இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி, மத்திய குழுவின் அறைகூவல், 16 மே 2015

இந்த நேரத்தில் தொழிற்சங்கங்கள் எப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசிப்பதற்காக மே 26-ஆம் தேதி அன்று பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலிருந்தும் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்கள் புதுதில்லியில் ஒன்று கூடுகிறார்கள். இந்த தொழிற்சங்க கூட்டு செயல்பாட்டு குழு தேசத்திற்கு எதிரான மற்றும் சமுதாயத்திற்கு எதிரான தனியார்மய தாராளமயத் திட்டத்தை உறுதியாக முறியடிப்பதற்கானஒரு திட்டத்தை முன்வைப்பார்கள் என்று இந்தியாவின் தொழிலாளி வர்க்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னால், எல்லோருக்கும் "நல்ல நாட்களையும்", "எல்லோருடனும் சேர்ந்து எல்லோருடைய வளர்ச்சிக்காக" என்று உறுதியளித்து தேசகூ ஆட்சிக்கு வந்தது. இன்று இந்த முழக்கங்கள் மக்கள் தொகையில் 95% மான, நம் தொழிலாளர்கள் உழவர்கள் மற்றும் நடுத்தட்டு மக்கள் மீதான கொடூரமான கேலி என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தொழிலாளி வர்க்கத்தின் மீது சுரண்டலின் தீவிரத்தை ஈவுஇரக்கமின்றி அதிகப்படுத்துவதன் மூலமாக, நம் நாட்டு மற்றும் பன்னாட்டு மிகப்பெரிய ஏகபோகங்கள், தங்களுக்கு நல்ல நாட்களை உறுதிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடைய நம்பிக்கைக்கு உரிய மேலாளராக மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இன்றுள்ள சட்டங்களை மாற்றியும், புதிய சட்டங்களை நிறைவேற்றியும் அது, தொழிலாளி வர்க்கத்தின் மீதும் உழைக்கும் உழவர்களின் மீதும் நடத்தப்படுகின்ற இந்தத் தாக்குதல்களை சட்டரீதியானதாக ஆக்குகிறது. நெருக்கடியான இந்தச் சூழ்நிலைகளில், தனியார்மயம், பொதுத்துறை - தனியார் பங்கேற்பு (பிபிபி),அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ) போன்ற வழிகளின் மூலம் அதிகபட்சமான இலாபங்களை உறிஞ்சி எடுப்பதற்காக மேலும் பல பாதைகளைத் திறந்து விடவேண்டும் என்று இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோகங்கள் கோருகின்றனர். பாதுகாப்புத்துறை மற்றும் ரயில்வே போன்ற முக்கிய துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசாங்கம், கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. மேலும் அது காப்பீட்டுத் துறையிலும் ஓய்வூதிய நிதிகளிலும் 49% அந்நிய நேரடி முதலீட்டிற்கு திறந்து விட்டுள்ளது. உழவர்கள், பழங்குடி மக்கள் மற்றும் வனவாழ் மக்களுடைய நிலங்களை அபகரிப்பதை மேலும் எளிதாக்குவதற்காக அது அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இன்றுள்ள தொழிற் சங்கங்களின் சட்டம் 1926, தொழிற்சாலை உறவுகள் சட்டம் 1947, தொழிற்சாலை வேலை வாய்ப்பு (நிலை கட்டளைகள்) சட்டம் 1946 ஆகிய மூன்று சட்டங்களுக்குப் பதிலாக ஒரு புதிய மசோதாவை அரசாங்கம் முன்வைத்துள்ளது. தொழிலாளிகள் தங்களைத் தாங்களே தொழிற் சங்கங்களாக ஒருங்கிணைத்துக் கொண்டு தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை முடியாமல் செய்யவும், அதை மிகவும் கடினமாக ஆக்குவதும், இந்த மசோதாவின் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நோக்கத்திற்காக அது ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பதற்கு அந்த நிறுவனத்தில் உள்ளவர்களில் குறைந்தபட்சமாக 10% தொழிலாளிகளாவது அதன் உறுப்பினர்களாகத் தங்களை அறிவிக்க வேண்டும், என்ற நிபந்தனையைப் போட்டுள்ளது.

தொழிற் சங்கங்களில் “வெளியாட்கள்”உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்று இந்த புதிய மசோதா அறிவிக்கிறது. ஆனால் உலகம் முழுவதுமுள்ள “நிபுணர்களை” கொண்டதாக, அரசாங்கத்தால் நிறுவப்படும் பல்வேறு கொள்கையை ஏற்படுத்தும் குழுக்களுக்கு இப்படிப்பட்ட நிபந்தனை இல்லை. உதாரணமாக, இந்திய இரயில்வேவை தனியார்மயப்படுத்துவதற்காக திட்டவரைவை ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட டிபெராய் குழுவிற்கு ஆலோசனை வழங்க ஒரு குழு இருக்கிறது. அதில், இரயில்வேவிற்கு சம்மந்தமே இல்லாத பெரு முதலாளி - ரத்தன் டாடாவும் உள்ளார். இரயில்வேவை எப்படித் தனியார்மயப்படுத்துவது என்பது பற்றி அறிவுரை கூற வெளியாளான டாடா இருக்கும் போது, நிறுவனத்திற்கு வெளியிலிருக்கும் தொழிலாளி வர்க்க தலைவர்கள் ஏன் தொழிற் சங்கத்திற்கு அறிவுரை வழங்கி, அதன் அங்கமாக இருக்கக்கூடாது?

இந்தப் புதிய மசோதா, தொழிலாளிகளைத் தூக்கி எறிவதையும் தொழிற்சாலைகளை மூடுவதையும் மேலும் எளிதாக்க வேண்டும் என்ற முதலாளிகளின் மற்றுமொரு கோரிக்கையை நிறைவேற்றுகிறது. இதுவரை, 100 தொழிலாளிகளுக்கு மேல் வேலைக்கு அமர்த்தியுள்ள தொழிற்சாலை, தொழிலாளிகளை வேலையிலிருந்து நீக்குவதற்கோ அல்லது தொழிற்சாலையை மூடுவதற்கோ தகுந்த அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த வரம்பு 300 தொழிலாளிகள் என்று உயர்த்தப்படுகிறது. மேலும் இலட்சக்கணக்கான தொழிலாளிகளை எந்தக் கேள்வியுமில்லாமல் வேலையிலிருந்து தூக்கி எறியப்படலாம் என்பதே இதன் பொருள்.

ஊதியம் கொடுப்பது சம்பந்தமான நான்கு சட்டங்களை அரசாங்கம் இணைத்து ஒரு ஊதியங்கள் மசோதா 2015 ஆக கொண்டு வருகிறது. குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948, ஊதியம் வழங்கும் சட்டம் 1936, போனஸ் வழங்கும் சட்டம் 1965 மற்றும் சம ஊதியச் சட்டம் 1976 ஆகியவை ஒரு மசோதாவாக இணைக்கப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம், தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஊதியம், போனஸ் ஆகியன முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதிய அளவை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதற்குக் குறைவாக எந்த மாநில அரசாங்கமும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க கூடாது என்றும், அந்த ஊதிய அளவு இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரையின் படியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையிலும் கணக்கிடப்பட வேண்டும் என்றும் தொழிலாளிகள் கோரி வருகிறார்கள். இதைப் புறக்கணித்துவிட்டு தேசகூ அரசாங்கம், சில தொழில் துறைகளுக்கு குறைந்தபட்ச கூலியை மத்திய அரசாங்கம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை கூட கைகழுவி விட்டு, அதை மாநில அரசாங்கங்களே நிர்ணயிக்க விட்டு விடுகிறது. வேறு வகையாக கூறினால், முதலாளிகளைத் தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்ப்பதற்காக, பல்வேறு மாநில அரசாங்கங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு, குறைந்தபட்ச கூலியை மிகவும் அடி மட்டத்திற்குக் கொண்டு சென்று விடுவார்கள்.

புதிய மசோதா, ஊதியத்திலும் வேலை நிலைமைகளிலும் பாரபட்சத்தை எதிர்க்கும் பெண்களுடைய உரிமைகள் மீதான தாக்குதலாகும். மேலும் பல தொழில்களுக்கு, தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்குவதிலிருந்து இது விலக்கு அளித்துள்ளது. “கண்காணிப்பாளர்அதிகாரத்திற்கு” முடிவுகட்டுவது என்ற பெயரில், சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது அபராதங்களும் தண்டனையும் வழங்கும் எல்லா செயல்முறைகளையும் அது நீக்குகிறது. 

முதலாளிகள் அதிக தீவிரத்தோடு உழைப்பைச் சுரண்டுவதை எளிதாக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட மாற்றங்களை எல்லா துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர்.தனியார்மயத்திற்கு எதிராக பல்வேறு வேலைநிறுத்தங்களை, நிதித் துறை தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். அதைப் போலவே நிலக்கரித் தொழிலாளர்களும் தனியார்மயத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இரயில்வே தொழிலாளர்கள் டெபெராய் குழு பரிந்துரைகளையும், இரயில்வேயில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதையும் எதிர்த்துள்ளனர். பாதுகாப்பு துறை தொழிலாளர்கள், பாதுகாப்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்துள்ளனர். அரசாங்க ஊழியர்கள் நவம்பரில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இரயில்வே தொழிற்சங்கங்களும் பாதுகாப்புத் துறை தொழிற்சங்கங்களும் அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கலாமா என்று முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அக்டோபரில் நடைபெறவுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து ஏப்ரல் 30-ஆம் தேதி போக்குவரத்துத் துறை தொழிலாளிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை நடத்தினர்.  

நடக்கும் போராட்டம் இரண்டு வர்க்கங்களுக்கு இடைப்பட்டதாகும். ஒரு பக்கம், மிகப் பெரிய ஏகபோகங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கம், ஏகாதிபத்தியர்களோடு கூட்டாக, அரசு அதிகாரத்தின் மீது உள்ள மேலாதிக்கத்தைக் கொண்டு சமூக உற்பத்தியில் பெரும் பகுதியை சுருட்டிக் கொண்டு வருகிறது. இதை அடைவதற்கு தனியார்மயமும் தாராளமயமும், தொழிலாளர் சட்ட மாற்றங்களும் கருவிகளாகும். மற்றொரு பக்கம், எல்லா சுரண்டப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலைமையாகத் தொழிலாளி வர்க்கம் நிற்கிறது. தன்னுடைய உழைப்பினால் உருவாக்கப்படும் சமூக செல்வத்தில் தங்களுடைய பங்கைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதை மேலும் அதிகப்படுத்தவும் தொழிலாளி வர்க்கம் போராடி வருகின்றது. அது உழவர்களின், சுரண்டப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் போராடி வருகிறது.

முப்பது வருடங்களுக்கு முன், இந்தியாவை 21-ஆவது நூற்றாண்டிற்கு கொண்டு செல்வது என்ற முழக்கத்தை முன்வைத்து முதலாளி வர்க்கம் "நவீனமயமாக்கும்" திட்டத்தைத் துவக்கியது. இது தொண்ணூறுகளில் தாராளமயம், தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டமாக வளர்க்கப்பட்டது. இந்த முப்பது ஆண்டு காலகட்டத்தில்,இந்தப் போக்கு, தொழிலாளருக்கும், தேசத்திற்கும் மற்றும் சமூகத்திற்கும் எதிரானது என்று ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெளிவாகியுள்ளது. சமூக உற்பத்தியில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு தொடர்ந்து குறைந்து கொண்டே வந்துள்ளது, அதே நேரத்தில் சமூக உற்பத்தியில் ஏகபோகங்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இன்று நாட்டின் சொத்தில் பாதியை, இந்தியாவின் டாலர் பில்லியனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மறுபக்கம் சுகாதாரம், கல்வியறிவு மற்ற மனித வள குறியீடுகளில் உலக அளவில் கடைசி வரிசையில் தான் நம் நாடு இடம் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்தியர்களோடு சேர்ந்து உலக மேடையில் அமர வேண்டும் என்ற வெறியில் இந்திய முதலாளிகள், பொறுப்பற்ற பாதையைப் பின்பற்றி வருகிறார்கள். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கைகோர்த்துக் கொண்டு கூட்டாக நாட்டைத் தீவிரமாகக் கொள்ளையடிப்பதற்காக, அவர்கள் நம் நாட்டின் கதவுகளை திறந்து விடுகிறார்கள். இவர்கள் பொருளாதாரத்தை இராணுவமயமாக  ஆக்குகிறார்கள். மேலும் அவர்கள் அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் பாசிசபோர் வெறி பிடித்த ஏகாதிபத்தியக் கூட்டணியில் சேருகிறார்கள். இந்த அபாயகரமான போக்கு, நம் மக்களின் நலன்களுக்கு எதிராக, நம்மை பிற்போக்குத்தனமான ஏகாதிபத்தியப் போரில் சிக்கவைக்கும். இது நாசம் விளைவிக்க கூடிய, அபாயகரமான, தேசத்திற்கு எதிரான மற்றும் சமுதாயத்திற்கு எதிரான போக்காகும்.

விழிப்புணர்வுள்ள மற்றும் அணிதிரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கமே இந்த சூழ்நிலையை மாற்றி மக்களுக்குச் சாதகமாக ஆக்க முடியும்.

தொழிலாளி வர்க்கம் ஆர்பரித்து எழுப்பும் உடனடி கோரிக்கைகள் முதலாளி வர்க்கத்தின் தாக்குதல்களை எதிர்ப்பதாக மட்டும் இருந்துவிட முடியாது. மாறாக, முதலாளி வர்க்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ளி அதன் வெற்று வார்த்தைகளை அம்பலப்படுத்தும் வகையில் தொழிலாளி வர்க்கம் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

உதாரணமாக, பல்லாண்டுகள் பழமையான தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப்படும் எல்லா மாற்றங்களும், பழைய சட்டங்களை புதிய ஒன்றில் இணைப்பதுவும், சட்டங்களை “நவீனப்படுத்து”வதாகக் கூறி செய்யப்படுகின்றன. ஆனால், சட்டங்களை “நவீனப்படுத்தும்” போர்வையில் முதலாளி வர்க்கம், தொழிலாளிகள் கடினமாகப் போராடிப் பெற்ற உரிமைகளை பிடுங்கும் விதமாக, பிற்போக்குத்தனமான சட்டங்களை நுழைக்கிறது. 20-ஆம் நூற்றாண்டில் சோவியத்து யூனியனில் சோசலிசம் பெற்ற வெற்றியால் தூண்டப்பட்டு, தொழிலாளி வர்க்க உரிமைகளின் நவீன வரையறைக்காக உலகமெங்கிலும் மற்றும் இந்தியாவிலும் நடந்த மகத்தான போராட்டங்களால் பெறப்பட்ட உரிமைகளாகும் இவை.

தொழிலாளி வர்க்கம் இன்றைய நிலைமைகளுக்கு ஏற்ப கூலி உழைப்பின் உரிமைகளை வரையறுக்கும் ஒரு மாற்றுச் சட்டத்தை முன்வைத்து அதற்காக போராட வேண்டும். தன் கைகளில் எந்த சமுதாய உற்பத்தி கருவிகளும் இல்லாததாகவும், நவீன சமுதாயத்தின் சிறப்புத் தயாரிப்பாகவும் தொழிலாளி வர்க்கம் உள்ளது. அதன் உழைப்பே சமுதாயத்தின் செல்வத்தை உற்பத்தி செய்கிறது. எல்லாத் தொழிலாளிகளுக்கும், தொழிலாளிகளாக இருப்பதனாலேயே அவர்களுக்கு உரித்தான உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்த உரிமைகள் என்ன என்று சரியாக பட்டியலிடப்பட வேண்டும். ஏற்கத்தக்க அளவில் குறைந்தபட்ச ஊதியம் இருக்க வேண்டும், நுகர்வோர் பணவீக்கத்தை ஈடுகட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊதிய உயர்வு, வேலை நேரத்தில் வரையறை, வேலையின்மையிலிருந்து பாதுகாப்பு, உடல்நல காப்பீடு, ஒய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உத்திரவாதம், போன்றவை இந்தப் பட்டியலில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த உரிமைகள் எல்லா தொழிலாளர்களுக்கும் பொருந்தும் எனவும் அவை மீறக் கூடியதல்ல எனவும் பிரகடனம் செய்து அதை அரசின் கடமையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மேலும் அது அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டு நடைமுறைப் படுத்தும் செயல்முறைகளோடு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதோடு பெண்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எல்லா கூலித் தொழிலாளர்களும் சம்பளம் வாங்கும் ஊழியர்களும் மின்னணு முறையில் தொழிலாளர்களாக பதிவு செய்யப்பட்டு, உரிமைகளின் நவீன வரையறையின் படி தொழிலாளர்களுக்கு உரித்தான எல்லா உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய கோரிக்கை.

சோசியலிசத்தைக் கட்டியமைத்து முதலாளித்துவத்தை தூக்கி எறிவதையும் எல்லோருக்கும் பாதுகாப்பையும் வளமையையும் அளிப்பதாக பொருளாதாரத்தை திசைமாற்றம் செய்வதையும் தவிற, நம் போராட்டத்தின் நோக்கம் எந்தவிதத்திலும் குறைவாக இருக்க முடியாது. இன்று சமூக உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தின் முக்கிய கருவிகள் முதலாளி வர்க்கத்தின் கைகளில் உள்ளன. தொழிலாளி வர்க்கம் உற்பத்தி கருவிகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, அதை சமூக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். இதுவே எல்லோருக்கும் பாதுகாப்பையும் வளமையையும் அளிப்பதாக பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். அதற்கு முதல் நிபந்தனையாக, அரசு அதிகாரம் தொழிலாளிகள் மற்றும் உழவர்களின் கைகளில் இருக்க வேண்டும்.

உழவர்களோடு கூட்டாக ஆட்சியாளர்களாக ஆக, தங்களை அணி திரட்டிக் கொள்ளமாறும், சமுதாயத்தை முதலாளித்துவத்திலிருந்து சோசியலிசத்திற்கு மாற்ற வேண்டுமெனவும், எல்லா தொழிலாளர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அழைப்பு விடுகிறது.

நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் தொழிலாளர்களாகிய நாம் இருக்கிறோம். சமுதாயத்திற்கு தேவையான குண்டூசியிலிருந்து விண்கலம் வரையும் எல்லாவற்றையும் நாமே உற்பத்தி செய்கிறோம். விண்ணைத் தொடும் கட்டிடங்களை நாமே கட்டுகிறோம். பூமியிலிருந்து கனிமங்களை எடுக்க நாமே சுரங்கங்களில் வேலை செய்கிறோம். நாமே நிதி நிறுவனங்களை இயக்குகிறோம். நாம் ரயில் வண்டிகளையும் பேருந்துகளையும் விமானங்களையும் செலுத்துகிறோம். நம்முடைய உழவர் சகோதரர்களோடு சேர்ந்து நிலத்தில் வேலை செய்து, சமுதாயத்திற்கு உணவூட்டும் விலைமதிப்பற்ற உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறோம். நாம் முடிவு செய்துவிட்டோமானால், நாம் ஆட்சியாளர்களாக ஆவதையும் சமுதாயத்தை மாற்றி அமைப்பதையும் பூமியிலுள்ள எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இன்றுள்ள, கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் சனநாயக அமைப்பை வைத்து முதலாளி வர்க்கம் தன்னுடைய சர்வாதிகாரத்தை நடத்துகிறது. இதை மாற்றி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும். நம்முடைய போராட்டம் அதிகாரத்தில் இருக்கும் ஒரு முதலாளி வர்க்கக் கட்சியை மாற்றி மற்றொன்றைக் கொண்டு வருவதல்ல. நம்முடைய போராட்டம் முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி, உழைக்கும் உழவர்களின் கூட்டணியோடு தொழிலாளி வர்க்க ஆட்சியை நிறுவுவதாகும். நம்முடைய வர்க்கத்தைப் பிளவு படுத்துவதன் மூலமும், பல்வேறு முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் நம்மை நிறுத்துவதன் மூலமும் முதலாளி வர்க்கம், நம்முடைய ஒற்றுமையையும் போராட்டத்தையும் நசுக்கி வருகிறது. தொழிலாளி வர்க்கத்தின் தனிப்பட்ட திட்டத்திற்காக தொழிலாளர்கள் நாம் போராட வேண்டும். முதலாளி வர்க்த்தின் பாராளுமன்ற விளையாட்டுகளால் நாம் திசை திருப்பப்படுவதை நாம்  மறுக்க வேண்டும்.

நாம் ஒரே கொடியின் கீழ், தொழிலாளி வர்க்கத்தின் போராடும் கொடியின் கீழ், நம்மை அணிதிரட்டிக் கொள்ள வேண்டும். நம் திட்டத்தை ஒட்டி தொழிற்சாலைகளிலும் வேலை செய்யுமிடங்களிலும், வாழும் இடங்களிலும், தொழிற்சாலை மையங்களிலும் ஒன்றுபட்ட வர்க்க அமைப்புக்களை நாம் கட்டி அமைப்போம்.

தொழிலாளர்களாகிய நாம், ஆட்சியாளர்களைப் போலச் சிந்திக்கவும் நடக்கவும் ஆரம்பிக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை வரையறுக்கும் மாற்று சட்டங்களை உருவாக்கும் செயலே இந்த திசையில் ஒரு படியாகும்.

நம் நாட்டில் இன்று இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் நடைபெறும் இந்த போரானது, இந்தியாவிற்கு இரண்டு எதிரெதிரான கண்ணோட்டங்களைக் கொண்டதாகும். ஆளும் வர்க்கங்களின் கண்ணோட்டமானது, நம் மக்களுடைய நிலம் உழைப்பு மற்றும் இயற்கை வளங்களை ஈவு இரக்கமின்றி சுரண்டி ஒரு மிகச் சிறுபான்மையான பெரிய முதலாளிகள் உலகில் மிகவும் பணக்காரர்களாக கணக்கிட வழிவகுக்கும் ஒரு முதலாளித்துவ-ஏகாதிபத்திய இந்தியாவை உருவாக்குவதாகும். இதுவே “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு எதிர்மாறாக, முடிவெடுக்கும் உரிமை உழைக்கும் பெரும்பான்மை மக்களிடம் உள்ளதாகவும், உற்பத்தி கருவிகள் சமூக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டும், எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றுவதாக பொருளாதாரம் திருத்தியமைக்கப்பட்டதாகவும் உள்ள, வலிமையான வளமான இந்தியாவைக் கட்டுவதே தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டமாகும்.

எல்லோருக்கும் பாதுகாப்பையும் வளமையையும் உறுதி செய்யும், தொழிலாளர்-உழவர் ஆட்சியை அமைப்பதற்கான நோக்கத்தோடு நாம் போராடுவோம்!

Pin It