இன்று தமிழகத்தில் ஒரு விசித்திரமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. யாருக்கு யார் எதிரி? யார் நண்பன்? என்று நிச்சயிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொருவரது நிலைப்பாடும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த காலத்தில் அ.தி.மு.க. அரசின் அராஜகம் தலைவிரித்து ஆடும்போதெல்லாம் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து நின்ற வரலாறுகள் உண்டு. அதுதான் பெரிய மாற்றங்களையும் தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறது. ஆனால் இந்தக் காட்சி கடந்த நான்காண்டுகளாக முற்றிலுமாக மாறியிருக்கிறது. வரலாறு காணாத ஊழலும் அராஜகமும் தமிழகத்தில் தலைவிரித்தாடுகின்றன. அரசு எந்திரம் முடக்கப்பட்டிருக்கிறது என்பதைவிட முற்றாகச் சிதைக்கப் பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான சிறிய கட்சிகள் அவ்வப்போது அ.தி.முக. அரசின் அராஜகங்களுக்கெதிராகக் குரல் கொடுக்கின்றன. போராட்டங்கள் நடத்துகின்றன. ஆனால் இந்த ஆட்சியை வலிமையாக எதிர்த்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் அந்த எதிர்ப்பு ஒன்று குவிந்துவிடாமல் சிதைப்பதற்கான முயற்சியை ஏதாவது ஒரு சிறிய கட்சி எடுக்கிறது. இன்றைய ஆட்சிக்கெதிராக ஒன்று திரள வேண்டிய உணர்வுகள் சிதறடிக்கப்படுகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் அப்படிப்பட்ட ஒரு எதிர்ப்பு உருவாகிவிடாமல் மூன்றாவது அணி என்ற ஒரு போலிக் கூட்டணியை உருவாக்கி ஜெயலலிதாவிற்கு உதவி செய்தார்கள்.

இப்போது அ.தி.மு.க. மீதான கோபமும் அதிருப்தியும் மக்களிடம் பெருமளவு அதிகரித்து வரும் சூழலில் அவற்றை ஒன்று குவிக்கக்கூடிய பெரும் முயற்சியை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் தொடர்ந்து எடுத்து வருகிறார். சட்டசபையில் எதிர்க் கட்சிக்குரிய பொறுப்பையும் போராட்டத்தையும் தி.மு.க.வே ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முன்னின்று நடத்துகிறது. தமிழகம் எங்கும் மக்களை நேரடியாகச் சந்தித்து தமிழகத்தின் அவலநிலை பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து வருகிறார்.

ஸ்டாலின் அவர்கள் மேல் குவியும் இந்த மக்கள் கவனத்தைச் சிதறடிப்பதுதான் அ.தி.மு.க.வின் அல்லது தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் பல சக்திகளின் ஒரே கனவாக இருக்க முடியும். அந்தக் கனவை நிறைவேற்ற அவர்களுக்கு ஒரு ஆள் தேவைப்படுகிறார். அந்தக் கையாளாக உருவெடுத்திருப்பவர்தான் அன்புமணி.

அன்புமணியின் திராவிட இயக்க எதிர்ப்புணர்வைப் பார்த்து உலகம் கைகொட்டிச் சிரிக்கிறது. ஏனென்றால் பா.ம.க. தனது அரசியல் வளர்ச்சிக்கு திராவிட இயக்கங்களையே இவ்வளவு காலமும் அண்டியிருந்தது. அவற்றின் உதவியுடனேயே அது அதிகாரத்தின் சுவையையும் பலனையும் அனுபவித்தது. அன்புமணி அமைச்சரானதும் அப்படித்தான். இவ்வளவு வாய்ச்சவடால் அடிக்கிற பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிரூபிக்கலாமே.

பா.ம.க.வின் அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்ததே மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டிற்காக அது நடத்திய போராட்டம்தான். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி பா.ம.க.விற்கு மிகப் பெரிய அரசியல் பலத்தை உருவாக்கித் தந்ததே கலைஞருடைய ஆட்சிதான். இதைப் பற்றி கலைஞரே ஓர் அறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “ஆட்சிக்கு வந்த பிறகுதான், இவரை தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மூலமாக நேரில் அழைத்து வரச்செய்து கலந்துரையாடி, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு தி.மு.கழக ஆட்சியிலே வழங்கி 28-.3-.1989இ-ல் உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக அதற்கு முந்தைய ஆண்டு மருத்துவக் கல்லூரியில் 26 மாணவர்கள் மட்டுமே வன்னியர்கள் சேர்க்கப்பட்டதற்கு மாறாக 74 ஆக உயர்ந்தது. அதுபோலவே பொறியியல் கல்லூரிகள் தேர்வில், 88--89ல் 109 வன்னிய மாணவர்கள் என்பது 89--90இல் 292 ஆக உயர்ந்தது. போராட்டத்தில் உயிர் நீத்த 27குடும்பங்களுக்குத் தலா 3 லட்சம் ரூபாய் வீதம் நிதி உதவியும் செய்யப்பட்டது. அவர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் 1,500 ரூபாய் அனுமதிக்கப்பட்டது.

இந்தத் தொகை 2006-ல் மீண்டும் கழக ஆட்சியில் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. வன்னிய சமுதாயத்தில் ஒருபெரும் உண்மைத் தலைவராக விளங்கிய எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் சிலையினை சென்னையிலே அமைக்க 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கழக ஆட்சியில் வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன்களுக்காகத் தனி இயக்ககம் உருவாக்கப்பட்டதும் கழக ஆட்சியிலேதான். 1989 டிசம்பரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டதும் கழக ஆட்சியிலேதான். 2.-3.2009இல் கழக ஆட்சியிலேதான் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியமும் அமைக்கப்பட்டது.

ஆனால் அன்புமணிக்கு இந்த வரலாற்றை எல்லாம் சொல்லிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. தமிழகத்தின் மிகக் கொடூரமான சாதிவெறி அமைப்பாக இன்று உருவெடுத்துள்ளது பா.ம.க. இப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கான தலைவர் தமிழகத்தின் முதல்வராக முடியுமென்றால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான முதல்வர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அன்புமணி தாங்கள்தான் மது ஒழிப்பின் காவலர் என்று காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். மதுவின் சீரழிவை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது சாதி அரசியலின் சீரழிவு.

இவ்வளவு பேசும் அன்புமணியின் கடந்தகால சரித்திரம் என்ன? தகுதியற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது தொடர்பான சிபிஐ வழக்குகள் அன்புமணியை துரத்திக்கொண்டிருக்கின்றன.

கடந்த நான்காண்டுகளாக அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து ஸ்டாலின் சட்டசபையில் மிகக் கடுமையான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த ஓராண்டில் தமிழகம் சார்ந்த எத்தனையோ எரியும் பிரச்சினைகள் இருந்தும் அதற்காக எல்லாம் அன்புமணி நாடாளுமன்றத்தில் எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறார்? கடந்த ஓராண்டில் நாடாளுமன்றத்தில் அவரது வருகைப்பதிவு வெறும் 54% தான். தமிழக எம்பிகளிலேயே மிகக் குறைவான வருகைப் பதிவு இதுதான். இதுவரை நாடாளுமன்றத்தில் வெறும் ஏழேயேழு கேள்விகளைத்தான் எழுப்பியிருக்கிறார். சிவசேனா உறுப்பினர் 291 கேள்விகளைக் கேட்டு முதலிடத்தில் இருக்கிறார். விவாதங்களைப் பொறுத்தவரையிலும் பா.ஜ.க எம்.பி ஒருவர் 121 விவாதங்களில் கலந்திருக்கிறார். அவருக்கு முதலிடம். அண்ணன் அன்புமணியார் வெறும் ஏழு விவாதங்களில் மட்டும் கலந்திருக்கிறார். இதுதான் அன்புமணியின் அரசியல் செயல்பாடு.

இந்த நிலையில்தான் ஸ்டாலினுக்கு எதிரான அறிக்கைப் போர் என்னும் பெயரில் ஒரு அக்கப்போரை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் செயல்பாடுகளைக் கண்டு சின்னக் குழந்தையும் கைகொட்டிச் சிரிக்கும்.

Pin It