கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வாக்களித்த நாட்டு மக்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்கும் மத்திய அரசு, வாக்களிக்காத குழந்தைகளைக் கூட பதற்றத்திலேயே வைத்திருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை - 2019 இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதில் சொல்லப்பட்டிருக்கும் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கான பொதுத் தேர்வு என்னும் பரிந்துரையின் படி தமிழ்நாட்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்குப் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

children exam 600முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்று அரசு சொல்லி இருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஐந்தாம் வகுப்பிலேயே நிறுத்தி வைக்கப்படுவார்கள். நம்மோடு படித்த மற்ற குழந்தைகள் தேர்ச்சி பெற்றுவிட்டனர், நாம் தேர்ச்சி பெறவில்லை என்ற தாழ்வுமனப்பான்மைய 10 வயதுக் குழந்தையின் மனத்தில் புகுத்துவது எவ்வளவு கொடுமையானது.

இந்தத் தேர்வு முறை கல்விக்கு எதிரானது, குழந்தைகள் மன நலனுக்கு எதிரானது மற்றும் சட்டத்துக்கும் எதிரானது. கல்வியாளர்கள் யாரும் இதனை ஆதரிக்கவில்லை. மாறாகக் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். உலக அளவில் எந்த நாட்டிலும் இது போன்ற பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. 

இன்னும் சொல்லப் போனால் அங்கே இருக்கக்கூடிய மதிப்பீட்டு முறைகளும் தேர்வு முறைகளுமே குழந்தைகளை அச்சுறுத்தாத எளிய முறைகள் ஆகும். ஏனெனில் அவர்கள் உண்மையிலேயே குழந்தைகள் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளை அச்சுறுத்தி நெருக்கடிக்குள் தள்ளும் ஓர் அமைப்பாக இந்தக் கல்வி முறை இருந்துவருகிறது. 

குறிப்பாகத் தனியார்ப் பள்ளிகள் குழந்தைகளைச் சக்கையாகப் பிழிந்து எடுக்கின்றனர். இவற்றில் இருந்து குழந்தைகளை விடுவிக்க வேண்டிய அரசு, இந்தக் கொடுமைகளை இன்னும் வலுப்படுத்தும் வகையில் 10 வயது குழந்தைக்குப் பொதுத்தேர்வு நடத்துகிறது. இது நம் நாட்டின் ஆட்சியாளர்களிடம் மனித நேயம் என்பதே இல்லை என்பதற்கான சான்றாகும்.

இந்தத் தேர்வு முறையானது இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி உளவியல் வல்லுனர்களை நாடிச் சென்ற காட்சியை நாம் அண்மையில் பார்த்தோம். 

உளவியல் மருத்துவர்கள் மிகவும் வருத்தப்பட்டு இதனைப் பொது வெளியில் எடுத்துவைத்தார்கள். குழந்தைகளிடமிருந்து பறிப்பதற்கு அவர்களிடம் பெரியவர்களிடம் இருப்பதைப் போன்று பணமோ பொருளோ சொத்தோ எதுவும் கிடையாது. அவர்களிடம் இருப்பது அந்தப் பருவத்திற்குரிய கவலை இல்லாத கபடமில்லாத மகிழ்ச்சிதான். அதைக்கூட இந்த மத்திய அரசும், அதற்குத் துணைபோகும் மாநில அரசும் விட்டு வைக்கவில்லை.

இந்தத் தேர்வு முறை கல்வி உரிமைச் சட்டத்திற்கே எதிரானது. ஒரு குழந்தை அதிர்ச்சி (trauma), அச்சம் (fear), மன அழுத்தத்திற்கு (anxiety) உள்ளாகாமல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் எட்டாம் வகுப்பு வரை எந்த ஒரு வாரியத் தேர்வும் கூடாது என்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவுகள் சொல்கின்றன.  

இப்போது நடத்தப்படும் இந்தப் பொதுத் தேர்வு அரசு இயற்றிய கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது. இவர்கள் இந்தத் தேர்வு நடத்துவதற்காக திருத்தியதாகச் சொல்லப்படும் பிரிவு 16 கூட ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு வழக்கமான தேர்வு (Regular Exam) என்றுதான் திருத்தப்பட்டிருக்கிறது. பொதுத் தேர்வு (Public Exam) என்று அல்ல.  இப்படி சட்டத்திற்குப் புறம்பான தேர்வு முறையைத் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

இந்த அளவிற்குப் பார்ப்பனிய அரசுக்கு தமிழ்நாடு அரசு விசுவாசமாக இருப்பது குழந்தைகளை நசுக்குகிறது. 

இந்த கொள்கைகள் எல்லாம் அடிப்படையில் யாருடையது, எந்த சித்தாந்தத்தினுடையது, ஏன் குழந்தைகளை இவர்கள் வாட்டுகிறார்கள்? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனர்களின் வருணாசிரம தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவே இது செய்யப்படுகிறது.

தேசியக் கல்வி கொள்கை வரைவு அறிக்கை 2019 முற்றிலுமாக வருணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தும் விதமாகவே இயற்றப்பட்டிருக்கிறது. அதற்காகவே இந்த முன்னெடுப்பும் தமிழக அரசால் செய்யப்பட்டிருக்கிறது. 

சமூகநீதிக்குப் பெயர் பெற்ற தமிழ்நாடு - கல்வி உரிமைக்காக ஒரு நூற்றாண்டு இயக்கம் கண்ட தமிழ்நாடு -  இந்த மோசடிகளை முறியடித்துப் பார்ப்பனர் அல்லாதோர் குழந்தைகளைக் காத்திட வேண்டும்.