காலையில் சமீரா தன் பிறந்தநாளுக்கு 

வகுப்பறையில் எல்லோருக்கும் 

மிட்டாய் வழங்கினாள். 

ஆரஞ்சு நிறத்தில் 

நீள் சதுரமான... ஆனால் 

சுவையற்ற மிட்டாய் அது. 

அடுத்தநாள் காலையில் 

மிட்டாய் வாங்க வசதியற்ற பால்யன் 

தன்னுடைய பிறந்தநாளுக்கு வகுப்பறையில் 

எல்லோருக்கும் கைபிடியளவு 

இனிப்பு சுவையுடைய 

சீனியை வழங்கினான். 

வகுப்பறையில் எல்லோரும் 

சுவைத்துக் கொண்டிருந்தோம் 

24 மணி நேர நீளமுள்ள மிட்டாயை. 

-- 

இன்றாகும் நாளை 

இன்று நடந்தவற்றை 

நாளை கூறினேன் 

நாளை நடந்தவற்றை 

நாளை மறுநாள் கூறினேன் 

நாளை நடப்பது பற்றி 

இன்று கூறச் சொல்கிறாள் - ஜோஸ்யக்காரனிடம் 

கட்டங்களை எண்ணிப் பார்த்தபடி 

நாளையைப் பற்றி இன்று கூறத் தொடங்கினான் 

கேட்டுக் கொண்டிருந்துவிட்டு 

வீட்டில் வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். 

இன்றே எல்லோரும் 

நாளைக்குள் அமர்ந்திருந்தோம். 

Pin It