இந்திய வங்கிகளின் நெருக்கடி பல்லாண்டுகளாகவே அதிகரித்து வந்திருக்கிறது. வணிக வங்கிகள் கொடுத்த கடன்களில் அதிகரித்து வரும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான கடன்கள் வாராக் கடன்களாகவும், மோசமான கடன்களாகவும் மாறி வருகின்றன. 90 நாட்களுக்கு மேல் எந்த ஒரு கடனின் அசல் அல்லது வட்டி செலுத்தப்படாமல் இருந்தால் அதை வாராக் கடன் (NPA) என்று அழைக்கப்படுகிறது. கடன் வாங்கியவர் முன்பு ஒப்புக் கொண்டபடி கடனைத் திருப்பியடைக்காத கடன் என்று அதற்குப் பொருள்.

முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ள பணமானது, வங்கிகளில் தங்களுடைய சேமிப்புகளைச் சேர்த்து வைத்திருக்கும் மக்களுக்குச் சொந்தமானதாகும். முதலாளிகள் தாங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பியடைக்கத் தவறும் போது, உழைக்கும் மக்கள் அவர்கள் பாடுபட்டு சேமித்த எல்லா தொகையையும் அல்லது அதில் ஒரு பங்கையும் இழக்கும் அபாயத்தைச் சந்திக்கிறார்கள்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கிகளின் மொத்த வாராக் கடன் தொகையானது, 2015 மார்ச் 31-இல் ரூ 3,00,000 கோடியாக இருந்தது, 2016 மார்ச் 31 இல் அது ரூ 5,80,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. 2016 டிசம்பர் 31 இல் அது மேலும் அதிகரித்து ரூ 6,15,000 கோடியாக ஆகியிருக்கிறது. மொத்தக் கடனில் வாராக் கடனுடைய விகிதம் ஏற்கெனவே 11 சதவிகிதத்திற்கும் மேல் இருப்பதோடு, அது தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையின் படி, “2016 செப்டெம்பரில் 11.8 சதவிகிதமாக இருந்த மொத்த வாராக் கடன் விகிதம், 2017 மார்ச்சில் 12.5 சதவிகிதமாகவும், 2018 மார்ச்சில் 12.9 சதவிகிதமாகவும் உயரலாம்” என்று கூறுகிறது.

முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கடனாக கொடுக்கப்பட்டுள்ள பணம், வங்கிகளில் தங்களுடைய சேமிப்புக்களைச் சேர்த்து வைத்துள்ள மக்களுக்குச் சொந்தமானதாகும். முதலாளிகள் வாங்கிய கடன்களை அடைக்கத் தவறும் போது, அது வங்கிகளில் சேமித்து வைத்தவர்களுக்கு ஒரு அபாயமாக இருக்கிறது. வங்கி திவாலானால் அதாவது, வங்கியில் பணத்தைக் கட்டி வைத்த அனைவருக்கும் திருப்பிக் கொடுக்க போதுமான பணம் வங்கியிடம் இல்லையானால், உழைக்கும் மக்கள் பாடுபட்டு சம்பாதித்த எல்லா சேமிப்பையும் அல்லது அதில் ஒரு பங்கையும் இழக்கக் கூடிய அபாயத்தைச் சந்திக்கிறார்கள்.

வாராக் கடன்கள் அதிகரித்து வருவது குறித்து பல ஆண்டுகளாகவே வங்கி ஊழியர் சங்கங்கள் கவலை தெரிவித்து வந்துள்ளன. ஆனால் அதை வேண்டுமென்றே மத்திய அரசாங்கமும், வங்கியின் மேலாளர்களும் மூடி மறைத்து வந்துள்ளனர். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எல்லா வணிக வங்கிகளும் வாராக் கடன்கள் குறித்த கணக்கீடுகளிலும், அதற்காக ஏற்பாடு செய்வதிலும் சர்வதேச வரைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென ஆர்.பி.ஐ-யின் தேவையின் விளைவாக 2015-இல் உண்மை வெட்ட வெளிச்சமாகத் தொடங்கியது.

பெரும்பாலான வங்கிகளை நெருக்கடியில் ஆழ்த்திய கடன்களைத் திருப்பியடைக்காத பெரும் முதலாளிகளின் நலன்களை இந்திய அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் சேர்ந்து பாதுகாத்து வருகிறார்கள் என்பது மென்மேலும் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கடனைத் திருப்பிக் கட்டாத முதலாளிகள் உருவாக்கிய நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்களைச் சுமக்கச் செய்கிறார்கள். பண மதிப்பு நீக்கத்தின் மூலம், உழைக்கும் மக்கள் தங்களுடைய எல்லா சேமிப்புக்களையும் வங்கிகளில் கட்டி வைக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பதோடு, அப்படிப்பட்ட வைப்புகளுக்கு வட்டி விகிதத்தையும் குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.

ஏகபோக முதலாளித்துவ மேலாதிக்கம்

நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள கடன்களை அங்கீகரிப்பது உட்பட, எல்லா முக்கிய பொருளாதார முடிவுகளிலும் முதலாளித்துவ ஏகபோகங்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதுவே வங்கி நெருக்கடிக்கான முக்கிய காரணமாகும்.

மிகப் பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள், மிகப் பெரிய தொகைகளை கடன்களாக வங்கிகளிலிருந்து பெறுகிறார்கள். 2015 மார்ச் 31 வரை, பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ஏகபோக குடும்பங்களில் மிகப் பெரிய அளவில் கடன் வாங்கியவர்கள் நிலுவையில் வைத்துள்ள கடன் தொகையானது 7,32,780 கோடி ரூபாய்களாகும். இந்தப் பட்டியலின் முன்னணியில் ரிலையன்சு, வேதாந்தா, எஸ்ஸார், அடானி மற்றும் ஜேபி நிறுவனங்கள் ஆகியன உள்ளன. ஏகபோகக் குடும்பங்கள், எந்த வகையான முதலீடுகளுக்கும் அல்லது யூக அடிப்படையிலான திட்டங்களுக்கும் தேவைப்படும் தொகையை இப்படிப்பட்ட கடன்களாக அங்கீகாரம் பெறுகிறார்கள். அதிகபட்ச இலாபம் கிடைக்கும் வரை வங்கிக் கடன்களைக் கட்டி வருகிறார்கள். எதிர்பார்த்த இலாபம் கிடைக்கவில்லையென்றால், வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை அடைப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

ஒரு உழவரோ, சிறு தொழில் செய்பவரோ ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கிவிட்டு, திருப்பிக் கட்ட வேண்டிய தொகையை ஒரு மாதத்திற்குக் கட்டத் தவறிவிட்டால், பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ள சொத்துக்களைக் கைப்பற்றுவதன் மூலம், அந்த வங்கி கடன் தொகையை அவரிடமிருந்து மீண்டும் கைப்பற்றுகிறது. ஆனால் பெரு முதலாளிகள் கடனை அடைக்கத் தவறும் போது, வங்கிகள் இதே போல நடவடிக்கை எடுப்பதில்லை. அதிகாரத்தில் உள்ள யாரையாவது பெரு முதலாளிகள் கூப்பிட்டு, அந்தச் சுமையை பொது மக்களுடைய முதுகில் ஏற்றுவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்காக உயர் மட்டக் கூட்டங்களை நடத்துகின்றனர்.

வங்கி மேலாளர்களுடைய நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் முதலாளித்துவ ஏகபோக குடும்பங்கள் கட்டுப்படுத்துகின்றன. ரிசர்வ் வங்கியின் தலைமைக் குழுவில் டாடா குழுமத்தின் தலைவர், மகேந்திரா இன்டர்டிரேட்சினுடைய தலைவர் மற்றும் பில் அன்டு மெலின்டா கேட்ஸ் நிறுவனத்தினுடைய இந்தியத் தலைவர் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள்.

சிறு தொழில் நடத்துபவர்களுக்கும், உழவர்களுக்கும் கொடுக்கப்படும் கடன்களுக்கு வாங்கும் வட்டி விகிதத்தைக் காட்டிலும் குறைவான வட்டியில் பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கிறார்கள். எந்த அளவிற்கு முதலாளி பெரியவனாக இருக்கிறானோ அந்த அளவிற்கு வட்டி விகிதம் குறைவானதாகவும், திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் எளிதானதாகவும் இருக்கின்றன. மற்ற கடன்களைக் காட்டிலும் பெரும் முதலாளிகளுக்கு கடன் கொடுப்பதில் “குறைவான அபாயங்களே” இருப்பதாகக் கூறி, இந்த பாரபட்சமான போக்கை வங்கிகள் நியாயப்படுத்துகின்றனர். குறைவான அபாயமுள்ளதாகக் கூறப்படும் இந்தக் கடன்கள், வாராக் கடன்களாக மாறும்போது, அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி போல, அது ஒரு நெருக்கடியை உருவாக்குகிறது.

இவ்வாறு பிரச்சனையின் ஆணி வேரானது வங்கிகள் மீது ஏகபோக முதலாளித்துவ மேலாதிக்கத்தில் இருக்கிறது. பொது மக்களுடைய சேமிப்புக்களை தங்களுடைய கைகளில் குவித்து வைத்துள்ள வங்கிகள், அந்தப் பணத்தை உற்பத்திகரமான நிறுவனங்களுடைய முதலீடுகளுக்கும், தினசரி முதலீட்டுத் தேவைகளுக்கும் கடனாக அளிக்கின்றன. இந்த வங்கிகள் முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களுடைய கட்டுப்பாட்டிலும், அவர்களுடைய நலன்களுக்காகவும் செயல்பட்டு வருகின்றன.

முதலாளித்துவ வகுப்பின் சீர்திருத்தத் திட்டம்

கடந்த சில ஆண்டுகளாக, முதலாளித்துவ ஏகபோகங்கள், இந்திய வங்கிகளுக்கு ஒரு சீர்திருத்தத் திட்டத்தை முன்வைத்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதில் முக்கியமாக ஒருங்கிணைப்பதும், மின்னணு முறையைப் பயன்படுத்துவதும், தனியார்மயப்படுத்துவதும் அடங்கும்.

ஒருங்கிணைப்பது என்றால், வங்கிகளை ஒன்று சேர்ப்பது அல்லது ஒரு வங்கி இன்னொரு வங்கியை விலைக்கு வாங்குவதன் மூலம் வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்று பொருள். அதன் மூலம், வங்கிகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைக்க இருக்கிறார்கள். கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கியின் ஐந்து துணை வங்கிகளை அதனுடன் ஒருங்கிணைப்பதை மத்திய அமைச்சரவை அங்கீகரித்திருக்கிறது.

மின்னணுமயமாக்கும் சீர்திருத்தம், வங்கிகளின் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாகும். மிகப் பெரிய ஏகபோக குடும்பங்களின் கட்டுப்பாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பண பரிவர்த்தனை வங்கிகள், ஒவ்வொரு மின்னணு பரிவர்த்தனைக்கும் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் அதிகபட்ச இலாபத்தைக் குவித்து வருகிறார்கள்.

பொதுத் துறை வங்கிகளின் ஒரு கணிசமான பகுதியைத் தனியார் மயப்படுத்துவதற்கான திட்டம் பல ஆண்டுகளாகவே தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தத் திட்டமானது அரசாங்கம் தன்னுடைய பங்குகளை விற்பதன் மூலம் வங்கிகளில் அரசாங்கத்தின் உடமையை 50 சதவிகிதத்திற்கும் கீழே கொண்டு வருவதாகும். அதனுடைய நோக்கமானது, முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்கள் நேரடியாக வங்கிகளைத் தங்களுடைய உடமையாக வைத்திருக்கவும், கட்டுப்படுத்தவும் பாதையைத் திறந்து விடுவதாகும். வங்கிகளைத் தனியார்மயப்படுத்தும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சரியான நேரத்திற்காக மோடி அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கிறது.

“அரசியல் தலையீட்டை” ஒழிப்பது, வங்கித் துறையின் செயல் திறனையும், நலத்தையும் அதிகரிக்குமென தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் கூறிக் கொள்கிறார்கள். அரசின் வரைமுறைகளை ஒட்டுமொத்தமாக நீக்கி விடுவது ஒரு தீர்வல்ல என்பதை, 2008-இல் அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தாக்கிய நிதி நெருக்கடியும், அது உலகெங்கிலும் பரவியதும் காட்டுகின்றன. அந்த நெருக்கடியை உருவாக்கியதில் பூதாகரமான வங்கிகளுடைய கட்டுப்பாடற்ற ஊகச் செயல்பாடுகள் ஒரு முக்கிய காரணியாகும்.

உண்மை என்னவென்றால், முதலாளித்துவ வகுப்பே தன்னுடைய பேராசையை முறைப்படுத்திக் கொள்ள முடியாது. பொருளாதாரத்தில் தனிப்பட்ட இலாபத்தை அதிகரிப்பதற்கான இடைவெளியை முதலில் கட்டுப்படுத்துவதில் தொடங்கி, இறுதியில் அறவே அகற்றுவதற்கு தொழிலாளி வகுப்புதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளி வகுப்பின் புரட்சிகரத் திட்டம்

இந்த நேரத்தில் 10,00,000-த்திற்கும் மேற்பட்ட பொதுத் துறை வங்கித் தொழிலாளர்களுடைய உடனடிக் கோரிக்கைகளில் ஒன்று, கடனைத் திருப்பியடைக்காத எல்லா முதலாளிகளுடைய பெயர்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்பதும், அவர்கள் செலுத்த வேண்டிய கடன்களை மீட்பதற்காக அவர்களுடைய சொத்துக்களை இந்திய அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் என்பதும் ஆகும். இன்னொரு தீர்வானது, வாராக்  கடன்களை அங்கீகரித்ததற்கும், அப்படிப்பட்ட கடன்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக கடன் வாங்கிய முதலாளிகளோடு ஒத்துழைத்தவர்களையும் வங்கி நிர்வாகத்திலும், அதனுடைய உயர்மட்ட இயக்குனர்களிலும் அதிகாரப் பொறுப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்குவதாகும்.

“தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்கள் கேட்கும் விவரங்களை அளிக்க வேண்டுமென” உச்ச நீதி மன்றம் தெளிவுபடுத்தியிருந்துங்கூட, கடனைத் திருப்பியடைக்க மறுக்கும் முதலாளிகளின் பெயர்களை வெளியிட ஆர்பிஐ மறுத்து வருகிறது.

முதலாளித்துவப் பேராசையை நிறைவு செய்வதற்காக இருக்கும் நிலைமையை மாற்றி, மக்களுடையத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வங்கித் துறையையும், பொருளாதாரத்தின் மற்ற எல்லா துறைகளையும் மாற்றியமைப்பது தொழிலாளி வகுப்பின் முக்கிய குறிக்கோளாகும். வங்கிகளின் எல்லா செயல்பாடுகளும், சமூக உற்பத்தியின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், தனிப்பட்டவர்களுடைய தேவைகளான பாதுகாப்பான வைப்புகள் மற்றும் அவசரத் தேவைகளை சந்திப்பதற்கான கடன்கள் ஆகிவற்றை நிறைவேற்றும் வகையிலும் திருத்தியமைக்கப்பட வேண்டும். வங்கிக் கடன்கள் மீது வசூலிக்கப்படும் வட்டி, திருப்பியடைக்கக் கூடிய திறனோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும், “அபாய நிலை”யைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது. சாராம்சத்தில், வங்கித் துறையை முழுவதுமாக மாற்றியமைப்பதில் தீர்வு உள்ளது.  

வங்கிகளை அரசாங்கத்தின் உடமையாகக் கொண்டு வருவது மட்டுமின்றி, அரசாங்கத்தையும் அரசின் மற்ற நிறுவனங்களையும் மக்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.

1969-இல் பல தனியார் வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட போது, அப்போதிருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசு அரசாங்கம், அதை ஒரு சோசலிச சீர்திருத்தம் என்று கூறியது. ஆனால் அது அந்த நேரத்தில், ஏகபோக முதலாளிகளுடைய திட்டத்தின் ஒரு அங்கமாகும் என்பதை வாழ்க்கை அனுபவம் வெட்ட வெளிச்சமாக்கியது. கிராமப் புறங்களில் ஆயிரக் கணக்கான வங்கிக் கிளைகளை அரசு தன்னுடைய செலவில் நிறுவ வேண்டும் என்பதும், அதன் மூலம் கிராமப்புற சேமிப்புக்களை தங்கள் கைகளில் குவித்துக் கொள்ளவும் அவர்களுக்கு அது தேவைப்பட்டது.

தொண்ணூறுகளிலிருந்து, தாராளமயம், தனியார் மயம் மூலம் உலகமயமாக்கும் தட்டியின் கீழ், ஏகபோகக் குடும்பங்கள் ஒரு புதிய திட்டத்தைக் கடைபிடித்து வருகிறார்கள். வங்கித் துறையைப் பொறுத்த மட்டிலும், அவர்களுடைய நோக்கமானது, இலாபத்தை உயர்த்துவதும், மிகவும் இலாபகரமான வங்கிகளைத் தங்களுடைய தனிப்பட்ட பேரரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் ஆகும்.

தொழிலாளி வகுப்பின் குறிக்கோளானது, வங்கியை சமூகமயப்படுத்துவதாகும். தேசியமயமாக்குவது அவசியமானது என்றாலும், அது போதுமானதல்ல. வங்கிகளை அரசாங்கத்தின் உடமையாக கொண்டு வருவது மட்டுமின்றி, அரசாங்கத்தையும் அரசின் மற்ற நிறுவனங்களையும் மக்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். வங்கித்துறையில் சமூக உடமையையும் கட்டுப்பாட்டையும் நிறுவுவதற்காகவும், முதலாளித்துவ பேராசைக்கு பதிலாக மனிதத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தைத் திருத்தியமைக்கவும் உழவர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களுடைய கூட்டணியோடு தொழிலாளி வகுப்பு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். 

Pin It