கருத்து + புலப்பாடு = கருத்துப்புலப்பாடு ஆகும்.  கருத்து என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி 11 - வகையான பொருள்களைக் கூறுகிறது (தொகுதி 4. ப. 1- பக் 2352).  அவற்றுள் முதற்பொருள் “நோக்கம்” என்பதாகும்.  புலப்பாடு என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி புலப்பாடு ழூ புலப்படு (Appearing Clearly; Clearly understood)நன்றாய்த் தெரிகை எனக் கூறுகிறது.  (தொ.4. ப.1, பக். 2787) இவற்றின் மூலம் தன் நோக்கத்தினைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பது கருத்துப் புலப்பாடு ஆகும்.

மேலும் கருத்துப் புலப்பாட்டிற்கு இரெ.குமரன் “கருத்துப்புலப்பாடு என்பது கூறுநருக்கும் கேட்குநருக்கும் இடையே நிகழும் ஒரு நிகழ்ச்சி /செயற்பாடு எனலாம்”(பக்.10)எனக் கூறுகிறார்.இக்கருத்துகளைக்கொண்டு நோக்கக் கருத்துப் பரி மாற்றத்தையும் கருத்துப் புலப்பாடாகக் கொள்ளலாம்.மனிதன் தன் கருத்தினைப் பிறருக்குப் பரிமாறும் போது இருவகை உத்திகளைக் கையாளுகின்றான்.  அவை, மொழிசாராக் கருத்துப் புலப்பாடு, மொழி சார் கருத்துப் புலப்பாடு என்பன.

மொழிசாராக் கருத்துப் புலப்பாடு

மக்கள் காட்டுமிராண்டிகளாகத் திரிந்து வாழ்ந்து தங்களின் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்திய ஊடகம் சைகை மொழி.இஃது,இன்றும் நம்மிடையே வழக்கில் உடல்மொழியாக உள்ளது.மொழி வளர்ச்சி அடையாத பழங்குடியினர் இன்றும் சைகை மொழி யையே அதிகம் பின்பற்றி வருகின்றனர். இந்தச்சைகை மொழியின் வளர்ச்சியில்தான் பேச்சு மொழி தோன்றியது.அதன் பின்னர் எழுத்து மொழி தோன்றியது.ஒருவரை அழைக்கும்போது சைகையில் வா எனக்கை அசைத்தலும்,ஆட்காட்டிவிரலை ஆட்டிக் கொன்றுவிடுவேன் என்று கூறுதலும் சைகை மொழியின் கருத்துப்புலப்படுத்தமாகும்.

மொழிசார் கருத்துப் புலப்பாடு

மொழிசார் கருத்துப் புலப்பாட்டினை இரு வகைகளில் கையாளலாம்.  அவை 1. பேச்சுவழிக் கருத்துப் புலப்பாடு 2.எழுத்துவழிக் கருத்துப் புலப்பாடு என்பன.முன்னர்ச் சுட்டியவாறு பேச்சு மொழியின்மூலம்இருவர்தொடர்ந்துதங்களின்கருத்துகளைப்பரிமாறிக்கொள்கின்றனர்.அப்போது பேசுபவர் தம்முடைய கருத்தினைக் கேட்பவருக்குப் புரியும் வண்ணம் வெளிப்படுத்த வேண்டும்.இல்லையென்றால் தான் கூற வந்த கருத்து முழுமையாகக் கேட்குநர்க்குச் சென்றடையாது;இருவரிடையே யான ஊடாட்டம் (Interaction)தடைபெறும். ஊடாட்டம் தடைபெறாமல் தொடர்ந்து நடை பெறவேண்டுமென்றால் பேசுபவரும்,கேட்பவரும் ஒத்த மனநிலையில் இருக்கவேண்டும். 

கேட்குநரின் தன்மையினை அறிந்து பேசுபவர் தன் கருத்தினை வெளிப்படுத்தினால் மட்டுமே ஊடாட்டம் தொடர்ந்து நிகழும்.(எ.கா.)ஆசிரியர் இளங்கலை அறிவியல் மாணவனிடம் தொல்காப்பியம் செய்யுளியலை எத்துணைச் சுவையாக நடத்தினாலும் புரியாது. அவ்வாறுநடத்தினால்இருவருக்குமிடையேயானஊடாட்டம் தடைபெறும். இதனையே முதுகலைத் தமிழ் மாணவனிடம் ஆசிரியர் நடத்தினால் இரு வரிடையே ஊடாட்டம் தொடர்ந்து நிகழும்.அவ்வாறு நிகழும்போது ஆசிரியரின் குரலில் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் காணப்படும். இவ்வாறு பேச்சு மொழிவழிக் கருத்துப்புலப்பாடு நடைபெறும்.

எழுத்து மொழிக் கருத்துப்புலப்பாடு

பேச்சு மொழியில் ஒருவர் பேச மற்றொருவர் கேட்டுக்கொண்டு இருப்பார். இதன் மூலம் தொடர்ந்து கருத்து மாறி மாறிப் பரிமாறிக்கொள்ளப்பட்டு இருவரின் கருத்துப்புலப்பாடும் வெளிப்படும்.  எழுத்து மொழியால் ஆகிய பனுவல் எவ்வாறு கருத்துப் புலப்படுத்தும் என்று நினைக்கலாம்.எல்லாப் பனுவல்களும் ஒரு கருத்தினை மையமிட்டு எழுதப் பட்டவை ஆகும்.  அந்த மையம் (அடிக்கருத்து) எவ்வா றெல்லாம் விளங்கவைக்கப்படுகிறது என்பதே கருத்துப்புலப்பாடு ஆகும்.  பனுவலின் ஆசிரியர் தான் பேசுபவர்; அதனை வாசிப்பவர்தான் கேட்பவர்.

வாசிப்பாளனின் மனநிலையை அறிந்தும்,அவனின் உள்ளத்தில் எழும் வினாக்களை அறிந்தும் அவற்றிற்கான தீர்வினைப் படைப்பாளன் பனுவலில் படைக்கிறான்.  படைப்பாளனுக்கும், வாசகனுக்கும் இரு வழி ஊடாட்டம் நிகழாமல் போனாலும் ஒரு வழி ஊடாட்டம் தடையின்றி நிகழும்.  முன்னர்ச் சுட்டியது போல ஊடாட்டம் தடையின்றி நிகழ் வதால் படைப்பாளன் தன் கருத்துப் புலப்படுத்தலைச் செம்மையாகச் செய்கிறான்.இதன் மூலம் படைப்பும் நிலைத்து நிற்கிறது.

பேச்சு மொழியில் இருவர் பேசிக்கொள்ளும் போது உணர்ச்சிபூர்வமாகத் தங்களின் கருத்துக்களைப்பரிமாறிக்கொள்வர். தொடர்ந்துஊடாட்டம்நடைபெறுவதால் கருத்துப்புலப்பாடு முழுமையடையும். ஓர் இலக்கியப் பனுவலில் படைப்பாளன் தான் சொல்ல விரும்பும் கருத்தினைக் கூறினால் வாசகனுக்கு உணர்ச்சிகள் புலப்படா. படைப்பாளன் உணர்த்தவிழையும் கருத்துப் பரிமாற்றம் குறைபாடுடையதாகிவிடும்.  அவ்வாறு ஏற்படாமல் இருக்க, படைப்பாளன் தன்னுடைய படைப்புகளில் தத்தம் குறிப்பால் பொருள் செய்யும் இடைச்சொற்களைக் கையாண்டு உணர்ச்சி பூர்வமான படைப்பாக வாசகனுக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்பதைக் காண்போம்.

ஓகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எதிர் மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறப்பு என்னும் ஆறு பொருண்மைகளில் வரும் எனத் தொல்காப்பியர் (தொல்.இடை.256)கூறுகிறார்.  குறுந்தொகையில் இரக்கம், வினா, பிரிநிலை, எதிர்மறை, ஐயம் என்னும் பொருண்மைகளில் வந்துள்ளது.இத்தகு இடைச் சொற்களில் சில வேறு பொருளிலும் வரலாம் எனப் புறனடையில் தெளிவுபடுத்துகிறார் தொல் காப்பியர் (தொல். இடை. 295, 296).  பின் வந்த சொல்லிலக்கண நூல்கள் ஓரளவு தொகுத்துத் தருகின்றன.

இரங்கற் குறிப்பினை வெளிப்படுத்தல்

இரங்கற் குறிப்பினை வெளிப்படுத்தும் ஓகார இடைச்சொற்கள் குறுந்தொகையில் 8 பாடல் களில் வருகின்றன (132, 195, 221, 272, 309, 355, 379, 396).  இவற்றில் தலைவன், தலைவி, தோழி, செவிலி ஆகியோர் இடைச்சொல்லை இரங்கற் பொருண் மையில் கையாளுகின்றனர்.

பாங்கன் தலைவனை இடித்துரைக்கும்போது அதற்குத் தலைவன் எதிர்மொழிகிறான்.  “யாங்கு மறந் தமைகோ யானே...” (குறுந்.132) என்னும் பாடலடி தலைவியை எப்படி மறந்து இருப்பேன் யான் என ஓகார இடைச்சொல் இன்றி வந்தால் அது ஒரு வினாவாக வெளிப்படுகிறது. அதுவே எப்படி மறந்து இருப்பேனோ என ஓகாரத்தைக் கூறி வெளிப்படுத்தினால் இரங்கல் உணர்ச்சி வெளிப்படுகிறது

பிரிவிடைப் பருவ வரவின்கண் மெலிந்து தோழியிடம் தலைவி இரக்கவுணர்வை வெளிப்படுத்தல்

“யாண்டுளர் கொல்லோ...” (195. 1-3)

என்னும் பாடலடியில் தலைவனை நினைத்துத் தலைவி,அவன் கூறிச் சென்ற பருவம் வந்துவிட்டது;யாண்டுளர்,அதாவது எங்கு உள்ளான் என்று பொருள் கொண்டால் அது தகவலாக அமையும்.யாண்டுளர் ‘கொல்லோ’என ஓகார இடைச் சொற்களைப் பயன்படுத்தினால் அவன் எங்கு உள்ளானோ தெரியவில்லை (ஐயம்) என இரக்க உணர்ச்சி வெளிப்படுகின்றது.

மகட்போக்கிய தாய், கண்டோரிடம் இரக்கவுணர்வை வெளிப்படுத்தல்

தலைவி தலைவனுடன் உடன்போக்குச் சென்ற போது,அவள் செல்லும் வழியினை நினைத்துத் தன் மகள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவள்;  அத்தகைய சூழலில் வாழ்ந்தவள் கொடுமையான பாலை வழியில் செல்லுதல் “எளிதெனவுணர்ந்தனள் கொல்லோ” (குறுந். 390) எனக் கூறுகிறாள்.  எளி தென உணர்ந்தனள் எனக் கொண்டால் வெறும் வினா.  உணர்ந்தனள் கொல்லோ என்பதன் மூலம் அவள் அவ்வழியில் செல்லுதல் எளிதென்று நினைத் திருப்பாளோ?எனத் தலைவியின் நிலையை நினைத்துத் தன் வருத்த மிகுதியை வெளிப்படுத்துகிறாள்.

எதிர்மறை ஓகார இடைச்சொல்

இவ்விடைச்சொல் குறுந்தொகையில் ஆறு பாடல்களில் வருகின்றது (36, 42, 156, 239, 288, 316).  இதனைத் தலைவன், தலைவி, தோழி ஆகியோர் கையாளுகின்றனர்.

தலைவனிடம் பாங்கன் கழறியபோது எதிர்மறை உணர்வை வெளிப்படுத்தல்

“பார்ப்பன மகனே! வேதத்தை அறிந்த நின்னுடைய அறிவுரைகளுள் பிரிந்தவர்களைச் சேரச் செய்யும் தன்மையுடைய பரிகாரமும் இருக் கின்றதோ? இங்ஙனம் நீ கழறுதல் மயக்கத்தால் வந்ததாகும்” (குறுந். 156) எனக் கூறுகிறான்.  பிரிந் தாரைப் புணர்க்கும் மருந்து உண்டோ என்பது அறியாமையால் வினவப்பட்டால், பார்ப்பன மகன் இரண்டிலொரு விடை பகர்வான்.  இதில் உணர்ச்சியில்லை.  அப்படி ஒரு மருந்து இல்லாத காரணத்தால் நீ கூறுவதில் பயன் ஏதும் இல்லை எனத் தலைவன் எதிர்மறை உணர்வை ஓகாரத்தின் மூலம் வெளிப்படுத்துகிறான்.

தலைவன் சிறைப்புறமாக இருக்கத் தலைவி தோழியிடம் எதிர்மறை உணர்வை வெளிப்படுத்தல்

தலைவன் சிறைப்புறமாக இருக்கத் தலைவி தோழியிடம் தலைவனின் நினைவால் “என் வளை யல்கள் நழுவின,தோள்கள் மெலிந்தன,எனவே இனி வருவதற்குரிய நாணம் உள்ளதோ?” (குறுந். 239) எனக் கூறுகிறாள்.  இவ்வாறு கூறுவதன் மூலம் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை,அவை எல்லாம் முன்னரே ஒழிந்தன என எதிர்மறைப் பொருளினைத் தலைவன் கேட்கத் தோழியிடம் வெளிப்படுத்துகிறான்.

இரவுக்குறி வேண்டிய தலைவனிடம் தோழி எதிர்மறை உணர்வை வெளிப்படுத்தல்

விடரகத்து இயம்பும் நாட,காமம் ஒழிவதா யினும் நின் வயின் கொண்ட எம் நட்பு (தலைவி) தேயுமோ?” (குறுந். 2) என்று கூறுவதில் நேரடிப் பொருள், நட்பு குறைந்துவிடும் என்பது.  அல்ல.  நீ இரவில் வாராதிருப்பினும் தலைவி உன்பாற் கொண்ட நட்பு குறையாது எனத் தோழி குறியிடம் மறுத்து எதிர்மறை உணர்வினை வெளிப்படுத்துகிறாள்.

ஐய உணர்வு வெளிப்படுத்தல்

ஐயஉணர்வு இடைச்சொல் குறுந்தொகையில் 2பாடல்களில் (126, 142) வருகின்றது.  தலைவன் தலைவி இருவரும் இவ்விடைச் சொல்லைக் கையாளுகின்றனர்.


பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழியிடம் ஐய உணர்வை வெளிப்படுத்தல்

தலைவன் திரும்பி வருவதாகச் சென்ற பருவம் வந்தமையை அறிந்த தலைவி, தோழியிடம் இளமையது அருமையைப் பாராராகி,பொருளை விரும்பி என்னைப் பிரிந்து சென்ற தலைவர்,இவ்விடத்தில் இன்னும் மீண்டு வந்திலர்,எவ்விடத்தில் உள்ளார் எனக் கூறியிருப்பின் வினா மட்டும் வெளிப்படும்.அதுவே,எவ்விடத்தில் உள்ளாரோ? தெரியவில்லை என்ற ஐய உணர்வை இந்த ஓகார இடைச்சொல் வெளிப்படுத்துகிறது.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைவன் தோழியிடம் ஐய உணர்வை வெளிப்படுத்தியது

என் உள்ளம் தலைவியைப் பிரிந்துவந்த பின்னரும், அவளிடத்தில் இருக்கின்றது.  அதனை அவள் அறிந்தனள் இலள் எனத் தலைவன் கூறினால் தகவல். இதுவே அறிந்தாளோ இல்லையோ?என ஓகாரத்தினைச் சேர்த்துக் கூறினால் அவள் தன் அன்பினை அறிந்தாளோ? இல்லையோ? என ஐய உணர்வு வெளிப்படுகின்றது. ஆனால், இந்த ஐயம் தலைவி தன்பால் கொண்ட காதல் பற்றியதன்று. தனது பொறுத்தலாற்றாத் தன்மை பற்றியது என்பது, “பள்ளி யானையின் உயிர்த்து என் உள்ளம் பின்னும் தன் உழையது” எனத் தலைவன் கூறுவதால் புலப்படுகிறது.

வினாவுணர்வினை வெளிப்படுத்தல்

குறுந்தொகையில் இவ்விடைச்சொல் 7 பாடல் களில் வருகின்றது (2, 75, 99, 124, 148, 192, 287); தலைவன், தலைவி, தோழி ஆகியோர் கூற்றுகளில் கையாளப்பட்டுள்ளது.

தலைமகன் வரவுணர்த்திய பாணனிடம் தோழி வெளிப்படுத்தல்

“நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ
ஒன்று தெளிய நசையின மொழிமோ”                                                                                                  (குறுந். 75)

என்ற பாடலடிகளில் தலைவன் வரவை நீ கண்டாய்,கேட்டாய் என்றால் உண்மையைச் சொல் எனக் கூறுவது வெறும் வினா.  இதுவே நீ கண்டாயோ? கேட்டாயோ?என ஓகார இடைச்சொல்லைப் பயன்படுத்தினால் வினாவோடு கூடிய ஆர்வ உணர்ச்சி வெளிப்படுகிறது.

நிறைவாக

பேச்சுமொழியில் இருவர் தம்முடைய கருத்துக் களைப் பரிமாறிக் கொள்ளும்போது முகபாவம், சைகை, எடுத்தல், படுத்தல் முதலிய ஓசை வேறு பாடுகளால் உணர்ச்சிகளைப் புலப்படுத்துவார்கள்.

எழுத்து மொழியில் படைப்பாளன் அவற்றைத் தத்தம் குறிப்பால் பொருள் செய்யும் இடைச் சொற் களைக் கொண்டு ஓரளவிற்கு நிறைவு செய்கிறான்.

தத்தம் குறிப்பால் பொருள் செய்யும் இடைச் சொற்கள் சிலவற்றில் வாசிப்பாளனின் மனநிலையைப் பொருத்துப் பொருண்மை மாற்றம் நிகழும்.  எ.கா. குறுந்தொகை உரையில் உ.வே.சா. அவர்கள் “ஓகாரம், இரக்கக்குறிப்பு: அசைநிலையுமாம்” (132:3) எனக் கூறுவதன் மூலம் இது உறுதியாகின்றது.

இவற்றுள் சில இடைச்சொற்கள் கால மாற்றத் தால் பொருண்மை மாற்றம் நிகழும். அதேபோன்று வழக்கொழிந்து போகும்.மன்,அந்தில் போன்ற இடைச்சொற்கள் வழக்கொழிந்து போயின.  உம், ஏ, ஓ முதலிய இடைச்சொற்கள் விரிவு பெற்றுள்ளன.

பார்வை நூல்கள்

1. கணேசய்யர், (ப.ஆ.), தொல்காப்பியம், சொல்லதி காரம், சேனாவரையர் உரை, உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம், சென்னை, 2005.

2. உ.வே.சா. (உ.ஆ.), குறுந்தொகை, உ.வே.சா.  நூல் நிலையம், சென்னை, 2001.

3. குமரன்.இரெ., சங்க அகப்பாடல்களில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள், அனன்யா பதிப்பகம், தஞ்சாவூர், 2001.

4. வேல்முருகன், பா., தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் - ஒரு மதிப்பீடு, தி பார்க்கர்,  சென்னை, 2006.

5. இசரயேல், மோ., இடையும் உரியும், சர்வோதய இலக்கியப்பண்ணை, மதுரை, 1977.

6. அரங்கன், கி., இலக்கண அறிவும் கருத்து புலப்படுத்தமும், மொழியியல், தொகுதி- 12,  அனைத்திந்திய மொழியியல் கழகம், அண்ணா மலை நகர், சிதம்பரம், 1988.

7. வையாபுரிப்பிள்ளை, எஸ்., (ப.ஆ.), தமிழ்ப் பேரகராதி, தொகுதி - 4, சென்னைப் பல்கலைக்  கழகம், சென்னை, 1980.

Pin It