(லுத்விக் ஃபாயர்பாக்கும் ஜெர்மன் செவ்வியல் தத்துவத்தின் விளைபொருளும்)

“லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற தலைப்பில், தமிழில் வெளியாகியுள்ள எங்கெல்சின் நூல் ஒரு நூறு பக்கங்களுக்குள் அடங்கிவிடக்கூடிய சிறுநூல். ஆனால் இந்நூலின் பேசுபொருள் இன்றுவரை உலகம் முழுவது முள்ள ஆய்வாளர்களை அலைக்கழித்து வரும் பேசு பொருள் ஆகியுள்ளது. ஹெகலுக்கும் மார்க்சுக்கும் - மார்க்சியத்திற்கும், ஃபாயர்பாக்குக்கும் மார்க்சுக்கும் - மார்க்சியத்திற்கும் உள்ள உறவு என்ன என்பதே அப்பேசுபொருள். ஏன் இந்தப் பேசுபொருள் அந்த அளவுக்கு அறிவுலகை அலைக்கழித்து வருகின்றது ? என்ற கேள்விக்கான பதில் மிக நீளமானது. அந்நீளமான பதிலின் ஒரு பகுதி இந்தப் புத்தகத்தின் கதையில் கிடைக்கலாம்.

louthvik farrook 450ஒரு புத்தக மதிப்புரையே ஒரு புத்தகமாக

கார்ல் நிக்கோலா ஷ்டார்க்கேயின் “லுத்விக் ஃபாயர்பாக்” (1885) என்ற நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய ஒரு புத்தக மதிப்புரைதான் இந்நூல். ஷ்டார்க்கே (1858-1926) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சமூகவியலாளர்; தத்துவியலாளர்; ஃபாயர்பாக் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்; பேராசிரியர்; சுதந்திர ஜனநாயகவாதி; சோசலிஸ்டுகளுக்கும் சுதந்திரவாதி களுக்கும் இடைப்பட்ட பாதையில் பயணிக்க முற்பட்டவர்; ஐரோப்பாவிலேயே முதன்முதலாக உயர்நிலைப் பள்ளிக்கல்வியைக் கட்டணமில்லாமல் அளிப்பதற்காக 1899-ல் டேனிஷ் கல்விச் சங்கத்தை நிறுவியவர். இவர் எழுதிய ஃபாயர்பாக் பற்றிய நூலுக்கு எங்கெல்ஸ் விருப்பார்வத்துடன் மதிப்புரை எழுத முனையவில்லை; ஷ்டார்க்கேயின் நூல் தாம் மதிப்புரை எழுதுவதற்குத் தகுதியானது என்று எங்கெல்ஸ் கருதிய தாகவும் தெரியவில்லை. இதை எங்கெல்ஸ் எழுதிய மதிப்புரையில் ஷ்டார்க்கேயின் நூலை மிகச்சில இடங்களில் மட்டுமே சுட்டி விமர்சிப்பதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

எங்கெல்ஸ் இம்மதிப்புரை எழுத நேரம் ஒதுக்கிய காலத்தில் மார்க்சின் மூலதனம் நூலின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை அச்சுக்குத் தயாரிக்கும் மிகக் கடினமான பணியை மேற்கொண்டிருந்தார்; அதனால் அவர் தம் சொந்த நூல் வேலைகளைக்கூட முடிக்க முடியவில்லை.

“புதிய காலம்” என்ற ஜெர்மன் சோசலிச ஜனநாயக வாதிகளின் இதழ். அவ்விதழ் ஆசிரியர்கள் ஷ்டார்க் கேயின் நூலுக்கு ஒரு மதிப்புரை எழுதித் தருமாறு, அந்நூல் 1885-ல் வெளிவந்த உடனே எங்கெல்சை வேண்டினார்கள். புதியதாகக் கட்டியெழுப்பப் பட்டிருந்த ஜெர்மன் சோசலிச ஜனநாயகக் கட்சிக்குள் வந்திருந்த “மக்கள் திரளுக்கு” எந்த வகையிலாவது எங்கெல்சை எழுத வைத்துவிட வேண்டும் என்பது புதிய காலம் இதழ் ஆசிரியர்களின் ஆசை. எங்கெல்ஸ் வேறொரு உள்நோக்கத்துடன் மதிப்புரை எழுத இசைந்தார்.

1886ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதிப்புரையை ஒரு சிறுநூல் அளவுக்கு எழுதியும் கொடுத்துவிட்டார். எங்கெல்ஸ் மனதில் கொண்டிருந்த அந்த உள்நோக்கத்தை, இரண்டு ஆண்டுகள் கழித்து 1888-ல் இந்த மதிப்புரையை ஒரு நூலாக வெளியிடும் போது எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப் பிட்டார் : “ஹெகலுக்குப் பின் வேறெந்த தத்துவ வாதியையும்விட ஃபாயர்பாக் எங்கள் மீது செலுத்திய செல்வாக்கு முழுமையாக ஏற்கப்படாமலே இருந்துவரும் நன்றிக்கடன் என எனக்குத் தோன்றியது. எனவே... நான் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன்.” சரி, மார்க்சும் எங்கெல்சும் ஃபாயர்பாக் என்ற மனிதருக்குப் பட்ட நன்றிக்கடன் என்ன?.

நன்றிக்கடன்

லுத்விக் ஆண்டரஸ் ஃபாயர்பாக் (1804-1872) மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் ஏறத்தாழு 15 வயது மூத்தவர். ஒரு நீதிபதியின் மகனாகப் பிறந்தவர்; மூன்று சகோதரர்கள்; மூன்று சகோதரிகள்; சகோதரர்களில் ஒருவர் தொல்பொருள் அறிஞர்; மொழியியலாளர்; மற்றொருவர் தத்துவவாதியும் மொழிநூல் அறிஞரும் ஆவார். ஃபாயர்பாக் மானிடவியல் அறிஞர்; தத்துவவாதி;  கிறிஸ்தவ மதத்தை விமர்சனம் செய்வதில் ஆர்வம் காட்டிவந்தவர். 1831-ல் ஜெர்மனின் மாபெரும் தத்துவவாதி ஹெகல் இறந்த பிறகு, ஹெகலைப் பின்பற்றிய சீடர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்தனர். அதில் ஒரு கோஷ்டி இளம் ஹெகலியர்கள் அல்லது இடது ஹெகலியர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதில் தாவித் ஷ்ராவுஸ், ஆர்னால்ட் ரூகே, மாக்ஸ் ஸ்டின்னர் முதலானோருடன் ஃபாயர்பாக் பங்கு கொண்டார். இக்கோஷ்டியில் பின்னாளில் மார்க்சும் சேர்ந்து கொண்டார். இளம் ஹெகலியர்களில் வயதில் மிக இளையவர் மார்க்ஸ். ஆனால் சிந்தனை ஆற்றலாலும் அறிவுசார் கடும் உழைப்பாலும் மார்க்ஸ் எல்லோரையும் வியக்க வைத்தர்.

இளம் ஹெகலியர்கள் அனைவரும் ஜெர்மனி ஒன்றுபடுவதற்கும் முன்னேறுவதற்கும் தடையாக விளங்கிய முடியாட்சி முறையும் அம்முறைக்குப் புனித நீர் தெளித்து ஆசீர்வாதம் செய்த கிறிஸ்தவ சமயத் தையும் தாக்கி எழுதிவந்தனர். கிறிஸ்தவத் தொன்மங்கள் ஆதாரமற்ற, முன்னுக்குப் பின் முரணான, அறிவுக் கொவ்வாத குப்பைகள் எனத் தோலுரித்துக் காட்டினர். இந்தப் போக்கில் ஃபாயர்பாக் 1841-ல் கிறிஸ்தவத்தின் சாரம் என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் இளம் ஹெகலியர்களிடையில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நூலைப் படித்து முடித்தவுடன், ‘நாங்கள் (எங்கெல்சும் மார்க்சும்) ‘ஃபாயர்பாக்வாதி’ ஆகிவிட்டோம்’ என்று எங்கெல்ஸ் எழுதியுள்ளார். எங்கெல்சின் இந்தக் கூற்றை மிகைக்கூற்று என்று மறுக்கும் மார்க்சிய அறிஞர்களும் உண்டு. எவ்வாறாயினும் ஃபாயர்பாக்கினுடைய கிறிஸ்தவத்தின் சாரம் என்ற நூல் பற்றி 1845 வசந்த காலத்தில் எழுதிய பதினொரு சிறுகுறிப்புகளில்தான் மார்க்ஸ் வரலாறு பற்றிய பொருள்முதல்வாத விளக்கம் - மார்க்சியம் என்னும் தத்துவத்தின் மையஅச்சு - குறித்த கோட்பாட்டுச் சிந்திப்பை உருப்படுத்தி முடித்தார்.

ஃபாயர்பாக் மனிதனை மையப்படுத்திச் சிந்தித்தவர்; அவர் சமயம் குறித்த விமர்சனத்தில், மானிடவியல் புலம் வழங்கிய வெளிச்சத்தில், கிறிஸ்து என்ற தொன்மம் மனித சாரத்தின் பிரதிபலிப்பே என்ற முடிவுக்கு வந்தடைந்தார். இவ்வாறு விண்ணுலகில் இருந்துவந்த கிறிஸ்துவையும் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த ஹெகலின் “பரம்பொருளையும்” மண்ணுக்கு இழுத்து வந்துவிட்டார். ஆனால் அவர் மண்ணில் மனிதர் ஏன் தானாகவும், கிறிஸ்துவாகவும் பிளவுண்டநிலை அடைந்தனர் என்ற கேள்வியை நோக்கிப் பயணிக்க முற்படவில்லை. அவ்விடத்தில் ஃபாயர்பாக், அன்பினால் குறைகள் களையப்பட்டு நிறைவு எய்த வேண்டிய மானிட உலகம் பற்றிய போதனையில் இறங்கிவிட்டார். அந்தக் கேள்வியை மார்க்ஸ் எழுப்பிக் கொண்டார். பதிலையும் கண்டடைந்தார். அதுதான் மார்க்சியமாக உருவானது. இதுதான் மார்க்சும் எங்கெல்சும் ஃபாயர் பாக்குக்குப் பட்ட நன்றிக்கடன் ஆகும்.

இந்த நன்றிக்கடனைக் கணக்குத் தீர்க்க, இளம் ஹெகலியர்களைப் பற்றி “ஜெர்மன் கருத்துநிலை” என்ற தலைப்பில் இரு பகுதிகள் கொண்ட நூலை மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து 1845 நவம்பரில் எழுதத் தொடங்கி 1847 ஏப்ரல் மாதம் வாக்கில் முடித்தார்கள். போலிஸ் கெடுபிடிகள், பதிப்பக ஒழுங்குமுறைகள் ஆகியவற்றால் அந்நூல் முழுமையாக மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்நாளில் வெளியாகவில்லை. 1932ஆம் ஆண்டுதான் ஜெர்மன் மொழியில் முழுமையாக வெளியானது. தம் வாழ்நாளில் இந்த நூல் வெளிவரவில்லை என்ற மனக்குறை அவர் களின் எழுத்துகளில் ஆங்காங்கே காணமுடியும். நிற்க, இந்தச் சூழலில்தான் பெரும் பணிச்சுமைக்கிடையிலும் ஃபாயர்பாக் பற்றி எழுதக் கிடைத்த வாய்ப்பை எங்கெல்ஸ் பயன்படுத்திக் கொண்டார். 1888-ல் தனிநூலாக வெளியிடும்போது பழைய கையெழுத்துப்படிகளைத் தேடியெடுத்து, மார்க்ஸ் எழுதிய ஃபாயர்பாக் மீதான பதினோரு ஆய்வுக்குறிப்புகளையும் எங்கெல்ஸ் பின்னிணைப்பாகச் சேர்த்தார்.

ஜெர்மன் செவ்வியல் தத்துவமும் மார்க்சியமும்

ஃபாயர்பாக் குறித்த குறித்த எங்கெல்சின் சிறுநூல் ஜெர்மனில் 1888-ல் வெளியானது. 1889-ல் ல்வோவிச் செய்த மொழியாக்கமும் 1892-ல் பிளக்கானோவ் செய்த மொழியாக்கமும் என இரண்டு ருஷ்ய மொழியாக்கங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. பிரெஞ்சு மொழியாக்கம் மார்க்சின் மருமகன் லாப்பாக் செய்து, எங்கெல்ஸ் பார்வையிட்டு 1894-ல் வெளியானது. 1892-ல் பல்கேரிய மொழியாக்கமும், 1899-ல் உக்ரேனிய மொழியாக்கமும் வெளிவந்தன. 1902-ல் இத்தாலி மொழியாக்கமும் 1903-ல் ஆங்கில மொழியாக்கமும் வெளிவந்தன. இவ்வாறு, நூல் வெளியான பத்து ஆண்டுகளுக்குள் ஐரோப்பக் கண்டத்து முக்கியமான மொழிகளில் தொழிலாளர்களுக்கான பிரசுரமாகப் பரவலாக மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டது. பரவலாக வாசிக்கப்பட்டது.

மார்க்சியத் தத்துவம் என்பது பற்றிய புரிதலை இந்நூல்தான் உலக அளவில் கட்டியமைத்தது. இந்நூலில் பிஹ்டே, காண்ட், ஹெகல், ஃபாயர்பாக் முதலானோரின் எழுத்துகளையும் கருத்துகளையும் தண்ணீர் பட்டப்பாடாக எங்கெல்ஸ் எடுத்து விவாதிக் கின்றார்; அத்துடன் கொஞ்சம் மார்க்ஸ்-எங்கெல்சின் தன்வரலாறு ஊடுபாவாகப் போகின்றது. ஆயினும், ஜெர்மன் செவ்வியல் தத்துவத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள உறவு பற்றி எங்கெல்ஸ் கொடுத்த பன்முகமான விவரணைகள், பிற்காலத்தில் கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவிக்கச் செய்தது. அவ்வேறுபாடுகளின் ஒருமுகம் இந்நூலின் தலைப்புகள்.

Ludwig Feuerbach und der Ausgang der klassischen deutschen Philosophie என்ற ஜெர்மன் மொழித் தலைப்பு ஆங்கிலத்தில் மூன்றுவிதமாக மொழியாக்கம் மொழியாக்கம் செய்யப்பட்டது. முதலில் 1903-ல் அகஸ்டின் லூயிஸ்  Feuerbach: the roots of the socialist philosophy என்று தலைப்பிட்டார். இரண்டவதாக இண்டர்நேசனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட போது, Ludwig Feuerbach and the Outcome of Classical German Philosophy என்று தலைப்பிடப்பட்டது. மூன்றாவதாக, நாமறிந்த ருஷ்ய ஆங்கிலப் பதிப்புகள் Ludwig Feuerbach and the End of Classical German Philosophy என்ற தலைப்பில் வெளிவந்தன.

முதல் தலைப்பு மிக வெளிப்படையாக, “ஃபாயர்பாக்: சோசலிசத் தத்துவத்தின் வேர்” என்கிறது. அதாவது மார்க்சியத்தின் வேர் ஃபாயர்பாக் என்கிறது. இதை மார்க்சிய அறிஞர்களில் ஒரு தரப்பினர் மிக மோச மான எளிமைப்படுத்தல் என்கின்றனர். இரண்டாவது தலைப்பு “லுத்விக் ஃபாயர்பாக்கும் ஜெர்மன் செவ்வியல் தத்துவத்தின் விளைபொருளும்”. மூன்றாவது தலைப்பு “லுத்விக் ஃபாயர்பாக்கும் ஜெர்மன் செவ்வியல் தத்துவத்தின் முடிவும்”. இந்தத் தலைப்புகளில் ஜெர்மன் செவ்வியல் தத்துவத்தின் “விளைபொருள்”, “முடிவு” என்று குறிக்கப்படுபவை மார்க்சியத் தத்துவம்தான்; ஃபாயர்பாக்கும் மார்க்சியமும் உம் விகுதி கொண்டு இணைக்கப்படுகின்றது. ஆனால் இவற்றிலும் ஒரு பிரச்சினை இருக்கின்றது. அது மார்க்சியம் ஜெர்மன் செவ்வியல் தத்துவத்தின் விளைபொருளா, முடிவா...? பெரும்பாலான ருஷ்ய அறிஞர்கள் ஜெர்மன் செவ்வியல் தத்துவத்தின் முடிவு, அதன் கொடுமுடி என வாதித்தனர். ஆனால் ஆங்கில உலக அறிஞர்கள் மார்க்சியம் விளைபொருள் என வாதித்தனர். இவ்வாறு நூலுக்குள் போகாமல் இப்படி இந்நூலின் அட்டைகளைச் சற்று உன்னிப்பாகத் திருப்பிப் பார்த்தாலே போதும், பெரும் தத்துவப் பிரச்சினைகள் வந்து முட்டிக் கொள்ளும்.

தமிழ் மொழியாக்கங்கள்

இந்நூலுக்கு இரண்டு தமிழ் மொழியாக்கங்கள் உண்டு. முதல் மொழியாக்கம், “லுத்வின் பேயர்பாக்கும் தரமான ஜெர்மானிய தத்துவத்தின் முடிவும்” என்ற தலைப்பில் தொ.மு.சி. ரகுநாதன் செய்தார். இம் மொழியாக்கம் 1963-ல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட “மதம் பற்றி” என்ற மார்க்ஸ்-எங்கெல்ஸ் தொகைநூலில் இடம்பெற்றுள்ளது. இத்தொகைநூல் நீண்ட காலமாக அச்சில் இல்லாமல், 2014-ல்தான் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ரகுநாதன் மொழி யாக்கம் வெளிவந்து ஏறக்குறைய பதினைந்து ஆண்டு களுக்குப் பின் மற்றொரு மொழியாக்கம் வெளிவந்தது.

மற்றொரு மொழியாக்கம், “லுத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற தலைப்பில் தனிநூலாக 1977ஆம் ஆண்டு  மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டது. அப்போது 104 பக்கங்கள் கொண்ட இத்தனிநூலின் விலை 50 பைசாக்கள். இம்மொழியாக்கத்தை செய்தவர் ஆர்.கே. கண்ணன் ஆவார். இம்மொழியாக்கத்தின் திருத்தப்பட்ட ஒரு வடிவமே, முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-எங்கெல்ஸ் தேர்வுநூல்கள் 10ஆம் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. திருத்தப்பட்ட வடிவம், அதற்கு முன் வெளியான வடிவத்தைவிடக் கடினமாக்கப்பட்டுள்ளது. இத்திருத்தப்பட்ட வடிவத்தில் தனித்தொடர்கள் கூட்டுத்தொடர்கள் ஆக்கப்பட்டு உள்ளன; ஒருசில கலைச்சொல் திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக, alienation என்ற கலைச்சொல் அந்நியமாதல் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொ.மு.சி. ரகுநாதன், ஆர்.கே. கண்ணன் ஆகிய இரண்டு மாபெரும் ஜாம்பவான்களின் மொழி பெயர்ப்புகள் உள்ளன. ஆயினும் இந்நூலின் பேசுபொருள், மொழியாக்கம் குறித்து தமிழில் பெரிய அளவு விவாதங்கள் நடந்த மாதிரி தெரியவில்லை.

ஃபாயர்பாக்கும் பெரியாரும்

இச்சிறுநூலை தனிப்புத்தகமாக, 1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 33 மொழிகளில் 121 முறை, 48,06,000 படிகளை சோவியத் ஒன்றியம் வெளி யிட்டதாக The Great Soviet Encyclopedia சொல்கிறது. இந்தக் கணக்கு இந்தப் புத்தகத்தின் பிரமாண்டமான பரவலைக் காட்டுகின்றது.  எப்படியாயினும் இந்தக் கணக்குக்கு வெளியில்தான் தமிழ் மொழியாக்கங்கள் உள்ளன.

1977ஆம் ஆண்டுக்குப் பிறகு இச்சிறுநூல் தனிப் புத்தகமாக வெளியிடப்பட்டதா என்று தெரியவில்லை. 2000ஆம் ஆண்டுகளுக்குப் பின் மார்க்சிய நூல்களை நாமே வெளியிடத் தொடங்கிய பின்கூட இந்நூல் திரும்ப அச்சிடப்படவில்லை. இந்நூலுக்கு வாசகத் தேவை எழவில்லை போலும்.

நான் 2003 ஆம் ஆண்டுக்குப் பின் மார்க்சியம் பற்றி வாசிக்கத் தொடங்கினேன். அக்காலத்தில் 1977ஆம் ஆண்டுப் பதிப்பைப் பழைய புத்தகக் கடை களிலிருந்து வாங்கியுள்ளேன். இத்தனிநூலும் தேர்வுநூல் தொகுதி 10-ல் இந்நூல் வாசகமும் ஒன்றெனவே முதலில் நினைத்தேன். பிறகுதான் வாசகங்கள் வேறுபடுவதை உணர்ந்தேன். மார்க்சிய வகுப்புகளிலும் மார்க்சியம் குறித்த வாசிப்பு நூல்பட்டியலில் இச்சிறுநூலும் தவறாமல் இடம்பெற்றுள்ளதைக் கண்டுள்ளேன். முதிய, இளம் தோழர்கள் அனைவரும் இந்நூலை வாசிக்க முயற்சிப்பதைக் கண்டுள்ளேன்.

தோழர்களுடனான பொதுவான பேச்சுகளின் போது, ஃபாயர்பாக்கின் கொச்சைப் பொருள்முதல் வாதத்தை விமர்சனம் செய்து அழித்து மார்க்ஸ்-எங்கெல்ஸ் இயங்கியல் பொருள்முதல்வாதத்தைப் படைத்தனர் என்று வாதம் முன்வைக்கப்படுவதைக் கேட்டுள்ளேன். இந்நூலில் வரும் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் வகைப்பாடு, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவாக இயங்கியல் பொருள்முதல்வாதம் தோன்றியது என்ற எங்கெல்சின் வாதம் போன்றவை நம் தோழர்களுக்கு வேத வாக்கியங்கள் போன்றவை; மீற முடியாதவை; கூடாதவை. மற்றபடி, காண்ட், ஹெகல், ஃபாயர்பாக் ஆகியோருக்கும் மார்க்சியத்திற்கும் இடையிலான சிக்கலான உறவும் வரலாறு பற்றிய பொருள்முதல்வாத விளக்கம் பற்றிய எங்கெல்சின் விவரணைகளும் தோழர்களின் கவனத்தை ஏனோ ஈர்க்கவில்லை. இயோசிஃப் டித்ஸ்கென் என்ற ஜெர்மன் தொழிலாளி தன் சொந்த வழியில், ஹெகல் போன்ற ஜெர்மன் செவ்வியல் தத்துவவாதிகளின் துணையின்றி - மார்க்சின் துணையின்றியும்கூட - இயங்கியல் பொருள்முதல்வாதத்தைக் கண்டடைந்தார் என்று எங்கெல்ஸ் போகிற போக்கில் குறிப்பிடுகிறார். இப்படியான அதிர்ச்சியான தகவல்களும் ஜெர்மன் செவ்வியல் தத்துவமும் அதன் கலைச்சொற்களும் தோழர்களின் வாசிப்பில் கவனத்தைப் பெற்றதாகவும் தெரியவில்லை.

ஃபாயர்பாக்குக்கு இணையாக இங்குப் பெரியாரைக் குறிப்பிடுவார்கள். பெரியார் ஒரு கொச்சைப் பொருள் முதல்வாதி என்ற தருக்கத்தில் வாதிக்க இந்த ஒப்பீடு. மார்க்சியத்துக்கு முன்பு இருந்த பொருள்முதல்வாதங்கள் அனைத்தும் கொச்சைப் பொருள்முதல்வாதம் என்று விவாதத்தில் சடாரென ஒரு பாய்ச்சல் நிகழும். அப்புறம் தத்துவ வரலாற்றை முழுவதும் சுவையற்ற வகையில் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்று முத்திரை பதிக்கும் வாய்ப்பாடு ஆகிவிடுகின்றது. மார்க்சியம் தத்துவ வரலாற்றின் முடிவு, கொடுமுடி, உச்சி. அதாவது ஹெகலின் “பரம்பொருள்” என்ற வகையினம் போல. இப்படித்தான் இந்நூலைத் தோழர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது என் அனுபவம். அதனால்தான் நம் சொந்த தத்துவ மரபு குறித்த ஆழ்ந்த பயிலுதலும் அதற்குள்ளாக நின்று மார்க்சியத்தை விளங்கிக் கொள்ளுதலும் நம் தோழர் களிடம் காணமுடியவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இதற்கு மாறாகவும் இச்சிறுநூலை விளங்கிக் கொண்டுள்ள பல தோழர்களையும் பார்த்துள்ளேன். அவர்கள்தாம் இந்த நூலை ஆழ்ந்த பயிலுதல் நோக்கி என்னை இட்டுச் சென்றவர்கள். மார்க்ஸ்-எங்கெல்சின் சொற்பயன்பாட்டில் கொச்சை என்ற சொல்லுக்கு, தத்துவத்தின் திரட்சியை நீர்த்துப்போகச் செய்தல் என்பது பொருள். இந்தப் பொருளில் ஃபாயர்பாக்கும் பெரியாரும் கொச்சைப் பொருள்முதல்வாதிகள் அல்லர். மற்றபடி இந்த இருவருக்கும் எண்ணற்ற சமூக, அரசியல், பண்பாட்டு, அறிவுசார் சூழல் வேறுபாடுகள் உண்டு. ஆனால் ஒன்று, ஃபாயர்பாக்குக்குப் பின் மார்க்ஸ் வந்தது போல, இங்குப் பெரியாருக்குப் பின் அந்தளவுக்கு தத்துவ “நடைமுறை”யைக் கைகொண்ட எந்த மனிதரும் தோன்றவில்லை.  இச்சிறுநூலை வாசித்தலும், இதனோடு தொடர்புடைய பொருள் பற்றிய தேடலும் இயங்கியலைப் போல நிறைவடையாது, முழுமை பெறாது தொடர்ந்து கொண்டே செல்கின்றது.

வ.நி. குஸ்னித்ஸோவ் என்ற ருஷ்ய அறிஞர் இந்நூலுக்கு எழுதியுள்ள “பி.எங்கெல்ஸ் எழுதிய லுத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவ ஞானத்தின் முடிவும்” என்ற தலைப்பிலான கையேட்டை முன்னேற்றப் பதிப்பகம் 1989ஆம் ஆண்டு வெளியிட்டு உள்ளது. இக்கையேடு ஹெகல், ஃபாயர்பாக் பற்றியும் அவர்களது தத்துவங்கள் பற்றியும் அறிமுகநிலையில் விளக்கம் தருகின்றது. இது இப்பேசுபொருள் குறித்த முதல்நிலை வாசகருக்கு மிக பயனுடையது. இந்நூல் ஆசிரியர், மார்க்ஸ் மீது ஹெகல் செலுத்திய செல்வாக்கை அதிகமாகவும், ஃபாயர்பாக் செலுத்திய செல்வாக்கைக் குறைத்தும் மதிப்பிடுகின்றார்.

எம்.எஸ். முஹம்மது அனஸ்  என்ற இலங்கைத் தத்துவப் பேராசிரியர் அவர்கள் நாவாவின் ஆராய்ச்சி இதழ் 44-45ல் எழுதியுள்ள “மார்க்சின் பாயர்பாஹ் ஆய்வுரைகளில் மனிதநலவாதச் சிந்தனை - ஒரு மெய்யியல் நோக்கு” என்ற ஆய்வுக் கட்டுரை மிகமிக சிறந்த தத்துவ ஆய்வு ஆகும். இக்கட்டுரை இந்நூலின் பேசுபொருளோடு தொடர்புடையது. மிக விரிவாகவே மார்க்ஸ்-எங்கெல்ஸ் மீது ஃபாயர்பாக் செலுத்திய செல்வாக்கை வலியுறுத்துகின்றார். மார்க்ஸ்-எங்கெஸ் ஆகியோருடைய பொருள்முதல்வாதம் நமது தத்துவமரபில் உள்ள சடவாதம் போன்றது அன்று, சுபாவவாதம் - இயல்புநெறி போன்ற ஒன்று என்னும் அனஸ் அவர்களுடைய கருத்து ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகிறது.

Pin It