனையும் அழுகி நாற்றமடிக்கும் நம்பிக்கைகளால் நிரம்பியுள்ளது. இதே போன்ற ஒரு சம்பவம் முஸ்லீம்கள் மத்தியிலோ இல்லை கிருஸ்தவர்கள் மத்தியிலோ நடந்திருந்தால் அவர்கள் அதற்கு இப்படித்தான் எதிர்வினை ஆற்றியிருப்பார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் மத்தில் உள்ள ஒருங்கிணைப்பு சிந்தனை அவர்களை அப்படி செய்யவிடாமல் தடுத்திருக்கலாம். ஏனெனில் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமைப் பார்க்கும் பார்வைக்கும், ஒரு கிருஸ்தவன் இன்னொரு கிருஸ்தவனை பார்க்கும் பார்வைக்கும் முற்றுலும் நேர் எதிரானது - ஒரு இந்து இன்னொரு இந்துவைப் பார்க்கும் பார்வை. அது வன்மம் நிறைந்தது. கீழ்த்தரமான சாதியப் பார்வை கொண்டது. அதுதான் தன்னுடைய சகமனிதனுக்கு உதவி செய்யவிடாமல் அவனைத் தடுப்பது. இப்படிப்பட்ட கேடுகெட்ட வாழ்வியல் முறையைத்தான் இந்துத்துவா என பெருமையோடு ஆர்.எஸ்.எஸ் காலிகள் சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள்.

ஒரு சமூகம் எதைத் தொலைத்தாலும் அதனை மீட்டெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தன்னுடைய மனித மதிப்பீடுகளைத் தொலைத்துவிட்டதென்றால் அதனை மீட்டெடுப்பது என்பது முடியாதா காரியம். இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள சாதிய இந்து சமூகம் எந்தவித மனித மதிப்பீடுகளும் அற்ற தன்னுடைய சகமனிதனின் மீது காட்ட வேண்டிய அறம் சார்ந்த விழுமியங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கின்றது. இந்த இரண்டு சம்பவங்களும் அதைத்தான் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. ஆனால் சாதி, மதம் போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு, தன்னுடைய சகமனிதனை மனிதாக நடத்த கற்றுக் கொண்ட ஒரு பெரும் மனிதக்கூட்டம் இந்திய வரலாற்றில் எப்போதுமே இருந்துள்ளது. அந்தச் சிந்தனையை பெளத்தமும் சமணமும் அன்று கற்றுக் கொடுத்தது. இன்று அம்பேத்கரும், பெரியாரும், மார்க்சும் அதை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்கள். இந்தச் சிந்தனைகளைக் கடைபிடிக்கும் மக்கள்தான் இன்றுவரையிலும் இந்திய சமூகத்தில் குறைந்தபட்ச மனிதாபிமானம் உயிர் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணமாகவும் உள்ளனர்.

- செ.கார்கி

Pin It