நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாது மோடி அரசு, அச்சட்டத்தைப் பிடிவாதமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இச்சட்டம் குறித்து வெளிப்படையாகக் கருத்துக் கூறாத அ.இ.அ.தி.மு.க., இறுதியில் தன் வேடத்தைக் கலைத்துவிட்டு, இக்கொடிய சட்டம் நிறைவேற ஆதரவு அளித்துவிட்டது.

விவசாயத் தொழிலின் முதுகெலும்பை முறித்துள்ள மோடி அரசுக்குத் துணைபோன அதிமுக, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று காட்டமாகக் கூறியிருக்கிறார் வைகோ.

பா.ஜ.க.வின் நெருங்கிய கூட்டணிக் கூட்டாளியான சிவசேனா கட்சி, “கனவுகளை விதைத்து, விவசாயிகளிடம் வாக்குக் கேட்டு, பெரும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதிகாரத்திற்கு வந்தபின்னர், அவர்களின் ஒப்புதலின்றி நிலத்தைப் பறிக்கும் பாவத்தில் பங்கேற்க சிவசேனா ஒருபோதும் விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறது.

‘காவிரித் தாய்’ என்று பட்டம் கொடுக்க, கோடிகளைக் கொட்டி, அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு விழா எடுத்தார்கள் அதிமுகவினர். காவிரி கடைமடைக்குக் கூட வரவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

ஒருவேளை எதிர்வரும் கால மாற்றத்தினால் அந்தக் காவிரிநீரே வந்தாலும், அதைக்கொண்டு விவாசாயம் செய்ய, நிலங்கள் தங்களிடம் இருக்குமா என்று விவசாயிகள் அஞ்சுகின்ற நிலையை அதிமுக ஏற்படுத்தி விட்டது. இது மக்கள் விரோத செயல்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுப் பதவி இழந்தவர் ஜெயலலிதா. இப்பொழுது மேல்முறையீடு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி போயஸ் கார்டனுக்கு வந்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்திச் சென்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்ட முன்வடிவுக்கு அதிமுக ஆதரவாக வாக்களித்துள்ளது.

இந்த மூன்று நிகழ்வுகளும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதைப் பாமரரும் புரிந்து கொள்ள முடியும்.

மக்கள் நலன், நாட்டு முன்னேற்றம் இவைகளுக்காக சிறை சென்ற தலைவர்களை வரலாறு குறித்து வைத்துள்ளது.

நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போனாலும் பரவாயில்லை, தான் மட்டும் பதவி சுகத்தோடு வாழ்ந்தால் போதும் என்று செயல்படும் ஒரு ‘தலைமையை’ முதன் முதலாக இன்று நாடு பார்க்கிறது.!

Pin It