senthil balaji news biteதமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரு விஜய் பேசிய இரண்டாவது பொதுக்கூட்டம் நேற்று (10-07-2026) கரூரில் நடைபெற்றது!

முதலமைச்சர் பதவியின் தரத்திற்கும், கண்ணியத்திற்கும் ஏற்ற வகையில் அவருடைய பேச்சு இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அது ஒரு பெருத்த ஏமாற்றம் என்றே சொல்ல வேண்டும்!

''திருட்டு திமுக'', ''கூட்டுக் களவாணிகள்'' போன்ற தொடர்களை அவர் தன் பேச்சில் பயன்படுத்தினார். வேட்டைக்காரனாகிய தன்னைப் பார்த்து, எதிர்க் கட்சியினர் ஓடு ஓடு ஓடு என்று ஓடுகிறார்கள் என்றார். எல்லாவற்றையும் தாண்டி "கொளத்தூர் மக்கள் கொத்து புரோட்டா" போட்டுவிட்டார்கள் என்று வேறு பேசினார்!

30 ஆண்டுகளுக்கு முன்னால், அவர் நடித்த விஷ்ணு என்னும் திரைப்படத்தில், "தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா" என்று ஒரு பாடல் வரும்! ஆபாசமாக உடை உடுத்திய ஒரு பெண்ணுடன் அன்றைய நடிகர் விஜய் அந்தப் பாடலுக்கு நடனமாடுவார். அந்த நடனத்தின் நடுவே, இந்தப் பாடலைப் பாடியவர் விஜய் என்று எழுத்துகள் வரும்! இன்னும் அந்தத் தரத்தில் இருந்து அவர் மீண்டு வரவில்லை என்பதைத்தான், "கொளத்தூரில் கொத்து பரோட்டா" பேச்சு உறுதிப்படுத்துகிறது!

அனைவரிடமும் அன்புகாட்டியும், எதிர்க்கட்சிகளையும் கூட அரவணைத்தும், உயரத்தில் நின்று பேச வேண்டிய ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அந்தக் கட்சியின் நான்காம் தரப் பேச்சாளர் போலப் பேசி முடித்திருக்கிறார்!

இவற்றைத் தாண்டி, அவர் பேசிய பேச்சில் எத்தனை செய்திப் பிழைகள் இருக்கின்றன என்பதை, நேற்றும், இன்றும் சமூக வலைத்தளத்தில் ஏராளமானவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்!

தேர்தல் முடிந்து தவெக ஆட்சிக்கு வந்துவிட்டது என்பது திமுகவிற்கு நினைவு இருக்கிறதா என்று அவர் கேட்கிறார். தேர்தல் முடிந்து, தானும் வெற்றி பெற்று முதலமைச்சராகி விட்டோம் என்பது இவருக்கு நினைவு இருக்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை!

பொதுவாக வெற்றி ஆணவத்தைக் கொண்டு வரும் என்பதை நாம் அறிவோம்! ஆனாலும் இவ்வளவு ஆணவம் கூடாது!

முதலமைச்சரின் அப்பா சந்திரசேகர், ஒரு படத்தில் பாடல் காட்சியில் நடித்திருப்பார். அதில் அவர் பாடும் பாட்டின் தொடக்க வரிகள், "ஆடாதடா ஆடாதடா மனுஷா" என்பது!

தொலைநோக்குப் பார்வையோடு, அவர் தன் மகனுக்கு அப்போதே பாடியிருக்கிறார் போல் இருக்கிறது!

சுப.வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.