பன்னிரண்டு ஆண்டுகள் குழந்தையின்றி இந்தச் சமூகத்தில் வாழ்ந்து சலித்த கணவன் மனைவியின் (காளி - பொன்னா) ஒரு நாளைய செயல்பாடுகள், எண்ணங்கள், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் என விரிந்து செல்கிறது பெருமாள்முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவல். அந்த ஒரு நாளின் செய்திகள் அடுத்த நாளுக்கான நிகழ்வை மதிப்பிட வாய்ப்பளிக்கின்றன.

குழந்தைப்பேறு என்பது சமூகத்தில் அனைவராலும் மிக முக்கியமாகக் கருதப்படுவது. மக்கள்தொகை பெருகிக் கருச்சிதைவுகள், கருக்கலைப்புகள் மலிந்துவிட்ட இக்கால கட்டத்திலும் திருமணம் முடிந்து ஓராண்டிற்குள்ளோ அடுத்த ஆண்டிலோ குழந்தை பிறந்துவிட வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு மிகுதியாகவே உள்ளது. இல்லை யெனில் விசாரிப்புகள் படிப்படியாக வளர்ந்து எள்ளல், குத்தல், சலிப்பு என்று காலை எழுவது முதல் உறங்குவது வரை அனைத்துச் செயல்பாடுகளிலும் ஊடுருவிப் பேச வழிவகை ஏற்படுகிறது. செயல்களை முடக்குவதாகவும் ஆகிறது. அதுவும் குறிப்பாக, பெண்ணுக்கு மிகவும் அதிக மாகவே உள்ளது. இன்றைக்கு ஐம்பதாண்டு காலப் பழமையான வாழ்முறை கொண்ட மனிதர்களைக் காட்டுகிறது மாதொருபாகன் நாவல். பெண்களின் நிலை அன்றும் மிக மோசமானதாகவே இருந்துள்ளது என்பதை மையப்படுத்துவதாக இந்நாவல் அமைந்துள்ளது.

நாவலில் உள்ள அன்றைய வழக்குகளிலிருந்தும் சில தகவல்கள் மூலமாகவும் பழமொழிகள் பேச்சு முறை களைக் கொண்டும் பெண்கள் நிலை குறித்துப் பார்க்கலாம்.

*      காட்டுவாசிப் பெண் சிதைக்கப்பட்ட கதை.

*      முத்தான், சொங்கான் ஆகிய இருவரும் செம்மாங் காட்டு முருகேசனைக் கேலி செய்வது. அவன் கொஞ்சம் நிறமாக இருப்பதற்கு அவன் அம்மாவைச் சந்தேகப்பட்டுக் கிண்டலடிப்பது

*      கொஞ்சம் முயற்சி பண்ணினால் வந்து விடுவாள் என்று பொன்னாவின் மீது விடலைகளின் கரிசனப் போக்கு.

*      பனங்காட்டுக் கருப்பண்ணன் பொன்னாவிடம் பல் இளிப்பதும் பதிலுக்குக் காளி அவன் தங்கையைப் பழிப்பதும்

ஆகியன நாவல் நிகழ்வுகள்.

*      முண்டை வளர்த்த பிள்ள தண்டமாத்தான் போகும்

*      பிள்ள இல்லாத வூட்டுல கிழவி துள்ளி வெளயாடு னாளாம்

*      பிள்ள இல்லாதவ பீச்சீலய மோந்து பாத்தானாம்

ஆகியன நாவலில் வரும் பழமொழிகள்.

ஆக இப்படியான மதிப்பீடுகள் இருக்கும் சமூகத்தில் இவற்றையெல்லாம் மீறி வாழவேண்டிய நிர்ப்பந்தம் பெண்களுக்கு இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது. அதிலும் குழந்தையில்லாமல் பொன்னா படும் துன்பம் எல்லையற்றது. நேருக்கு நேர் கேவலப்படுத்தும் பேச்சு களை அவள் எதிர்கொள்ளும்போது அவளின் ஆற்றா மையைவிட வாயாடி என்ற பழிச் சொல்லே அவளுக்கு மிஞ்சுகிறது.

எல்லாக் காலங்களிலும் ஆண்கள் வெளி உலகில் வீசப்பட்டவர்களாக அதன் நீள அகலத்தை இரண்டு இடுக்குகளைத் துய்த்து உணர்பவர்களாக உள்ளனர். முத்துவும் காளியும் பொந்துகளை, புதர்களை, பாறை இடுக்குகளை நாடிச் சென்று தங்கள் தனிமையைக் கொண்டாடுகின்றனர். அவர்களால் அது இயல்கிறது. எல்லாவற்றினின்றும் விடுபட்டுச் சில கணங்களேனும் வாழ ஆண்களால் இயல்கிறது. ஆனால் ஒரு நிர்ப்பந்தத் திற்காகக்கூடப் பெண் தன்னியல்பாகச் செயல்பட முடியாத போக்கு இருப்பதைப் பொன்னாவின் சூழல் வழி உணரலாம்.

குழந்தைச் சனியனுக்காகத்தான் பொன்னா தன் தாய், மாமியார், மாமனார், அண்ணன் ஆகியோர் வழிநடத்தப் பதினாலாந் திருவிழாவில் ‘சாமி பிள்ள’ வரம் வாங்கச் செல்கிறாள். காளியும் ஒத்துக்கொண்டதாகத் தான் நம்பிக்கையுடன் அவனுக்காகச் செல்கிறாள். ‘குழந்தைச் சனியன்’ என்ற சொற்களைப் பயன்படுத்த எந்தச் சனியன்கள் காரணம்? மாட்டுத் தரகு செய்யும் செல்லப்ப கவுண்டர், பொட்டுப்பாட்டி, சரசா, ‘இனிமே இவளுக்குக் கொழந்த எங்க பொறக்கப் போவுது’ என்று சாபம் விட்ட கன்னாயா, வேலம்மா வீட்டு விசேசத்தில் தாய்மாமன் பொண்டாட்டி, கருவாச்சி இப்படி எத்தனை சனியன்களை அவள் சமாளிக்க வேண்டி வந்தது. ஒவ்வொரு முறையும் அந்தச் சனியன்களின் கோரப் பற்களிலிருந்து வெளிப்பட்ட சொற்களால் அவள் பட்ட துன்பங்கள் அளவற்றவை. ஆனால் காளிக்கு ‘நீ சொன்னாப் போறன்’ என்ற சொற்கள் மட்டுமே உறுத்தலாகின்றன.

ஒரு விரதமாக, நேர்த்திக் கடனாக ஒத்துக்கொண்ட அவள் மனநிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் காளி அதைப் பல விதங்களில் கொச்சைப்படுத்திப் பேசுகிறான். இத்தனைக்கும் அவனும் திருமணத்திற்கு முன் இந்தப் பதினாலாந் திருவிழாவுக்கு ஓரிரு முறை சென்றதை அவன் தாயும் அறிந்திருக்கிறாள். பொன்னாவும் புரிந்துகொண்டாள் என்பதும் தெரிகிறது. ‘அனுப்பச் சொல்றாங்க’, ‘கூட்டிக் கொடுக்கச் சொல்றாங்க’, ‘போறங்கறா’ என்ற பேச்சுக் களாலும் ‘தேவிடியா முண்ட’, ‘கண்டாரோலி’ என்றும் பொன்னாவைக் கேவலப்படுத்துகிறான் காளி. பெண்கள் தங்கள் உடலை உடலாகவே நினைக்கக் கூடாது. அவர் களும் தங்கள் உடலைப் போகப் பொருளாகவே நினைக்க வேண்டும் என்பது எப்படி நியாயமாகும்?

நல்லாக்கவுண்டன் பொன்னாவுக்கு ஆறுதலளிக்கும் படியாகப் பேசுவதும் ‘நம்ம சந்தோசத்திற்காக நாம பெத்துக்கறம். அப்புறம் பசங்க சோறு போடல, பிள்ளைங்க கவனிக்கல என்பது அறிவு கெட்டதனம், குழந்தைகளைத் தூர இருந்து ரசிக்கனும்’ என்று யதார்த்தமாக வெளிப் படுவதும் முக்கியமானவை. மக்கள் இப்படிச் சந்தோசமான வாழ்க்கையை விட்டுச் சிக்கலுக்குள் இருந்து புலம்பும் குடும்ப வாழ்க்கையை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

நல்லாக்கவுண்டன் மாதிரி வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இலைமறை காயாக வேறொரு தொடர்பு வைத்திருக்கும் பெண் யாரும் நாவலில் இடம் பெறவில்லை. அப்படியான பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கப் பேச்சுடையவளாகத்தான் வெளிப்பட்டிருப்பாள். பொன்னாவுக்கு ஆறுதலளிப்பவளாக இருந்திருக்க மாட்டாள்.

பொன்னாவைப் பழிக்கும் பெண்களைக் காளி எதிர்க்கும் திராணியற்று இருக்கிறான். அந்தத் துன்பங் களைப் பொன்னா எதிர்நின்று தாங்கிக் கொள்கிறாள். அதனால் காளியை முழுமையாகச் சென்று அடை வதில்லை. மேலும் அவனுக்குப் பொன்னா பெரிதும் பாதிக்கப்படுவது உள்ளூர சந்தோஷத்தையே தருகிறது. அது ஓரிடத்தில் வெளிப்படவும் செய்கிறது. ஆனால் பொன்னா பதினாலாந் திருவிழாவுக்குச் சென்றுவிட்டாள் என்று உணர்ந்தபோதுதான் அவள் பல பேரால் பல இடங்களில் பட்ட பழி, துன்பம் முதன்முதலாக முழுமை யாக அவனைத் தாக்குவதை உணர்கிறான். ஆனாலும் வழமையான சராசரி மனித மனோபாவத்தில் அதன் காரண காரியத்தை அறிய விரும்பாமல் பொன்னாவையே குற்றவாளியாக்குகிறான். அவன் குறையுடையவன் என்று பொன்னாவும் சேர்ந்து தன்னைப் பழிப்பதுபோல் உணர்கிறான்.

பொன்னா பண்பாடு காக்கும் கலாச்சாரச் சூழலில் இருந்து எப்படி இப்படியான முடிவினை எடுத்தாள் என்ற கூக்குரலுக்குச் சாமி சார்ந்த திருவிழாச் சடங்குதான் பதில். கட்டுப்பாடுகள் கொண்ட விழுமிய சமூகத்தில் நிர்ப்பந்தம் சில வழிகளை உருவாக்கி வைக்கிறது. காளி விழித்துக் கொண்ட கால கட்டம் தொடங்கி இன்று வரை பெண்கள் குழந்தை வரம் வேண்டி பதினாலாந் திருவிழாவுக்குப் போகாமல் இருக்கலாம். ஆனால் இன்று மருத்துவ ரீதியானதாக இப்பிரச்சினை பரிணமித்து இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். குழந்தையற்ற பெண் ஒத்துழைத்தால் போதும், அவளை ஒடித்து மடக்கி மொத்தத்தில் ஒரு கலம் போலப் பாவித்துச் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்குகின்றனர். குழந்தையற்ற ஒருவன் தன்னைச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேறு பெண்களை எவ்விதத் தயக்கமும் இன்றி அணுகச் சமூகம் வழிவகை செய்கிறது. ஆனால் ஒரு பெண்ணுக்கு அங்கீகாரம் பெற்ற சில மீறல்களைப் பின்பற்றத்தான் வழிவகை செய்கிறது. எனினும் அதை ஏற்றுக்கொள்ளும் பெண்களை இயல்புக்கு மாறானவர்களாகவும் சித்திரிக்கிறது.

வெகு யதார்த்தமாக வாழ்வின் வரையறைகளைத் தவிர்க்கப் பெண்கள் தயாராகவே இருக்கிறார்கள். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கலாச்சார முரண்பாடுகள் கொண்ட ஆண்களையே அங்கீகரித்து வாழ் பவர்கள் பெண்கள். பொன்னாவின் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது மாதொருபாகன் நாவலின் தலைப்புப் பொருத்தம் நுட்பமானது. நேசித்துப் பாசம் காட்டியதும் சட்டெனப் பொய்யென்றாகி ‘தவிச்சுக் கெடக்கோனும்டி நீ’ என்ற கடைசிச் சொற்களால் இப்படியானவன்தான் மாதொருபாகன் என்பதாக வேறொரு பரிமாணத்தைத் தருகிறது.

குழந்தையற்ற பெண் படும் துன்பங்களை, அவலங்களை, தயக்கங்களை, மீறல்களைக் காலம் தாண்டிப் பதிவு செய்யும் விதமாக அமைந்துள்ளது பொன்னாவின் சித்திரம். அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது காளியின் சராசரி ஆண் சித்திரம்.

Pin It