எல்லா அடக்குமுறைகளும் முடிவுக்கு வந்தபின்பு
மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம்
நேற்றிரவு தற்கொலை செய்துகொண்ட மக்களின் முன்
அதே மாதிரியான அநேக யிரவு வரை
உயிர்வாழ வேண்டுமென்று...
அம்மக்களைப் புதைக்கத் துவங்கிய யிடங்களில்
வளரத் தொடங்கியது
இன்னும் பசுமையான நம்பிக்கைகள்
வறட்சியின் பாடலைப் பாடியே
ஒரு இரவுப் பிரதேசத்தைத் துவக்கினோம்.
முன்பெல்லாம் குளிர்ந்த மழையில் நிரம்பியிருந்த
அப்பிரதேசம் வொரு குழந்தையென
தன்னை மாற்றிக் கொண்டது.
அதன் அழுகையை நிறைவேற்ற பாடலிசைக்க
எல்லாக் கடவுளும் மன்றாடிக் கேட்கத் துவங்கின
திரும்பத்திரும்ப அப்பாடலையும்
திரும்பத்திரும்ப அவ்விரவையும்.
- ஜீவன் பென்னி