‘பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெட்’ தலைமைப் பதவியிலிருந்து இன்போஸிஸ் நாராயணமூர்த்தி விலகியுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா மூர்த்தியின் பங்களிப்பு பற்றியும் விவசாய நிலங்களை அபகரிக்கச் செய்யும் அவரது முயற்சி பற்றி பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்த அடுத்த நாள் மூர்த்தி விலகியுள்ளார்.

விவசாயிகளின் பிரதிநிதியாகிய கவுடாவிற்கும் கார்ப்பரேட் முதலாளி நாராயண மூர்த்திக்கும் இடையேயான மோதல் என்பதாகவோ இல்லை பிராமண - லிங்காயத் மோதல் என்பதாகவோ இதற்கு விளக்கமளிப்பது என் நோக்கமல்ல. கவுடாவை அத்துணை நேர்மையான கார்ப்ரேட் எதிர்ப்பாளராக நாம் பார்த்துவிட முடியாது. இது ஏதோ எஸ்.எம். கிருஷ்ணாவிற்கும் கவுடாவிற்குமான அரசியல் மோதலின் எதிரொலிப்பாகவே தோன்றுகிறது.

நான் கவனம் குறிக்க விரும்புவது வேறு திசையில். இந்தப் பிரச்சினைக்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தை ஊடகங்கள் அளிக்கின்றன. எல்லோரும் கவுடாவைக் கண்டிக்கின்றனர். நிலப்பறிப்பு பற்றி திருப்திகரமான விளக்கத்தை நாராயண மூர்த்தி அளித்துவிட்டார் என இந்து இதழ் பாராட்டுகிறது. இந்துத்துவம் மற்றும் கார்ப்பரேட்களின் ஊதுகுழலாக மாறிப்போன ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மூர்த்தியை ஆதரித்து கவுடாவைச் சாடுகிறது.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பானால் இப் பிரச்சினை எப்படி இருந்திருக்கும். ஒரு மாநில ஆட்சியை சுண்டு விரலில் ஆட்டு வைக்கும் வலிமை பெற்ற ஒரு அரசியல்வாதியிடம் மூர்த்தி போன்றவர்கள் சரணடைந்திருப்பர். ஆனால் இன்றோ மூர்த்தியின் கை ஓங்கியிருக்கிறது. அடுத்த நாளே பதவி விலகுவதாக மூர்த்தி அறிவிக்கிறார். கவுடாவை மட்டுமின்றி முதல்வரையும் விமர்சித்து அறிக்கை விடுகிறார். முதல்வரோ பதவி விலக வேண்டாம் என மூர்த்தியிடம் வேண்டிக் கொள்கிறார். “நான் பதவி எல்லாம் விலகச் சொல்லவில்லை’’ என கவுடாவே பேச வேண்டியதாகிறது.

உலகமயத்தின் இன்னொரு பக்கம் இது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசியல்வாதிகளைக் காட்டிலும் கார்ப்பரேட் முதலாளிகள் பலம் வாய்ந்தவர்களாக மாறுகிறார்கள். கவுடா ஒரு வகையில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். அவரது பழைய அரசியல் புதிய பொருளாதாரத்திட்டம் தோற்றுப் போகிறது.

இது முதலாளிகளின் காலம். கார்ப்பரேட்களின் காலம்.

Pin It