பாமுக் பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது சென்ற மாதம் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது. சிறுகதை எழுத்தாளர் ஜி. சரவணனின் திருமணம் குடந்தை அம்மா சத்திரத்தில் நடைப்பெற்றது. முதல் நாள் நிகழ்வில் செப்டம்பர் 4 அவரது ‘தெற்கு பார்த்த வீடு’ சிறுகதைத் தொகுப்பு (அகரம், தஞ்சாவூர், ரூ 40) வெளியிடப்பட்டது. கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், பொதியவெற்பன், நான் அகரம் கதிர், ஜமாலன், யூமா வாசுகி, பிரான்ஸிஸ் கிருபா, கைலாஷ்சிவன் எனப்பலரும் கலந்து கொண்டோம். நான் பேசும் போது நமது எழுத்தாளர்களின் வேர்களைத் தேடும் முயற்சியை விமர்சித்தேன். வீடு தாண்டிய ஒரு வெளியை, குடும்பம் தாண்டிய பிரச்சினைகளைத் தனது கதைக்களத்திற்குள் கொண்டு வந்த சாதத் ஹஸன் மண்ட்டோவைச் சுட்டிக் காட்டினேன். அடுத்துப் பேச எழுந்த எஸ். ராமகிருஷ்ணன் ஆவேசம் கொண்டார். “நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்’’ என்கிற நீதியில் அவரது பதில் இருந்தது.

ராமகிருஷ்ணனின் பேச்சில் உள்ள முரண்களை விரிவாக விளக்க வேண்டியதில்லை. எழுத்துகளுக்கு ‘மாடல்கள்’ இருக்க முடியாது என்பது உண்மையே. ஆனால் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மட்டும் எப்படி மாடலாக முடியும்? அவர்களை விட நமது பக்கத்து மாநிலக்காரரான மண்ட்டோ மட்டும் ஏன் உதாரணமாக முடியாது. ஒருவேளை அவர் முஸ்லிம் என்பதாலா? ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களை மதிப்பிடும்போது அவன் எழுதும் போது என்ன செய்து கொண்டிருந்தான் என்பது ஒரு அளவுகோலாக இருக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். அவனை மதிப்பிட மட்டுமே அத்தகைய தரவுகள் உதவும். அவனது பிரதிகளை அல்ல. அது சரி, சமகால அரசியலிலும் சர்ச்சைகளிலும் இத்தனை பேசுகிற ராமகிருஷ்ணனின் பங்கு என்ன?

கருத்தரங்கு முடிந்த பின்பு திருமண மண்டபத்து மாடியில் அம்மா சத்திரம் நண்பர்கள் ஒரு சிறிய ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்திருந்தனர். முன்பு குறிப்பிட்டிருந்த எல்லோரும் வரிசையாக அமர்ந்திருந்தோம். இளங்கோவனும் இதர நண்பர்களும் அன்புடன் உபசரித்தனர். வழக்கம் போல கோணங்கி குவளைகளை நிரப்பினார். யாரோ கேட்டார்கள்: “ராமகிருஷ்ணன் எங்கே?’’ “அவர் குடிப்பதில்லை’’ என்று பதில் வந்தது. “இல்லை குடிப்பாரே’’ என்று இன்னொருவர் சொன்னார். கோணங்கியும் ஒப்புக் கொண்டார். நான் சொன்னேன்; “குடிப்பது பா.மு. ராமுகிருஷ்ணன். குடிக்காதது பா.பி. ராமகிருஷ்ணன்’’. “அதென்ன பா.மு., பா.பி?’’ என்றார்கள். ‘பாபா’வுக்கு முன்பு, ‘பாபா’வுக்குப் பின்பு என்று விளக்கினேன். God is great.

Pin It