Unfortunately, the centuries old Indian caste system still takes its toll from time to time… It is absolutely imperative to abolish the caste system as expeditiously possible for the smooth functioning of Rule of Law & Democracy in our country.
- State of UP Vs Ram Sajivan and others.
2010 - ஆம் ஆண்டு, “கிருஷ்ண அய்யர் பிராமணாள் கஃபே” என்ற பெயரில் உள்ள உணவகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்திய போராட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
”கடைகளுக்குத் தாங்கள் விரும்பும் பெயர்களைச் சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் 19(1) ஏ மற்றும் 19(1) ஜி உரிமை வழங்கியுள்ளது” என்று கூறியதோடு, “கோனார் மெஸ், முதலியார் இட்லி கடை, ஐயங்கார் பேக்கரி போன்ற சாதிப் பெயர்களைக் கொண்ட வியாபார நிறுவனங்கள் இருக்கும் போது ஏன் பிராமணாள் கஃபே என்ற பெயருக்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்?” என்று தனது தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிராமணன் என்றால் என்ன? பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்தவன் என்பது தானே! எனவே பிராமணன் என்பதை ஒப்புக் கொண்டால், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வருணப் பாகுபாட்டையும் ஏற்றுக் கொள்வது என்பது தானே பொருள். இந்தப் புரிதல், உயர்நீதிமன்றத்திற்கு இல்லாதது ஏன்? அய்யர், அய்யங்கார் பேக்கரிக்கு இங்கு எதிர்ப்பு உள்ளதா? பிராமணன் என்ற சொல், வருணாசிரமத்தின் வெளிப்பாடு என்பதால், வருணபேதத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தானே அது எதிர்க்கப்படுகிறது.
இன்றும், பார்ப்பனர் என்ற பதம் பகுத்தறிவாளர்களால் பயன்படுத்தப்படுவது, பிராமணன் என்ற சொல் மூட நம்பிக்கைக்கும், புராணப் புளுகிற்கும் வித்திடுகிறது என்பதால் தானே?
இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சத்தை உயர்நீதிமன்றம் ஏன் புரிந்து கொள்ளவில்லை? ”இந்த நாட்டில், சட்டத்தின் ஆட்சி செம்மையாக நடைபெற சாதி முறை ஒழிக்கப்பட வேண்டும்” என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்? சாதி ஒழியவேண்டுமெனில், சாதி முறையை ஊக்குவிக்கும் வருணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது நீதிமன்றத்திற்குத் தெரியாதா? உயர்நீதிமன்றம் தான் பதில் சொல்ல வேண்டும்.