மதமாற்றத் தடைச் சட்டத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு சிந்தித்து வருவதாக அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார். அமைதியான சூழலைக் குலைப்பதற்கு அரசாங்கமே திட்டமிடும் அதிசயம் இங்குதான் நடந்துகொண்டே இருக்கிறது.

மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. வாழ்க்கை முறையை விளக்குவது. ஒருவருடைய நம்பிக்கையும், வாழ்க்கை முறையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரவர்தான் முடிவு செய்ய முடியும். அடுத்தவர் அதில் தலையிடுவது நாகரிகமும் இல்லை. ஜனநாயகமும் இல்லை.

ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த முயற்சி நடைபெற்றுள்ளது. எல்லா இடங்களிலும் எதிர்ப்பைத்தான் காண முடிந்தது. அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமையை மறுக்கும் வகையிலும், தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிடும் வகையிலும் அப்படி ஒரு சட்டத்தை இப்போது கொண்டு வர வேண்டிய தேவை என்ன எழுந்துள்ளது என்பது நமக்குத் தெரியவில்லை.

பணத்தையும் வாய்ப்பு வசதிகளையும் காட்டி, சிலர் இங்கே மதமாற்றத்தைச் செய்து வருகின்றனர் எனச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். பணத்திற்காகத் தங்களின் கடவுள், மத நம்பிக்கைகளை ஒருவர் விட்டுவிடுவார் எனில், அந்த மதத்தின் கோட்பாடுகள் அவ்வளவு பலவீனமாக இருக்கின்றன என்றுதான் பொருள்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், இந்து மதத்தில் மிக அழுத்தமாகக் காலூன்றி உள்ள வருணாசிரம அமைப்பும், அதன் மூலமாக உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் இழிவும்தான் மதமாற்றத்திற்கு ஒரு பெரும் தூண்டுதலாக உள்ளது.

இந்த உண்மையை வரலாறு அறிந்த யாரும் மறுக்க மாட்டார்கள். அவர்களுக்கான மதிப்பையும், உரிமையையும் கொடுக்க வக்கில்லாத அரசாங்கத்திற்கு, அவர்கள் தங்கள் மதத்தை விட்டு மாறக்கூடாது என்று சொல்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை.

மதமாற்றத் தடைச் சட்டம் என்பது நடைமுறையில் ஒருவழிப் பாதையாகத்தான் இருக்கப் போகிறது என்பதும் ஒரு வெளிப்படையான உண்மை. இந்து மதத்தைவிட்டு எவரும் வேறு எந்த மதத்திற்கும் போய்விடாமல் தடுக்கும் சுவராகவும், மற்ற மதங்களில் உள்ளவர்களை இந்து மதத்திற்கு மாற்றுவதற்கு வழிவகுக்கும் ஒரு பாலமாகவும்தான் இந்தச் சட்டம் அமையப்போகிறது-. சுத்தி போன்ற இயக்கங்களைப் பெருமுனைப்போடு தொடங்கியுள்ள பா.ஜ.க., மதமாற்றத் தடைச்சட்டம் பற்றிப் பேசுவது எத்தனை நகைப்புக்குரியது-!

அண்மையில் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில், ஏற்கனவே மதம் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் வெளிப்படையாகத் தொடங்கியுள்ளன. அந்த முயற்சியில் லட்சக்கணக்கான பணம் புழங்குகிறது என்பது எல்லோரும் அறிந்த செய்தியாக உள்ளது. வெட்கக்கேடான இந்த நிலை குறித்து மத்திய அரசு சிறு வருத்தத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை.

ஆனால், மதமாற்றத் தடைச்சட்டம் பற்றி இப்போது பேசுகிறது என்றால், இந்து மதத்தில் இருந்து யாரும், வேறு எந்த மதத்திற்கும் போய்விடக் கூடாது என்பது மட்டும்தானே அதற்கு நோக்கமாக இருக்க முடியும்.

சாதியைப் போலவே மதத்தைவிட்டும் சாகும்வரையில் மாற முடியாது என்னும் நிலையை இச்சட்டம் ஏற்படுத்தும், அதன் காரணமாக இந்தியா முழுவதும் எதிர்ப்பு அலைகள் இனி எழுந்தே தீரும்!

Pin It