anna 350பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோதுதான், சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனும் சட்டம் நிறைவேறியது.

பழந்தமிழ் இலக்கியங்கள் எதிலும் தமிழர்கள் திருமணங்கள் புரோகிதர்களைக்கொண்டு நடைபெற வில்லை. சங்க இலக்கியமான அகநானூற்றில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் பழந்தமிழர் திருமண முறை பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் புரோகிதமோ, மந்திரச் சடங்குகளோ யாகம் வளர்த்தலோ எங்கும் இடம் பெறவில்லை. இடைக்காலத்தில்தான் அவைபோன்ற ஆரியச் சடங்குகள் திருமண விழாவில் இடம் பெறத் தொடங்கின.

முதன்முதலாக அவ்வாறான ஒரு நிகழ்வைச் சிலப்பதிகாரத்தில்தான் நாம் பார்க்கிறோம். ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டத் தீவலம் வந்து’ மணமுடித்துக் கொண்டவர்கள் கோவலனும், கண்ணகியும்தான். தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலாகப் பார்ப்பனர்கள் நடத்தி வைத்த திருமணம் என்னாயிற்று என்பதை எல்லோரும் அறிவோம்.

சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்னர், புரோகித மறுப்புத் திருமணங்கள் நடைமுறைக்கு வந்தன. புரோகித மறுப்பு சங்கம் என்றே ஓர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது.

1928க்கு முன்பாகவே நாகை காளியப்பன் போன்றவர்கள், புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்துகொண்டனர் என்றாலும், 1928 மே 5ஆம் நாள்தான் முதல் சுயமரியாதைத் திருமணம், அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள சுக்கிலநத்தம் என்னும் கிராமத்தில் நடைபெற்றதாகப் பதிவுகள் கூறுகின்றன. எனினும் 1967வரை அத்தகைய திருமணங்களுக்காண சட்ட ஏற்பு இல்லாமல்தான் இருந்தது.

1953ஆம் ஆண்டு ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், தீ வளர்த்தலும் (ஹோமம்), சப்தபதி என்னும் ஏழு அடிகள் எடுத்து வைத்தலும் இல்லாமல் நடைபெறும் இந்துத் திருமணங்கள் செல்லாது என்று தீர்ப்பே வழங்கியுள்ளது. அதனையும் மீறி, சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், தந்தை பெரியார் என்ன சொல்கிறார் என்பதைக் கவனத்தில் கொண்டு, ஏராளமான சுயமரியாதைத் திருமணங்கள் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டே இருந்தன. அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சர் ஆன பின்பே அது சட்டப்படி செல்லுபடியாயிற்று. தமிழர்களின் தன்மானத்தைத் திராவிட இயக்கமே உயர்த்திப் பிடித்தது.

“இந்துத் திருமணச் சட்டம் 1955, பிரிவு 7 வற்புறுத்துவதும், காலங்காலமாய் வைதிகம் போற்றி வருவதுமாகிய வைதிக வழிப்பட்ட திருமணச் சடங்குகளின் பொய்மையை அடையாளம் காட்டியதுடன், அதற்கு வாய்ப்பே இல்லாமல் துடைத்தெறிந்து வைதிகத்தின் கோட்டையைத் தகர்த்தெறிந்த இயக்கம் திராவிட இயக்கம் என்பதை எண்ணும் போது, நெஞ்சம் நிமிர்கிறது, உள்ளம் பூரிப்பால் நிறைகிறது” என்கின்றனர் பேராசிரியர்கள் இரா.சக்குபாய், க.நெடுஞ்செழியன் ஆகியோர் (“இந்தியச் சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை”).

PEERIYAR 350இந்தச் சட்டத்தை நிறைவேற்றும் தருணத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புடையது. அப்போது அவர் மிகுந்த ஜனநாயகத் தன்மையோடு கூறுகிறார், “பொதுமக்கள் பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை மேற்கொண்டவர்களானால், அந்தப் பழக்க வழக்கங்களுக்குச் சட்ட வடிவம் கொடுப்பதுதான் சட்டம் என்று ஏற்படுத்தப்படும்.

"Custom by usage gets legal sanction" இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அனைவரும் சுயமரியாதைத் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் சட்டமல்ல இது.

வழக்கறிஞர் மொழியிலே சொன்னால் கட்டாய வற்புறுத்தல் இல்லாமல் உரிமையை வழங்கும் சட்டம் (It is a permissive legislation) நமக்கான உரிமைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட திராவிட இயக்கம், அடுத்தவர்களின் உரிமைகளில் தலையிட்டுவிடக் கூடாது என்பதிலும் எப்போதும் கவனமாக இருந்தது. அதனைத்தான் அண்ணா அவர்கள் மேலே சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மற்ற இயக்கங்கள் எல்லாம் குடும்பத்திற்கு வெளியில் நின்று அரசியல் பேசின. திராவிட இயக்கமோ குடும்பங்களின் அன்றாட நிகழ்வுகளுக்குள்ளும் அரசியலின் தேவையை விளக்கின.

குழந்தைக்குப் பெயர் சூட்டுதல் தொடங்கி, இறந்துபோனபின்பு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வு வரையில், நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவும், நம் கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

Pin It