oviya eelam

நம் ஈழ உறவுகள் படுகொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. இத்தருணத்தில், ஈழ மக்களின் இன்றைய நிலை குறித்து, இலங்கை மலையகப் பெண்கள் மத்தியில் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பியுள்ள தோழர் ஓவியாவுடன் ஒரு நேர்காணல்... - இரா.உமா

மலையக மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது பற்றிச் சொல்லுங்கள்

பெண்ணிய உரையாடல் வெளியை ஏற்படுத்தித் தருகின்ற, ஊடறு.காம் என்னும் இணையத்தளத்தில் என்னுடைய கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த இணையத்தளத்தின் நிர்வாகிகளில் ஒருவராக இருக்கின்ற திரு ரஞ்சி அவர்கள், ‘தோட்டத் தொழிலாளிகளான மலையகப் பெண்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர்கள். அவர்களுக்கு நம்பிக்கையும், எழுச்சியும் ஊட்டும்விதமாக ஒரு உரையாடல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறோம். இதில் தமிழ்நாட்டில் இருந்து உங்களைப் போன்ற பெண்ணியச் செயல்பாட்டாளர்கள் வந்து கலந்து கொண்டு அவர்களோடு உரையாட வேண்டும்’என்று நட்பு ரீதியாகக் கேட்டுக்கொண்டார். அவருடைய அழைப்பை ஏற்றுக் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி இலங்கை சென்று, அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டேன். அங்குள்ள ஓர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அது ஒரு சிறிய அளவிலான சந்திப்புதான். அதில் மலையகப் பெண்களோடு, இசுலாமியப் பெண்களும் பார்வையாளர்களாக மட்டுமின்றி, உரையாடலை முன்னெடுப்பவர்களாகவும் பங்கேற்றனர். மிகுந்த ஆளுமையுடனும் வெளிப்பட்டனர். ஆனால் தங்களுடைய மத எல்லைகளைவிட்டு வெளியே வரத் தயாராக இல்லை. இசுலாமியப் பெண்களுக்கும், மற்ற பெண்களுக்கும் இடையில் ஒரு சுமுகமான, அன்பான உறவுநிலையைப் பார்க்க முடிந்தது.

உரையாடல் எதைப் பற்றியதாக இருந்தது? இன்று மலையக மக்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது?

தோட்டத் தொழிலாளிகளாக அந்தப் பெண்கள் முகம்கொடுக்கும் சிக்கல்கள், அவர்களின் உரிமைகள் குறித்ததாக உரையாடல் அமைந்தது. அவர்களுடைய முன்னோர்கள் - நம்முடைய முன்னோர்களும் கூட - காட்டைத் திருத்திச் செழிப்பான தேயிலைத் தோட்டங்களாக மாற்றுவதில் செய்த உயிர்த்தியாகங்கள், கடும் உழைப்பு இது குறித்தெல்லாம் சொன்னது மனத்தைக் கனக்க வைத்தது. இலங்கையின் பொருளாதாரமே அவர்களை - தேயிலை ஏற்றுமதியை - நம்பித்தான் இருக்கிறது. இருந்தும் இத்தனை காலங்கள் கடந்தும், அந்த நிலத்தின் மீது தங்களுக்கு சிறு உரிமையும் இல்லாமல், இன்றளவும் கூலிகளாகவே தொடரும் நிலை இருப்பது குறித்த சிந்தனைகளும், நியாயமான உரிமைகள் வேண்டும் என்னும் கோரிக்கைகளும் அவர்களிடமிருந்து எழுவதைப் பார்க்க முடிகிறது. அதன் முதல் கட்டமாக, அவர்களுடைய பிள்ளைகள் இன்று படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள், மிக நீண்ட போராட்த்திற்குப் பிறகு இலங்கை அரசு குடியுரிமை வழங்க இருக்கிறது. உரிமைகள் பெறுவதில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகமாக மலையக மக்கள் இருக்கிறார்கள். எதிர்காலத் தலைமுறையினர் தோட்டக் கூலிகளாக இருக்க மாட்டார்கள்.

போர் முடிந்து 6 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தமிழ்நாட்டுச் சூழலை, இங்கு முன்னெடுக்கப்படுகின்ற ஈழ அரசியலை எப்படிப் பார்க்கிறார்கள்?

இங்கு எடுக்கப்படுகின்ற ஈழ அரசியல் நிலைப்பாடுகள், சில நேரங்களில் அவர்களுக்குச் சாதகமாகவும், சில நேரங்களில் பாதகமாகவும் இருந்திருக்கக் கூடும், இருக்கிறது. ஆனாலும், மலையகத் தமிழர்களாகட்டும், யாழ்ப்பாணத் தமிழர்களாகட்டும், அடிப்படையில் தமிழ்நாட்டைத் தங்களுக்கான பலமாகத்தான் கருதுகிறார்கள். அவர்கள் தமிழக மக்களிடம் இருந்து தங்களுக்கான ஆதரவை உரிமையோடு எதிர்பார்க்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த பேரா.சிவச்சந்திரன் குறிப்பிடும்போது, தமிழ்நாடு என்று ஒன்று இல்லாவிட்டால், எங்களை என்றோ அழித்திருப்பார்கள் என்றுதான் குறிப்பிட்டார்.

இலங்கையின் புதிய அரசியல் - ஆட்சி மாற்றம் தமிழர்களின் வாழ்நிலையில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனவா?

அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியாது. இதற்கு முன் இருந்த, கடும் நெருக்கடியான சூழல் தளர்ந்திருக்கிறது. இருப்பினும் சோர்வும், தோல்வியடைந்து விட்டோம் என்கிற விரக்தியும் அவர்களிடம் வெளிப்படுவதைக் காண முடிகிறது. நாம் சிலவற்றை உணர்ச்சிவசப்படாமல், நடைமுறை சார்ந்து பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன். தமிழர்களுடைய பகுதிகள் மிக நீண்ட காலமாகவே, மத்திய (சிங்கள) அரசினால் புறக்கணிக்கப்பட்டவையாக இருந்திருக்கின்றன. மத்திய அரசின் திட்டங்கள் ஏதும் அந்தப் பகுதிகளை எட்டவே இல்லை. அந்த மக்கள் இரண்டு அரசுகளுக்கும் அதாவது, விடுதலைப்புலிகளின் அரசுக்கும், சிங்கள அரசுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். காரணம், அந்தப் பகுதிகள் சிங்கள அரசின் பிடியிலிருந்து முழுமையாக விடுதலை அடைந்த பகுதிகளாக என்றைக்கும் இருக்கவில்லை. ஒருவிதமான இரட்டை ஆட்சி முறைதான் இருந்திருக்கிறது. ஆனாலும் புலிகளின் நேரடி ஆட்சியின் கீழ்தான் மக்கள் இருந்திருக்கிறார்கள். அன்றைய ராஜபக்சே அரசின் புறக்கணிப்பால், சாலை, மின்சாரம், மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட அந்தப் பகுதிகளுக்கு ஆண்டுக்கணக்கில் செய்துதரப்படாததால், வளர்ச்சி என்பதே எட்டிப்பார்க்கவில்லை. போர்க்காலத்தில், பெரும்பாலான மக்கள் அந்த இடங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரின் போது விட்டுவிட்டுச் சென்ற கட்டடங்களும், நிலங்களும் பாழடைந்து கிடக்கின்றன. முள்ளிவாய்க்கால், கிளிநொச்சியில் பல பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. போரினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள், அதற்குப் பிறகு சந்தித்த ராஜபக்சே அரசின் இராணுவ ஒடுக்குமுறைகள் ஆகியவற்றிலிருந்து இப்பொழுதுதான் சற்றே விடுபட்டிருக்கிறார்கள்.

இந்திய (மன்மோகன்சிங்) அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அந்த வீடுகளும் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டவையாக இல்லை. சன்னல் இல்லாத, தளம் சரியாகப் போடப்படாத அந்த வீடுகளில், தங்களுடைய வாழ்க்கையை மீண்டும் இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்கள்.

சிங்களக் குடியேற்றம் அதிகரித்திருக்கிறதா?

நான் முழுமையாக எல்லாத் தமிழ் பகுதிகளையும் பார்க்கவில்லை. நான் பார்த்தவரையில், போர் நடந்த பகுதிகளில் இராணுவக் குடியிருப்புகள் - முகாம்கள் - ஏற்படுத்தப்பட்டுள்ளன. இராணுவம் என்பது முழுக்க முழுக்க சிங்களவர்கள் மட்டுமே. மக்கள் வாழுகின்ற பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் இன்னும் நிகழவில்லை. ஆனால் அதற்கான திட்டங்கள் சிங்கள அரசுக்கு இருப்பதாகத் தெரியவருகிறது. தமிழர்களின் அடையாளங்களை அழித்துவிட்டு, சிங்கள இன அடையாளங்களைப் புகுத்திவருகின்றனர். உதாரணமாக, அரச மரம் இருக்கும் இடங்களில் எல்லாம் புத்தரின் சிலையைக் கொண்டு வந்து வைத்து, பவுத்தக் கோயில்களாக ஆக்குகிறார்கள். வரலாற்றில், இப்போதுதான் இந்தியாவிலிருந்து அசோகரின் மகள் சங்கமித்திரை வந்து இறங்கிய இடம் யாழ்ப்பாணக் கடற்கரையில், கீரிமலைப் பகுதியில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் கடற்கரைப் பகுதியை முக்கியமான சிங்களத்தளமாகவும் நிறுவியிருக்கிறார்கள். அந்த அம்மையார் அனுராதபுரத்திற்குப் போனதாகத்தான் நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். இங்கு ராமர் காலடித்தடங்களைக் கண்டெடுத்தது போல, சங்கமித்திரையின் பாதச் சுவடுகளைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். ஆதிக்கத்தின் கைகளில் மூடநம்பிக்கை எப்போதும் விசுவாசத்துடனே செயல்படுகிறது. தமிழர்களுக்கென்று அடையாளங்களோடு, தனிப்பகுதிகள் இருக்கக் கூடாது என்பது சிங்கள அரசின் விருப்பமாக இருக்கிறது. இதனை எதிர்கொள்கின்ற சமூக, பொருளாதார, அரசியல் வலிமையோடு தமிழர்கள் அங்கு இல்லை என்பதுதான் நம்மை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது.

போர் பாதித்த பகுதிகளில் என்னென்ன மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

நான் முன்பே குறிப்பிட்டது போல, சாலை, மின்விளக்கு, ரயில் போக்குவரத்து போன்ற கட்டமைப்புகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் பதிக்கப்பட்டு, தொடர்வண்டி போக்குவரத்து செயல்படுகிறது. குடியிருப்புகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அதேநேரத்தில், இவையெல்லாம் யாருக்காக இத்தனை பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன என்ற கேள்வியும் அந்த மக்களிடம் எழுகிறது. காரணம், போரினால் பாதிக்கப்பட்ட மக்களைக் கணக்கெடுக்கும் பணிகளோ, அவர்களின் நிலங்களைக் கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளோ அரசால் முன்னெடுக்கப்படவில்லை. முள்வேலி முகாம்களிலிருந்து மக்களை விடுவித்துவிட்டோம் என்று சொல்லும் அரசாங்கத்திடம், அவர்கள் எந்தெந்தப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஆண்களே முற்றிலும் இல்லாது போய்விட்ட குடும்பங்கள், தனித்துவிடப்பட்டிருக்கும் பெண்கள், குழந்தைகள், உறவுகளை மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் இழந்து நிற்கும் மக்கள், இயக்கங்களோடு தொடர்பாக இருந்த காரணத்தினால் இப்பொழுது முழுமையாகப் புறக்கணிப்புக்கு ஆளாகி நிற்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் என, இவர்களுடைய வாழ்க்கை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத துன்பக் கதையாகவே இன்னும் தொடர்கிறது. இவர்களுக்கான எந்த நிவாரணத்திட்டம் குறித்தும் நாங்கள் கேள்விப்படவில்லை. கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு, ஓர் அரசாங்கம் முதலில் பாதிப்புகளைக் கணக்கெடுக்க வேண்டும். ஆனால் அந்தப் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகள் செய்து கொடுத்துள்ள கட்டமைப்புகளைத் தவிர, இலங்கை அரசு செய்தது என்று ஒன்றுமில்லை. இந்நிலையில், ‘இந்தச் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் எல்லாம் எங்களுக்காகச் செய்யப்பட்டவையா, இல்லை, வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் வந்து செல்வதற்காகச் செய்யப்பட்டவையா’என்று அந்த மக்கள் கேட்கின்றனர்.

தமிழர்களின் பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளனவா?

யாழ்ப்பாணத்தில் சீனாவைச் சேர்ந்த ஒரு பெட்ரோலிய நிறுவனம் செயல்படுகிறது. அதன் கழிவுகள், யாழ் நகரின் தண்ணீரை மாசுபடுத்தி வருவதாக மக்கள் சொன்னார்கள். அங்குள்ள தண்ணீர் அதிக சுவையாக இருக்கும் என்பதால், யாழ்ப்பாண மக்கள் போத்தல் தண்ணீரை விரும்புவதும் இல்லை, வாங்குவதும் இல்லை என்கிறார்கள். ஆனால் இன்று பெட்ரோலியக் கழிவுகளால் தண்ணீர் மாசடைந்து, குடிக்க முடியாதபடி மாறிவிட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இன்னும் பல பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு இந்த மண் இலக்காகி இருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். போருக்குப் பிறகு நிலத்தைச் சீரமைப்பதில் காட்டிய அக்கறையை, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் இலங்கை அரசும் காட்டவில்லை, சர்வதேச சமூகமும் காட்டவில்லை. எனவேதான், ‘எங்களைப் பொறுத்தவரையில், சர்வதேசம் என்பது பொய்யாகிப்போய்விட்டது’என்று வேதனையோடு அந்த மக்கள் குமுறுகின்றனர்.

வடக்கு மாகாண அரசு இந்த விசயத்தில் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது?

அங்கே மத்திய அரசுதான் முழுமையான அதிகாரம் பெற்ற அரசு. மாகாண அரசுகள், குறிப்பாகத் தமிழர்களின் வடக்கு மாகாண அரசு வலிமையாகவும், தன்னிச்சையாகவும் செயல்படக்கூடிய அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் அப்படி ஓர் அரசு இருப்பது, தமிழர்களுக்கான அரசியல் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

Pin It