periyar 350 copyஇடஒதுக்கீடு, சாதிவாரிக் கணக்கெடுப்பு இவை இரண்டிற்கும் எதிராகச் செயல்படுபவர்கள், சமூக நீதிக்கான முற்போக்குச் சிந்தனை உடையவர்களாக இருக்க மாட்டார்கள். அந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் நின்று கொண்டு இருக்கிறார்.

தொடக்கத்தில் இருந்தே அவர் பெரியாரிய எதிர்ப்பாளர் என்பது நாடறிந்த செய்தி. அவர் சொல்கிறார், “சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு எதிராகப் பெரியார் பேசியதன் நோக்கம், இந்திய சமூகத்தில் சாதிப் பிரிவுகளும், வித்தியாசங்களும் இருக்கக்கூடாது என்பதுதான்” (தினமணி, 3.12.2014).

எங்கே பேசினார்? எப்போது பேசினார்? கட்டுரையில் ரவிக்குமார் பெரியாரின் பேச்சு என்று மேற்கோள் காட்டியிருக்கும் பகுதி அவரின் கூற்றுக்கு வலுசேர்ப்பதாக இல்லை. வெறும் திரிபுவாதமாகவே இருக்கிறது.

இதோ தந்தை பெரியார்: “எப்படியாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதை ஒழித்துவிட்டால், அதுவே பார்ப்பனர்களுக்குச் சுயராஜ்யமளித்த மாதிரியாகையால், அதை ஒழிக்கக் கட்சியும், பலத்தையும் சேர்க்கத்தான் இவ்வளவு தந்திரங்களும், சூழ்ச்சிகளும் பணச்செலவும் செய்வதே தவிர வேறில்லை. அதனால்தான் பார்ப்பனர் என்கிற கூட்டமே அடியோடு ஆண், பெண் அடங்கலும், கட்சி பேத - அபிப்ராய பேதமின்றி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

இதற்காகவே ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியாரும் அடிக்கடி பட்டணம் போவதும், ஸ்ரீநிவாச அய்யங்கார் வெற்றிக்காகக் காத்திருப்பதும், அவர்கள் கூட்டங்களில் பேசுவதும், வகுப்பு வாதங்கள் மாத்திரம் கூடாதென்பதும் ஆகிய தந்திரங்களைச் செய்து வருவதும், ஸ்ரீமான் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் வகுப்புவாதம் கூடாதென்பதும், பார்ப்பனரல்லாதாரிலும், முகமதியர்களிலும், கிறிஸ்தவர்களிலும், தீண்டாதார் என்னும் வகுப்புகளிலும் கூலி கொடுத்து, ஆட்களைப் பிடித்து, வகுப்புவாரிப் பிரநிதித்துவம் அரசியலில் பேசக்கூடாதென்று சொல்லச் செய்வதுமான காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

ஆதலால், தமிழ் மக்கள் இதுசமயம், ஏமாந்து போகாமல், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் அவசியத்தையும், அதற்கெதிராய்ப் பார்ப்பனர் செய்யும் பிரச்சாரத்தின் நோக்கத்தையும், அவர்களுடைய யோக்கியதைகளையும், முன்பின் அபிப்ராயங்களையும் பாமர மக்கள் சரியாக உணரும்படி பிரச்சாரங்களைச் செய்து, எப்படியாவது அதை அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி வற்புறுத்துகிறோம்” (குடிஅரசு, தலையங்கம், 21.11.1926).

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான தந்தை பெரியாரின் அழுத்தமான இந்த வரிகளில் இருந்து இரண்டு செய்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று, தந்தை பெரியாருக்கு எதிராக ரவிக்குமார் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்கள்.

மற்றொன்று பார்ப்பனர்களுக்கும், பா.ஜ.க.வுக்கும் முட்டுக் கொடுக்கும் வேலையை அவர் செய்து கொண்டிருக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து கொண்டே!.

பெரியாரின் கருத்துக்கு எதிராக, இப்படித் தன் கட்டுரையில் ரவிக்குமார் எழுதுவதில் இருந்து, அவருக்குப் பெரியாரையும் தெரிய வில்லை, சாதியத்தின் அடிப்படையும், அதன் அடையாளமும், சமூகநீதியும் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.

22.11.1925ஆம் நாள் தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையில் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது ஒரு தேசத்தின், ஆட்சியின் பொது உரிமையும், அந்நாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத்தாழ்வின்றி சமமாய் அடைய வேண்டியது என்பதுதான்” என்று தெளிவாகச் சொல்கிறார்.

“தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்பட்ட வகுப்பார்கள் என்று கருதப்பட்டவர்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாமல் எப்படிச் சமத்துவம் ஏற்படும்” என்றும் வினா எழுப்புகிறார்.

“வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகு, மறுபடியும் உள் வகுப்புகள் ஏற்படுமே என்கிற பயமிருக்குமானால் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டியதுதான்” என்று உள் ஒதுக்கீடு குறித்தும் பெரியார் பேசுகிறார்.

1925ஆம் ஆண்டு காஞ்சி மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேவை என்ற தீர்மானம் இயற்றி, அது குறித்துப் பெரியார் பேசும்போது, ஒரு வகுப்புக்கு மற்றொரு வகுப்பு நம்பிக்கை ஏற்படும்படியும், ஒருவர் பாத்தியத்தில் மற்றொருவர் பிரவேசிக்காதபடியும் பந்தோபஸ்து ஏற்பட்டுப் போக வேண்டும்.

அவ்வித பந்தோபஸ்துதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது” என்று சொன்னதன் மூலம், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற இடஒதுக்கீடு நடைமுறையில் எப்படி அமைய வேண்டும் என்பதையும் புரிய வைக்கிறார்.

அது மட்டுமல்ல! “இரண்டு சாதி மக்களுக்கும் (பார்ப்பனர் - சூத்திரர்) உத்தியோகம், பதவி, ஆட்சித் தலைமை ஆகியவைகளில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதப்படி, சாதிவாரி உரிமையளித்து அந்தப்படி அந்தந்த சாதியை அமர்த்துதல்” (விடுதலை, 13.12.1960) என்று எழுதியதன் மூலம், தந்தை பெரியார் சாதிவாரி கணக்கெடுப்பும், பிரதிநிதித்துவமும் மிக மிக அவசியம் என்பதை பிற்காலத்திலும் உறுதி செய்கிறார்.

இப்படி இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு, சாதிவாரிக் கணக்கெடுப்பும் ஒதுக்கீடும் குறித்துத் தந்தை பெரியாரின் மிகத் தெளிவான சமூகநீதிக் கொள்கைகளைத் துணிந்து மறைப்பதற்கு முயலும் ரவிக்குமாரின் நாடகம், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனிய சக்திகளுக்கும் வேண்டுமானால் கிளர்ச்சியூட்டலாம்.

இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு போடும் பிச்சையோ, சலுகையோ அல்ல. அது அவர்களின் உரிமை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சமூகநீதியின் ஒரு பகுதிதான் இடஒதுக்கீடு. அதுவும் சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் இருக்க வேண்டும்.

இதைப் பார்ப்பனிய சக்திகள் ஏற்றுக்கொள்ளாது. அவர்களுக்கு ஆதரவாக, சூத்திரர்கள் என இழிவுபடுத்தப்படும் உழைக்கும் மக்களைப் பலவீனப்படுத்த முயன்று கொண்டிருக்கிறார் ரவிக்குமார்.

அவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது!

சிலிநாட்டுக் கவிஞன் பாப்லோ நெருடா, இலங்கையில் ஒரு துப்புரவுப் பணி செய்யும் பெண்ணை உடலுறவு கொண்டதாகத் தன் நாட்குறிப்பில் குறித்துள்ளதாகவும், அந்தப் பெண் ஒரு சக்கிலியப் பெண் என்றும் முன்பு ஒருமுறை கட்டுரை எழுதினார்.

பாப்லோ நெருடாவின் கவிதைகள் பற்றியும், அக்கவிஞனின் சிறப்பான செய்திகள் பற்றியும் சொல்வதை விட்டுவிட்டு, துப்புரவுத் தொழில் செய்பவர்கள் எல்லோருமே அருந்ததியர்கள் என்ற தொனியில் அருந்ததியப் பெண், சிலிநாட்டுக் கவிஞனின் ஆசைக்கு இணங்கினாள் என்று சொல்வதில் ரவிக்குமாரிடம் ஒரு சாதிய மேலாண்மை இருப்பதைப் பார்க்க முடிகிறது.

அண்மையில் ரவிக்குமாரின் இணையதளப் பக்கத்தில், முகநூலில், துப்புரவுப் பணி செய்யும் தொழிலாளர்கள் குறித்து, “இந்த கேவலமான வேலையில் ஈடுபடக்கூடாது என ஏன் அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரியவில்லை? அதில் ஈடுபடும் பெரும்பாலோர் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த இழிவான வேலையைச் செய்யவில்லை. குடிப்பதற்காகத்தான் செய்கிறார்கள்” என்று எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை, ரவிக்குமாரின் இச்செயலைக் கண்டித்து, அறிக்கை வெளியிட்டது.

ரவிக்குமாரின் கருத்துகள், ஓர் எழுத்தாளர் என்னும் முறையில், அவருடைய கருத்துகளாக இருக்கலாம். ஆனால் தினமணிக் கட்டுரையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் என்றே அவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆதலால், இவர் கூறும் கருத்துகள் சொந்த கருத்துகளா, கட்சியின் கருத்துகளா என்னும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர், தொல். திருமாவளவன்தான், உண்மை எதுவென்று ஊருக்குச் சொல்ல வேண்டும்.

Pin It