தமிழியல் புதிய தடங்கள் என்னும் தலைப்பிலான பேராசிரியர் து.மூர்த்தியின் நூல் விடியல் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. வெவ்வேறு சமயங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இது அமைந்துள்ளது. இத்தொகுப்பில் உள்ள பத்தொன்பது கட்டுரைகளும் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் போக்குகளையும் சமூகப் பின்புலங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளன.

‘இக்காலக் கவிதைகள் மரபும் புதுமையும்’ என்னும் முதற்கட்டுரை பாரதி முதல் இன்று வரையுள்ள கவிதைப் போக்குகளை ஆராய்கிறது. அதில் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் தமிழின் மறுமலர்ச்சியையும் முதன்மைப்படுத்திய பாரதி சமூக உள் முரண்களைக் கவனிக்கத் தவறியமையை எடுத் துரைக்கிறார். புரட்சிக்கு நெருக்கமான பாரதி தாசனின் கவிதைகள் தமிழின் மேன்மை. சமஸ்கிருத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்று மேல் தளத்தில் செயல்பட்டு சமூக அடித்தள மாற்றம் குறித்த கவனமின்மையால் தேய்வுற்றது என்கிறார். புதுக்கவிதையின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகையில், நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களாக அமைந்தவர்கள் முதலாளியத்தை எதிர்க்காமல் ஏகாதிபத்தியத்தின் பண்பாட்டுச் சிதைவால் விளைந்த அடிப்படை வர்க்கங்களின் எழுச்சியைப் புரிந்துகொள்ளாமல் மனவிகாரங்களை முதன்மைப்படுத்திப் புதுக் கவிதை வடிவத்தைக் கைக்கொண்டார் என்று குறிப்பிடுகிறார். வானம்பாடிகளின் கவிதை இயக்கம் கவிதைப் பலூன்களாக அமைந்தனவேயன்றி சமூக மாற்றங்களை முன்னெடுத்துச் செல்லும் கட்டு மரங்களாகவில்லை என மதிப்பிட்டு நா.காமராசன், இன்குலாப் என்று பல்வேறு கவிஞர்களின் கவிதை களை ஆய்வு செய்கிறார்.

பாரதியைப் பற்றி இரு கட்டுரைகள் இந்நூலில் அமைந்துள்ளன. அத்வைதத்தில் தோய்ந்தமையையே பாரதியின் தத்துவக் கவிதைகள் சுட்டுகின்றன என மதிப்பிட்டு விசிஷ்டாத் வைதத்தாக்கத்தினால் உலகம் உண்மையென்று ஒப்புக்கொண்டாரா என்பது ஆய்வுக்குரியது எனக் கூறுகிறார். மதத்தில் காலூன்றிய பாரதி மானுட விடுதலையை அதன் முழுப்பொருளில் உணரவோ போராடவோ முடியவில்லை என்று குறிப்பிட்டு, கண்ணன் என் சேவகன் நிலவுடைமை மனநிலையில் இருந்து ஆக்கப்பட்டிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறார்.

பாரதிதாசனைக் குறித்து இரு கட்டுரைகள் அமைந்துள்ளன. அவற்றுள் ‘அழகின் சிரிப்பு’, சமூக உணர்வையும் தமிழுணர்வையும் இயற்கை அழகுடன் இணைத்து ஆக்கப்பெற்றது எனச் சான்று களுடன் நிறுவுகிறார். ‘பாரதிதாசன் மைல்கற்களும் இன்றைய பாதையும்’ என்னும் கட்டுரை, பெரியாரையும் பாரதி தாசனையும் இணைத்துச் செல்கிறது. ‘பெரியார் நாத்திகத்தை சமதர்மத்துடன் இணைத்தே பேசி யுள்ளதை இப்பொழுதாவது உணர வேண்டும் எனக்கூறி பெரியாரியத்தையும் மார்க்சியத்தையும் இணைப்பதன் மூலமே சமூக விடுதலைக்கான சாத்தியங்களை முன்னெடுக்க முடியுமென்பதை உணர்த்துகிறார். அத்துடன், பெரியாரின் கல்வி, அறிவியல் வளர்ச்சிக் கொள்கைகளும் பாரதிதாசனின் துறைதோறும் தமிழ் என்ற ஆக்கமும் இணைந்து செயல்படாமல் போனமையை திராவிட அரசியலி னூடாகப் புரிந்துகொள்ள முடியுமென்ற பார்வை யையும், பெரியாரும் பாரதிதாசனும் நாத்திகத்தை சமுதாய உருவாக்கம், மாற்றம், வளர்ச்சி என்பதன் விளக்குதல் நெறியாகக் கையாண்டனர். அது பின்னர் திராவிட அரசியலால் சுருக்கப்பட்டது என்கிற புரிதலையும் அக்கட்டுரையில் ஏற்படுத்து கிறார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள் பொதுவுடைமை, பகுத்தறிவு இரண்டன் இணையாக அமைந்தன எனச் சான்றுகளுடன் குறிப்பிட்டு பாரதிதாசனின் கவிதையோடு ஒப்பிட்டுக் கூறுகையில் ‘பொருளாதார விடுதலையைப் பின்னுக்குத் தள்ளி சமூக விடுதலையை முன்னுக்குத் தள்ளி அதனுள் சமூக விடுதலையையும் முன் வைத்தவர் பட்டுக்கோட்டை என்றும் மதிப்பிடுகிறார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையுடன் ஏ.தெ.சுப்பையனையும் அவரின் முறையீடு என்னும் கவிதைத் தொகுப்பின் வழியாக இணைத்துக் காண்கிறார் ஆசிரியர்.

நா.காமராசன் (கறுப்பு மலர்கள்), மு.மேத்தா (கண்ணீர்ப் பூக்கள்) ஆகியோரின் கவிதைகள் சமூக விடுதலையை நோக்கி நகர வேண்டிய வழிகளை முன்வைக்கும் ஆசிரியர், ஜெயகாந்தனின் ‘ஜயஜய சங்கர’ நாவல் நிலப்பிரபுத்துவத்தை நியாயப்படுத்தி அதைக் கொண்டுவரத் துடிப்பதாகவும் கம்யூனிசப் புரட்சியைக் கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது என்று ஆய்ந்து கூறுகிறார்.

ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’ நாவல் கம்யூனிசப் புரட்சி, அகிம்சைப் புரட்சி இரண்டுக்குமான கருத்துப் பரப் பலில் இந்துத்துவத்தை உள்ளடக்கிய காந்தி யத்தின் பக்கத்தில் வெளிப்படையாக நிற் கிறது என்ற நிலையில், நாவலில் மொழி, சொல்வதும் சொல்லாமல் விடுவதும் ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’ என்னும் கட்டுரை அமைந்துள்ளது.

சூரியதீபனின் ‘இரவுகள் உடையும்’ மற்றும் அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமயலறை’ ஆகிய இரு சிறுகதைகளும் மத்தியதர வர்க்கப் பெண் விடுதலையை முன்வைக்கிறது என்ற நிலையில் ஒரு கட்டு ரையும் இந்நூலில் அமைந்துள்ளது.

கல்வித்துறை மற்றும் மொழி சார்ந்த கட்டுரைகளின் சில முக்கியமான அடிப் படை மாற்றங்களை முன்வைக்கிறார். பட்ட மேற்படிப்பில் வல்லுநர் பரிமாற்றம், பல கல்லூரி இணைப்பு, மாணவர், ஆசிரியர், தேர்வுச் சுதந்திரம், பருவக் கருத்தரங்கக் கட்டுரைகள், நூலகப் பயன்பாடு என்று அவற்றின் செயல்முறைகளைச் சிறப்புற விளக்குகிறார். தொடக்கக் கல்வி தாய்மொழி வழி அமைய வேண்டியதன் தேவையைச் சான்றுகளுடன் முன்வைக்கிறார். ‘பொற் காப்பியம் அல்லது பொன்னூல் என்னும் கட்டுரையில் பொற்கோவின் ‘இக்காலத் தமிழ் இலக்கணம்’ என்னும் நூலின் சிறப் பையும் தேவையையும் சான்றுகளுடன் விளக்குகிறார்.

தமிழ்ச் சமூக மறுமலர்ச்சியை முதன்மைப் படுத்திய இயக்கங்களென ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கம், தன்மான இயக்கம், சமயச் சீர்திருத்த இயக்கம், சமரச சுத்த சன்மார்க்க இயக்கம், வட மொழி மறுப்பு இயக்கம், தமிழிசை இயக்கம், பொதுவுடைமை இயக்கம் ஆகியவற்றை தமிழ் நாட்டுச் ‘சமூக சக்தி களின் வரலாறு’ என்னும் கட்டுரையில் முன்வைத்து ஆய்வு செய்கிறார்.

தொகுத்துப் பார்க்கையில் இந்நூலில் அமைந்த கட்டுரைகள் யாவும் சமூக முரண் களைக் களைந்து சமூக விடுதலையை முன்னெடுக்கும் பாதைகளையும் தமிழ் மொழியின் உண்மையான வளர்ச்சியை அடையும் வழிகளையும் தன்னகத்தே கொண்டு உள்ளன என்பதை வாசகர்கள் இயல்பாக உணர முடியும். அந்த வகையில் அண் மையில் வந்த முக்கியமான தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

தமிழியல் புதிய தடங்கள்

ஆசிரியர்: முனைவர் து.மூர்த்தி

வெளியீடு: விடியல் பதிப்பகம்

விலை ரூ.200

Pin It