தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வலதுசாரிகளை / ஹிந்துத்துவவாதிகளை அழைத்துவந்து ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டிருப்பதும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான அதிகாரிகளின் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை தரப்பட்டதும், பள்ளிகளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளால் போலி என்சிசி கேம்ப் நடத்தி பாலியல் சீண்டல்களுக்கு மாணவர்கள் உள்ளாவது எனபல்வேறு சர்ச்சைகள் கல்வித்துறை அமைச்சகத்தின் முன் நிற்கிறது
இப்படிப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் 28 மிக தெளிவாக "அரசு கல்விக்கூடங்கள் அல்லது அரசின் உதவி பெரும் கல்விக்கூடங்களில் மத ரீதியாக எந்த ஒரு நிகழ்வையும் நடத்தக்கூடாது" என்பது விதி. இப்படி இந்த அடிப்படை சட்டங்களை கூட மதிக்காத வகையில் பள்ளிக்கல்வி துறையில் இருக்கும் CEO போன்றோர்களின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த CEO அதிகாரிகளும் ஒரு காலத்தில் ஆசிரியராக இருந்து தான் இந்த பொறுப்புக்கு வந்து இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட்டு பொறுப்பற்று நடப்பது கவலை அளிக்கிறது.
ஒரு பக்கம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான விதத்தில் கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ஒன்றிய அரசின் கல்விக்கான நிதி உதவியை தர மறுக்கும் ஒன்றிய அரசு..
மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதும். உரிமையுடன் அந்த நிதி ஒதுக்கீடை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசை அழுத்தம் கொடுத்து கேட்பதுவும் பாராட்டுக்குரியது.
அதே விதத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இப்போது கல்வி பயிலும் மாணவர்களை எந்த திசையில் அழைத்து செல்கிறார்கள் என்றே புரியாத புதிராக இருக்கிறது.
ஒரு பக்கம் ஆளுநர் உள்ளிட்ட வலதுசாரி சிந்தனையாளர்கள் தமிழக கல்வியை எந்தவித ஒப்பீடும் இல்லாமல் தொடர்ச்சியாக சரியில்லை என்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். கல்விக்கூடங்கள், பல்கலை கழகங்கள் என்று அனைத்தின் மீதும் வலதுசாரி ஹிந்துத்துவா பேர்வழிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு இடதுசாரிகள் ஆதாரங்களை வைத்து விவாதத்து அவர்கள் கருத்துக்களை எதிர்கொள்கிறார்கள்.
2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகவும், தமிழ்நாட்டிற்கென மாநில அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, மாநில கல்விக் கொள்கை குழுவென்று உருவாக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை முறையீட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆகவே, கனத்த இதயத்துடன் குழுவில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஜவஹர் நேசன் தெரிவித்ததை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டி உள்ளது.
கோரிக்கைகள்
ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் பெற்றோர் ஆசிரியர் கழகம், கண்காணிப்பு குழு போன்றவை எல்லாம் பெயரளவிற்கே இருக்கிறதே தவிர இதற்கான கூட்டங்கள், முடிவுகள் என்று எதையும் இந்த அரசாங்கம் இதுவரை செய்யவில்லை. ஆகவே இனி வரும் காலங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்ற குழுக்கள் குறிப்பிட்ட காலங்களில் கூடி அந்த கல்வி நிறுவனம் குறித்த மதிப்பீடுகள், ஆலோசனைகள் இவற்றை பெற்று நடப்பதற்கான முயற்ச்சியை இந்த அரசு உடனடியாக எடுக்க வேண்டும்,
கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ உதவி செய்துவரும் அதிகாரிகள், ஊழியர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்திட மகாவிஷ்ணு போன்ற பிற்போக்கு கும்பலின் அமைப்புகளை தடை செய்திட, கல்வியில் ஜனநாயகம் அறிவியல் பூர்வமான விசயங்களுக்கு எதிராக உள்ள ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலை தடை செய்திட மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையை பல்வேறு பெயர்களில் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
மாநில அளவில் கல்வியாளர்கள், மாணவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை அமைத்து, மாணவர் – ஆசிரியர் நலன்சார் திட்டங்கள் குறித்து பரிசீலித்துத் திட்டமிடவேண்டும்.
பெற்றோர் – மாணவர் – ஆசிரியர் கூட்டுப் பொறுப்பிலும், ஜனநாயக – முற்போக்கு சக்திகளின் பங்கேற்பிலும் வாசிப்பு இயக்கங்கள், கல்வி – மாணவர் நலன்சார் உரையாடல்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வழிவகை செய்திடவேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழக அரசின் கல்வித்துறை பரிசீலிக்குமா?
- ஆர்.எம்.பாபு