இதோ சொல்லி விட்டார்! அவரே சொல்லி விட்டார்! ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் இல்லையாம்! இங்கே நிறைய பேர் பேசுவது காதில் ஈயமாகப் போய் விழுந்திருக்கிறது. அதுதான் மனிதர் பொங்கி விட்டார். இதை ஏன் திருவனந்தபுரத்தில் போய்ச் சொன்னார்?!

ஆம்! கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் நடந்த லோக் ஆயுக்தா நிகழ்ச்சியில்தான் அவ்வாறு பேசியுள்ளார். “லோக் ஆயுக்தா அமைப்புகள் தோல்வியடையாமல் பாதுகாப்பதெல்லாம் ஆளுநர் கடமை” – அதெல்லாம் தெரியாமல் நாம் ஆளுநரைக் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று சொல்கிறார். லோக் ஆயுக்தா அமைப்புகள் வெற்றி பெற பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் தாமே முன்வந்து கைதாகிட வேண்டுமே! சட்டத்திற்கு எதிராக சனாதன தர்மத்தையும், முறைகேடுகளையும் உயர்த்திப் பிடிப்பவர்கள் அவர்கள்தானே? முதலமைச்சர்களையும் லோக் ஆயுக்தா அமைப்பின் வரம்புக்குள் கொண்டுவந்த துணிவும், நேர்மையும் கொண்ட திராவிடத்தை எதிர்த்துவிட்டு உங்கள் கடமையை எப்படிச் செய்வீர்கள் ஆளுநர் அவர்களே?rn ravi 358மக்கள் நல அரசாக, சுறுசுறுப்பாக இயங்கும் தி.மு.க. அரசை மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், அரசு எங்கே மேலும் சிறப்பாக இயங்கிவிடப் போகிறதோ, தமிழ்நாட்டு அரசுக்கு எங்கே மேலும் நல்ல பெயர் வந்துவிடப் போகிறதோ என கவலை கொள்ளும் நீங்கள், நீட் உள்ளிட்ட தலையாயக் கோப்புகளில், கையெழுத்துப் போடாமல் இருப்பதற்குக் காரணம் “வேறு” சொல்கிறீர்களே?

அட இவர்தான் இப்படி என்றால், அங்கே தெலுங்கானாவில் உட்கார்ந்துகொண்டு, “நான் தமிழ்நாட்டு அரசியல்ல தலையிடக் கூடாதா? என்னை அப்படிச் சொன்னால், நான் உங்களைப் பற்றித் தவறாகத்தான் பேசுவேன்” என்று வரம்பற்றப் பொய் பேசுகிறார் தமிழிசை!

இவர்கள் மட்டுமா?

 எங்கே எல்லாம் மக்கள் அவர்களுக்கு ஓட்டுப் போடவில்லையோ அங்கே எல்லாம் ஆளுநர்கள் என்ற பெயர்களில் வரிசையாக ஏஜென்ட்டுகளைக் களமிறக்கி, மக்களாட்சியைக் கேலிக் கூத்தாக்கித் தன் சர்வாதிகாரத்தை நிலை நாட்டத் துடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மக்களைப் பற்றி இவர்களுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதுதான் அது!

தேர்தல் தில்லுமுல்லுகள் கடந்து, குதிரை பேரம், பணப் பட்டுவாடாக்கள், ஊடக செல்போன் கையூட்டுகள் கடந்து, வேறு யாராவது ஆட்சியைப் பிடித்துவிட்டால், உள்ளே அதிகார மட்டத்தில் தடைகள் ஏற்படுத்தப் பூணூல்கள் காத்திருக்கின்றன! கோப்புகள் மேல்மட்டத்திற்கு நகருமுன்னே அதன் தரவுகள் பா.ஜ.க.வின் பொறுப்பாளர்களுக்குப் போய்விடுகின்றன! குண்டு வெடித்தவனின் வாட்சப் ஸ்டேட்டஸ் கூட காவல்துறைக்கு முன்பு பா.ஜ.க வின் கட்சிப் பொறுப்பாளருக்குக் கிடைத்து விடுகிறது! அதில் காது, மூக்கு, கொண்டை வைத்து அமளிகள் தயார் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி நடந்து விடக் கூடாது. அவர்களின் நோக்கம் அவ்வளவே!

அம்பானிகளுக்கு உதவி செய்து பங்கு பெற்ற வகையில், பி.எம்.கேர் நிதியில் கணக்குக் காட்டாமல் சுருட்டிய வகையில், இன்னும் சிலைகள் வைப்பது, கோயில் கட்டுவது என அவாளுக்குக் கொடுத்த அனுமதிகள் வகையில், செய்த அரைகுறை வேலைகளில் கிடைத்த கொள்ளை லாபங்களின் வகையிலெல்லாம் குவிந்திருக்கும் பணத்தைப் பாதாளம் வரை பாய்ச்சிவிடத் துடிக்கும் கட்சிக்காகத்தான் இவ்வளவு அலங்கோலங்கள்!

ஆளுநர்கள்தான் இந்த வேலைக்கு சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள்! சில பொம்மைகள், AI (Artificial Intelligence) பொம்மைகள் போன்றவை, தமிழக ஆளுநரைப் போல. திருக்குறள், சனாதனம், தமிழ் என்று நாளும் கூடுதல் பெர்ஃபார்மன்ஸாக இருக்கிறது! இந்தியாவில் 17 மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆளுநர்களாக இருக்கிறார்களாம், விளங்கிவிடும் நாடு!

வரலாறு நெடுகிலும் சர்வாதிகாரிகள் என்னதான் “இராவணப் பிரயத்தனம்” செய்து தங்கள் ஆட்சியைக் கொண்டு வந்தாலும் அவை ஒன்றிரண்டு தசாப்தங்களை எப்போதும் கடந்ததில்லை! ஆளுநரைத் திரும்பப் பெற ஜனாதிபதியிடம் முறை செய்திருக்கின்றன தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள்! அடுத்து டிசம்பர் மாதத்தில் 1 லட்சம் மக்களோடு முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்!

பதவிக்குரிய மதிப்போடு மக்கள் தேர்ந்தெடுத்த அரசோடு ஒத்துழைப்பதாக இருந்தால், அடக்கமாக நில்லுங்கள்! இல்லையெனில் பதவி விலகி ஓடுங்கள்! இதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரல்!

- சாரதா தேவி

Pin It