நிசியில் அதிர்ந்த
கனவின் பின்புலம்
எதுவாகவிருந்ததென
விழித்ததும்
நினைவைத் துழாவினேன்
வழக்கமான பாம்புத் துரத்தல்களாகவோ
நீருக்குள் மூழ்கித் திணறும்
சுவாசத்திற்கான தவிப்பாகவோ
நூற்றுக்கணக்கான
பிம்ப முலைகளில்
முகம் புதைத்துத் தூங்கும்
விருப்ப விழிப்புக் கனவாகவோ
அது இல்லாமலிருந்தது

ஒருவேளை
நெடு நாள் காத்திருப்பினுக்குப் பிறகு
முலை தொட மட்டும் அனுமதித்தவளின்
மீதிருக்கும்
முடிவிலா ஏக்கத்தின்
தொடர்ச்சியாக
அது இருந்திருக்கலாம்

மீட்கும் பேராசையில்
மூச்சடைத்து
நினைவின் அடியாழம் வரை அலசியும்
நைந்த பாசியைக் கூட பெற
முடியவில்லை
நினைவுத் திரும்பாக் கனவுகளும்
கால்களையகற்ற விரும்பாக் காதலிகளும்
சமன் செய்யும் புள்ளியின் பெயர்
என் இயலாமையாக
இருக்கக் கூடும்.

*****

வீட்டில் இருந்தால்
அம்மா மடி

வெளியில் என்றால்
அய்யனார் மடியில்

உருட்டு மீசையும்
முரட்டு பார்வையும்
எனக்கு மிகவும் பிடிக்கும்

குலசாமி என்று குடும்பத்தினர்
குலவை இடுவர்
எனக்கோ அவன்
சககூட்டாளிதான்...

அரளியை அரைத்து குடித்து
அம்மா செத்துப்போனதில்
அவனுக்கும் உடன்பாடில்லை
எனக்கும்தான்

அயலூர் வந்துவிட்டதால்
அவனை நேரில் பார்த்து
பல வருடங்களாயிற்று
இன்று என் கனவில் வந்தான்

ஆபத்தென்றால்
அழைக்க சொல்லி
அவன் அலைபேசி
எண்ணையும் தந்தான்

காதை கிள்ளியது போல்
சிணுங்கியது அலைபேசி

அய்யனார்தான்..
குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்

சிறப்பு பொருளாதார மண்டலம்
வருகிறதாம்.....

அவன் வசிப்பிடமும்
கைப்பற்று பட்டுவிட்டதாம்
காப்பாற்ற முடியுமா?

- அய்யனார்

Pin It