மதன்மோகன் மாளவியாவால் 1916 ஆம் ஆண்டு காசியில் நிறுவப்பட்ட பனாரஸ் “இந்து” பல்கலைக் கழகமும், சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து காசி தமிழ்ச் சங்கமம் என்ற ஒரு இந்துத்துவா சார்ந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றன.

இதில் கலந்து கொள்ள 2500 மாணவர்கள் உள்படப் பலர் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது குறித்துத் தமிழக அரசிடம் யாரும் கலந்து பேசவில்லை.

ஆளுநர் ரவி சொல்கிறார், காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம்.

காசியைச் சேர்ந்த வடநாட்டவர்கள் தலையில் கல்லைச் சுமக்க வைத்துக் கட்டிக் இழுத்துக் கொண்டு வந்த சேரன் செங்குட்டுவன், ஆரியப் படையழித்துக் கடந்த நெடுஞ்செழியன் வரலாறுகள் ஆளுநருக்குத் தெரியவில்லை.

‘இந்தியா’ என்ற கருத்தாக்கம், ‘பாரதம்’ என்ற சிந்தனையை மறைத்து விட்டதாம், ஆளுநர் ரவியின் உளறல் இது.

இதோ ஆசிரியர் (கி.வீரமணி ) அவர்கள் சொல்கிறார்:

‘இந்தியா’ என்பது மதச்சார்பற்றது. ‘பாரதம்’ என்பது ஹிந்து மதச் சார்புடையது. ‘இந்தியா’ என்பது ஜனநாயகம், ‘பாரதம்’ என்பது சனாதனம். ‘இந்தியா’ என்றால் மக்களுக்கு அரசதிகாரம் தரும் குடியரசு, ‘பாரதம்’ என்றால் ராஜகுருக்களுக்கு அதிகாரம் தரும் முடியரசு. ‘பாரதம்’ என்றால் அங்கே மனுநீதிதான்! ‘இந்தியா’ என்றால் அரசமைப்புச் சட்டப்படி சமூகநீதி பேச வாய்ப்பு இருக்கிறது. பழைய ‘பாரத’த்தில் ஜாதிக்கொரு நீதிதான்.

பூனை வெளியே குதித்து விட்டது.

பெரியார் மண்ணாகிய தமிழ் நாட்டில் கால் வைக்க முடியாத ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க கூட்டத்தார் கலாச்சாரச் ‘சங்கமம்’ என்ற பெயரில் “பிள்ளை பிடிக்க”த் தொடங்கி இருக்கிறார்கள். அதுவும் கல்விக் கூடங்களில் மாணவர்களை நோக்கி அவர்களின் கொடுங்கரம் நீள்கிறது. மக்கள் எச்சரிக்கையாகவும், அரசின் பார்வை அங்கே கவனமாகவும் இருக்கவும் வேண்டும்.

காசி காவிகளின் கூடாரம்.!

தமிழ்நாடு கருப்புச் சட்டைகள் பாசறை!!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It