நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேச வேண்டியிருக்கும் என்று கருதவேயில்லை. ஜமீன்தாரர் (டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வர வேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர்களைக் காண நான் வந்தேன். சற்று முன்புதான் இங்கு ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். இக்கூட்டம் ஜமீன்தாரர் அவர்களையும் திரு. கண்ணப்பர் அவர்களையும் உத்தேசித்தே கூட்டப்பட்டது என்பதையும் அறிந்தேன். இதில் நான் பேசுவது என்பது அசௌகரியமான காரியம் என்றாலும் நண்பர் நடேச முதலியார் அவர்கள் சொல்லையும் ஜமீன்தாரர் அவர்கள் சொல்லையும் தட்ட முடியாமல் ஏதோ சிறிது பேச வேண்டியவனாக இருக்கிறேன். இன்று பேச வேண்டிய விஷயம் “தற்கால இராஜ்ய நிலைமை” என்பதாக நோட்டீ சில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. நானோ இராஜிய திட்ட சம்பந்தமான விஷயங்களில் மாறுபட்ட ஒரு அபிப்பிராயம் கொண்டிருப்பவன். இராஜிய துறையில் சிறிது காலம் இருந்து பார்த்துவிட்டு அதன் கொள்கைகளில் அதிருப்தி கொண்டு வெளியேறி என் சொந்த இஷ்டப்படி சமூகத் துறையில் வேலை செய்து கொண்டிருப்பவன். அப்படிப்பட்ட நான் இராஜிய நிலைமையைப் பற்றி என்ன பேசமுடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

periyar gemini ganesanசகோதரர்களே இன்றைய நிலைமையில் நான் இராஜியத் துறை கொள்கைகளில் மாத்திரம் அப்பிராய பேதங்கள் கொண்டவனல்ல. தற்கால இராஜிய விஷயம் என்பதையே நாணையமானதல்ல என்று கருதுவதோடு இந்தியநாட்டின் விடுதலைக்கு இந்த இராஜியத்துறை அவ்வளவு முக்கியமானதல்லவென்றும், மற்ற விஷயங்களின் வரிசைக்கிரமத்தில் அரசியல் சீர்திருத்தம் என்பது எவ்வளவோ பின்னால் இருக்க வேண்டியது என்றும் கருதுகின்றவன். நமக்கு இருக்கும் வேலை எல்லாம் நாம் செய்யவேண்டிய முதல் வேலை எல்லாம் சமுதாய சம்பந்தமானதே தவிர அரசியல் வேலையல்ல.

ஏனெனில் சமூகத் துறையில் நமது நிலைமை என்ன? நமது அடிமைத் தனத்தின் கொடுமை எவ்வளவு? இவைகளுக்குக் காரணம் என்ன? என்பதை நினைத்துப் பார்த்தால் அறிவும் மானமும் உள்ள மனிதன் அரசியல் தன்மையை கொஞ்சமும் பெரிதாகக் கருதி லட்சியம் செய்ய மாட்டானென்றே கருதுகின்றேன். உங்களில் யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி என்னைப் பொறுத்தவரை நமது நாட்டு மத சம்பந்தமான சமூக சம்பந்தமான அடிமைத்தனத்தால் தான் நாம் சுதந்திரமிழந்து மானமிழந்து இழி ஜாதியாய் வாழுகின்றோமே யொழிய அரசியல் அடிமைத் தனத்தாலல்ல என்பதே எனது அபிப்பிராயம். நான் இப்போது அரசாங்க ஆட்சியின் சுதந்திரத்தை முதன்மையானதாக விரும்பவில்லை. உத்தியோகத்தை பிரமாதமானதாகக் கருதவில்லை. அதிகாரத்தை ஆசைப்பட வில்லை.

என்னுடைய நாட்டு மனிதன் ஒருவன் என்னை ஒரு மனிதனாய்க் கருதவேண்டும், அவன் என்னை பிறவியில் சமமாய் நினைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன். இந்த இழிவுத்தன்மையும் அவமானமும் தான் என்னை வருத்துகின்றது. நினைத்தால் வயிறு பற்றி எறிகின்றது, நெஞ்சம் குமுறுகின்றது. இதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் ஏற்பட இன்றைய எந்த அரசியலாவது இடையூறாயிருந்தால் சொல்லுங்கள். அப்பொழுது அந்த அரசியலைப் பற்றி கவனிப்போம் அதை யொழிப்போம். இல்லா விட்டால் வேறு எது இடையூறோ, யார் இடையூறாயிருக்கின்றார்களோ அவற்றை யொழிக்க ஒன்று சேரலாம் வாருங்கள். அதைவிட்டு விட்டு இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் கொடுமையையும் மூடி வைத்துக் கொண்டு “அரசியல் அரசியல்” என்றால் என்னஅருத்தம்? இது யாரை ஏமாற்றுவது? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே காலத்தை கடத்துவது? என்பவைகளை யோசித்துப் பாருங்கள்.

“அரசியலைப் பற்றிக்கூட நமக்குக் கவலையில்லை. அன்னியனை ஒழிக்க வேண்டாமா?” என்று சிலர் கேட்கின்றார்கள். இதிலும் உண்மையோ அறிவுடைமையோ இருப்பதாக நான் கருதவில்லை. ஏனென்றால் யார் அன்னியன்? என்பதை முதலில் கவனித்துப் பாருங்கள்.

என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வர வேண்டாம் - தொட வேண்டாமென்பவனும், கிட்ட வந்தாலே - கண்ணில் தென்பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதை சாப்பிட்டால் - என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அன்னியனா? அல்லது “உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை, தொட்டாலும் பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம்தான்” என்று சொல்லுகின்றவன் அன்னியனா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

நமது ஜனங்கள் 100க்கு 90 பேர்கள் மூடமக்களாக யிருந்து வருகின்றார்கள். கல்வி வாசனையும் இல்லை. அறிவு வாசனையும் இல்லை. இருந்தாலும் அறிவு சுதந்திரமில்லை. இவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு யார் என்ன பேசினாலும் கைதட்டுவார்கள். கூடவே கோவிந்தா போடுவார்கள். ஆகவே சரி எது? தப்பு எது? என்று தெரிந்து கொள்ளும் அறிவு யில்லாதவர்கள். இவர்கள் முன் எதைச் சொன்னால் தான் என்ன? என்கின்ற முறையில் தேசத்தில் எத்தனையோ புரட்டுகள் நடக்கின்றன. இதைப் பார்த்துக் கொண்டே இந்த நிலைமையை மாற்ற வேண்டியதே நமது முதல் வேலையாயிருக்க வேண்டும் என்பதை யாருமே கவனிப்பதில்லை. எந்தத் தலைவருமே நினைப்பதில்லை. இப்படியே காலம் கடந்தால் நமக்கு எப்போது விடுதலை கிடைக்கக்கூடும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.

“பொருளாதாரத் துறையில் நாம் அடிமையாய் இருக்கின்றோம். நமது பொருள் கோடிக்கணக்காக வெளியில் போகின்றது. அதை நிறுத்த வேண்டாமா?” என்கின்றார்கள் மற்றொரு கூட்ட அரசியல் கூட்டத்தார். இதையும் என்னால் லட்சியம் செய்யவோ, ஒப்புக்கொள்ளவோ முடியவில்லை. ஏனென்றால் பொருள் நஷ்டம் என்பது இப்போது நமது நாட்டில் யாருக்கு இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.

நமது நாட்டில் சமூகத் துறையிலேயே பிறவியிலேயே பொருளாதார உரிமை அநேக மக்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக புரோகிதன், உத்தியோகஸ்தன், வக்கீல், வியாபாரி, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன் ஆகியவர்களின் கூட்டங்களுக்குத்தான் பொருளாதார உரிமை இருக்கின்றதேயொழிய மற்ற ஜனங்களுக்கு வயிற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்கின்ற அளவுக்குட்பட்ட அடிமை உரிமைதானே இருந்து வருகின்றது? முற்கூறிய கூட்டங்களுக்குப் பொருளாதார உரிமை என்பது பிறவியிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதுடன் மற்றவர்கள் அதற்கு அருகரல்லாமல் இருக்கும்படியான நிர்பந்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, ஒரு இட்லிக்கடைப் பார்ப்பானுடைய மகன் ஹை கோர்ட் ஜட்ஜாக வரலாம். ஒரு பஞ்சாங்கப் பார்ப்பனன் மகன் மந்திரி ஆகலாம். ஒரு தோட்டியினுடைய மகன் ஹைகோர்ட் ஜட்ஜாக வர முடியுமா? யோசித்துப் பாருங்கள். ஜாதியின் பேரால் வகுக்கப்பட்டிருக்கும் பிரிவானது இம்மாதிரி சிலருக்கு நன்மையையும், சிலருக்குத் தீமையையும் செய்து வருகின்றது, வெகுகாலமாய் செய்தும் வந்திருக்கின்றது. இனிமேல் இந்தப்படி செய்யாமல் இருக்க நமது “அரசியல் சுயராஜியத்தில்” எவ்வித திட்டமும் இல்லை என்பதோடு இந்த முறைமையைக் காப்பாற்றவும் திட்டம் போடப்பட்டிருக்கின்றது என்றால் அறிவுள்ள மனிதன் எப்படி இந்த அரசியலை ஒப்புக் கொள்ள முடியும்?

இன்றைய தினம் இந்த திருச்சங்கோட்டில் ஒரு பறையன் இட்லி சுட்டானானால் அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும் மற்றவர்கள் நாயிக்கு வாங்கிப் போடக்கூட அவனிடம் இட்லி வாங்க மாட்டார்கள். ஒரு பார்ப்பனன் இட்லி சுட்டால் அது எவ்வளவு சிறிதாயிருந்தாலும் எவ்வளவு மோசமாயிருந்தாலும் “சாமி சாமி” என்று கெஞ்சி ஒன்றுக்கு ஆறு விலை கொடுத்து வாங்குவார்களென்றால் இது அரசியல் சுதந்திரமில்லாத காரணத்தாலா? சமூக சுதந்திரமில்லாத காரணத்தாலா? என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள். பறையன் இட்லி வயிறு நிறையாதா? அது விஷம் கலந்ததா? மதமும் ஜாதியுமல்லவா இப்படி செய்கின்றது?

ஏழை ஜனங்களையும் சரீரத்தால் பாடுபடும் தொழிலாளிகளையும் கீழ்ஜாதி என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும், கொடுமைப்படுத்தித் தாழ்த்தி வைத்திருக்கும் ஜனங்களையும் கவனித்து, அவர்களை அவர்களு டையக் கஷ்டங்களில் இருந்து விடுதலை செய்ய முடியாத அரசியல் திட்டம் யாருக்கு வேண்டும்? என்று கேட்கின்றேன்? மேல் ஜாதிக்காரனுக் கும் முதலாளிக்குமல்லவா அது பயன்படும். தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியல் திட்டத்தில் ஒரு கொள்கையாய் இருக்கின்றதே தவிர முதலாளி எவ்வளவு லாபத்திற்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என்பதாக யாராவது திட்டம் போடுகிறார்களா? பாருங்கள்.

நமது மக்களின் இழிவும், அடிமைத்தனமும், பொருளாதாரக் கஷ்டமும் நமது மதத்தின் பலனாய் சமுதாய முறையின் பயனாய் இருந்து வருகின்றதா? அல்லது இல்லையா? என்று பாருங்கள். பணக்காரனும் ஜமீன்தாரனும் பணக்கார பிரபுவும் தங்கள் பணங்களை இந்நாட்டில் என்ன செய்கிறார்கள்? என்று சற்று கவனித்துப் பாருங்கள். மதத்தின் பயனாய் ஏற்பட்ட முட்டாள்தனத்தின் காரணமாய் இதோ எதிரில் தெரிகின்ற கோவிலின் பேரால் பாழாகின்ற பணம் இவ்வளவென்று உங்களுக்குத் தெரியாதா? பணம் சேரச் சேர மண்ணால் கட்டின கோவிலை இடித்து கல்லால் கட்டுகின்றான். பிறகு சலவைக் கல்லால் கட்டுகிறான், சித்திரவேலை செய்கிறான், பிறகு வெள்ளியிலும், தங்கத்திலும் வாகனம் செய்கின்றான். தங்க ஓடு போட்டு கோவில் கூரையை வேய்கின்றான். இந்த மூடமக்களைக் கொண்ட நாட்டிற்கு பணம் மிச்சமாவதால் என்ன லாபம்?

பாமர மக்களை அறிவாளிகளாக்கி அவர்கள் கையில் பணத்தை ஒப்புவித்தால் தான் அந்தப் பணம் நாட்டின் நலத்திற்கு பயன்படும். அப்படிக்கில்லாமல் பாழாவதற்கும் சோம்பேரிகளும், சூக்ஷிக்காரர்களும் பிழைப்பதற்காக பணத்தைக் காப்பாற்றுவதில் என்ன பலன்? என்று யோசித்துப் பாருங்கள். மற்றொரு கூட்டத்தார் நமக்கு “சமத்துவம் வேண்டியதற்காக சுயராஜியம் வேண்டு”மென்கிறார்கள். இதுவும் அர்த்தமற்றதும் அறிவற்றதுமான பேச்சு என்றுதான் சொல்லுவேன். பார்ப்பனனும், பறையனும் இருக்கும் நாட்டின், இருக்க வேண்டிய நாட்டின், இருக்கும்படி காப்பாற்றப்பட வேண்டிய நாட்டின் மக்களுக்கு சமத்துவம் சம்பாதிப்பது என்பது புரட்டா? அல்லது நாணையமானதா என்று யோசித்துப் பாருங்கள்.

வீண் வாய்பேச்சில் - வெட்டிப் பேச்சில் மயங்குகின்ற பாமர மக்களைக் கூட்டு வித்துப் பேசி விடுவதினாலேயே எந்தக் காரியமும் நடந்துவிடாது. எப்படியானாலும் ஒரு காலத்தில் வெளியாய்த்தான் தீரும். நாட்டிற்கு உண்மை விடுதலை வேண்டுமானால் விடுதலைக்கேற்ற அரசியல் சுதந்திரம் வேண்டுமானால் பயன்படத்தக்க நாணையமானதான சுதந்திரம் வேண்டுமென்று தான் சொல்லுகின்றேன். வரப் போகும் - வர வேண்டுமென்று கேட்கப்படும் - சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும் இருக்க மாட்டானா? என்று கேட்கின்றேன். பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா? என்று கேட்கின்றேன். இன்றைய தினம் சாமிகளின் பேரால் நடைபெறும் வீண் செலவுகள் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன்.

இன்றைய தினம் ஜாதிகளின் பேரால் இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன். குடும்பத்துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும் பாடுபடாமல் இருந்து கொண்டு குடும்பத்தோடு மேன்மையாய் வாழ்பவனும் இருக்க மாட்டானா? என்றும் கேட்கின்றேன். ஜமீன்தாரன் என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய் விடுவார்களா? என்றும் கேட்கின்றேன். இவைகளை ஒழிக்காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்? இந்த வித்தியாசங்கள் இருக்கும் “சுயராஜியத்திற்கும்” இப்போது இருக்கும் “அன்னிய ராஜியத்திற்கும்” என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்? என்பதை யோசித்து பாருங்கள். மத மூடநம்பிக்கையில் மக்கள் அறிவீனர்களாய் இருப்பது போலவே அரசியலிலும் மூடநம்பிக்கையுள்ளவர்களாயிருந்து அறிவீனர்களாகி தாங்களும் கெட்டு அன்னியரையும் கெடுத்து நாட்டின் முற்போக்கை பாழாக்குகிறார்கள்.

நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் இதுவரை சமூக சம்பந்தமான முற்போக்கு ஏதாவது ஏற்பட்டிருக்கின்றதா? என்று பாருங்கள். சமூக முற்போக்கு - சீர்திருத்தம் என்பவை ஏற்பட தீவிர முயற்சி செய்யப்படும் போதெல்லாம் அரசியல் என்பது குறுக்கிட்டு தடைகல்லாய் இருந்து வந்திருக்கின்றதே ஒழிய என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது? என்று சொல்லுங்கள் பார்ப்போம். இவ்வளவு விழிப்பான இந்தக் காலத்திலும் அரசியல் தலைவர்கள் வருணாச்சிரம பாதுகாப்பும் மத நடுநிலைமையும் என்று சொல்லிக் கொண்டு தானே இன்று சுயராஜியம் வேண்டுமென்கிறார்கள் - சுயராஜியமும் வாங்கப் போயுமிருக்கின்றார்கள். எந்தத் தலைவராவது சுயராஜியத்தில் வருணாச்சிரமம் ஒழிக்கப்படும், மதக்கொடுமை ஒழிக்கப்படும், மத சம்பந்தமான பழக்கவழக்கம் கீழ் - மேல் நிலைமை ஆகியவைகள் ஒழிக்கப்படும் என்று சொன்னார்களா? சொல்லுகின்றார்களா? என்று நன்றாய் கவனித்துப் பாருங்கள்.

வருணாச்சிரமமும் மதக் கொடுமையும் ஒழிய வேண்டுமென்கிற நான் எப்படி இந்த அரசியலை சுயராஜியத்தை ஆதரிக்க முடியும்? மத நடுநிலைமையில் பறையன் ஒழிவானா? சூத்திரன் ஒழிவானா? என்று ஆராய்ந்து பாருங்கள். அப்படியிருக்க சுயராஜியக் கிளர்ச்சியில் பறையன் என்பவனுக்கும், சூத்திரன் என்பவனுக்கும் அறிவும் மானமும் இருந்தால் அதில் சேரக்கூடுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

நண்பர்களே! நான் இதுவரை பேசியது தங்களில் யாருக்காவது அபிப்பிராய பேதத்திற்கோ அதிருப்திக்கோ இடமிருக்கக் கூடியதாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் நான் எனது அபிப்பிராயம் என்கின்ற முறையில் இந்த இடத்தில் எனக்குப் பட்டதை பேச வேண்டுமே ஒழிய கூட்டத்திற்குத் தகுந்தபடி சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி என்று பேசக்கூடாது என்கின்ற முறையில் பேசினேன். இந்தக் கருத்துக்கள் தப்பாக இருக்கலாம். இவற்றையெல்லாம் அடியோடு நீங்கள் கண்டிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் வெளியிட எனக்குள்ள பாத்தியதையில் உங்களுக்கு ஆnக்ஷபமிருக்காதென்று கருதியே பேசினே னேயொழியே வேறில்லை.

ஆகவே தாங்கள் நான் சொன்னதையும் இனியும் கனவான்கள் பலர் சொல்லப் போவதையும் தயவு செய்து ஒத்திட்டு ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு இஷ்டப்பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றே கேட்டுக் கொள்ளுகின்றேன்.

(குறிப்பு: 01.09.1931 அன்று திருச்செங்கோட்டிற்கு டாக்டர்.பி.சுப்பராயன் அவர்களைக் காண சென்றிருந்தபோது ஈ.வெ.ராமசாமியவர்களை அங்கு “தற்கால ராஜிய நிலைமை” என்ற பொருள்பற்றி பேச ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வேண்டுமென திரு.டி.வி. நடேச முதலியாரும் பிறரும் வற்புறுத்தியதன் பொருட்டு டாக்டர்.பி.சுப்பராயன் அவர்கள் தலைமை வகிக்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.)

(குடி அரசு - சொற்பொழிவு - 06.09.1931)