கடந்த அக்டோபர் நான்காம் நாள்...

காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் ஆதனூர் என்னும் சிற்றூரில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பூணூல் அணிவித்திடும் நிகழ்ச்சியைக் குத்து விளக்கு ஏற்றித் தொடங்கி வைத்திருக்கிறார் ஆளுநர் இரவி..

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பூணூல் அணிவிப்பதால் சாதியால் உயர்ந்துவிடுவதான மயக்கத்தில் அதை வாங்கி அணிந்து கொண்டனர் அடிமைகள் சிலர்..

பூணூல் போட்டு விட்டதால் இனிமேல் தாழ்த்தப்பட்டோர் கோயில் கருவறைக்குள் நுழைந்து விட முடியுமா..?

பூணூல் அணிந்து கொண்டதால் சங்கராச்சாரியாகப் பறையர் ஒருவர் வந்துவிட முடியுமா?

பார்ப்பனச் சாதியினர் பெண் கொடுத்துப் பெண் எடுத்துக் கொள்வார்களா? பார்ப்பனர்கள் பறித்து வைத்துள்ள அதிகாரங்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைத்துவிடுமா?

இனி, தீண்டபடாத மக்கள் என்கிற ஒதுக்கப்பட்டு வாழும் நிலை மாற்றப்பட்டு குமுகத்தில் எல்லாரும் ஒன்றெனும் நிலை உருவாகி விட முடியுமா?

- என்றவாறெல்லாம் பல கேள்விகளை இயக்கத்தினர் மட்டுமல்லாது எளிய மக்களே கூட எழுப்பி வருகின்றனர்.rn ravi at tamil seva sangamபூணூல் போட்டுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் 2000 உருபாய்ப் பணமும், தேவையான பொருள்களும் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.. பணத்திற்காகவும், பொருள்களுக்காகவும் பூணூல் போட்டுக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலர், நிகழ்ச்சி முடிந்தபிறகு பூணூலைக் கழட்டி வீசி விட்டிருக்கிறார்கள்.

திராவிடர் கழகம், பொதுவுடைமைக் கட்சிகள், வி.சி.க. உள்ளிட்டுப் பல கட்சிகளும் இயக்கங்களும் ஆளுநரின் போக்கைக் கடுமையாகத் திறனாய்ந்துள்ளன.. எதிர்த்துள்ளன..

ஆளுநர் அந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கருப்புக் கொடி காட்டிப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்..

ஆளுநர் இரவி தன்னளவில் மட்டுமே சிந்தித்து இவற்றையெல்லாம் செயல்படுத்திடுவதில்லை..

அவர் இப்படியாகச் செயல்படுவதற்கான திட்டங்கள் அனைத்தையும் ஆர் எசு எசு நிறுவனமே கொடுத்து வருகிறது..

தமிழ்நாட்டில் மதக் கலவரங்கள் நடத்துவதற்குப் பெருமளவில் முயன்று இயலாமல் போகவே சாதிவெறி உணர்ச்சியைத் தூண்டி, பகைமைப்படுத்தி வளர்க்கிற வேலைகளைச் செய்து வருகிறது ஆர் எசு எசு..

எல்லா சாதிகளையும் பார்ப்பனியத்திற்கு அடிமைச் சாதிகளாகவும் பார்ப்பனிய முலாம் பூசுகிற வகையிலும் திட்டமிட்டு வேலை செய்கிறது ஆர் எசு எசு..

இடையர்களை, கோனார்களை - யாதவர்கள் என்பதும்..,

மீனவர்களை, செம்படவர்களை - பர்வத ராஷகுலத்தினர் என்பதும்..

பள்ளர்களை, குடும்பர்களை - தேவேந்திரர்கள் என்பதும்..

வன்னியர்களை, படையாட்சிகளை - சத்திரியர்கள் என்றவாறெல்லாம் அவரவர்களின் அடையாளங்களை ஆரியச் சார்புபடுத்தி அந்தந்தச் சாதிக்குரிய தலைவர்களையெல்லாம் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அடிவருடிகளாக மாற்றி வந்திருப்பதைத் தமிழகம் அறிந்திருக்கிறது..

தமிழ்நாட்டில் ஆர் எசு எசு காலூன்றுவதற்கு என்னென்ன தகிடுதத்த வேலைகள் எல்லாம் செய்தன என்பது அறியப்பட வேண்டிய செய்திகள்..

1939இலேயே சித்பவன் பார்ப்பனர்களை தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ்.ஐத் தொடங்குவதற்காக ஈடுபடுத்தித் தோல்வி கண்டனர். 1940 மார்ச்சு 23இல் சேலத்தில் இந்து மகா சபை மாநாட்டை அங்குள்ள சௌராட்டிரர்களை வைத்து நடத்தினர். அதற்காகப் பல நாள்கள் சாவர்கர் தங்கியிருந்து வேலை செய்திருக்கிறார். பின்னர் தமிழ்நாட்டில் உள்ள சௌராட்டிரர்களையும், மராட்டியர்களையும் இணைத்துக் கொண்டு ஆர் எசு எசு இயங்கத் தொடங்கியது.

பஞ்சாபில் ஆர் எசு எசு கட்டுவதற்கு அவர்கள் உருவாக்கிய பெயர் இராஷ்ட்ரிய சீக்கிய சங்கம்..

சீக்கியர்களை ஏமாற்றி இழுப்பதற்குத் தாங்கள் ஏதோ சீக்கியர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்பதாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் இராஷ்டிரிய சீக்கிய சங்கம் என்று அமைத்தனர். சீக்கியர்களும் இந்துக்களும் ஒருவரே என்று பேசத் தொடங்கினர். ஆனால் அதைச் சீக்கியர்கள் புறந்தள்ளினர்..

2004 சூலை 23ஆம் நாள் சீக்கியத் தலைமையகம் ஆர் எசு எசு இன் தூண்டலில் நடைபெறும் இராஷ்ட்ரிய சீக்கிய சங்கம் தவறானது என்றும் ஆர் எசு எசு பின்புலத்தில் சூழ்ச்சியாக இயங்குவது என்றும் அதைத் தடை செய்தது.. 2009 இல் இராஷ்ட்ரிய சீக்கிய சங்கத் தலைவர் குண்டா சிங்கை காலிசுதான் இயக்கத்தினர் கொலை செய்தனர்.. ஆனாலும், தொடர்ந்து சீக்கியர்களை ஏமாற்றும் வகையில் ஆர் எசு எசு அங்குச் செயல்பட்டு வருகிறது..

மராட்டியத்தில் அம்பேத்கரை முன்னிறுத்தி சமச்சதா மன்ச் என்கிற அமைப்பை 1983 -இல் கட்டி அம்பேத்கர், எட்கேவர் இருவரும் ஒரே நாளில் பிறந்ததாகச் சொல்லி இருவர் படத்தையும் தேரில் வைத்துப் பேரணி நடத்தி ஏமாற்றி மகார் மக்களிடையே காலூன்றினர்..

அதே தன்மையில்தான் இன்றைக்குத் தமிழ் சேவா சங்கத்தை ஆர் எசு எசு திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறது..

ஆனால் சீக்கியர்கள் போல் அல்லாது, ஆரியப் பார்ப்பனிய அடிமையர்கள் சிலர் தமிழ் சேவா சங்கத்தை தூக்கிக் கொண்டு ஆடுகின்றனர்.. சங்கம் திட்டமிட்டுக் கொடுத்ததன்படி பறையர் குலத்தினர் சிலர் அந்த நிகழ்ச்சி தமிழ் சேவா சங்கத்தின் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக விளம்பரப்படுத்தி இருந்தனர்..

பல செய்தித்தாள்களில் எல்லாம் விளம்பரங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டிருந்தன..

டி எசு எசு -என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் தமிழ் சேவா சங்கம் என்பது ஆர் எசு எசு இயக்கத்தின் கிளை அமைப்பாகவே திட்டமிட்டுச் செயல்பாட்டைத் தொடங்கி இருக்கிறது..

தமிழ் சேவா சங்கத்தை மும்பையில் இருந்து தொடங்கி வைத்தவர் ஸ்ரீதர் வேம்பு என்கிற தஞ்சாவூர் பார்ப்பனர்.

2010 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மிக எளிய நடுத்தர நிலையில் பொருளியலால் வாழ்ந்து வந்த ஸ்ரீதர் வேம்பு, பாஜக ஆட்சிக்குப் பின்னர் பல்வேறு வகையில் அரசிடம் பணம் பெற்று, பல வாய்ப்புகளின் வழி கிடுகிடுவென இன்றைக்குக் குறிப்பிடத்தக்க பணக்காரர்களின் வரிசையில் நிற்கிறார்..

ஆர் எசு எசு இன் வழிகாட்டலில் செயல்படும் தீவிர ஆரியப் பார்ப்பன வெறியர் அவர்.. தென்காசிக்கு அருகில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஆர்.எசு.எசு. இடமிருந்து `மங்கல’மாக நிலங்களைப் பெற்றுப் பலரைப் பார்ப்பனிய நஞ்சூட்டி வளர்த்து வருகிறார்..

மும்பையில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட மகாசன சபையின் பொதுச் செயலாளர் மாறன் நாயகம், சிவ குலத்தார் என்கிற பெயரில் தங்க மாமுனி, பாஜக பட்டியலினப் பிரிவுத் தலைவர் தடா பெரியசாமி உள்ளிட்டவர்களின் அணிதிரட்டலில் 500க்கும் மேற்பட்டோருக்குப் பூணூல் போடுகிற நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது தமிழ் சேவா சங்கம்..

ஸ்ரீதர் வேம்பு ஐயரின் வழிகாட்டலில், பாமக வழி ஆர் எசு எசு-க்கு வந்த ஞான சரவணவேல் பொறுப்பில், ஆர் எஸ் எஸ் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி அ. பாவேந்தன் அமைப்பாளராக இருக்க மேற்படி தமிழ் சேவா சங்கம் இயக்கப்படுகிறது..

தொடக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தவர்களான மாறன் நாயகம், தங்கமணி, தடா பெரியசாமி போன்றவர்களே தமிழ் சேவா சங்கத்தின் எடுபிடிகளாக இருந்து அதை வழி நடத்துகிறார்கள்..

நாடார்களைத் திரட்டுவதற்காக இந்து முன்னணியையும், பொன். இராதாகிருஷ்ணனையும் பயன்படுத்தி வருவது போல்..

முக்குலத்தோர்களைத் திரட்டுவதற்காகத் தமிழ்நாட்டில் சிவ சேனையைப் பயன்படுத்தி வருவது போல்,

பள்ளர் குல மக்களைத் திரட்டுவதற்காக மருத்துவர் கிருஷ்ணசாமி ஜான் பாண்டியனைப் பயன்படுத்துவது போல்...,

அருந்ததியர்களைத் திரட்டுவதற்காக முருகனைப் பயன்படுத்தி வருவது போல்,

கொங்கு மக்களைத் திரட்டுவதற்காக வானதி உள்ளிட்டுப் பலரைப் பயன்படுத்தி வருவது போல்,

பறையர்களைத் திரட்டுவதற்காக ஆர் எசு எசு-க்குக் கிடைத்தவர்களே மாறன் நாயகம், தங்கமணி, தடா பெரியசாமி போன்றவர்கள்..

தமிழ் சேவா சங்கம் அதற்காக ஆர் எசு எசு-க்குப் பயன்படுகிறது..

தமிழை வளர்ப்பதற்காகவோ, தமிழ்நாட்டை ஈடேற்றுவதற்காகவோ, தமிழ்நாட்டின் புறந்தள்ளப்பட்ட பறையர் குல மக்களைச் சாதியக் கொடுமைகளிலிருந்து மீட்பதற்காகவோ, சாதியை ஒழிப்பதற்காகவோ செயல்படுகிற இயக்கமில்லை என்று அடித்தட்டு மக்களும் தமிழ் உணர்வாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்..

வல்லரசு நாடுகளின் முதலாளிகளாலும் அம்பானி அதானி உள்ளிட்ட இந்தியப் பெரு முதலாளிகளாலும் கொடுமையான சுரண்டல் சூறையாடல்களால் நசுக்குண்டுப் போயிருக்கிற நடுத்தர அடித்தட்டு மக்களுக்குப் பணங்களை வாரி இறைத்து வாய்க்கரிசி போடுவது போல் ஏமாற்றி அணி திரட்டி வருகிறது ஆர் எசு எசு

.அதன் பரிவாரங்களாகச் செயல்படும் பாஜக, விஷ்வ இந்து பரிஜத், ஏ பி வி பி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பரிவாரங்களின் வரிசையில் தான் இன்றைக்குப் புதிதாய்த் தமிழ் சேவா சங்கம் என்கிற நஞ்சு மரமாக வளர்க்கப் படுகிறது..

எளிய மக்களை உழைக்கும் மக்களைச் சாதியால் கூறு பிரித்துப் பகைமைப்படுத்துவதன் மூலம் பார்ப்பனியம் குடுமி விரித்து ஆடுகிறது..

வடநாடுகளில் மதக் கலவரங்களை உருவாக்கி விட்டு வெறித்தனத்தைத் தூண்டுகிற ஆர் எசு எசு பாஜகவினருக்குத் தமிழ்நாட்டில் அத்தகைய வழியில் செயல்படுவது கடினமாகப் போனதால்.. சாதிய வெறித்தனங்களைத் தூண்டுகிற வேலையைச் செய்து வருகிறது..

ஆர் எசு எசு, பாஜகவின் இத்தகைய போக்குகளைத் திமுக உள்ளிட்ட தேர்தல் அரசியல் கட்சிகள் சரியான கோணத்தில் விளங்கிக் கொண்டதாகவோ, எதிர் நின்று அவற்றை வீழ்த்துவதற்காகத் திட்டமிட்டதாகவோ அறிய முடியவில்லை..

திராவிட மாடல் என்று திமுக அடையாளப்படுத்துவது ஆர் எசு எசு-ஐ முழுமையாக எதிர்ப்பதற்காகவோ, பார்ப்பனியத்தை, சாதியத்தை வேரோடு வெட்டி வீழ்த்துவதற்காகவோ திட்டமிட்டிருப்பதாகத் தெரியவில்லை..

கொள்கை அளவில் திராவிட மாடல் என்பது என்ன என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வெளியீடாகக் கூட கொண்டு வரவில்லை.. அதற்கான அரசியல் பயிற்சிகள் பெரும்பாலான அமைச்சர்களுக்கே தேவைப்படுகிறது..

திமுக என்கிற அடையாளத்தில் ஆரியப் பார்ப்பனியத்தின் அடிவருடிகளாகவே, சாதிய வெறி உணர்வின் வித்துக்களாகவே பலர் திமுகவின் பொறுப்புகளில் இருப்பதை இயல்பானவர்கள்கூட உணர்ந்து கொள்ள முடியும்..

கொஞ்சநஞ்சம் கொள்கையைப் பேசிக் கொண்டிருக்கிற திமுக-வே அப்படி என்றால் அதிமுகவையோ, பாமகவையோ தனித்துச் சொல்ல வேண்டிய தேவையில்லை.. ஆர் எஸ் எஸ் எளிதே நுழைந்து விளையாடுகிற களம் ஏற்படுத்தித் தந்திருக்கின்றன அ.தி.மு.க.வும், பாமகவும்..

ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும் மொத்தமாகப் பள்ளர் குல மக்களை வாரி வழித்து ஆர் எசு எசு, பாஜகவினருக்கு விலை பேசி வருகின்றனர்..

மதிமுக, விசிக கட்சிகளின் தலைவர்களிடம் இருக்கும் எச்சரிக்கை தொண்டர்கள் வரை இன்னும் சொன்னால் மாவட்டப் பொறுப்பாளர்கள் வரையளவில் கூட இருக்கவில்லை..

பார்ப்பனியம் என்பது ஏதோ பாஜக-வாக மட்டுமே என்று புரிந்து கொள்ளுகிற அரசியலைத்தான் அவர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.. வாழ்வியல் நடைமுறைகளில், அரசியல் அதிகாரங்களில், பொருளியலில், மொழிப் பயன்பாடுகளில், கல்வித் துறைகளில் என எல்லாவற்றிலும் அதிகாரம் செலுத்தி வருகிற பார்ப்பனிய அதிகாரப் போக்குகளை எதிர்ப்பதற்கான அரசியல் தெளிவாகப் பயிற்றுவிக்கப்படவில்லை.. அதற்கானத் திட்டங்களும் அவர்களிடமெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை..

இத்தகைய அவலமான சூழலில் இந்தியாவிற்குள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிற இனங்களை எல்லாம் அடையாளம் தெரியாமல் நசுக்கிவிட்டு இந்தியப் பார்ப்பனியம் ஆழமாக காலூன்றி வந்திருக்கிற வகையில் ஆர் எசு எசு செயல்பட்டுக் கொண்டிருப்பதை இவர்கள் உணரவில்லை..

எனவே, ஏதோ பாஜகவை எதிர்ப்பதால் மட்டுமே பயனில்லை. பார்ப்பனியத்தை வேரோடு வீழ்த்தாமல் பாஜக வீழப் போவதில்லை.. அப்படியாக பாஜக-வை வீழ்த்தவும் முடியாது.

பார்ப்பனியத்தை வீழ்த்துவதற்கான அரசியல் தெளிவைத் தேர்தல் கட்சிகள் முன்னெடுக்கத் தயங்குகிற இந்தச் சூழலில் பார்ப்பனியத்தை முழுமையாக வேரறுத்து தேசிய இனங்களின் உரிமைகளை உயர்த்தி நிறுத்துகிற எழுச்சியைப் பொது மக்களும் இயக்கங்களுமே செய்தாக வேண்டும்..

அத்தகைய நிலையை இன்றைக்கு இருக்கிற தமிழ்த்தேசிய இயக்கங்கள் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டிருக்கிற இயக்கங்கள் செய்வதாகத் தெரியவில்லை

பார்ப்பனியம் என்பது இந்திய அரசியல் அதிகாரத்தோடு இணைந்தது.. அம்பானி அதானி உள்ளிட்ட பெரு முதலாளிகளின் சுரண்டல் அதிகாரத்தோடு இணைந்தது.. வெளிநாட்டு முதலாளிகளின் சுரண்டல் சூறையாடல்களோடு உறவு கொண்டது..

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் ஊருக்கு ஊர் திட்டமிட்டுக் கட்டப்பட்டு வரும் கோயில்களும், இந்து மதத்தின் பெயரிலான இயக்கங்களும் ஏதோ பார்ப்பனர்களின் தூண்டுதல்களோடு பாஜக, இந்து பரிவாரங்களின் தூண்டல்களோடு மட்டுமே நடப்பதில்லை.. அவற்றுக்குப் பின்புலமாக அம்பானி அதானி மட்டுமன்றி பன்னாட்டு முதலாளிகளும் உண்டு.. இந்திய அரசு அதிகாரமும் முழுப் பின்புலமாக இருக்கிறது..

எனவே அவற்றில் எல்லாம் பார்ப்பனிய அரசியல் அதிகாரம் உள்ளடங்கி இருக்கிறது..

வீட்டுச் சடங்குகள் விழாக்கள் உள்ளிட்டுக் கோயில் குடமுழுக்குகள் எல்லாம் பார்ப்பனர்களை வைத்து நடத்துவது, சமசுகிருதத்தில் நடத்துவது என்பவற்றுக்குள்ளும் பார்ப்பனிய அதிகார அரசியல் உள்ளடங்கி இருக்கின்றது..

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டப்படுவதிலேயே அந்தப் பார்ப்பனிய அரசியல் உட்புகுந்து விடுகிறது..

பார்ப்பனியத்தை எதிர்ப்பது என்பது குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதில் தொடங்கி இந்தியப் பார்ப்பனிய அரசு அதிகாரத்தை முறியடிப்பது வரை செய்யப்பட வேண்டிய வேலைகளாக அமைகின்றன.. சாதிய ஆணவங்களை அழித்தொழிப்பதோடான வேலையைக் கொண்டது.

அம்பானி, அதானியை வீழ்த்துவதும், அவர்களின் சூறையாடல் சொத்துகளைப் பறிமுதல் செய்வதும் முதன்மையாகின்றது.

பன்னாட்டு முதலீடுகளைப் பறிமுதல் செய்து மக்களாட்சிச் சொத்தாக மாற்றுவது.. உள்ளிட்ட வேலைகளைச் செய்தாக வேண்டி இருக்கிறது..

இவை எவற்றிலும் இலக்குகளில் குறைந்து போகவோ, இணங்கிப் போகவோ இயலாத நிலை இருந்தால்தான் பார்ப்பனியத்தை வீழ்த்த முடியும்..

பார்ப்பனியத்தை வீழ்த்துகிற போராட்ட வழித்தடத்தில்தான் ஆர் எஸ் எஸ் ஐ, பாஜகவை, அதன் பரிவாரங்களை வேரறுக்க முடியும்..

அத்தகைய வழித்தட நோக்கத்தில்தான் மொழிமாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.. உரிமைகள் உள்ள மொழி மாநிலங்களின் ஒன்றியமாக இந்திய ஒன்றிய அரசை படைக்க முடியும்..

அப்படி அல்லாது.. வாய் வீச்சில் சனாதனம் ஒழிப்போம் என்பதும் பின்னர் சந்து பொந்துகளில் முடங்கிக் கொள்வதும்.. பார்ப்பனிய வருணாச்சிரமப் பூணூலின் ஓர் இழையைக்கூட அறுத்து விடாது..

ஆர் எசு எசு-ஐ, ஆரியப் பார்ப்பனியத்தை வீழ்த்துவதற்குத் திட்டமிட்ட வகையில் தமிழ் உணர்வாளர்கள், பெரியாரிய உணர்வாளர்கள், அம்பேத்காரிய, மார்க்சிய உணர்வாளர்கள் மேற்படி வகையில் அணிசேர்ந்தாக வேண்டும்.. போர்க்கால அடிப்படையில் செயல்பட்டாக வேண்டும்.

- பொழிலன்

Pin It