மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், தெலுங்கானா, மிஜோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற நவம்பர் மாதம் நடந்து முடிந்து, டிசம்பர் 3 அன்று அதற்கான முடிவுகளும் வெளியாகிவிட்டன. மே 2024இல் நடைபெற இருக்கும் ஒன்றிய அரசின் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்பட்டதால் அதன் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்பையும், ஆளும் பா.ஜ.க.விற்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தின.

தேர்தல்களுக்கு முன்பும் பின்புமான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கூட்டணியே மூன்று மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றும் எனக் கூறின. ஆனால் முடிவுகள் வேறு விதமாக அமைந்து விட்டன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கனா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைத் தோற்கடித்துக் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. மிஜோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது.election thumbஇந்தத் தேர்தலில் மக்களின் மனநிலை என்ன என்ற ஆய்வு செய்ததில் பல கவனிக்கத் தக்க தகவல்களை அறிய முடிகிறது. மொத்த 5 மாநிலங்களின் வாக்குகளில் காங்கிரஸ் 4.92 கோடி வாக்குகள் பெற்றுள்ளது. பா.ஜ.க. 4.81 கோடி வாக்குகள் பெற்றுள்ளது. பா.ஜ.க. வெற்றி பெற்ற தொகுதிகள் என்று பார்த்தாலும், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. 48.55% - காங்கிரஸ் 40.40% ; ராஜஸ்தானில் பா.ஜ.க. 41.69% - காங்கிரஸ் 39.53% ; சத்திஸ்கரில் பா.ஜ.க. 46.27% - காங்கிரஸ் 42.23% என்று குறைந்த சதவிகித வாக்குகளே பா.ஜ.க.விற்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இதுதான் மக்களின் மனநிலை. இங்கே கவனிக்க வேண்டிய செய்தி பா.ஜ.வுக்கு கூடுதல் தொகுதிகள் வெற்றியாகக் கிடைத்துள்ளன. கொஞ்சம் வாக்காளர் பட்டியலை சரி செய்வது, பூத்தில் சரியான ஆட்களை அமர்த்துவது போன்ற நுட்பமான தேர்தல் வேலைகளைப் பார்த்திருந்தாலே பல இடங்களில் காங்கிரஸ் வென்று இருக்கும்.

அதையும் கடந்து இ.ந்.தி.யா. கூட்டணி கட்சிகளுடன் சிலபல இடங்களில் மோதல் போக்கும், மூத்தவர்களின் சட்டாம்பிள்ளைத் தனமும் இருந்தது என்பது காங்கிரஸ் கட்சிக்கு இழப்பாகப் பல இடங்களில் முடிந்துள்ளது. மாயாவதி தனித்து நிற்க எடுத்த முடிவும் காங்கிரஸ் கட்சியின் தலித் வாக்குகளைப் பிரித்துள்ளது. குறைந்த வாக்குகள் அனைத்தும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மடைமாற்றப்பட்டதும் புலனாகியுள்ளது. தமிழ்நாட்டில் சீமான் போல வடக்கில் மாயாவதி? இந்துத்துவ பா.ஜ.க. வின் மோசடி அரசியலுக்கு விலை போய்விட்டாரா என இன்னும் ஆழமான விசாரணைகள் தேவைப்படுகின்றன. 2024 தேர்தலிலும் அவருடைய நிலைப்பாடு மாறாவிடில் அவரையும் அம்பலப்படுத்தி, இ.ந்.தி.யா. கூட்டணி ஆழமாகவும் வேகமாகவும் ஆய்வு செய்து தன் வியூகத்தை மாற்றி அமைப்பது குறித்து முடிவு செய்வது நலமாக இருக்கும். தகுந்த தேர்தல் வல்லுநர்களின் துணையோடு அதைச் செய்வது பலனளிக்கும்.

இவையெல்லாம் மேற்கட்டுமான சரிசெய்தல் மட்டுமே. அடிப்படையில், இ.ந்.தி.யா. கூட்டணி நாட்டில் இருக்கக் கூடிய குடிமைச் சமூகங்களுடன் நல்லுறவைப் புதுப்பிக்கவும், இதுவரை இல்லாத இடங்களில் ஏற்படுத்திக் கொள்ளவும் வேண்டும். அறிவும், சேவையும், ஜனநாயக வேட்கையும் இணையும் குடிமைச் சமூகங்கள் உள்ளபடியே இந்துத்துவ பாசிச இலக்கு நோக்கி நகரும் பா.ஜ.க. அரசை இம்முறை எப்படியாவது வெற்றிபெற விடாமல் இருப்பதில் பெருத்த கவனம் செலுத்த முனைகின்றன. அதே நேரம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் பிரதிநிதிகளாக அவை, நெடுங்காலமாக கவனிக்கப்படாத சில கோரிக்கைகளையும் முன்னிறுத்த முயல்கின்றன. அச்சமூகங்களை இ.ந்.தி.யா கூட்டணி தன் நம்பிக்கைக்குரிய வட்டத்தில் கொண்டு வந்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி செய்வதும், நாடு மீண்டுமொருமுறை எதேச்சதிகார பார்ப்பனிய பனியா கூட்டுக் கொள்ளைக்காரர்களிடம் செல்வதைத் தடுக்க வழி செய்யும்.

மிஜோரம் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. அவர்களுடைய சித்தாந்தமே இந்துத்துவ எதிர் மதச்சார்பின்மையும், சிறுபான்மையினர் நலனும் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதும், அவர்களது வெற்றியும், வடகிழக்கில் பா.ஜ.க. மீதான கோபமும் வெறுப்பும் குவிமயப்படுவதற்கான நல்ல அறிகுறி! அதைச் சரியாக இ.ந்.தி.யா கூட்டணி தன் மதச்சார்பின்மை கருத்தாக்கத்தைக் கொண்டு ஒருங்கிணைக்க வேண்டும்.

ராகுல் காந்தி அவர்கள் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ஜனநாயகப் பண்பு பாராட்டியுள்ளார். பிரியங்கா அவர்கள், மூன்று மாநிலங்களில் மக்கள் தங்களை வலுவான எதிர்க்கட்சியாகப் பணி செய்யச் சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னது தான் சரியான அரசியல் பார்வை. பா.ஜ.க.வின் எதேச்சதிகாரப் போக்கைக் கட்டுப்படுத்தும் பெரும் பங்கு அந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

சில பல தேர்ந்த கணக்குகளாலும், அதிகார வரம்பு மீறல்களாலும், பண பலத்தாலும், வெறுப்பரசியலாலும் தேர்தல் வெற்றிகள் சாத்தியப்படுகிறதே ஒழிய, பா.ஜ.கவிற்கு மக்கள் பெருவாரியாக வாக்களிக்கவில்லை! அவர்கள் ஆட்சியைக் கோரவும் இல்லை.

2024 தேர்தலில் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பை மக்கள் இ.ந்.தி.யா கூட்டணிக்கு அளிப்பார்கள். அதற்கு மக்களின் வெறுப்பையும், கையறு நிலையையும் சரியாக ஒருங்கிணைத்து, குறைகளைக் களைந்துகொண்டு, ‘ஒற்றுமை’யாக வீறு கொண்டு எழவேண்டும் இ.ந்.தி.யா கூட்டணி!

- சாரதா தேவி

Pin It