2019 முதல் நவம்பர் 1இல் கொண்டாடப்பட்ட தமிழ்நாடு நாளை, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்த ஆண்டு முதல், ஜூலை 18 ஆக மாற்றி அமைத்தார். ஆம், மொழி வழி மாநிலங்கள் உருவான நவம்பர் 1, 1956 இல் நம் நாடு சென்னை மாகாணமாகத்தான் இருந்தது. 1953 முதல் தமிழ்நாடு என்று பெயர் வைக்க பல்வேறு தமிழ் அறிஞர்களும் கோரிக்கைகள் வைத்துக்கொண்டு தான் இருந்தனர். அப்போதைய ஆளும் காங்கிரசு கட்சியினருக்கும் அந்த அவா நெஞ்சிலே இருந்தாலும், போதுமான உறுதி இன்றி அது தள்ளிப் போடப்பட்டு வந்தது.

annadurai tamilnadu mapஆந்திரா, கேரளா, கருநாடகா உள்ளிட்ட பிறமொழி மாநிலங்கள் பிரிந்த நிலையில், மொழி வாரி மாநிலங்கள் பிரகடனப்படுத்தப் படும் முன்பே, 1956 ஜூலை 27ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காகப் பட்டினிப் போராட்டம் தொடங்கினார், அந்நாள் காங்கிரசுக்காரரான சங்கரலிங்கனார். 73 நாள்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில், அவர் கம்யூனிஸ்ட் கட்சியிடமும், தி.மு.கழகத்திடமும் தன் கோரிக்கையை நிறைவேற்ற நம்பிக்கை வைத்தார். தன் உயிர் பிரிந்தாலும் தன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற பெருநம்பிக்கையோடு அத்தமிழ்மகன் அக்டோபர் 13, 1956 அன்று தன் உயிரை ஈகம் செய்தார். தாய்க்குப் பெயரிட மகன் தன் இன்னுயிர் கொடுத்த வீரஞ்செறிந்த நிகழ்வு அது! ஆனாலும் நிறைவேறவில்லை அவருடைய விருப்பம்.

1957இல் முதன் முதலில் தேர்தலில் பங்கேற்ற தி.மு.க, மாநிலத்தின் பெயர் மாற்றத்தையும் வாக்குறுதியாக வைத்தது. ஆனாலும் அதன் பின், 1962இல் கூடுதல் இடங்களைப் பிடித்தும் தி.மு.க. விற்கு, ஆட்சி கையில் இல்லாமல் போனது. 1967இல் பெரும்பான்மை இடங்கள் பெற்று ஆட்சி அமைத்தது தி.மு.க. ஆட்சி அமைத்த நான்கு மாதங்களில், சங்கரலிங்கனார் தன் போராட்டத்தைத் தொடங்கிய அதே ஜூலை மாதம், அவர் போராட்டத்தைத் தொடங்கிய நாளுக்கு முன்பாகவே, ஜூலை 18 அன்று, நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் முழங்கி, தீர்மானம் கொண்டு வந்தார் தி.மு.கழகத்தின் முதல் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா! அவருடைய உணர்ச்சிமிகு தீர்மானம் தமிழரின் உணர்வுகளை அள்ளிக் கொண்டு சென்றது. எதிர்க்கட்சியினரோ, சுயேச்சையோ, எவர் ஒருவரின் எதிர்ப்புமின்றி, ஒருமித்த குரலில் அனைத்து உறுப்பினர்களும் “வாழ்க” என முழக்கமிட, “தமிழ்நாடு” எனும் பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேறியது.

இன்று சிலர், தி.மு.க. அறிவித்த “தமிழ்நாடு நாள்” தீர்மானம் போட்ட நாள்தான் என்றும், வேறு சிலர் மாநிலம் உருவான நவம்பர் 1தான் சரியானது என்றும் பேசுவதைக் கேட்க முடிகிறது. தமிழ், தமிழர், தமிழ் மண் என்றால் தாங்கள்தான் நினைவுக்கு வரவேண்டும் என்ற ஆதிக்கக் கண்ணோட்டத்தில் இருந்து வரும் பொருமல்கள் அவை!

 தமிழ், தமிழர், தமிழ் மண், தமிழர் உரிமைகள் என்றால் திராவிடம் நினைவுக்கு வரும்! திராவிட மாடல் நினைவுக்கு வரும்! பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆட்சிக்குக் காத்திருந்து, தலை மேல் கொண்டு நிறைவேற்றிய கொள்கைத் தீர்மானம் அது! அன்று தொடங்கி ஆசியாவின் வளர்ச்சிமிகு பகுதியாக நம் மாநிலத்தைக் காத்தும் நிர்வகித்தும் வரும் திராவிடம், தமிழ்நாடு எனப் பெயர் வைத்த பெருமைக்கு நிச்சயம் தகுதி உடையதே!

 முதலமைச்சர் சொல்படியே, “I don’t care” என்று சொல்லி, விமர்சனம் செய்பவர்களையும் அவர்களுடைய சுயவிளம்பர விமர்சனங்களையும் இடக்கையால் புறந்தள்ளி, மக்களோடு இருப்போம். மக்கள் நம்மோடு இருப்பார்கள் என்று “தமிழ்நாடு நாளில் “ முழக்கமிடுவோம்!

Pin It