கீற்றில் தேட...

பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயல்களைச் செய்து வருகிறது. எந்த நோக்கத்திற்காக அவர்கள் இதைச் செய்கிறார்கள்?

பாஜக என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு. பழைய மனுவாதக் கட்டமைப்பை மீட்டுக் கொண்டு வருவது, பிராமணியத்தை நிலை நிறுத்துவது என்பது சமூக ரீதியான திட்டம். பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் அதற்கு இணையானது கட்டற்ற முதலாளித்துவம். ஆங்கிலத்தில் "Crony Capitalism" என்று சொல்வார்கள். கள்ளக் கூட்டு முதலாளித்துவம் என்று தமிழில் சொல்வோம். அந்த முதலாளிகளுக்கு எல்லாவற்றையும் திறந்து விடுவது என்பதுதான் அவர்கள் பொருளாதாரக் கொள்கை. இது இன்றைக்கு அவர்கள் எடுத்த நிலைப்பாடு அல்ல. 1950-களிலேயே அவர்கள் இப்படித்தான் முன்மொழிந்தார்கள். இதைத்தான் ராஜாஜி அவருடைய சுதந்திரா கட்சி மூலம் முன்மொழிந்தார். அவர்களுடைய கொள்கை சமூக ரீதியாகப் பிராமணியத்தை நிலை நிறுத்துவதும் பொருளாதார ரீதியாகக் கள்ளக் கூட்டு முதலாளித்துவத்தை நிலை நிறுத்துவதும்தான்.

arunanதனியார்மயப்படுத்துவதில் பெருநிறுவனங்களின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கிறது?

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு இரண்டு விஷயத்தை நம்பினார்கள். ஒன்று மதவெறியைக் கிளப்பி விட்டு இந்து வாக்கு வங்கியை உருவாக்குவது. இரண்டாவதாக அவர்கள் நம்பியது பணத்தை. பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் தேர்தலைச் சந்தித்தார்கள். அவர்களுக்கு வேண்டிய பெரு முதலாளிகளிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் வேண்டியவற்றைச் செய்வோம் என்று சொன்னார்கள். அந்த முதலாளிகள் பொதுத்துறையே இருக்கக்கூடாது, அவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொன்னார்கள். இந்த நிறுவனங்களைத் தனியார் மயமாக்க வேண்டும், ஆங்கிலத்தில் "divestment" என்று சொல்வார்கள், அதாவது எங்களுக்கு அடிமாட்டு விலையில் விற்றுவிட வேண்டும் என்று சொன்னார்கள். இந்த முதலாளிகள் சொன்னதை ஒப்புக் கொண்டுதான் பாஜக ஆட்சிக்கு வந்தது. முதல் முறை கொஞ்சம் கொஞ்சமாக இதைச் செய்ய ஆரம்பித்தார்கள். இரண்டாவது முறை வந்தவுடன் இன்னும் உறுதியாக அனைத்தையும் தனியாருக்கு விற்கிறார்கள்.

இன்றைக்கு வரைக்கும் 4Gயைச் சரியாக பிஎஸ்என்எல்லுக்குக் கொடுக்கவில்லை. அந்நிறுவனத்தை நட்டம் அடைய வைத்தார்கள். ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திற்கு விற்கப் போவதாக அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். அந்த நிறுவனத்திடம் இருந்துதான் பெருந்தொகையை நன்கொடையாகப் பெற்றார்கள். ஒரு ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாயைப் பெருநிறுவனங்களிடம் இருந்து நன்கொடை வாங்கி இருக்கிறார்கள். அதில் 356 கோடி ரூபாய் டாடா நிறுவனத்திடமிருந்து மட்டும் வாங்கியிருக்கிறார்கள். சுப்பிரமணியன் சுவாமி "Conflict of Interest" என்று ட்விட்டரில் பதிவிடுகிறார். அதாவது டாடா நிறுவனம் பாஜகவிற்கு ரூபாய் 356 கோடி நிதி வழங்கி இருக்கிறது. பாஜக ஏர் இந்தியாவை டாடாவிற்கு விற்கிறது. இதுதான் "Conflict of Interest" என்பது. அதாவது டாடா சொல்லும் விலைக்குதான் அவர்கள் ஏர் இந்தியாவை விற்கப் போகிறார்கள். இது நியாயமா என்று அவர்கள் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சாமியே கேட்கிறார். இவ்வளவு பச்சையாக அவர்கள் பொதுத்துறையை ஒழித்துக் கட்டுகிறார்கள்.

இந்தியா போன்ற நாடுகளில் ஏன் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்க வேண்டும்?

சீனாவில் மட்டும் தனியார் துறையை வளர்க்கிறார்களா என்று பொதுவாகக் கேட்கிறார்கள். அது உண்மைதான். அவர்கள் வெளிப்படையாகவே அதனை அறிவித்துத் தனியார் துறைக்கு அதிக வாய்ப்புகள் தருகிறார்கள். ஆனால் அவர்கள் எந்தப் பொதுத்துறை நிறுவனத்தையும் தனியாருக்கு விற்கவில்லை. பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுத் துறை, கூட்டுறவுத் துறை இந்த நான்கு துறைகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றுக்கொன்று போட்டி ஏற்படும். அது ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதை அரசு மேற்பார்வை பார்க்க வேண்டும். அதுதான் இந்தியா போன்ற பெரிய நாடுகளைப் பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். ஆனால் இவர்கள் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பொதுத்துறையை ஒழித்துக் கட்டி விடுவார்கள். இது பொருளாதாரத்திற்கு மிகப் பெரும் கேடு.

 இந்தியா போன்ற நாடுகளில் பொதுத்துறை என்பது, சமூக நீதியை நிலைநாட்டவும் அவசியம் தேவை. சீனா போன்ற நாடுகளில் சாதி கிடையாது. பொதுத்துறை இருந்தால் அரசு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும். நாம் இப்போது தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்று கேட்க வேண்டியிருக்கிறது. இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் தனியார் துறைக்குப் பொறுப்பு இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு அரசு எவ்வளவு உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருகிறது, எவ்வளவு வரிவிலக்குப் பெறுகிறார்கள், பொதுமக்கள் பணத்திலிருந்து தானே இவ்வளவையும் தனியார் நிறுவனங்கள் பெறுகிறார்கள்? தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த அரசு கேட்கப் போவதுமில்லை அவர்கள் ஒப்புக் கொள்ளப் போவதுமில்லை.

 பொதுத்துறையை ஒழிப்பது என்பது சமூக அநீதி. பிராமணியத்தையும் முதலாளித்துவத்தையும் நிலைநிறுத்துவதற்காக இது செய்யப்படுகிறது. அதனால் தான் அண்ணல் அம்பேத்கர் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தை பார்த்து "உங்களுக்கு இரண்டு எதிரிகள். ஒரு எதிரி பிராமணியம். இன்னொரு எதிரி முதலாளித்துவம்" என்று 1940களில் சொன்னார். பொதுத்துறையைக் காக்கும் கடமை சமூக இயக்கங்களுக்கும் இருக்கிறது. மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.

தனியார்மயப்படுத்தும் போது பாதிக்கப்படும் தொழிலாளர் நலன்கள்?

ஏற்கெனவே தொழிலாளர் நலச் சட்டங்களை எல்லாம் முதலாளி நலச் சட்டங்களாக மாற்றுகிறார்கள். குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர் முறையை கொண்டு வருகிறார்கள். "Hire and Fire" என்கிற முறையில் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிறார்கள். அவர்கள் நினைத்தால் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். இதற்கு ஒப்பந்தத் தொழிலாளர் முறையே சரியாக இருக்கிறது. நிரந்தரத் தொழிலாளர்களை இதுமாதிரிச் செய்ய முடியாது. அதற்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. அதனால் நிரந்தரத் தொழிலாளர்களே வேண்டாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இந்தத் தொழிலாளர் நலச் சட்டங்களை எல்லாம் ஒழித்து கட்டுகிறார்கள்.

இன்றைக்கு நாம் ஐடி நிறுவனங்களைப் பார்க்கிறோம். வேலை நேரத்திற்கெல்லாம் கணக்கே இல்லை. 13-14 மணி நேரம் உழைக்கிறார்கள். 8 மணி நேர வேலை என்பது உலகம் முழுவதும் போராடிப் பெற்ற உரிமை. ஆனால் இன்று அதையே 9 மணி நேரமாக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களே சொல்கிறார்கள். ஊதியம் என்பது ஒரு ஒழுங்கு முறையற்று அவர்கள் விருப்பத்திற்கு நிர்ணயிக்கப்படுவதாக இருக்கும். ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் என்பது இருக்காது. ஏற்கெனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் கிடையாது. இதெல்லாம் நிச்சயமின்மை, நிரந்தரமில்லாதத் தன்மையை ஏற்படுத்தும். நாளைக்கு இந்த வேலை இருக்குமா என்கிற பயத்திலேயே நம்மை வைத்திருப்பார்கள். இதுதான் முதலாளித்துவத்தின் குணம்.

ஒரு அச்சத்திலேயே மக்களை வைத்திருப்பது பல வகையான சமூகக் குற்றங்களுக்கு வித்திடும். சமுதாயம் சீரழிந்து விடும். குற்றச் செயல்களும் ஊழலும் அதிகமாகும். ஒட்டுமொத்தச் சமூக அமைப்பின் நிலை என்ன ஆகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் துறை இருக்கவே கூடாது என்று சொல்லவில்லை. பொதுத் துறையும் இருக்க வேண்டும். நல்ல போட்டியிருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் பொதுத்துறை தனியார் துறைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தனியார் துறை பொதுத்துறையைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும். தனியார் துறை மட்டும் இருந்தால், அந்த முதலாளிகளுக்கு இடையில் கழுத்தறுப்பு போட்டிதானிருக்கும். இதில் பாதிக்கப்படுவது தொழிலாளிதான். ஆகவே இந்தத் தனியார்மயம் என்பது எல்லா வகையிலும் கெடுதல் தான்.

பேராசிரியர் அருணனுடன் நேர்காணல் - மா.உதயகுமார்