இந்துக்கள் என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் பார்ப்பனர்கள் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் அதன் அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறைகளை முழுமையாக மறைத்து  இந்தக் கட்டமைப்பின் வழியாக தங்களின் சமூக மேலாதிக்கத்தை உறுதி செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் 7 நூற்றாண்டு காலம் வரை ஜாதிக் குழுக்குள் வலங்கை -இடங்கை என்று பிரிந்து தங்களுக்குள் மேலாதிக்கத்துக்கான போராட்டங்களை நடத்தி வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு. சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், நாயக்கர் காலத்தில் இந்த ஜாதி வெறிச் சண்டைகள் தீவிரமாக நடந்துள்ளன.

ஆனால் மன்னர்களோ சமூகத்தின் இந்த அவலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து கோயில்களைக் கட்டுவதிலும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதிலும் படை எடுப்பதிலும், மக்களைச் சுரண்டி வரி வசூலிப்பதிலும் பார்ப்பனர்களைக் கொழுக்க வைப்பதிலுமே கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். வலங்கை - இடங்கை ஜாதிக் குழுக்கள் மோதி இரத்தம் சிந்திய வரலாறுகளை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை

ambedkar in bombayதமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையும் தமிழ்நாட்டில் வலங்கை இடங்கை சாதி வேறுபாடுகளும், சமத்துவ மறுப்பும் இருந்து வந்துள்ளது. இன்று அது போன்ற பெயரில் அழைக்கப்படவில்லை என்றாலும் அதன் சாராசம்சமான தன்மையில் சாதிய ஏற்றத்தாழ்வானது கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால் இந்த வலங்கை இடங்கை சாதிய பிரிவானது எந்த அடிப்படையில் தோன்றியது என்பதற்கான வலுவான வரலாற்று காரணங்கள் இதுவரை தெளிவாக கண்டறியப்பட முடியவில்லை. பொதுவாக வலங்கை பிரிவானது இடங்கை பிரிவின் மீது ஆதிக்கம் செய்வதற்கு அடிப்படையாக சாதியக் கட்டமைப்பில் நிலவுடமையே இருந்துள்ளது என்பதை நம்மால் அறியமுடிகின்றது.

வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை அவர்கள் “இடங்கை வரி என்றும் வலங்கை வரி என்றும் வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. இவ்விரு வகுப்புகளில் சேர்க்கப்பட்டிருந்த தனித்தனி 98 குலத்தினரைப் பற்றிய விளக்கம் ஒன்று அச்சுத தேவராளியரின் கல்வெட்டு ஒன்றில் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்விரு வகுப்பினரிடையே அடிக்கடி சச்சரவுகள் நேரிட்டன. இரு வகுப்பினரிடையேயும் உயிர்ச் சேதம் நேர்ந்துள்ளது. இத்தகைய வகுப்புக் கலகம் ஒன்று முதலாம் வீரவிருபாட்சன்  காலத்தில் மலையம்பட்டில் விளைந்தது. பிறகு அவர்களுக்குள் உடன்படிக்கை யும் ஏற்பட்டது” என்கின்றார்.  (தமிழக வரலாறும்-மக்களும் பண்பாடும்)

கல்வெட்டு ஆய்வாளரான முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், “பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தமிழ்நாட்டில் இருந்த சாதியினர் எல்லாம் தங்களை இடங்கை, வலங்கை எனப் பிரித்துக் கொண்டனர். இம்முறை சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், நாயக்கர் போன்ற அரசர்கள் காலத்தில் தொடர்ந்து கி.பி. 1900 வரை இருந்துள்ளது. இதனால் இரு பிரிவினரிடையே உரிமைகள் பற்றியும், உயர்வு தாழ்வு பற்றியும் அடிக்கடி பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இவற்றை பிற்கால கல்வெட்டுகளும் செப்பேடு களும் எடுத்துக்கூறுகின்றன. ஒரு காலகட்டத்தில் இடங்கை பிரிவில் 98 ஜாதிகளும் வலங்கை பிரிவில் 98 ஜாதிகளும் இருந்துள்ளன. மிகவும் பிற்காலத்தில் இடங்கை ஜாதிகள் 6 ஆகவும் வலங்கைப் பிரிவில் 30 ஜாதிகளும் இருந்துள்ளன

ஆனால், திருமங்கலத்தில் உள்ள கல்வெட்டோ கோச்சடையவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவரின் பதினான்காம் ஆட்சியாண்டில் (13ஆம் நூற்றாண்டில்) சித்திரை மாதத்தில் ஒருநாள் விருதராஜ பயங்கர வளநாட்டைச் சார்ந்த குறுக்கை நாடு, காளி நாடு, விளத்தூர் நாடு, மாந்துறை நாடு, திருமங்கலநாடு எனப்பெறும் இந்த ஐந்து நாட்டு இடங்கை வலங்கைப் பிரிவினராகிய சாதியினர் எல்லாம் திருமங்கலம் கோயிலில் கூடி இனி சந்திரன் சூரியன் உள்ள அளவும் தங்களுக்குள் இடங்கை வலங்கைப் பிரிவுகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும், யாரேனும் கொண்டாடுவார்களாயின் அவர்கள் ஐந்து நாட்டிற்கும் அநியாயம் செய்தவர்களாகக் கருதப்படுவர் என்றும் முடிவு எடுத்து அம்முடிவினை அரசனின் ஆணைபெற்று இங்கு கல்வெட்டாகப் பொறித்துள்ளனர். சோழர்களின் ஆட்சி முடிவு பெற்ற பின்பு சோழநாடு பாண்டியர் வசம் இருந்தது. அப்போது இக்கல்வெட்டு பொறிக்கப்பெற்றதாகும். சாதி மோதல்களைத் தவிர்க்க கோயிலில் வைக்கப் பெற்ற இக்கல்வெட்டு வரலாற்றுச் சிறப்புடைய ஒன்றாகும்” என்று விவரிக்கிறார்.

நிலவுடைமை வகுப்பினரும் அவர்கள் தங்களோடு இணைத்துக் கொண்ட சாதியினரும் வலங்கைப் பிரிவினர் என்றும், வணிகக் குழுவினரும் அவர்கள் தங்களோடு சேர்த்துக் கொண்ட சாதியினரும் இடங்கைப் பிரிவினர் என்றும் தமது கட்டுரை ஒன்றில் விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளர் நா.வானமாமலை.

மேலும் அவர், “வலங்கைப் பிரிவினர் கை வலுத்திருக்கும்போது, மன்னன் அவர்களோடு சேர்ந்து கொண்டு இடங்கைப் பிரிவினரை அடக்குவான். இடங்கைப் பிரிவினர் கை வலுத்திருக்கும்போது, மன்னன் அவர்களுக்குச் சில சலுகைகளை அளிப்பான்”என்கிறார்.

வலங்கை சாதிகள் என்று எடுத்துக் கொண்டால் அதில் கொங்கு கவுண்டர், ஒக்க சண்டி பண்டாரம், கொங்கு உடையார், மரமேறி நாடார், கொங்கு வண்ணார், கொங்கு நாவிதர், கொங்கு பறையர் போன்றவர்களும் இடங்கை பிரிவு என்று எடுத்துக்கொண்டால் சோலி ஆசாரி, கோமுட்டி செட்டியார், கொங்கு ஆசாரி, கைக்கோளர், வடுக நாயக்கர், வடுக வண்ணார், பாண்டிய நாவிதர், கூடைக்குறவர், மொரசு மாதாரி போன்றவர்களும் இருந்துள்ளனர். இதில் இடங்கை சாதிகள் என்பவர்கள் எப்போதும் வலங்கை சாதிகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், பெரும்பாலான நேரங்களில் அவர்களின் பொருளாதாரத்தை சார்ந்து வாழ்ந்தவர்களாகவே இருந்துள்ளனர்.

வலங்கை  பிரிவைச் சேர்ந்த வளமிக்க கவுண்டர்கள் திறந்தவெளி முற்றம், விசாலமான பல அறைகள் கொண்ட வீடுகளில் வாழ்கின்றனர், மேலும் சமையல் செய்தல், சுத்தப்படுத்துதல் ஆகிய வீட்டு வேலைகளை செய்வதற்கு பணியாளர்கள் இருப்பார்கள். மற்ற சாதிகளுடனான தங்களின் முரண்பாடுகளை வெளிப்படையாக தீர்த்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இப்படி வலங்கை பிரிவு சாதிகளுக்கு ஊழியம் செய்யும் சாதிகள் மற்ற சாதிகளை மேலாண்மை செய்யவோ ஏன் நெஞ்சி நிமிர்த்தி நடக்ககூட அனுமதிக்கப்படுவதில்லை. இப்படித் தங்களை வேறுபடுத்திக்காட்டிக்கொள்ள வலங்கைப் பிரிவு சாதி பெண்கள் தங்கள் புடவைகளின் முந்தானையை இடது தோளிலும் இடங்கை சாதி பெண்கள் தங்கள் முந்தானையை வலது தோளிலும் போட்டிருந்தனர்.

இந்த இரு பிரிவுகளிலும் உள்ள கீழ்நிலையில் வைக்கப்பட்ட சாதிகள் இடங்கை பிரிவில் உள்ள நில உடமையாளர்கள் மற்றும் வலங்கை பிரிவில் உள்ள நில உடமையாளர்கள் என அனைவரிடமும் கூலிகளாக வேலை பார்க்கும் நிலைதான் இருந்துள்ளது. ஆனால் ஏற்கெனவே முழுவதுமாக பார்ப்பனமயமாகி இருந்த வலங்கை சாதிகள் பழக்க வழக்கங்கள்தான் பெரும்பாலும் இடங்கை சாதிகளின் மேல் செல்வாக்கு செலுத்தும் நிலை நிலவி வந்திருக்கின்றது.

நில உடமை என்று எடுத்துக் கொண்டால் பெரும்பாலான நிலங்கள் ஏறக்குறைய 80 விழுக்காடு நிலங்கள்வரை கொங்கு கவுண்டர்கள் உடைமையாக பெற்றிருந்திருக்கின்றனர். இதனால் வேறு எந்த சாதிகளும் அவர்களோடு போட்டி போட முடிவதில்லை என்பதோடு அவர்களின் சாதி ஆதிக்கத்திற்கு அடிபணிய வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகின்றது. சாதிப் பிரிவுகள் பார்ப்பனியம் கட்டமைத்த வர்ணாஸ்ரமத்தி லிருந்து உருவானவை என்று பெரியாரும் அம்பேத்கரும் தெளிவாக நிறுவுகிறார்கள். ஆனால் சாதிய ஆதிக்கம் நிலவுடமை சார்ந்தே கட்டமைக்கப்படுகின்றது. இடங்கை பிரிவில் உள்ள பெரும்பாலான சாதிகளுக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை என்பதால் அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வலங்கை நிலவுடமையாளர்களையே பெரிதும் சார்ந்து இருக்க நிர்பந்திக்கப்பட்டனர். மேலும் வலங்கை இடங்கை பிரிவுகளை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதிகளான பறையர், குறும்பர், மாதாரி போன்ற சாதிகளுக்கு அவர்களின் சமூக படிநிலையைப் பொறுத்தே அறுவடைக்குப் பின்பு கூலி கொடுக்கப்பட்டது.

 கொங்கு பகுதியைப் பொறுத்தவரை நிலத்தில் நேரடியாக பாடுபடவும், அறுவடை செய்யவும் இரண்டு சாதிகளுக்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டிருந்தது ஒன்று கவுண்டர் சாதி மற்றொன்று மரமேறி நாடார் சாதி. கவுண்டர், நாடார் இருவருமே பட்டக்காரருக்கு குத்தகை/வாரம் தர வேண்டும். இது பணமாகவோ, உழைப்பாகவோ, பொருளாகவோ தரப்படலாம். இவ்வாறு கவுண்டர்கள் மண்ணிலும், நாடார்கள் பனைமரங்களிலிருந்து கள்ளு இறக்கவும், பழம், இலை போன்றவற்றைப் பயன்படுத்தி கொள்ளவும் உரிமை பெற்றிருந்தனர்.

வலங்கை பிரிவுக்கும் மாரியம்மன் கோயிலுக்குமான நெருக்கம் என்பது முக்கியமாக பராமரிக்கப்படுகின்றது. வலங்கை பிரிவில் உள்ள சாதிகளில் ஏதாவது ஒன்று கோயில் திருவிழாவில் பங்கேற்காமல் போனால் விழாவே தடைபடும் நிலை கூட ஏற்பட்டுவிடும். வலங்கை பிரிவுக்கும் கோயிலுக்குமான உறவு என்பது உள்ளூர் நிலப்பரப்புக்கும் அவர்களுக்குமான உறவாக பராமரிக்கப்படுகின்றது. மேலும் ஒரு புராண கதையின் படி இந்த வலங்கை சாதிகள் அனைத்தும் ஒரே அக்கினியில் இருந்து பிறந்ததாக கருதப்படுகின்றது.

எனவே இந்தச் சாதிகள் தங்களுக்குள் அண்ணன், தம்பி என்று அழைத்துக் கொள்கின்றனர். மாரியம்மன் திருவிழாவில் “பறையர்”களுக்கு கவுரமான பங்களிப்பு அளிக்கப்படுகின்றது. ஆனால் இதை வைத்துக் கொண்டு ஒடுக்குமுறை இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. இவை எல்லாம் நிலவுடமை மூலம் தாங்கள் செலுத்தும் சுரண்டலில் இருந்து அந்த மக்களின் கவனத்தை திசை திருப்ப செய்யப்பட்ட ஏற்பாடாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் அதே போல இடங்கை பிரிவில் உள்ள இடைநிலை சாதிகள் மச்சான் உறவு வைத்து அழைத்துக் கொள்கின்றனர்.

இந்த வலங்கை பிரிவினரின் நிலத்தின் மீதான ஆதிக்கம் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்தது. காராணம் பிரிட்டிஷ் ஆட்சியானது நிலத்தை பண்டமாக மாற்றி , நிலத்தை யாரும் விற்கலாம் வாங்கலாம் என்று சட்டம் கொண்டுவந்த போது இதற்கு முன்னர் நிலமற்று ஆனால் பொருட்செல்வம் சேர்த்திருந்த சாதிகள் இதைப் பயன்படுத்தி நிலங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இன்றும் கூட கொங்கு பகுதியில் நிலமானது பெரும்பான்மையாக கவுண்டர் சாதிகளிடமே இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இதற்கு பரம்பரை தன்மையும் ஒரு முக்கிய காரணம். ஒரு கவுண்டர் தன்னுடைய நிலைத்தை இன்னொரு கவுண்டர்க்கு விற்பதையே விரும்புகின்றார். வேறு சாதிகளுக்கு விற்பதை தங்கள் சாதியின் ஆதிக்கம் தகர்ந்துவிடும் என்பதால் அதை விரும்புவதில்லை.

இப்படி தங்கள் மீது செலுத்தப்படும் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை போன்றவற்றில் இருந்து மதம் மாறுவதன் மூலம் வலங்கை பிரிவில் இருந்த பறையர் சமூகம் குறைந்தபட்ச விடுதலையை பெற முடிந்தது ஆனால் இடங்கை பிரிவில் இருந்த மாதாரி சமூகம் தங்கள் மீதான ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை அடைய மதம் மாறுதல் என்ற நிலைப்பாட்டை பெரிய அளவில் எடுக்கவில்லை என்பதோடு தங்கள் மீது சுமத்தப்பட்ட சாதிய இழிவை சகித்துக் கொண்டு போகும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். வலங்கை பிரிவில் உள்ள பறையர்கள், நாவிதர், வண்ணார் போன்றவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டுகின்றனர். ஆனால் இடங்கை பிரிவில் உள்ள சாதிகளில் குறிப்பாக மாதாரி சமூகம் கல்வி அறிவில் இன்னும் பின்தங்கியே உள்ளது.

வலங்கை இடங்கை என்ற பிரிவுகள் தற்போது இல்லை என்றாலும் அதன் எச்சங்கள் இன்றும் சமூகத்தில் நிலவுவதை நம்மால் பார்க்க முடிகின்றது. சாதிய ஆதிக்கம் என்பது நிலவுடமை உறவுகளுடன் நின்று விடாமல் இன்று பல்வேறு பட்ட நவீன உற்பத்திமுறை நடக்கும் இடங்களில் கூட தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது. பொருளாதார உயர்நிலையை வலங்கை பிரிவில் இருந்த தாழ்த்தப்பட்ட சாதிகளோ இடங்கை பிரிவில் இருந்த தாழ்த்தப்பட்ட சாதிகளோ தங்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு போன்றவற்றை பயன்படுத்தி அடைந்திருந்தாலும் சூத்திர சாதிகள் தாங்களும் பார்ப்பனியத்தால் இழிவுபடுத்தப்படுகிறோம் என்பதை உணர மறுத்து அவர்களிடம் காலம் காலமாக உறைந்து கிடக்கும் தனக்கு கீழானவர்களுக்கு எதிரான சாதிய ஆணவபோக்கு அவர்களுக்கு சமூகத்திலும் மனதிலும் சமத்துவத்தைக் கொடுக்க மறுக்கின்றது. இப்படியான போக்கு உண்மையில் நிலவுகின்றது என்பதை ஏற்று அதற்கு எதிரான தீவிரமான கருத்தியல் பரப்புரையை மேற் கொள்வதன் மூலமே நம்மால் சமூக சமத்துவத்தை நோக்கி பயணிக்க முடியும்.

இந்த சமூக எதார்த்தத்தை மறைக்க சங்கிகள் ‘இந்து’ என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கின்றன.

Pin It