தமிழகத்தை வளப்படுத்தக்கூடிய திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அரிக்கையிருந்தும் -
அவற்றையெல்லாம் கலைஞர் நிறைவேற்றுவார் என்று அவர் பேரில் அளவுகடந்த நம்பிக்கையிருந்தும் -
தளபதி ஸ்டாலினின் கடுமையான வேகமான பரப்புரையின் தாக்கமிருந்தும் - தொண்டர்களின் தளராத ஊக்கமும், உழைப்புமிருந்தும் கூட, -
விஜயகாந்தின் முதல்வர் கனவினாலும், கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்ற கருத்துருவத்தை முன்னிறுத்திய திருமாவின் எண்ணத்தினாலும், கலைஞர் மீதும் ஸ்டாலின் மீது வைகோவிற்கு இருந்த கொடூரமான குரோதத்தினாலும்,
வன்மத்தினாலும், உலகப் பொதுச் சித்தாந்தமான கம்யூனிசம் தமிழ்நாட்டில் மட்டும் “வேதாந்தமாக” மாறிய விளைவினாலும், பாதாளம் வரை பாய்ந்த (அதிமுக-வின்) கள்ள (கறுப்பு)ப் பணத்தினாலும்,
அந்தப் பணத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க மத்திய பி.ஜே.பி. அரசு மறைமுகமாக முட்டுக் கொடுத்ததினாலும்,
தேர்தல் ஆணையத்தின் ஒரு பக்கச் சார்பினாலும்,
திமுக மிக சொற்ப தொகுதியிழப்பினால் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
மனம் கனத்துத்தான் போகிறது.
ஆனால், விஜயகாந்த், தி.மு.க. கூட்டணியில் இணைந்திருந்தால் தி.மு.க. இப்போது பெற்றிருக்கும் மகத்தான சாதனைக்கு தே.மு.திக. சொந்தம் கொண்டாடியிருக்கும். தன்னால்தான் தி.மு.க. மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்று விஜயகாந்தும் பிரேமலதாவும் கூச்சநாச்சமில்லாமல் சொல்லியிருப்பார்கள். இந்த அபவாதத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் திமுக-வைக் காப்பாற்றி தே.மு.தி.க.வின் கர்வத்தை ஒடுக்கி மூக்கை உடைத்திருக்கிறது இந்தத் தேர்தல்.
கூட்டணி வேறு, கூட்டாட்சி வேறு. மத்தியில் கூட்டாட்சிக்குக் கைகொடுக்கும் தமிழக வாக்காளர்கள், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் பட்டனைத் தட்டமாட்டார்கள் என்கிற உண்மையை, நுண்மையை திருமாவளவனுக்கு உணர்த்தியிருக்கிறது இந்தத் தேர்தல்.
என்னதான் திராவிடப் பாசறையில் வளர்ந்திருந்தாலும், ஜெயலலிதா என்கிற பார்ப்பனத் தலைமையின் கீழ் தமிழகத்தில் ஆட்சி நடந்தாலும் பரவாயில்லை. ஆனால் கலைஞர் ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்று வைகோவின் உள்மன அடியாழத்தில் ஊறுகாய் போட்டு வைத்திருந்த சாதி வெறியின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது இந்தத் தேர்தல்.
2011 தேர்தலில் வெறும் 23 தொகுதிகளை வைத்திருந்த, - எதிர்க்கட்சி நிலையைக்கூடப் பெற முடியாமலிருந்த - திமுக இப்போது 94 இடங்களை, அதாவது நான்கு மடங்குகளுக்கும் அதிகமான தொகுதிகளைப் பிடித்துத் தன் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது இந்தத் தேர்தல்.
இந்தத் தேர்தல் நமக்கு மிகப்பெரிய பாடமொன்றினைப் படிப்பித்துச் சென்றிருக்கிறது.
அதோடு பெரும் பணியொன்றினையும் நம்முன் வைத்துச் சென்றிருக்கிறது.
இது சாதாரண, எளிதான பணியன்று.
இந்தத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் புதிய ‘சமஸ்’கள் தோன்றி ஒரு செய்தியை அழுத்தி அழுத்திச் சொல்லிச் சென்றார்கள்.
அதாவது இரண்டு திராவிடக் கட்சிகளாலும் தமிழ்நாடு கெட்டுக் குட்டிச்சுவராகிப் போனதாம். இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் அடியோடு அகற்றித் தூக்கியெறிய வேண்டுமாம்.
திராவிடக் கட்சிகளை ஆதாரிப்பது பெண்களுக்குச் செய்யும் துரோகமாம், பெண்களை அவமானப்படுத்துவதாகுமாம். இவர்களிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டுமாம்.
இப்படிச் சொன்னவர்கள் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அமித்ஷா, முரளிதர்ராவ் போன்ற வட இந்திய பி.ஜே.பி.யினர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் திராவிடத்தால் விளைந்த நன்மைகளைச் சுகித்த பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்டுகள் உட்படப் பலர்.
வெங்கய்யா நாயுடுவுக்கும் பிரதமர் உட்பட மற்ற பி.ஜே.பி. தலைவர்களுக்கும் தன் சென்னை பிரச்சார மேடையிலேயே சாரியான சூடும் சம்மட்டி அடியும் கொடுத்தார் கலைஞர்.
கைரிஷா ஒழிப்புத்திட்டம், கண்ணொளித் திட்டம், குடிசை மாற்று வாரியம் அமைத்து காங்கிரிட் வீடுகள் கட்டிக் கொடுத்து குடிவைத்தது, குடிமக்களின் வாழ்வாதரத்துக்குத் தேவையான உழைப்பு, உழைப்பதற்கான தொழிற்சாலைகள், அதற்காக டிட்கோ, சிட்கோ, தாட்கோ அமைத்தது. தனியார் கைவசம் இருந்த போக்குவரத்தை அரசுடைமையாக்கி பொது மக்கள் சொத்தாக்கியது. விவசாயம், தொழில் கல்வி, சுகாதாரம், வர்த்தகம், கைத்தறி, கதர் இப்படிப் பலவாறான துறைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம், செய்த சாதனைகளை அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் விரிவாக விளக்கிக் கூறினார் கலைஞர். அவர்மட்டுமின்றி தளபதி மு.க.ஸ்டாலினும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை விளக்கியிருக்கிறார்.
மோடி போன்ற வட இந்தியத் தலைவர்கள் திராவிடக் கட்சிகளைப் பற்றி எது வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கு என்ன தெரியும், திராவிடத்தைப் பற்றி? திராவிட சிந்தனைகள் பற்றி? அது விளைந்த மண்ணைப் பற்றி?
ஆனால் திராவிடத்தால் கிடைத்த அத்தனை நன்மைகளையும் சுகித்த தமிழகக் கட்சிகள், - கட்சித் தலைவர்கள் இப்படிப் பேசலாமா? அவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டாமா? பாடம் கற்பிக்க வேண்டாமா?
இன்று தமிழ் தேசியம் பற்றிப் பலர் வாய்கிழியப் பேசுகிறார்கள். திராவிடம் வேறு, தமிழ்தேசியம் வேறு என்று பேசுகிறார்கள். திராவிடத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ் தேசியத்தையும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்தேசியம் பேசுபவர்கள் திராவிடத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
1938 ஆம் ஆண்டு முதலே தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர்கள் திராவிட இயக்கத்தார். இந்தத் திராவிடச் சிந்தனை கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகுதான் மதராஸபட்டணம் அல்லது சென்னை ராஜதானி ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற ஒற்றைவரித் தத்துவத்தில் அதிகாரப் பகிர்வுக்கு வழிவகுத்து, மத்திய அரசின் ஆளுமையின் கீழ் இருந்த மாநிலங்களுக்கு சுய நிர்ணய உரிமையின் மாட்சிமையை எல்லா மாநிலங்களுக்கும் உணர வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
குலக்கல்வியை ஒழித்தது திராவிடச் சிந்தனை.
இடுப்புத் துண்டைக் கையிலேந்தி கைகட்டி வாய்பொத்தி ‘கும்புடறேன் சாமி’ என்று சொன்னவர்கள் இப்போது தோளில் சால்வையே போட்டுக் கொண்டு போகிற நிலைக்கு மாற்றத்தைக் கொண்டு வந்தது திராவிடம் அல்லவா?
1920-ல் நீதிக்கட்சி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையினால்தானே, இன்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், பழங்குடியின, சிறுப்பான்மையின மக்களெல்லாம் படித்தவர்களாக, பட்டதாரிகளாக அரசுத்துறையிலும் தனியார் துறையிலும் உயர்ந்த பதவிகளிலும் பொறுப்புகளிலும் பணியாற்றுகிறார்கள்.
அக்கிராசனர் - தலைவராகவும், காரியதாரிசி செயலாளராகவும், பொக்கிஷதாரர் பொருளாளராகவும், நமஸ்காரம் வணக்கமாகவும் மாறியது திராவிடக் கட்சிகளால் தானே.
சாதியின் பெயரால் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்த தீண்டாமையைத் தாண்டி, கருவறை வாசல்வரை செல்வதற்கு மட்டுமின்றி, சிறு தெய்வ வழிபாடுகளில் கிராமப் பூசாரிகளாக பார்ப்பனர் அல்லாதவர்களே பூஜை செய்ய வைத்ததும் திராவிடமே.
திராவிட (முன்னேற்றக்கழக)ம் இல்லையென்றால் தமிழகம் இன, மொழி, மத, சாதி பேதங்களால் எப்போதும் சண்டைக் களமாகவே மாரியிருக்கும்.
கர்நாடக சங்கீத மேடைகளில் தெலுங்கு கீர்த்தனைகள் மட்டுமே பாடப்பட்டு வந்த நிலைமையை மாற்றி இன்று செம்மொழித் தமிழிசையைக் கோலோச்ச வைத்தது யார்?
இப்படி எத்தனையோ முன்னேற்றங்கள் திராவிடச் சிந்தனையால் தமிழ் மண்ணில் விளைந்திருக்க,-
இதையெல்லாம் மறந்தும், - மறைத்தும் நன்றி கொன்று பா.ம.க, வி.சி, தே.மு.தி.க. இரு கம்யூனிஸ்டுகள் எல்லாம் வாய்கூசாமல் திராவிடக் கட்சிகளைத் தூக்கியெறிய வேண்டும் என்று பேசுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டியது நம் கடமையல்லவா?
பொரியார் தொடங்கிய திராவிடர் கழகம் சாதி ஒழிப்பு, மதவாத ஒழிப்பு போன்ற சமூகநீதிப் பணிகளில் ஈடுபடுகிறது. தேர்தல் அரசியலில் அது பங்கேற்பது இல்லை.
அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், அவருக்குப்பின் கலைஞர் தலைமையையும், பொரியார் சிந்தனைகளை உள்வாங்கிய அண்ணா கொள்கைகளையும் பின்பற்றித் திராவிடச் சிந்தனையின் மாண்பை நிலைநாட்டி வருகிறது.
ஆனால் இப்போது இருக்கிற ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. திராவிடக் கட்சியன்று. அண்ணா பெயரைத் தாங்கியிருக்கிற -பார்ப்பனியக் கட்சி. இந்தக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இணை ஆகாது.
எப்படியிருந்தாலும் இனி ஐந்து ஆண்டுகளுக்குத் தமிழகத்தை ஆளும் இடத்தில் அ.தி.மு.க.வும் அதை அதட்டிக் கேட்கும் இடத்தில் தி.மு.க.வும் இருக்கின்றன.
இனி ஐம்பது வருடங்களானாலும் இந்த திராவிட ஆட்சிகளை மட்டுமல்ல, திராவிடம் என்ற சொல்லைக்கூட யாராலும் அசைக்கக்கூட முடியாது, அழிக்கவும் முடியாது, அகற்றவும் முடியாது.
இதை பொத்தாம் பொதுவாகத் ‘திராவிட ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும்’ என்று சொல்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திராவிடச் சிந்தனையின் பெருமைகளை, திராவிட முன்னேற்ற கழக ஆட்சியால் தமிழகத்துக்கு விளைந்த நன்மைகளை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.
தொய்வின்றித் தொடர்வோம். தோல்வி நமக்கில்லை உணர்வோம். உழைப்பு வீணாகாது, வெற்றிக்கே வழிவகுக்கும்.