arvindhan 350“மிச்சமென்ன சொல்லுங்கப்பா” என்ற கி.பி. அரவிந்தனின் கவிதை நூல் ஒன்றை ச.மா.பன்னீர் செல்வம் கொண்டு வந்து கொடுத்தார். அடுத்த இரண்டாம் நாள் செய்தி வருகிறது, கி.பி.அரவிந்தன் இறந்து விட்டார் என்று. அன்று மார்ச் 8, உலக மகளிர் நாள்.

இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். இலக்கிய தளத்தில் அவர் கி.பி. அரவிந்தன். அரசியல் களத்தில் சுந்தர். யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள நெடுந்தீவில் 1953 செப்டம்பர் 17ஆம் நாள் பிறந்த அவர் மறைந்தபோது வயது 62.

1972ஆம் ஆண்டு, இலங்கை புதிய அரசமைப்பின் கீழ் குடியரசாக அறிவிக்கப்பட்டு, சிறிலங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, புதிய அரசியலமைப்பில் தமிழர்கள் உட்படச் சிறுபான்மை மக்கள் அங்கே புறக்கணிக்கப்பட்டார்கள்.

அதற்கு எதிராக அரவிந்தன் போராடத் தொடங்கினார். இதுதான் அவரின் முதல் அரசியல் நுழைவுப் போராட்டம். அப்போது வயது 19, கைதானார் முதல்முறையாக.

ஈழப்புரட்சி அமைப்பின் பொது ஆணைக்குழு உறுப்பினரான அவர், சென்னையில் தன் இலக்கியச் சிந்தனைக்குப் பதியமிட்டார்.

சென்னை உஸ்மான்சாலை, சாரித் தெருவில் கவிஞர் இளவேனில் இல்லத்தில், ஈழத்துக் கவிஞர் சேரன், வைகறை இன்னும் இலக்கிய ஆர்வலர்களுடன் விடிய விடியக் கவிதை, இலக்கியம்பற்றிப் பேசிய நிகழ்வு ஓர் அழியாக் கோலம்.

10 ஆண்டுகள் சென்னையில் இருந்த அவர், 1985ஆம் ஆண்டு இலங்கை சென்றார். பின் பிரான்ஸ் நாட்டில் பாரிசில் குடியேறினார். அங்குதான் அவரது மரணமும் நிகழ்ந்தது.

மரணமடையும் போது அவர் பிரான்ஸ் குடியுரிமை பெறவில்லை. புலம்பெயர் தமிழராகவே இருந்தார். அவர் நெஞ்சில் இருந்தது அவரின் தாய்மண்.

Pin It