1968 டிசம்பர் 25 கீழ்வெண்மணி குடிசைக்குள் அடைத்துக் கொளுத்தப்பட்ட தலித்தியர்கள் நாற்பத்தி நால்வர்க்கும் நினைவஞ்சலி முடியெரிந்தான் தலை காய்ந்து கிடந்ததாலே முதுகெரிந்தான் சுமை தூக்கி வளைந்ததாலே அடியெரிந்தான் வயலுழுத சேற்றினாலே அனலெரிந்தான் பெருமூச்சுக் காற்றினாலே இடையெரிந்தான் உடை கிழிந்து கிடந்ததாலே எரிந்ததெல்லாம் பொறுத்திருந்தான் ;ஆதலாலே குடியிருந்த வீடெரிந்தான் கொள்ளைத்தீயில் கூண்டோடும் குலத்தோடும் எரிந்தே போனான்.

நடையெரிந்தான் காடளந்த நடையினாலே நாளெரிந்த சூரியனின் கீழ் எரிந்து குடலெரிந்தான் கூழின்றிக் கிடந்ததாலே குலையெரிந்தான் கூலிமிகக் குறைந்ததாலே அடியிருந்த தலைமுறையாய் அடிமையாகி அடக்குமுறை பொறுத்திருந்தான்.

ஆதலாலே உடலெரிந்தான் ; ஓநாய்கள் வைத்த தீயில் ஊரோடும் உறவோடும் எரிந்தே போனான் கண்ணெரிந்தான் நிலமுடையார்க் களஞ்சியத்தைக் காந்திருந்து இரவெல்லாம் விழித்ததாலே புண்ணெரிந்தான் நிலச்சீமான் போதையாலே போட்டெறிந்த கசையடியால் ; அதற்குப் பின்னும் மண்ணிருந்த புழுப்போல நெளிந்திருந்து வாழ்ந்திருந்தான் பொறுத்திருந்து ; ஆதலாலே பெண்ணெரிந்தான் ; பிறர்எரிந்தான் ; பிள்ளைவிட்டுப் பிரியாத தாயெரிந்தான் ; பிணக்காடானான்.

Pin It